என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்வென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
    குளிர்காலம் அல்லது பனிக்காலம் (Winter) என்பது இலையுதிர்காலத்திற்கும், இளவேனில்காலத்திற்கும் இடையில் வரும் பருவ காலம் ஆகும். இந்தக் காலங்களில் இரவு நேரம் அதிகமாகவும், பகல் நேரம் குறைவாகவும் இருக்கும்.

    எனவே குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை எப்படி சமாளிப்பது என்பதைக் குறித்து பார்ப்போம்.

    குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு காது, மூக்கு, தொண்டையை போன்ற பகுதிகளில் தொற்று நோய்கள் எளிதில் தாக்கும். இதற்கு காரணம் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது தான். குறிப்பாக இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால், இதற்கு இடைப்பட்ட நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் குழந்தைகளுக்கு துவங்கும். குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில், இது காய்ச்சலாக மாறும்.

    எனவே குளிர் அதிகமாக இருக்கும் நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை நன்றாக மூடி வைத்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் எளிதில் தாகம் எடுக்காது. ஆனாலும், போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும். தொண்டை வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குளிர் காலத்தில் வெந்நீர் அருந்துவது உடலுக்கு மிகவும் சிறந்தது. இதன்மூலம் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வராது.

    குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுப் பொருட்களை நேரடியாக எடுத்து சாப்பிடக் கூடாது. அதை சூடு செய்தோ அல்லது தட்ப வெட்பத்துக்கு அவை வந்ததும் சாப்பிட வேண்டும்.

    குறிப்பாக குளிர் காலத்தில் உதடு வெடிப்பு அதிக அளவில் ஏற்படும். அவற்றை தவிர்க்க நெய் அல்லது எண்ணெயை உதட்டில் பூசுங்கள். அதேபோல வறண்ட சருமம் உள்ளவர்கள் தோலில் ஏற்படும் வறட்சியை தடுக்க ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய் பூசி குளித்து வந்தால் சருமம் சீராக இருக்கும்.

    முக்கியமாக குளிர்காலத்தில் நமக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உணவில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், ஒமேகா 3 நிறைந்த மீன்கள், சிறுதானியங்கள், பாதாம், வேர்கடலை, தேன், போன்றவற்றை கூடுதலாக உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலில் உள்ள வெள்ளை ரத்த அணுக்கள் செயல் திறன் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும்.
    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரே அடியாக தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது.
    உடல் பருமனால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடி வருகிறது. முன்பெல்லாம் ஆண், பெண் இருவருமே திருமணத்துக்கு முன்பு வரை ஒல்லியாக இருப்பார்கள். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்ததும் சற்றே பூசினாற்போல மாறிவிடுவார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் உடல் பருமனால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் அதிக உடல் எடையுடனும், ரத்த அழுத்தத்துடனும் இருக்கிறார்கள் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள். பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவம் எய்தி விடுகிறார்கள். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் சிக்கல், திருமணத்துக்குப் பிறகும் அவர்களை விடாமல் துரத்துகிறது.

    குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் விரும்பியதை எல்லாம் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் பருமனான பிறகு அவற்றை ஒரே அடியாக தவிர்த்துவிடுவது, இதுதான் பல குடும்பங்களிலும் நடந்து வருகிறது. அதுவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், குழந்தைகள் மீது செலுத்துகிற ஆதிக்கம் எல்லை கடந்தது. அவற்றில் சேர்க்கப்படும் நிறமூட்டிகளும், சுவையூட்டிகளும் நாக்குக்கு இனிமையே தவிர, உடலுக்கு நல்லதல்ல.

    குழந்தைகள் கேட்கிறார்களே என்று ஆரம்பத்தில் அளவுக்கு அதிகமாக கொடுப்பதும் தவறு, பிறகு அவற்றை ஒரேயடியாக தவிர்ப்பதும் தவறு. குழந்தைப் பருவத்தில் இருந்தே சரியான உணவுப்பழக்கத்தை நாம்தான் அறிமுகப்படுத்த வேண்டும். வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது வேக வைத்த காய்கறிகளையும் உணவுகளையும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பெரியவர்களும் இப்படித்தான் சாப்பிட வேண்டும்.

    குழந்தைப் பருவம் முதலே காய்கறி, கீரை வகைகள் சாப்பிடுவதை பழக்கி விட்டால், வளர்ந்த பிறகும் அவற்றை விரும்பிச் சாப்பிடுவார்கள். இப்போதெல்லாம் தெருவில் இறங்கி விளையாடுகிற குழந்தைகளைப் பார்க்கவே முடிவதில்லை. கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் என உட்கார்ந்த நிலையிலேயே விளையாட பழகிவிட்டார்கள். அதைத் தவிர்த்து விட்டு குழந்தைகளை குறைந்தது முக்கால் மணி நேரமாவது, அவர்களது நண்பர்களுடன் சேர்ந்து ஓடியாடி விளையாடப் பழக்க வேண்டும். இதனால் உடல் தசைகள் வலுப்பெறுவதுடன், உடம்பில் தேவையில்லாமல் கொழுப்பு சேர்வதும் குறையும்.

