என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    விளையாட்டுப் பொருட்கள் குழந்தைப் பருவத்தின் மிகப்பெரிய புதையல். அது பாதுகாப்பற்றதாக இருந்தால் உடல்நலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
    விளையாட்டுப் பொருட்கள் என்பது விளையாட்டுக்கானது மட்டும் அல்ல… குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புஉணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்.

    அந்தக் காலத்தில், செப்பு சாமான், மரப்பாச்சி பொம்மை, பல்லாங்குழி, தாயக்கட்டை போன்ற விளையாட்டுப் பொருட்கள் தரத்திலும் பயன்பாட்டிலும் சிறந்ததாக இருந்தது. ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு வாங்கித்தரும் விளையாட்டுப் பொருட்களில் காரீயம் உள்ளிட்ட ரசாயனங்கள் ஒளிந்திருக்கிறது. எனவே, குழந்தைகளுக்கு டாய்ஸ் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி தெரிந்திருக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோருக்கும் அவசியம்.

    சீன ப்ளாஸ்டிக் பொம்மைகள், ஃபர், செயற்கை நாரிழை கேசம் கொண்ட பொம்மைகள், பெயின்ட், தரம் குறைந்த கலர் க்ரயான்ஸ், சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள், விலை குறைந்த, தரமற்ற பொம்மைகளில் பாலிவினைல் க்ளோரைட் (polyvinyl chloride (PVC)) உள்ளிட்ட மோசமான ரசாயனங்கள் கலந்திருக்கும். அவற்றை, குழந்தை வாயில் வைத்தால், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுபோக்கு, நுரையீரல் பாதிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படலாம்.

    கூர்மையான முனைகள் கொண்ட பொம்மை, சிறு பொம்மைகள், சின்னச்சின்ன பாகங்கள் கொண்ட விளையாட்டுப் பொருட்கள் ஆபத்தானவை. ஏனெனில் குழந்தைகள் அவற்றை விழுங்கி விடலாம்.

    மூன்று முதல் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பவுன்ஸர் (ரப்பர்) பந்தை வாங்கிக்கொடுத்தால் அதை பிடிக்கப்போய் விழவோ, சுவரில் மோதிக்கொள்ளவோ நேரிடும் என்பதால் அதிகம் மேலெழும்பாத சாஃப்ட் பந்து வாங்கிக்கொடுப்பது பாதுகாப்பானது.

    குழந்தைகள் பேட்டரியை நக்குவது, கடிப்பது, வாயில் போட்டுக்கொள்வது போன்ற செயல்களைச் செய்யும்போது அதில் உள்ள கரிப்பொருள் அவர்கள் வயிற்றுக்குள் சென்றால் விஷமாகிவிடும். எனவே, பேட்டரியில் இயங்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

    சிந்தடிக் ஆடைகள் வியர்வையை உறிஞ்சாது என்பதால் தளர்வான காட்டன் உடைகளை வாங்கி தரலாம்.

    ஸ்டடி டேபிள், பேபி சார் என அவர்களுக்கான பொருட்கள் ஃபேன்ஸியாக இருப்பதைவிட, உறுதியானதாக இருக்கட்டும்.

    விளையாட்டுப் பொருளின் பேக்கிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைகளை கவனமாகப் படித்து, வயதுக்கு ஏற்ற பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.

    எடை இல்லாத விளையாட்டுப் பொருட்கள், முனை மழுங்கலான பொருட்கள், மரத்தாலான பொம்மைகள், இயற்கை சார்ந்த பொருட்கள் என குழந்தைகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களாக வாங்கிக்கொடுக்கவும்.
    பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். இதற்கான காரணத்தையும், அதை சரிசெய்யும் வழிமுறையையும் பார்க்கலாம்.
    பள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். 

    காரணங்கள்: தங்கள் தாய் அல்லது தான் விரும்பும் நபரைப் பிரிந்திருக்க வேண்டிய நிலை வருகிறது; அவர்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என அஞ்சுவதே பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகளின் பயத்துக்கு முதல் காரணம். வழியில் பயமுறுத்தும் நாய், பஸ் பயணம், கடுமையான ஆசிரியர்கள் அல்லது வேறு சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் போன்றவை இவ்வகை பயத்தைத் தூண்டும்.

    பாதுகாப்பற்ற பள்ளிச் சூழல், புதிய பள்ளிக்கூடத்துக்கு மாற்றுவது போன்ற காரணிகளும் இந்த போபியாவைத் தூண்டலாம். வளர்ந்த மாணவர்களில் சிலருக்குத் திடீரெனப் பள்ளிக்குச் செல்லப் பிடிக்காமல் போகலாம். பள்ளியில் அவர்களுக்கு நிகழ்ந்த ஏதேனும் சம்பவம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.



    அறிகுறிகள்: அழுது, கத்திக் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள். இரவு முழுவதும் அழுது, உடல் நோய்வாய்ப்பட்டிருப்பது போன்று காலையில் நடிப்பதும் நடக்கும். கவலை, கற்றல் இயலாமை, பிற குழந்தைகளுடன் தொடர்பில்லாமல் இருத்தல், தலைவலி, வறண்ட வாய், அதிகப்படியான வியர்வை, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் பள்ளிக்குச் செல்லும்போது வெளிப்படுத்துகின்றனர். மனச்சோர்வும் காணப்படும்.

    சிகிச்சைகள்: பெற்றோரின் ஆதரவு குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். குழந்தைகள் பெற்றோரைப் பிரிய முடியாமல் அழுதால், பள்ளிக்குப் பெற்றோரே அவர்களைக் கொண்டுவிடலாம். எப்போது வேண்டுமானாலும் நாம் அம்மாவைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை அந்தக் குழந்தைக்கு வர வேண்டும். நேர்மறை எண்ணங்களைக் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். பள்ளியின் மீது ஆர்வத்தைத் தூண்டும் காரணியைக் கண்டறிய வேண்டும். ஒருவேளை பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் அவர்களைப் பாதித்திருந்தால், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளைப் பண்புடனும் அறத்துடனும் வளர்த்தெடுக்க, பெற்றோர்களுக்கு அவசியமான சில ஆலோசனைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    * குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்துவைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.

    * குழந்தைகளின் ஆறு, ஏழு மாதங்களில் இருந்தே, தின்பண்டங்கள், பொம்மைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பழக்கத்தைச் சொல்லிக்கொடுங்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, ஸ்நாக்ஸ் பாக்ஸில் எக்ஸ்ட்ரா இரண்டு பிஸ்கட்கள், சாக்லேட்கள் வைத்துவிட்டு, ‘உன் ஃப்ரெண்டு யாராச்சும் கேட்டா ஷேர் பண்ணு’ என்று சொல்லி அனுப்புங்கள். எதிர்காலத்தில் உங்கள் குழந்தை தலைமைப்பண்புடன் விளங்க, இந்தச் சிறு தொடக்கம் நிச்சயம் கைகொடுக்கும்.

    * மூன்று வயதுக்குப் பிறகு, குழந்தைகளுக்குப் பணத்தின் மதிப்பைச் சொல்லிக்கொடுங்கள். தினமும் அவர்களுக்கு பாக்கெட் மணி கொடுத்து உண்டியலில் சேமிக்கச் சொல்லலாம். அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கு, பெற்றோர் அனுமதியுடன் அவர்களுடைய சேமிப்புப் பணத்தை எடுத்தே செலவு செய்ய அனுமதிக்கலாம். பணத்தின் மதிப்பை உணர்வதால், பார்க்கும் பொருள்களையெல்லாம் அடம்பிடித்துக் கேட்டு வாங்கித் தரச் சொல்லும் பழக்கம் அவர்களை அண்டாது.

    * குழந்தைகளுக்கு இரண்டு வயதிலிருந்தே புத்தகங்களை நண்பர்களாக்குவது அவசியம். அவர்களின் வயதுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்க, ஒரு குட்டி ஜீனியஸ் உருவாக ஆரம்பிப்பான்/ஆரம்பிப்பாள்.

    * இரண்டு வயதுக்குள், அவர்களுக்கு டாய்லெட் ட்ரெய்னிங் கொடுத்திருக்க வேண்டும். சாப்பிடும் முன், விளையாடிய பின் கைகளைக் கழுவுவது, இரு வேளை பல் துலக்குவது மற்றும் குளிப்பது என்று ஆரோக்கிய விஷயங்களையும் வளர வளரக் கற்றுக்கொடுங்கள்.

    * 10 வயதுக் குழந்தைகளுக்கு, ‘ஓர் இடத்திலோ அல்லது யாரிடமோ பேசும்போது, நீ மட்டுமே பேசாமல், மற்றவர்கள் சொல்வதையும் உள்வாங்க வேண்டும்’ என்று வலியுறுத்துங்கள். அதேபோல, குழந்தைக்கு அதுவரை தெரியாத ஒரு விஷயம் பற்றிய பேச்சு வந்தால், ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்காமல், புதிய விஷயங்களைக் கவனித்துக் கேட்க அறிவுறுத்துங்கள்.

    * உணவு உண்ணும்போது சிந்தாமல், மிச்சம் வைத்து வீணாக்காமல் இருக்கப் பழக்கப்படுத்துங்கள். பொது இடங்களில் சாப்பிடும்போது ஸ்பூன், ஃபோர்க், டவல் பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய ‘டேபிள் நாகரிகம்’ பற்றிக் கற்றுக்கொடுங்கள்.

    * மற்றவர்களின் அறைக்குச் செல்லும் முன்பும், சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியைக் கேட்க வேண்டும் என்ற நாகரிகத்தைச் சொல்லிக்கொடுங்கள்.

    * மற்றவர்களுக்கு உதவும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் விதையுங்கள். அழகு, அறிவு, பொருளாதாரம் என எதன் அடிப்படையிலும் அடுத்தவர்களின் மனது புண்படும்படி அவர்களைத் தாழ்த்திப் பேசுவது தவறு என்பதைச் சொல்லிக்கொடுப்பதன் மூலம், உங்கள் குழந்தையை மனித நேயத்துடன் வளர்த்தெடுக்கலாம்.
    சரியாக பேசாத குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.
    ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.

    பிறவியில் இருந்தே கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு (உதாரணமாக புட்டிப்பாலை சப்பி குடிப்பதால் குழந்தைக்கு நுனி நாக்கும், மேற்தாடையும் சேர்த்து உச்சரிக்கும் வார்த்தை வராது), அடிநாக்கில் தசைப்பிடிப்பு உள்ள குழந்தைகளுக்கு, பல மொழிகள் பேசும் சூழலில் வளரும் குழந்தைகளுக்கு பேசும் திறன் தடைபடும்.

    நம் தாய்மொழி தமிழாக இருக்கும் பட்சத்தில் குழந்தைகளிடையே ஆங்கிலத்தில் பேசுவது, கதைகள் மற்றும் பாடல்கள் கூறுவதால் குழந்தைக்கு தாய் மொழி தொடர்பு இல்லாமல் போகும்.