    சிலர் தங்களுக்குப் பிடித்த உணவுகளை அளவில்லாமல் சாப்பிட்டுவிட்டு, திடீரென எடையைக் குறைக்கிறேன் என்று அவர்களாகவே பட்டினி கிடக்க ஆரம்பித்து விடுவார்கள். இது உடல் சோர்வுடன் பக்க விளைவுகளையும் உண்டாக்கும். வேலைக்குச் செல்கிறவர்கள் உணவில் காட்டும் அலட்சியம்தான் பல கோளாறுகளுக்கும் காரணம். முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வு ஏற்படும். நம் உணவுப்பழக்கம் சீராக இருந்தாலே எந்தச் சிரமமும் இல்லாமல் நலமுடன் வாழலாம்.
    உங்கள் குழந்தைக்கு அடிக்கடி ஏதாவது ஒரு நோய் வந்துகொண்டே இருந்தால் கவலையை விடுங்கள்… இதை மட்டும் செய்யுங்கள்… உங்கள் குழந்தையை நோய் நெருங்கவே நெருங்காது..
    இன்றைய காலத்தில் எதற்கெடுத்தாலும் குழந்தைகளுக்கு நோய்கள் வந்துவிடும். மழையில், நனைத்தால் மட்டும் அல்ல அதிகம் குளித்தால் கூட நோய் வந்துவிடும், நின்றால், நடந்தால் ஏன் பொத்தி பொத்தி வளர்க்கும் குழந்தைகளுக்கு கூட ஏதாவது ஒரு நோய் வந்துகொண்டே இருக்கும். தினமும் மருந்து எடுத்து எடுத்தே பல தாய்மார்களுக்கு வெறுத்து போகும் இன்று அதற்கான தீர்வு பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

    தொட்டதற்கெல்லாம் குழந்தைக்கு நோய் வருகிறதென்றால் குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி இல்லை என்பது தான் அர்த்தம் . முதலில் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். நெல்லிக்காயை எடுத்து இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தேனில் ஊற வைத்து விட்டு காலையில் அதை குழந்தைக்கு கொடுக்கலாம்,

    அடுத்து தேங்காய் பாலில் உணவுகள் சமைத்து கொடுக்க வேண்டும். சிவப்பு கொய்யாப் பழம் கிடைத்தால் தினமும் ஒன்று வீதம் சாப்பிட கொடுக்கலாம். அதே போல் அவல். இது எல்லா இடங்களிலும் கிடைக்க கூடியது. அவலை வாங்கி வந்து தண்ணீரில் கழுவி சிறிது சீனி, தேங்காய் சேர்த்து சுவையாக குழந்தைக்கு கொடுக்கலாம்.

    நெல்லிக்காய் சாப்பிடுவது சீக்கிரமே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆனால் குழந்தைகள் அதனை சாப்பிட விரும்ப மாட்டார்கள். அதனால் மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து வடித்து சிறிது தேன் அல்லது நாட்டு கற்கண்டு சேர்த்து கொடுத்தால் குடிப்பார்கள்.

    குழந்தைகளுக்கு கற்கண்டு பிடித்த ஒன்றாகும் எனவே அதனை சும்மா சாப்பிடவும் கொடுக்கலாம். முடிந்த அளவு தண்ணீர் ஜூஸ் போன்றவற்றை குழந்தைகள் குடிக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிவப்பரிசி உணவுகளை கொடுத்தால் கூட சீக்கிரம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும்..!!
    சரியான விகிதத்தில் அரவணைப்பும் கண்டிப்பும் கலந்து கொடுத்தால் அதாவது நம்முடைய பெற்றோர் போல் நாமும் நடந்துகொண்டால், நம்மைப்போல் நம் குழந்தைகளும் மனிதம் நிறைந்த சிறந்த பிள்ளைகளாக, சாதனையாளர்களாக திகழ்வார்கள்.
    கூட்டுக்குடும்பங்கள், பெரியவர்களுக்கு முக்கியத்துவம், கட்டுப்பாடுகள், விருந்தோம்பல், பண்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், பகிர்தல், சேர்ந்து வேலை செய்தல், கண்டிப்பு, சின்ன சின்ன சந்தோஷங்கள், இயற்கையோடு ஒத்து வாழ்தல், எளிய பாரம்பரிய உணவு முறை, வீட்டு வேலை பார்த்தல், விளையாடுதல், கோவிலுக்கு செல்லுதல், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பயம் கலந்த மரியாதை, தோட்டம் மற்றும் வயல் வேலை என்று ஒரு நிஜமான வாழ்க்கை அது.

    ஒரு குழந்தை தவறு செய்தால் பெற்றோர் மட்டுமின்றி உற்றார் உறவினர், ஆசிரியர் என்று எல்லோரும் உரிமை எடுத்து திருத்துவர். உதாரணமாக இது போன்ற சம்பவம் உங்கள் வீடுகளிலும் நடந்திருக்கும். பையன் தலைகீழாக நின்று கல்லூரி சுற்றுலா பயணத்திற்கு தந்தையிடம் ஒப்புதல் வாங்கி வைத்திருந்த நேரத்தில் ஊரிலிருந்து வந்த பெரிசு“இதெல்லாம் அனுப்பலாமா? பயமில்லையா?” என்று முட்டுக்கட்டை போடுவார். பையனுக்கு அது இடிபோல் இருந்தாலும் அதில் குடும்ப நலன் இருக்கும்.

    அது ஒரு நிரந்தரப் பாடம் கற்பிக்கும். வாழ்க்கையில் எல்லாவற்றையும் சமாளிக்க கற்றுக்கொடுக்கும், ஏமாற்றங்களை எதிர்கொள்ள கற்றுக்கொடுக்கும். வாழ்க்கையில் எப்பொழுதும் நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்ற மமதை விலகும்.