    அதனால் குழந்தையிடம் பேசும் போதும், குழந்தை அருகில் இருக்கும்போதும் தாய்மொழியில் பேச வேண்டும். தாய்மொழியில் பேசும் குழந்தை எளிமையான எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள இயலும்.

    புத்திக்கூர்மை நன்றாக இருந்தும் பேசும் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் பள்ளியில் அனைவருடன் இணையாமல் தனிமைப்படுத்தப்படுவர். ஆசிரியர் கேட்கும் கேள்விக்கு சரியான பதில் கூற முடியாமல் போவதால் குழந்தைக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் சரியான நேரத்தில் கவனித்து, அதற்கான சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைக்கு பேசும் திறன் மேம்படும்.
    குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.
    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.

    * வைட்டமின் ‘ஏ’ குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம். முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிகம் காணப்படுகிறது.

    * வைட்டமின் ‘பி’ குறைந்தால், குழந்தைகளுக்கு வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் வைட்டமின் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘சி’ குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். குழந்தைகளுக்கு எலும்புகள் பலம் குறையக்கூடும்; பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும். ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘டி’ இல்லாவிட்டால், குழந்தைகளின் எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும். போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் உடலே வைட்ட மின் ‘டி’யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் ‘டி’ அதிகம் உள்ளது.

    * வைட்டமின் ‘ஈ’ குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத் தன்மையை உண்டாக்கும். இது குழந்தைகளில், இரத்தம் உறைதல் தொடர்பான நோய்களை ஏற்படுத்தும். கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் ‘ஈ’ சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
    பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை போட வேண்டும் என்று சொல்கிறார்கள். அது பின்னணி என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    பிறந்த பச்சிளம் குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் மொட்டை அடிக்க வேண்டும் இல்லையென்றால் சாமி குத்தம் ஆகிவிடும் என்று பல பெரியவர்கள் சொல்லி கேட்டதுண்டு.

    ஆனால் அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா?

    நாம் அம்மாவின் கருவறையில் இரத்தம், சிறுநீர், மலம் போன்ற தண்ணீர் நிறைந்த சூழலில் இருந்திருக்கிறோம். அதில் உள்ள கழிவுகள் தலையில் தேங்கியிருக்கும். சாதாரணமாக கடல்நீரில் 5 நிமிடம் கை வைத்திருந்தாலே கை கழுவிய பிறகும் கூட உப்பின் ருசி ஒட்டியிருக்கும், கை ஊறி போய்விடும். அப்படி இருக்கையில் 10 மாதம் தண்ணீரிலே இருந்து வந்த குழந்தையின் உடல் எந்தளவு ஊறியிருக்கும். உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். ஆனால் தலையில் தேங்கிய கழிவுகள் முடியில் வேர் கால்கள் வழியாகத் தான் வெளியேறும்.  

    அதனை வெளியேற்ற என்ன வழி மொட்டை அடித்தால் மட்டுமே அந்த வேரின் வழியாக தேங்கியிருக்கும் கழிவுகள் வெளிவரும். இது தான் உண்மையான காரணம். ஆனால் இப்படி கூறினால் யாருடைய செவிக்கும் எட்டாது. இதையே சாமி கண்ண குத்தும், தெய்வம் பார்க்குது, குலதெய்வ வேண்டுதல் என பட்டியலிட்டு கூறினால் அனைவரும் கேட்பர்.

    எதையும் தெய்வீக ரீதியாக கூறினால் நம் மக்களின் செவிக்கு எட்டும். இதே போல் 3 வயதிலும் ஒரு மொட்டை அடிப்பர் அதற்கு காரணம், ஒரு வயதில் அடித்த மொட்டையில் சில கழிவுகள் வெளிவராமல் இருக்கும். அப்படி வராமல் இருக்கும் கழிவுகள் 3 வயதில் அடிக்கும் மொட்டையில் வந்துவிடும்.

    இதற்காகவே ஒரு வயதிலும், மூன்று வயதிலும் மொட்டை சாமியின் பெயரில் அடிப்பர். இதன் உண்மை பின்னணியே இதுதான். முன்னோர்கள் எதை செய்தாலும் அதன் பின் ஒரு அறிவியல் பின்னணி இருக்கக்கூடும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்.

    அதை கண்டுகொள்ளாமல் மொட்டை அடித்து கொள்ளலாம் என்று அலட்சியமாக விட்டால், பிற்காலத்தில் குழந்தைக்கு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். 
    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் செய்வார்கள்.
    டேகேருக்கோ அல்லது ப்ளே ஸ்கூலுக்கோ குழந்தைகள் போகத் தொடங்கினால்தான் தன் வயது ஒத்த குழந்தைகளை பார்க்கும்போது சாப்பிடவும் ஏதோ ஒரு மணிநேரமாவது உட்கார்ந்து விளையாடவும் பின் நன்றாக தூங்கவும் செய்வார்கள். குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டில் யாருமற்றவர்களாகவும் பணிக்குச் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் பெண்களுக்கு டேகேர் ஒரு மிகப்பெரிய கொடை.

    இப்படி நகர வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று டேகேர்களும், க்ரீச்களும் மாறிவிட்ட சூழலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் டே கேர்கள் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா? பெரும்பாலானவர்கள் ஏசி ரூம் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஏசி ரூம் மட்டுமல்ல அது இல்லாத காற்றோட்டமான இயற்கையான வெளிச்சம் கொண்ட அறைகள் இருக்க வேண்டுமென எதிர்பாருங்கள். ஏசி ரூம் என்று சொன்னாலும் அது ஜன்னல், கதவு என அடைத்திருக்கும் சிறை என்று தான் குழந்தைகளுக்கு தெரியும். காற்றோட்டமுள்ள அறைகள் அவர்களுக்கு கூடுதல் உற்சாகத்தையும் விடுவிப்பையும் கொடுக்கும் விளையாட வெளியில் இடமும் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

    சரியாக கவனித்துக்கொள்ள முறையாக படித்த ஆசிரியர்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் உதவியாளர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள். டாய்லெட் பாத்ரூம்களை எத்தனை நாளுக்கு ஒருமுறை சுத்தம் செய்கிறார்கள் என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். டையஃபர்கள் மாற்றும் போது நன்றாக கழுவி துடைத்து பவுடர் போட்டு விட்டு மாற்ற வேண்டுமென அறிவுறுத்துங்கள். அந்த இடம் குழந்தைகளுக்கு பழகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் கழிக்க பாத்ரூம்தான் போக வேண்டுமென சொல்லிக் கொடுக்க சொல்லுங்கள். சீக்கிரமே டையஃபர் பழக்கம் மாறிவிடும்.

    மற்ற குழந்தைகளுடன் பேசும் வாய்ப்பு கிடைப்பதால் குழந்தைகளின் பேச்சுத்திறன் வெகுவிரைவில் வசப்படும். முதலில் இரண்டு மணி நேரம் மூன்று மணிநேரம் என விட்டு அழைத்து வாருங்கள். இடமும் பிடித்த நண்பர்களும் அமைந்து விட்டால் அவர்களே பையை தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுவார்கள். மற்ற குழந்தைகள் என்ன செய்கிறார்களோ அதையே திரும்ப செய்யவும் பழகுவார்கள். அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம். அனைத்தையும் எதிர்பார்க்க பழகிக் கொள்ளுங்கள்.

    குழந்தைகளின் வளர்ச்சியில் டே கேர்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பிறருடன் பழகவும் விளையாடவும் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தையும் ஏற்படுத்தும். நமக்குத்தான் இவர்கள் குழந்தைகள். சமுதாயத்திற்கு இவர்கள் நல்லதொரு மனிதர்களாகவும் மற்ற கலாசாரங்களை மதிக்கவும் தங்களுக்கான நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவும் இவர்களுக்கு முதல் பயிற்சி கூடம்தான் இது.

    கண்ணீருடன் குழந்தையை டேகேரில் விட்டுவிட்டு வராதீர்கள். இந்த இடம் உனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை குழந்தைக்கு உங்கள் செய்கைகளின் மூலம் உணர்த்துங்கள். நம் குழந்தைகள் மனம் விரும்பும் இடத்தினை சரியாக தேர்ந்தெடுத்து அவர்களை உற்சாகமாக அனுப்புங்கள். 
    மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம்.
    இன்றைய மாணவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அவர்களின் ஆர்வம் பள்ளிக்கல்வியைத் தாண்டியதாக இருக்கிறது. மாணவர்கள் சிலர் கல்வியில் ஆர்வம் குறைந்தவர்களாக இருப்பதற்கு கல்வி முறைகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் இல்லை அல்லது மாணவர் திறன் சார்ந்த கல்வி முறை பின்பற்றப்படுவதில்லை என்கிறது சமீப ஆராய்ச்சிகள். மாறிவரும் மாணவர் மன நிலைக்கு ஏற்ற கற்பித்தல் முறை வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

    மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை வளர்த்து, லட்சியங்களை புகுத்த பெற்றோரும், ஆசிரியரும் சற்று கூடுதல் அக்கறை எடுக்க வேண்டியது அவசியம். எந்தக் காரணத்தால் மாணவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்த வேண்டும். நவீன கால மாணவர்கள் மனநிலைக்கு ஏற்ற சில கற்பித்தல் ஆலோசனைகள்...

    காட்சி உலகம்...

    இன்றைய மாணவர்கள் நவீன தொழில்நுட்பங்களில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்ப அறிவு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விஷயங்களால் அவர்களின் கவனம் ஈர்க்கப்படுகிறது. எனவே வகுப்பறையைத் தாண்டிய கற்பித்தல் முறையில்தான் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர்கள் ஈர்க்க முடியும். ஆகையால் பாடங்களைத் தாண்டிய விஷயங்களில் கருத்துப் பகிர்வு செய்ய சில நிமிடங்களை ஆசிரியர்கள் ஒதுக்க வேண்டும்.

    பெற்றோரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்து தங்கள் குழந்தைகளை ஈர்க்கவும் வழி நடத்தவும் வேண்டும். மல்டிமீடியா மூலமாக குறுவீடியோக்கள், காட்சிப பகிர்வு மூலம் அவசியமான அறிவு வளர்ச்சி விஷயங்களை மாணவர்களின் மனதில் பதிக்க வேண்டும். இது அவசியமற்ற முறையில் அவர்கள் பொழுதுபோக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்தும். புரிதலை வளர்க்கும். மல்டிமீடியா நுட்ப அறிவையும் அவர்களுக்கு வளர்க்கும்.

    இணையக் கல்வி அவசியம்

    பயிற்சி வகுப்புகளையும், தகவல் தொடர்பையும் தற்காலத்திற்கு ஏற்றபடி இணைய வழிக்கு மாற்றினால் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கற்றலில் கவனம் செலுத்துவார்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று அனைத்து தகவல்களையும் இணைய தரவுகளாக மாற்றவும், பாடங்கள் மற்றும் பயிற்சிமுறைகளை கணினி- இணைய நுட்பத்திற்கு எளிதாக மாற்றவும் முடியும். மாணவர்களுக்கு தகவல்களை கடத்தவும், கருத்துகளை பகிரவும் இது ஏற்றது.