    இன்றைய இளைய சமுதாயம் எப்படி இருக்கிறது?

    100 சதவீதம் நம்மைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஏற்க மனம் இல்லை என்றாலும் உண்மை அதுவே. இதற்கு இரு காரணங்கள் உள்ளன.
    ஒன்று எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாமல் அறிவியல் பூர்வமாக பகுத்தறிகிறார்கள். மற்றொன்று இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜி வளர்ச்சி.
    ஆனால் இந்த புத்திசாலித்தனம் ஆக்கபூர்வமாக அவர்களுக்கு பயன்படுகிறதா என்றால் பெரும்பாலான வர்களுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    ஏன் அப்படியில்லை?

    இன்றைய இளைஞன் தனிமையையே விரும்புகிறான். சதா சர்வகாலமும் செல்போனை பார்த்து கொண்டு மிகப்பெரிய சோம்பேறியாக வலம் வருகிறான்.
    தான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற எண்ணம். யாரும் தன் முடிவில் தலையிடுவதை விரும்புவதில்லை. சக மனிதர்களுடன் பேசிப்பழக முற்படுவதில்லை.

    பெற்றோருக்கோ, உறவுகளுக்கோ அல்லது பிறருக்கோ உதவத் தோன்றுவது இல்லை. இந்த மனநிலை எதனால் ஏற்பட்டது? என்ற கேள்வியை கண்களை மூடிக்கொண்டு நிதானமாக ஓரிரு நிமிடங்கள் யோசியுங்கள். அனேகம் பேரின் மனதில் உதித்த பதில் செல்போன் தானே? ஆனால் உண்மையில் என்ன காரணம் தெரியுமா? பெற்றோர்களாகிய நாம் தான் காரணம். அதிர்ச்சியாக இருக்கிறது அல்லவா?

    நாங்கள் அப்படி என்ன செய்து விட்டோம் என்கிறீர்களா?

    நம் தகுதிக்கு மீறி இருப்பதிலேயே மிக அதிக கட்டணம் உள்ள பள்ளியில் அடித்து பிடித்து சிபாரிசு வைத்துசேர்த்து படிக்க வைக்கவில்லையா? பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர டான்ஸ், சூம்பா, நீச்சல், டியூசன் என்று பணத்தை கரைக்கவில்லையா? புதிதாக வந்த விலை உயர்ந்த போன்,பிராண்ட் சர்ட்- பேண்டுகள் என்று வாங்கிக் குவிக்க வில்லையா? நண்பர்களின் பெற்றோர்கள் வைத்திருக்கும் பைக், காரைவிட பிராண்டட் காரில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு அதன் தவணையை கட்ட மாதா மாதம் இன்னும் கொஞ்சம் மூச்சிரைக்க ஓடவில்லையா?

    வாழ்க்கை முழுவதும் தான் சைக்கிள் மிதித்தாலும் கல்லூரிக்கு போகும் மகனுக்கு பைக் வாங்கி கொடுக்கவில்லையா? இவ்வளவும் சாத்தியமாவதற்கு எவ்வளவு சிரமங்கள் பட்டிருக்கிறோம். இதனை பிள்ளைகளிடம் சிறிதும் காட்டிக் கொள்ளாமல் இருக்கும் நாங்கள் எப்படி எங்கள் குழந்தைகள் தடம் புரள காரணமாக இருக்க முடியும்? என்று கோபம் கொப்பளிக்கின்றதா? ஒரேயரு கேள்வி... மேற்சொன்னவற்றில் ஏதேனும் அந்த குழந்தை உங்களிடம் கேட்டதா?

    பணத்தால் வாங்கக் கூடிய விஷயங்கள் எதுவுமே ஒரு குழந்தைக்கு அதிக நேரம் திருப்தியை தராது. குழந்தை ஆசைப்பட்டு ஒன்றை கேட்டாலுமே நம்மால் வாங்கி தர இயலாது. அது நம் தகுதிக்கு மீறியது என்ற உண்மையை கனிவாக புரியும்படி கூறினால் எந்த குழந்தையுமே அதை கேட்டு வம்படிக்காது. பெரிய மனிதன் போல புரிந்து கொள்ளும். மாறாக உண்மை நிலையை மறைத்து நம் பொய்யான கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள ஒரு மாயையான உலகத்தை அக்குழந்தைக்கு சிறுவயது முதல் பழக்கிக் கொடுக்கிறோம்.

    நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்று ஒரு காலகட்டத்தில் அது நம்பத் தொடங்குகிறது. இதனால் ஒரு சிறு தோல்வியைக்கூட அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. எனவே தான் நாளுக்கு நாள் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். வெற்றி என்றால் சந்தோஷப்படுங்கள். தோல்வி என்றால் அதிலுள்ள பாடத்தைக் கற்றுக்கொண்டு நகருங்கள் என்று அக்குழந்தையிடம் பெற்றோராகிய நாம்தானே கூறவேண்டும். மாறாக ஒரு பளபளக்கும் வாழ்க்கையை காட்டி அவர்களை பிடிவாதக்காரர்களாக்கிவிட்டு பின்னர் அவர்களை எப்படி கையாள்வது என்று தவிக்கிறோம்.