    வீட்டுப்பாடப் பயிற்சிக்கான தகவல்களையும், அதற்கு தேவையான உபகரணங்களையும் இணையத்தில் பதிவேற்றினால் எந்த மாணவரும் குழப்பமடையாமல் தெரிந்து கொள்வார்கள். கூச்சம் தவிர்த்து தங்கள் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்கவும் இணைய தகவல் தொடர்பு வசதியாக இருக்கவும், இதன் வழியே ஒவ்வொரு மாணவரின் திறமையை பாராட்டவும், குறைநிறைகளை தனிப்பட்ட முறையில் தெரிவித்து அவர்களை வழிநடத்தவும் முடியும். இதனால் சராசரி மாணவர்கள் மற்றவர் முன்னிலையில் அவமானம் அடைவதையும், கூச்சம் கொண்டு ஒதுங்கிச் செல்வதையும் தவிர்க்கலாம். தங்களுக்கென எளிமையான இணையப்பக்கத்தை உருவாக்குவது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகச்சுலபமானது என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.

    வகுப்பறை நிர்வாகம்

    ஆசிரியர்களின் வகுப்பறை நிர்வாகத் திறமை, மாணவர்களின் கற்றல் முறையில் நேர்மறை தாக்கத்தை உருவாக்குகிறது என்கிறது கற்றல் தொடர்பான ஆய்வுகள். சிறந்த மாணவர்கள் மற்றும் சவால் நிறைந்த சராசரி மாணவர்கள் என பலதரப்பட்ட மாணவர்களை கொண்டதுதான் வகுப்பறை. அனைவர் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக ஆசிரியர்கள் தங்கள் பார்வையை செலுத்த வேண்டும்.

    நீங்கள் தனித்துவம் நிறைந்த ஆசிரியர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். புதுமையும், எளிமையும் கொண்ட ஆசிரியர்களாக வலம் வருபவர்களின் பாடங்களில் மாணவர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பல நேரங்களில் போதிப்பதைவிட மென்மையான வழிநடத்தல்கள் நல்ல மாற்றங்களை உருவாக்கும் என்பதை உணர்ந்தவர்கள் சிறந்த ஆசிரியர்கள்.

    வகுப்புகள் பாடம் நடத்த மட்டுமல்ல, பண்பு வளர்க்கவும், மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை உருவாக்கவும்தான் என்பதை உணர்ந்து ஆசிரியர்கள் பழகும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். பாட விளக்கங்களை நவீன மாற்றத்திற்கு ‘அப்டேட்’ செய்ய வேண்டும். காட்சிமுறை பாடங்களுக்கு உங்கள் வகுப்பை தயார் படுத்தியிருந்தால் நீங்கள் முன்மாதிரி ஆசிரியர்தான்.

    தேவை சுயபரிசோதனை

    மாணவர்களை மதிப்பிடுவதைப்போல தங்களையும் ஆசிரியர்கள் மதிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயம். மாணவர்கள் உங்கள் வகுப்புகளில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு, நீங்கள் பாடம் நடத்தும் முறையில் உள்ள குறைநிறைகள் உள்ளதா? என அறிய முற்பட வேண்டும்.

    ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறையை ஒரு வீடியோவாக பதிவு செய்து தாங்களாக சுய பரிசோதனை செய்யலாம். வேகமாக பாடம் நடத்துகிறீர்களா, போதிய விளக்கம் அளிக்கவில்லையா, கண்டிப்பு மிகுந்திருக்கிறதா? கனிவு குறைந்திருக்கிறதா? அதிகமாக பாடச்சுமை கொடுக்கிறீர்களா? கடினமான பகுதியை சுலபமாக கற்பிக்க நீங்கள் என்ன வழிகளை கையாளுகிறீர்கள், சிறந்த மாணவர்களையும், சராசரி மாணவர்களையும், பின்தங்கிய மாணவர்களையும் சரிசமமாக நடத்துகிறீர்களா? பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற கவனம் செலுத்துகிறீர்களா? இதர நடை, உடை, பாவனைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது போன்ற அனைத்து அம்சங்களிலும் உங்களை சுயபரிசோதனை செய்து கொள்வது இன்றைய மாணவர்களை வழிநடத்த அவசியமான மாற்றமாகும்.

    வகுப்பைத் தாண்டிய ஆசிரியர்கள்...

    ஆசிரியர்கள் வகுப்பறை தாண்டியவர்களாக வலம் வர வேண்டியது அவசியம். பாடங்களைக் கடந்த விஷயங்களை மாணவர்களுடன் பகிர்வது முக்கியத் தேவையாக இருக்கிறது. அரசியல் அறிவு, சமூக அறிவு கொண்டவர்களாக ஆசிரியர்கள் வலம் வர வேண்டியது உள்ளது. அரசுக்கும், அரசு பிரதிநிதிகளுக்கும் தகவல்தொடர்பை ஏற்படுத்த ஆசிரியர்கள் பாலமாக இருக்க வேண்டும். தங்கள் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்கள், நிதிகள் தாமதமின்றி பெற்றுத்தர ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புறவெளி கல்வியாக சுற்றுலா கல்வி மற்றும் நேரடி பயிற்சி கல்வியை அதிகப்படுத்த வேண்டும். இது மாணவர்களின் திறனை பெரிதும் வளர்க்கும்.

    கற்பித்தலும், கற்றலும்...


    கற்பித்தல் எளிதான பணியல்ல. அதை மாணவர்கள் எளிதாக உணர மாட்டார்கள். அதே நேரத்தில் கற்றலும் சாதாரணமான விஷயமல்ல. விருப்பமற்ற பாடங்களையும், அதிகப்படியான பாடங்களையும் அவர்கள் படித்தாக வேண்டிய சூழலில் இருக்கிறார்கள். எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அவசியம் தங்கள் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம். தியானம், யோகா, விருப்ப வாசிப்பு, ரசனையானதை ரசித்தல், வெளியே சென்று பொழுதுபோக்குதல் ஆகியவற்றின் மூலம் மனதை இலகுவாக்கி கற்றலில், கற்பித்தலில் ஆர்வத்தை வளர்க்க வேண்டும்.

    கல்விச்சூழலானது ஆசிரியர் - மாணவர் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கும்போது கற்றல் மேம்படுகிறது. ஆற்றலும், ஆளுமையும் வளர்கிறது. வளரட்டும்!
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
    சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத்தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யாவிட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும். தங்கள் பெற்றோரிடம் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். சின்ன வி‌ஷயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள்.

    கெட்ட வார்த்தைகள்கூட பேசுவார்கள். குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும்போதோ, ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படி தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். பொதுவாக தங்கள் தவறுகளுக்கான தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காகவும் இதுபோன்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடுகின்றனர்.

    கடும் வார்த்தைகளை பயன்படுத்தியும் தங்கள் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர்கள் உடல்ரீதியான வன்முறையிலும் இறங்குவதை பார்க்கலாம். பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப்பது போன்றவை அடுத்த கட்டம்.

    பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுவது அம்மாக்கள்தான். இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக்கும். ஆனால் குழந்தைகளின் முரட்டுத்தனத்தை பெற்றோர் சரியான சமயத்தில் பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும். ஒரு குழந்தை முதல் முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து, கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கைகளை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர், மென்மையாக ஆதரித்தாலும், குழந்தை தனது போக்கை கைவிடாது.

    ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களை பாதிக்காமல் குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கற்றுக்கொடுப்பது அவசியமானது. விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு, ரூபிக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தை குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும்.

    வெற்றியைக் கொண்டாடுவது போன்றே தோல்வியையும் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுகள் உதவும். கணிப்பொறியில் வீடியோ கேம் ஆடும் பெரும்பாலான குழந்தைகள், தாங்கள் தோற்கும் நிலை வரும்போது சுவிட்ச் ஆப் செய்துவிடுகின்றனர். எதிரில் மனிதர்கள் விளையாடாத நிலையில் அந்த அனுபவம் யதார்த்த வாழ்க்கையை கற்றுக்கொள்வதற்கு எந்த உதவியும் புரிவது இல்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக்கொள்ள முடியும்.

    குழந்தை பருவத்தில் வெளிப்படும் முரட்டுத்தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்பு உண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சி அடையும். குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால் அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தை பருவத்திலேயே இதுபோன்ற சிக்கல்களை சரிசெய்வது அவசியம்.

    உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது.
    அடிக்கடி சளி பிடிப்பது, மூக்கடைப்பு, தும்மல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா, கண்கள் சிவப்பது, மாத்திரைகள், உணவால் ஏற்படுவது என்று அலர்ஜி பாதிப்புகளை நிறையப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும், 20 குழந்தைகளாவது என்னிடம் வருகின்றனர்.

    தாய்ப்பாலில் இருந்து வேறு உணவிற்கு மாற துவங்கும், ஆறு மாதங்களில் இருந்து, உணவு அலர்ஜி வருகிறது. உணவுப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, 90 சதவீதம் சுவை, நிறம், மணத்திற்காக சேர்க்கப்படும் பொருட்களாலேயே ஏற்படுகிறது.

    ஒரு குழந்தைக்கு, பால் அலர்ஜி என்றால், பால் குடித்த, 24 மணி நேரத்திற்குள் முகம், கை, கால் வீங்கி விடும். எத்தனை முறை பால் குடித்தாலும், குடித்த, 24 மணி நேரத்திற்குள் அலர்ஜிக்கான அறிகுறிகள் வர வேண்டும்.

    அப்போது தான், அந்த குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு அலர்ஜி ஏற்படுகிறது என்று சொல்ல முடியும். பால் குடித்தவுடன், இன்று அலர்ஜிக்கான அறிகுறிகள் இருந்தது. ஆனால், அடுத்த நாள் வரவில்லை என்றால், அது பாலால் ஏற்பட்ட பிரச்சனை இல்லை. வேறு காரணங்கள் இருக்கலாம்.

    குறிப்பிட்ட உணவால் அலர்ஜி என்றால், எத்தனை முறை அந்தப் பொருளை சாப்பிட்டாலும், ஒவ்வொரு முறையும் அலர்ஜி வர வேண்டும்.

    பால், முட்டை, நட்ஸ் ஆகியவற்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி வருவது பொதுவான விஷயம். கோதுமை சாப்பிடுவதால், மிக அபூர்வமாக சில குழந்தைகளுக்கு அலர்ஜி வருகிறது. உணவால் ஏற்படும் அலர்ஜி, பல நேரங்களில் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

    குறிப்பிட்ட உணவால் குழந்தைக்கு பிரச்சனை வருகிறது என்ற சந்தேகம் இருந்தால், அதை உறுதி செய்து கொள்ள, நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. 20 நிமிடங்களிலேயே, எந்த உணவால் அலர்ஜி என்பதை கண்டுபிடித்து விட முடியும். அலர்ஜி ஏற்படுத்தும் உணவை தெரிந்து, தவிர்ப்பது பாதுகாப்பான வழி. உலகம் முழுவதிலும் இதைத் தான் பின்பற்றகின்றனர்.