    உங்களுக்கு தெரியுமா? பணத்தால் வாங்கவே முடியாத ஒன்றே ஒன்றைத்தான் ஒரு குழந்தை உங்களிடம் எதிர்பார்க்கிறது. அதுதான் “நேரம்”. உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையின் அஸ்திவாரமே தவிர உங்கள் பணமும் பொருளும் அல்ல. பெற்றோர்கள் தினமும் தங்கள் பிள்ளைகளுடன் குறைந்தது அரை மணிநேரமாவது நேரத்தை செலவழிக்க வேண்டும். போன், டி.வி. செய்தித்தாள் என்று எந்த இடையூரும் இன்றி மனம் விட்டு பொய் அகற்றி பேச முற்பட்டால் உங்கள் கண்முன்னால் மாற்றங்களை காணலாம்.

    வீட்டு வேலைகளை உங்கள் குழந்தைகளுக்கும் பகிர்ந்து கொடுங்கள். அதை செய்யும் நேரத்தில் இன்னொரு நான்கு பக்கங்கள் படித்து நான்கு மதிப்பெண்கள் கூடப் பெறலாம் என்று எண்ணாதீர்கள். அவர்கள் முதலில் வாழ்க்கையை கற்கட்டும். வாழ்வாதாரம் தானாக வந்தடையும். குழந்தைகள் கேட்பதெல்லாவற்றையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. உங்கள் “இல்லை”கள் தான் அதற்கு நிஜத்தை கற்றுக்கொடுக்கும்.

    சரியான விகிதத்தில் அரவணைப்பும் கண்டிப்பும் கலந்து கொடுத்தால் அதாவது நம்முடைய பெற்றோர் போல் நாமும் நடந்துகொண்டால், நம்மைப்போல் நம் குழந்தைகளும் மனிதம் நிறைந்த சிறந்த பிள்ளைகளாக, சாதனையாளர்களாக திகழ்வார்கள். வாருங்கள் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம். 
    ஒவ்வொரு தாய்மார்களின் மிகப் பெரிய சவாலே கொசுக்கடியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுதான். கொசுக்கடியிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    ஒவ்வொரு தாய்மார்களின் மிகப் பெரிய சவாலே கொசுகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதுதான். வீட்டில் மட்டுமல்லாமல் வெளி இடங்களில் குழந்தைகள் விளையாடினாலும் கை, கால், முகம் ஆகிய இடங்களில் கொசு கடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    கொசுக்களிடமிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எளிய டிப்ஸ்களைத் தருகிறோம்.

    பள்ளிக்கூடம்

    இது குழந்தைகளின் இன்னொரு வீடு. அதிக நேரம் செலவழிக்கும் இடமும்கூட. பகல் கொசுக்களால் ஆபத்து அதிகம். வகுப்பறை, கழிப்பறை, மைதானம் ஆகிய இடங்களில் கொசுக்கள் இருக்கவே செய்யும். எனவே, பகலிலும் கொசு தடுக்கும் முறை கிரீமைப் பயன்படுத்தலாம்.

    பூங்கா

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடம். நிறைய செடிகள், புதர்கள் இருப்பதால் கொசுக்கள் நிறையவே இருக்கும். அரை கால் ஆடை, வெறும் காலில் விளையாடும் குழந்தைகளின் கால்களில் கொசு கடித்திருப்பதன் அடையாளத்தைக் காணலாம். எனவே பூங்கா செல்லும்போது மஸ்கிட்டோ ரெபலன்ட் பூசி விடுங்கள்.

    ஆக்டிவிட்டி வகுப்புகள்

    நடன வகுப்பு, ஓவிய வகுப்பு, பாடல் கற்றுத் தரும் வகுப்பு இன்னும் நிறைய ஆக்டிவிட்டி வகுப்புகளுக்கு சென்றாலும் உங்கள் குழந்தைக்கு இந்த 100% பாதுகாப்பான மஸ்கிட்டோ ரெபலன்ட் முறையைப் பயன்படுத்துங்கள்.

    மொட்டைமாடியில் விளையாடுவது

    பல குழந்தைகள் சேர்ந்து மொட்டை மாடியில் விளையாடும் பழக்கம் இருக்கும். அங்கு கொசுக்கள் ஏராளமாக இருக்கும். அங்கு குழந்தைகள் சென்றாலும் இந்த 100% பாதுகாப்பான மஸ்கிட்டோ ரெபலன்ட் பூசி அனுப்புங்கள். கொசுக்கள் எல்லா இடங்களிலும் பரவி இருக்கின்றன.

    பண்ணை வீடுகள்

    பெரும்பாலான திருமணங்கள், பார்டி, விழாக்கள் போன்றவை பண்ணை வீடுகளில் நடைப்பெறுகின்றன. அங்கு செடிகள், புதர்கள், நீர் தேக்கம் நிறைந்திருக்கும் எனவே அங்கு அழைத்து சென்றாலும் கூட குழந்தைகளுக்கும் கொசு தடுப்பு முறை கிரீமைப் பயன்படுத்துங்கள். அவ்வப்போது உங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனித்துக்கொண்டே இருங்கள்.