    இது தவிர, துாசு மாசினால் ஏற்படும் அலர்ஜியும், குழந்தைகள் மத்தியில் பொதுவானதாக உள்ளது. மூக்கடைப்பு, தும்மல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகள் அடிக்கடி வருகிறது, அலர்ஜியால் ஏற்பட்ட பாதிப்பு என்று தெரியாமலேயே சிகிச்சை எடுப்பர்.

    இது ஏதோ வெளிப்புறத்தில் காற்று மாசு அதிகம்; அதனால், வருகிறது என்று நினைக்கிறோம். ஆனால், வீட்டிற்குள்ளேயே இருக்கும் பிரச்சனை இது.
    வீட்டில் பயன்படுத்தும் பொருட்களில், வளர்ப்பு பிராணிகளின் உரோமத்தினால், கரப்பான் பூச்சியால் வரும் அலர்ஜி. இப்படி இருந்தால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில், எப்போதும், ரணம் இருந்து கொண்டே இருக்கும். ‘ஏசி’ அறைக்கு வந்தவுடன் அதிகமாக, தும்மல், மூக்கடைப்பு வரும்.

    வெளியில் செல்லும் நேரங்களில், துணியால் முகத்தில் கட்டிக் கொள்வது, வெளியில் இருக்கும் மாசிலிருந்து பாதுகாக்குமே தவிர, வீட்டில் நிரந்தரமாக உள்ள பிரச்சனையில் இருந்து காக்க உதவாது. இதை பரிசோதித்து அறியவும் வசதிகள் உள்ளன.
    மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு நேரும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.
    காற்று மாசுபடுவது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாவதோடு பச்சிளம் குழந்தைகளின் உயிரையும் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. மாசுவால் உருவாகும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களில் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் இறந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 60,987.

    நைஜீரியாவில் 47,674 குழந்தைகளும், பாகிஸ்தானில் 21,136 பேரும், காங்கோவில் 12,890 பேரும் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆண் குழந்தைகளைவிட (28,097) பெண் குழந்தைகள்தான் (32,889) அதிக அளவில் இறக்கிறார்கள். 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 4,360 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள்.

    உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக இறப்பவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள். உலகில் பெருமளவு மக்கள் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ‘‘மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு நேரும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்’’ என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகா தாரத்துறை இயக்குனர் மரியா நெய்ரா.

    காற்று மாசுபாடு கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பது, குழந்தையின் உடல் எடை குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
    குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.
    இன்று (நவம்பர் 14-ந்தேதி) குழந்தைகள் தினம்.

    குழந்தைகள் ஒரு குடும்பத்தின் பொக்கிஷம். இந்த தேசத்தின் அற்புதம். உலகத்தின் உன்னதம். அவர்கள் தெய்வத்தின் மறு வடிவங்கள். இந்த மண்ணை துளிர்விக்கும் பசுமைபோல், மனதை குளிர்விக்கும் அன்பு மேகங்கள். வாழ்வின் எதார்த்தங்கள். வருங்கால மனிதனுக்கு தனது தலைமுறையை எடுத்துச் செல்லும் புதிய மரபணுக்கள். இம்மண்ணில் தவழும் நிலவுகள்.

    குழந்தை ஓர் அற்புதமான கவிதை. உருவத்தில் தெரிவது அல்ல குழந்தை. அது கவிதைபோல் கருவில் உருவாக்கப்படுவது. ஆதலால், வகுப்பறையில் கற்பதற்கு முன்பே, கருவறையிலேயே அது நிறைய உருக்கொள்கிறது. கருவிற்குள் இருக்கும் குழந்தைக்கு தாய் கற்றுக் கொடுப்பதைத்தான், அது பிறந்ததும் மண்ணில் பிரதிபலிக்கிறது.

    குழந்தை மொழி இனிது. மழலை இனிதினும் இனிது. கவிதையை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த மனிதனுக்கு, சந்தங்களின்றி வருகின்ற கவிதையும் மகிழ்விப்பதைப்போல், தம்மக்கள் மழலைச் சொல் யாழினிலும், குழலினும் இனிதெனப் புரியுமென்கிறார் திருவள்ளுவர். அமிழ்தம் உணவாகக் கிடைப்பது அரிது. உணவினை அமிழ்தாக்க அன்புக் கரங்களில் குழந்தைக்கு ஊட்டி மகிழுங்கள். குழந்தையும் அதேபோல் தன் சிறுகையில் கூழினை அளாவி ஊட்டும். அது அமிழ்தினும் இனிதென்பது சுவைத்தவர் பெருமிதம். இது வள்ளுவரின் வாழ்வியல் அனுபவம்.

    ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடமும், முழுவதுமான பள்ளிக்கூடமும் பெற்றோரே. “மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்” என்று எழுதித் தந்த ஆசிரியரின் கடிதத்தை அம்மாவின் கையில் புரியாத வயதில் தந்தான் சிறுவன். அதைப் படித்துவிட்டு, அழுகையை மனதோடு அடக்கிக்கொண்டு, சத்தமாய் மகனிடம் “உங்கள் மகனின் அறிவுத் திறமைக்கேற்ப, அவனுக்கு கற்பிக்கும் திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை” என்று வாசித்தார் அந்த தெய்வீகத் தாய். அத்தாய் வீட்டினை பள்ளிக்கூடமாக்கினார். மகன் பின்னாளில் அதை ஆய்வகமாக்கினார். மூளை வளர்ச்சியில்லாத தாமஸ் ஆல்வா எடிசன் என்னும் அந்த குழந்தை, இன்று உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் தனது பெயரை உச்சரிக்கும் பெருமை பெற்றது அவர் அன்னையாலே.