    இப்படி பொதுவான 5 இடங்கள் இருந்தாலும் சில சூழல்களில் இந்த இடங்கள் இல்லாமல் வேறு எங்காவது நீங்கள் வெளியே செல்ல வேண்டியிருக்கும். அந்த சூழலுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு பாதுகாப்புக் கொடுங்கள். கொசுவால் பரவும் நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்போம்.
    எண்ணிக்கை அளவில் பெருகிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் அன்றாட சிந்தனைகள், பேச்சுகளிலிருந்து அவர்களின் தற்போதைய மனோபாவத்தை நன்றாக கணிக்க முடிந்தது.
    கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். காதுக் கொடுத்து கேட்க முடியவில்லை. பேச்சு முழுக்க சமீபத்தில் கண்டு களித்த திரைப்படத்தை பற்றியும், வெளியாகவுள்ள நடிகர்களின் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிதாக வாங்கிய அலைபேசி குறித்து மட்டுமே இருந்தன. அரசு வேலைவாய்ப்பு அலுவலகம். பதிவை வெற்றிக் கரமாக முடித்து விட்ட மகிழ்ச்சியில் வேலையில்லா பட்டதாரிகள் எல்லோரும் ஒன்றுகூடியிருந்தனர். சில இளைஞர்களின் பேச்சு நகர மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளோடு தனியார் நிறுவனங்களில் வேலையை பெறுவது தொடர்பாக இருந்தது. பெரும்பாலான இளைஞர்களோ, சமீபத்தில் வெளியான “டிக் டாக்” நடிகையின் ஆபாச பேச்சுக் குறித்தே சிலாகித்து அலசிக் கொண்டிருந்தனர்.

    அரசுத் துறைகளில் பணியாற்றும், இளைஞர்கள் தேநீர் வேளையில் ஒன்று கூடிப் பேசுகின்றனர். பேச்சு முழுவதும் திருமணம், சொந்த வீடு, ஊதிய மற்றும் பதவி உயர்வுகள், வரவுள்ள பணியிடை மாற்றத்தை எப்படி நிறுத்துவது? எந்த அரசியல்வாதியின் பரிந்துரை எடுபடும்? குறித்தே இருந்தன. இவர்கள் எல்லோருக்கும் வயது 22-ல் தொடங்கி 28-க்குள் மட்டுமே இருக்கும்.

    எண்ணிக்கை அளவில் பெருகிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் அன்றாட சிந்தனைகள், பேச்சுகளிலிருந்து அவர்களின் தற்போதைய மனோபாவத்தை நன்றாக கணிக்க முடிந்தது. அன்றாட பேச்சுகளில் தேசப்பற்றோ, சமூக அக்கறையோ, நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அநீதிகளுக்கெதிரான போராட்ட உணர்வோ சிறிதும் வெளிப்பட வில்லை. இவர்கள் எல்லோரும் பாதுகாப்பாக, மகிழ்வோடு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தத் தேசம் இவர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு இளைஞர்கள் சமூக அக்கறையோடு சிந்தித்தால், செயல்பட்டால் விதிவிலக்காக எண்ணி வணங்கலாம்.

    பெரும்பான்மையான இளைஞர்களின் அன்றாட வாழ்க்கையில் சுயநலம் மட்டுமே நிரம்பி வழிகிறது. மொழி, இனம், தேசம், சமூகம், சாமானிய மக்கள் மேம்பாடு குறித்த அக்கறையென்பது துளியும் இல்லை. இதுவே, யதார்த்த உண்மை. சமூக அவலங்கள், அநீதிகளுக்கெதிராக அரசியல்கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் போராட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பிலும், தப்பித்தல் மனப்பான்மையிலும் காலத்தை வீணடித்து வருகின்றனர். “சமூகத்தை சீர்திருத்த தனி மனிதனாய் தன்னால் எதுவுமே செய்ய முடியாது” என்று இளைஞர்கள் நம்புகின்றனர். அநீதிகளை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதும், ஊடகங்களில் கருத்தை வெளியிடுவதோடு சமூகப் பங்களிப்பை நிறுத்திக் கொள்கின்றனர்.

    தற்போதைய சமூக நிலைமையோ முற்றிலும் வேறாக உள்ளது. அரசுத் துறைகளில் பெருகிக் கொண்டிருக்கும் லஞ்சம், பாலியல் வன்கொடுமைகள், சாமானிய, நடுத்தர மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், அரசியல்வாதிகள், மனசாட்சிக்கு முற்றிலும் எதிரான அரசு அதிகாரிகள், பணியாளர்களின் சுரண்டல் போக்கு, அத்துமீறல்கள், ஏமாற்றிப் பிழைக்கும் கொடூர குணம், ஆணவம் என்றெல்லாம் எத்தனையோ கொடுமைகள்; அநீதிகள், நாடு முழுவதும் தொடர்கதையாகி விட்டன. இவை குறித்து கவலைப்படுவதற்கோ, சிந்திப்பதற்கோ, போராடுவதற்கோ இளைஞர்கள் யாரும் தயாராயில்லை.

    ஆனால், ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் இதே தேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எல்லோரிடமும் தேசப் பற்றும், சமூக அக்கறையும், பொறுப்புணர்வும், பேச்சுகளில், செயல்களில் வெளிப்பட்டன. அநீதிக்கு எதிராக கோபம் கொண்டு கொந்தளித்தார்கள். கோழைத்தனத்தை அறியாதவர்களாக இருந்தனர். “விடுதலை” என்ற பொது நோக்கம் எல்லோரிடமும் இருந்தது. அச்சமின்றிக் களத்தில் இறங்கிப் போராடினார்கள். நாடி, நரம்புகளில் தேசப்பற்றும், போராட்ட உணர்வுகளும் வெடித்துக் கிளம்பின. சொல், சிந்தனைச், செயல், பார்வை, நோக்கம் எல்லாமே தேசப் பாதுகாப்புச் சார்ந்தே இருந்தன. இளைஞர்களால் விடுதலைச் சாத்தியமாயிற்று. இதே நிலை திரும்புமா? இளைஞர்கள் மீண்டும் வீறுக் கொண்டு எழுவார்களா? அவலங்கள் எல்லாம் தீருமா? அநீதிகளுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக இளைஞர்கள் ஒன்று திரளுவார்களா? என்பதே தற்போதுள்ள எதிர்ப்பார்ப்பு. மாற்றத்திற்கான தீர்வு.