    ஆபிரகாம் லிங்கன் தனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும்போது அவனுக்கு கற்றுக் கொடுக்கவேண்டியவற்றை ஆசிரியர்களுக்கு கடிதம் எழுதினார். ஒவ்வொரு ஆசிரியரும், அதனை வகுப்பறை செல்வதற்கு முன் படித்துவிட்டு குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், மொழியின் இலக்கணங்களை அறிவதற்கு முன்பு, வாழும் இலக்கணங்களை ஒவ்வொரு குழந்தையும் அறியும். ஓர் அற்புதமான மனித சமுதாயம் இம் மண்ணில் பரிசாய் அமையும். பெற்றோர்கள்தான் ஒவ்வொரு குழந்தையின் முன்மாதிரிகள். ஒவ்வொரு குழந்தையும் இம்மண்ணில் பிறக்கின்றபோது ஓர் ஆலமரத்தின் விதையைப்போல், அசாத்தியமான சக்தியோடு பிறக்கிறது. அதனைச் சரியான முறையில் வளர்த்தெடுத்தால் அக்குழந்தைகள் அற்புதங்களை நிகழ்த்தும்.



    குழந்தைகள் மாயக் கண்ணாடிகள். ஒன்றை பலவாய் பிரதிபலிப்பவர்கள். அவர்களிடம் புன்னகைத்தால், நிறைய சிரிப்பர். திட்ட ஆரம்பித்தாலோ, வசைபாடுவர். அன்பாய்க் கொஞ்சினால் பாசமழை பொழிவர். பாராட்டினால் வாழ்த்துப் பூமாலை சூடுவர். பகைத்தால் போர் புரிவர். சிறு சேட்டைகளைச் சகித்தால், பொறுமையின் இலக்கணமாவர். கிண்டலடித்தால், வெட்கித் தலைநிமிரார். ஊக்கப்படுத்தினால், நம்பிக்கையின் தும்பிக்கையாயிருப்பர். அவமானப்படுத்தினால், குற்றவாளிபோல் கூனிக் குறுகிடுவர். அங்கீகரித்தால், உலகம் விரும்பும் மனிதராவர்.

    நேர்மைப்படுத்தினால் நீதிமானாய் ஜொலிப்பர். மொத்தத்தில் நாம் விதைப்பது எவ்விதையாயிருப்பினும், வளர்ந்ததும் மரங்கள் ஒரு விதையை மட்டும் தருவதில்லை. அதுபோல் ஓராயிரமாய் மகிழ்ந்து தருவர் குழந்தைகள். அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளாலும், பெற்றோர்களாலும், குழந்தைகளின் பேச்சுத்திறன் பாதிக்கப்படுகிறது. அவர்களின் உடல் பருமனாகிறது. சிறுவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகின்றனர் என்பது ஆராய்ச்சியின் எச்சரிக்கை. மகாகவி பாரதி போல் “ஓடி விளையாடு பாப்பா!” என்று ஓடச் சொல்லிக் கொடுக்கும் தந்தை இந்த தேசத்தின் ஆரோக்கியத் தூண்.

    மனதிற்கு ஒரு கலையையும், உடலுக்கு ஒரு விளையாட்டையும் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும் குழந்தை நம் தேசத்தின் உயிர்ப்பு. அதை ஒவ்வொரு குழந்தையிலும் விதைப்போம்.

    குழந்தைகள் பெற்றோர்களின் பிம்பங்கள். ஒரு குழந்தையின் தாத்தா இறந்ததும் அவரது அறை சுத்தம் செய்யப்பட்டது. அதிலிருந்த தேவையற்றவைகள் தூக்கியெறியப்படுகின்றன. தாத்தா சாப்பிட்ட நசுங்கிய தட்டை மட்டும் குழந்தை வீட்டிற்குள் கொண்டு வந்தது. “இதை ஏன் எடுத்து வந்தாய்?” என்று தந்தை கேட்டார். அப்பா! நீங்க வயதானதும் உங்களுக்கு சாப்பாடு போடுவதற்குத்தான்! என்றது குழந்தை. வளர்த்த தந்தையை கொச்சைப்படுத்தியவருக்கு, தந்தையாகிய குழந்தை சொல்லிக்கொடுத்த பாடம் இது.

    குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அதிகமாக விளையாட விரும்பும். அதனைத் தொந்தரவு என நினைத்து அவர்களை அமைதிப்படுத்த அவர்கள் விரும்பும் தொலைக்காட்சி நிகழ்ச்சியையோ அல்லது ஒரு செல்போனையோ கையில் கொடுக்கும்போது குழந்தைகள் அமைதியாகிவிடும். அதுபோல், சமூக வலைதளங்களில் சிக்கிப்போகும் குழந்தை, விட்டில் பூச்சிகளாய் விரைந்து மடியும். குழந்தைகளை நெறிப்படுத்துவதும், வழிப்படுத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமையாகும். இல்லையெனில், அவர்களுக்கு தருகின்ற வாய்ப்புகள் துடுப்பில்லாத கலன்போல கடலில் மூழ்கிவிடும்.

    குழந்தைகளோடு செலவழிக்கும் நேரங்கள் உறவுகளின் முதலீடு. அதில் அவர்களோடு விளையாடி அடிக்கடி தோற்றுப்போனால், வாழ்வில் வெற்றியே.

    ஆர்.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்., துணைஆணையர், நுண்ணறிவுப்பிரிவு
    ×