    பாரதியார், சென்னையில் தங்கி இருந்தபோது அன்றாடம் மாலை யில் கடற்கரைக்குச் செல்வார். துறைமுகத்திற்கு அருகிலுள்ள மணல் பகுதியில் அமருவார். அப்போதெல்லாம், கல்லூரி மாணவர்கள் அருகில் சென்று தேசிய கீதத்தைப் பாடும்படி பாரதியை வற்புறுத்துவார்களாம். அவரும் உரத்துக் குரல் எழுப்பி பாடுவார். நூற்றாண்டுகளுக்கு முன்னர், மாணவர்களிடம் நாட்டுப் பற்றிருந்தது. கவிஞர்களை, இளைஞர்கள் மதித்துப் போற்றியுள்ளனர். சென்னைக் கடற்கரை, இளைஞர்களிடம் “விடுதலைத் தீயை” பற்ற வைக்கும் களமாக ஒரு காலத்தில் இருந்துள்ளது. அதே கடற்கரைத் தற்போது “காமத் தீ” பற்றி எரியும் கிடங்காக, குப்பை மேடாக சீரழிந்து விட்டது. நூற்றாண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள். எப்படிப்பட்ட தரம் கெட்ட, தாழ்வு நிலை? இழந்த பாரம்பரியங்களை எப்பொழுது மீட்டெடுக்கப் போகிறோம்?

    அதுமட்டுமல்ல தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று இளைஞர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளோம். ஆனால், அதனால் மட்டும் தேசப் பற்று உள்ளவர்களாக இளைஞர்கள் உருமாறி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சரியா? தொலைநோக்குச் சிந்தனையோடு தலைவர்கள் யோசிக்க வேண்டும்.

    நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒவ்வொருவரின் பெயருக்கும் முன்னால் “வந்தே மாதரம்” என்ற அடைமொழி இருக்கும். மக்கள் மத்தியில் விடுதலைப் பாடலை உரத்துப் பாடுவதால், இயல்பாகவே இந்த அடைமொழியும் பெயர்களோடு சேர்ந்து விட்டது. “வந்தே மாதரம்” என்றால் தற்போதைய இளைஞர்களோ “புதிய திரைப்படத்தின் பெயரா?” என்று கேள்வி எழுப்புவார்கள்.

    இந்த வார்த்தையில் மறைந்துள்ள தியாகத்தைப், புதைந்துள்ள வீர வரலாற்றை நம் இளைஞர்களுக்கு எப்போது உணர்த்தப் போகிறோம்? இளைஞர் களிடம், ஒழுக்கத்தை, சுயக் கட்டுப்பாட்டை நிரந்தரமாக உருவாக்குவதே தற்போதைய தேவை. விடுதலைத் தியாகிகள், வீர மறவர்களின் மறைந்த வாழ்க்கை முறைகள், விடுதலை காலத்தில் பேசப்பட்ட மறந்த வார்த்தைகள் மீண்டும் புணரமைக்கப்பட்டு இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். ஒழுக்கமும், சுயக்கட்டுப்பாடும், நாட்டுப் பற்றும் உள்ள இளைஞர் களை உருவாக்க இதுவொன்றே நிரந்தர வழி.

    அரிமதி இளம்பரிதி, எழுத்தாளர், புதுச்சேரி.

    பொங்கல் பண்டிகைக்கு வித்தியாசமான சுவையான ஜவ்வரிசியில் பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - 300 கிராம்
    வெல்லம் - 200 கிராம்
    பால் - 200 மி.லி.
    நெய் - 50 கிராம்
    முந்திரி பருப்பு - தேவையான அளவு
    உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
    ஏலக்காய் - 5

    ஜவ்வரிசி

    செய்முறை :

    ஜவ்வரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

    வெல்லத்தை நன்றாக தூள் செய்து கொள்ளவும்.

    அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு வேக விடவும்.
     
    ஜ‌‌வ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய், வெல்லம் தட்டிப் போட்டு கிளறவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். அடி‌பி‌டி‌க்காம‌ல் ‌கிள‌றி ‌விடு‌ங்க‌ள்.

    ஜ‌‌வ்வ‌ரி‌சி ந‌ன்கு கெ‌ட்டியாக ‌வ‌ரும் போது ‌ரு‌சி‌க்காக ‌சி‌றிது பாலையும், நெய்யையும் ஊற்றவும்.

    முந்திரி, திராட்சையை நெய்யில் பொ‌ன்‌னிறமாக வறுத்து பொ‌ங்க‌லி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

    அ‌வ்வளவுதா‌ன் ஜவ்வரிசி இனிப்பு பொங்கல் தயா‌ர்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தை வேண்டுவோர் இணையதளத்தில் பதிவு செய்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அதில் அவர்களுக்கு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லை.
    குழந்தை தத்தெடுப்பு என்பது பெருமளவில் சட்டத்திற்கு வெளியே தான் அதிகம் நடக்கிறது. முன்பெல்லாம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் அல்லது ஆயா வேலை செய்பவர்களை குழந்தையில்லா தம்பதியினர் அணுகி “யாராவது குழந்தை வேண்டாம் என்று போட்டு விட்டு போய்விட்டால் தயவு செய்து அதை எங்களுக்கு கொடுங்கள். புண்ணியமாக போகும்” என்று வேண்டுகோள் வைப்பதுண்டு.

    நர்ஸ் மற்றும் ஆயாக்களும் குழந்தையை காப்பாற்றும் நல்லெண்ணத்துடனும் குழந்தை இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கத்துடனும் பணத்தையோ பொருளையோ எதிர்பார்க்காமல் பெற்றவளால் அனாதையாக கைவிடப்பட்ட குழந்தையை அவர்களிடம் கொடுப்பதுண்டு. இதில் சிலர் பணத்திற்காக ஆசைப்பட்டு செயல்படுவதும் நடக்கிறது.

    தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மகளிர் சுய உதவி குழுக்கள் தங்கள் குழுவிலுள்ள இளம் பெண்கள் காதலிலோ குடும்பத்தாலோ பாதிக்கப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் தற்கொலை முயற்சியில் இறங்கும் போது தடுத்து காப்பாற்றி குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து அந்த குழந்தையை குழந்தையில்லா தம்பதிகளுக்கு கொடுக்கும் மனிதாபிமான காரியங்கள் பிறர் கவனத்திற்கு வராமல் அங்குமிங்குமாக நடக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    வக்கீல் ஜெயராஜ் கூறுகையில் ‘எங்களுக்கு வேண்டாத யாரோ போனில் பேசி சதி செய்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளனர். குழந்தையை கொடுத்தவர்களோ வாங்கியவர்களோ யாரும் இதுபற்றி புகார் கொடுக்கவில்லை. எனவே இந்த வழக்கு நிச்சயம் நிற்காது. இது பொய்யான புகார்’ என்றார்.

    இன்றைய தினம் குழந்தைகள் இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை பெருகிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில் குழந்தைகள் வேண்டி cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் 2893 ஆகும்.

    ஆனால் அரசின் குழந்தை காப்பகத்தில் 298 குழந்தைகள் தான் வளர்ப்பில் உள்ளனர். அதாவது தேவைக்கும் இருப்புக்குமான இடைவெளி மிக அதிகம். விவரமறிந்து இணையதளத்தில் பதிவு செய்ய முடியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ...!

    குழந்தை வேண்டுவோர் இணையதளத்தில் பதிவு செய்து வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல. அதில் அவர்களுக்கு தன்னிச்சையாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பே இல்லை. வரிசைப்படி வரும்போது அவரவருக்கு எந்த குழந்தை அமைகிறதோ அந்த குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான்!

    தத்தெடுப்பு முறை குறித்து மக்களிடம் கேட்டபோது ‘தத்தெடுப்பு வழிமுறைகள் கடினமாக உள்ளது. அனைவராலும் பூர்த்தி செய்ய கூடியதாக இல்லை. ஆகவே தான் தவறுகள் நடக்கின்றன” என ஆதங்கத்துடன் கூறினார்கள்.

    மேலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி குழந்தை பெற்றுக் கொள்வதை விடவும் நோகாமல் குழந்தையை விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்பதும் குழந்தைகள் விற்பனைக்கு ஒரு காரணமாகும்!

    குழந்தைகள் விற்பனையை பொறுத்தவரை வாங்குபவர்களும் வெளிப்படுத்துவதில்லை கொடுப்பவர்களும் வெளியே தெரியப்படுத்துவதில்லை. பரஸ்பரம் அவரவர்களின் தேவைகளை ஏதாவது ஒரு வகையில் நிறைவேற்றி போய்க்கொண்டே இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமாக உள்ளது.

    ‘குழந்தை தத்தெடுப்பு விவகாரங்களில் கடந்த காலங்களில் அனாதை இல்லங்களில் நிறைய முறைகேடுகள் நடந்துவிட்டன. அதை களைவதற்குத் தான் மத்திய அரசு ‘இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வந்து முறைப்படுத்தி உள்ளது. இதில் யாரும் தவறு செய்யவே முடியாது’ என்கிறார்கள் சமூக பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

    சமூக பாதுகாப்பு துறை கமிஷனர் லால்வேனாவிடம்(ஐ.ஏ.எஸ்) இதுகுறித்து பேசிய போது “குழந்தைகளை ‘அடாப்ஷன்’ கொடுத்த நிறுவனங்களில் முன்பு பல தவறுகள் நடந்து விட்டன. பணத்திற்கு முக்கியத்துவம் அதிகாரம் செல்வாக்கிற்கு முக்கியத்துவம் என்பதெல்லாம் நடக்காத வகையில்தான் 2015-ம் ஆண்டில் இருந்து இணையதள பதிவு கொண்டுவரப்பட்டது. குழந்தைகளை விற்கவோ வாங்கவோ முயற்சிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்” என்கிறார்.

    மேலும் அவர் கூறுகையில் ‘குழந்தை வேண்டாம் என்பவர்கள் சாலையில் அனாதையாக கண்டெடுக்கும் குழந்தையை ஒப்படைக்க விரும்புபவர்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு விங்கை சேர்ந்த ஒருவர் சம்பந்தபட்ட இடத்திற்கே வந்து அந்த குழந்தையை பெற்று செல்வார்கள்’ என்றார்.

    தமிழகத்தில் 1992-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அந்த காலகட்டத்தில் பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் கொடிய வழக்கம் இருந்தது. அதை தடுக்கும் நோக்கத்தில்தான் தொட்டில் குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டன. தனக்கு குழந்தை தேவையில்லை என்ற எந்த தாயும் அதில் போட்டு விட்டு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டது.

    கணவராலோ அல்லது காதலனாலோ கைவிடப்பட்ட பெண்கள் வறுமை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாத பெண்கள் அந்த தொட்டிலில் தங்கள் குழந்தையை போட்டு சென்றனர். தொட்டிலில் போடப்பட்ட குழந்தைகள் அரசு நிதி உதவியுடன் தொண்டு நிறுவனங்களில் பேணி வளர்க்கப்பட்டனர்.

    தொட்டில் குழந்தைகள் திட்டம் முதலில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த திட்டத்தின் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட 1992-ம் ஆண்டு தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் 150 குழந்தைகள் வந்து சேர்ந்தன.

    இது வரை இந்த திட்டத்தின் மூலமாக மொத்தம் 5239 குழந்தைகள் கிடைத்துள்ளன. முதல் 7 ஆண்டுகளில் மட்டுமே இத்திட்டத்தில் 3279 குழந்தைகள் வந்தன. ஆனால் 1999 முதல் 2019 வரையிலான 20 ஆண்டுகளில் 1963 குழந்தைகள் மட்டுமே வந்துள்ளன.

    ஏன் தொட்டில் குழந்தைகள் திட்டத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டது?

    சமூக ஆர்வலர்களிடம் இதுதொடர்பாக கேட்டபோது அவர்கள் கீழ்க்கண்ட காரணத்தை அடுக்கடுக்காக முன்வைத்தார்கள்.

    . தொட்டில் குழந்தைகள் அக்கறையோடு வளர்க்கப்படவில்லை.

    . பெண் குழந்தைகளின் முக்கியத்துவம் குறித்த அரசின் பிரசாரங்கள்.

    . குடும்பகட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டதால்!

    . சட்டத்திற்கு புறம்பாக ஸ்கேன் மூலமாக பெண் குழந்தையை முன்கூட்டியே கண்டறிந்து அதை அதிக பணம் கொடுத்து அழித்து விடுகிற போக்கு!

    . விருப்பமில்லாமல் குழந்தை பெற்றவர்களை கண்டறிந்து பணம் கொடுத்து வாங்கி குழந்தைகளை விற்கும் நாமக்கல் நர்ஸ் போன்றவர்களின் கைங்கரியம்!

    . அரசு பாதுகாப்பில் பத்தோடு பதினொன்றாக தன் குழந்தை வளர்வதை விடவும் எதோ ஒரு வசதியான குடும்பத்தில் வளரட்டுமே என்ற குழந்தை பெற்றவர்களின் எண்ணம்.

    தொட்டில் குழந்தைகள் திட்டம் முதன் முதலில் தேனி தர்மபுரி சேலம் மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தான் அமல்படுத்தப்பட்டது. பிறகு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 20 மையங்களில் இப்படி வந்து சேர்ந்த குழந்தைகள் பராமரிக்கப்படுகிறார்கள்.

    இரண்டு விதங்களில் குழந்தைகள் இந்த மையங்களுக்கு கிடைக்கின்றன. ஒன்று தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் வழியாக மற்றொன்று சாலையோரங்களில் கைவிடப்பட்ட காப்பாற்ற யாருமின்றி கிடைக்கும் குழந்தைகள்.

    இந்த மாதிரி குழந்தைகளை யாராவது கண்டால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும். இது கட்டணமில்லா தொலைபேசி எண்ணாகும். இந்த எண்ணில் பேசினால் மறுபுறத்தில் பேசுபவர் தெளிவாக விசாரித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டு அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைப்பார்.

    இந்த குழந்தைகள் 18 வயது வரை அரசால் பேணி வளர்க்கப்படுவார்கள். இந்த குழந்தைகளை தத்து எடுக்க விரும்புபவர்கள் நேரடியாக இந்த மையங்களுக்கு சென்று இந்த குழந்தைகளை பார்வையிட்டு தத்து எடுக்க வாய்ப்பில்லை. இணையதளத்தின் வழியாகத்தான் விண்ணப்பித்து காத்திருக்க வேண்டும்.

    இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க தெரியாதவர்கள் மாநில தத்து வழங்கும் ஆதார மையத்திற்கு சென்று உதவி கோரலாம். அங்கே விண்ணப்பிக்க உதவி செய்யப்படும். அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு கலெக்டர் தலைமையில் இயங்குகிறது. இதில் நான்கு உறுப்பினர்கள் உள்ளனர்.

    குழந்தைகள் நலத்திற்கான இந்திய கவுன்சில் அமைப்பின் கிரிஜாவிடம் பேசிய போது “குழந்தைகள் தத்தெடுப்பு என்பது ஒரு நீண்ட கால நடைமுறையாகும். அதை மிகப் பொறுமையோடு செய்ய வேண்டும். வளரப் போகும் குழந்தையின் பாதுகாப்புக்காக தான் இதில் கடுமையான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை விரும்பாதவர்கள் நாமக்கல் சம்பவம் போன்று குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு சில அரசு ஊழியர்களும் துணை போகிறார்கள் என்பதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

    மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழவேண்டும்.
    நாடு நமக்கு என்ன செய்தது? என்று எண்ணாமல், நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்று எண்ண வேண்டும் என்றார், அமெரிக்க நாட்டு அதிபர் ஜான் கென்னடி. இந்த கூற்றின்படி மாணவர்களாகிய நீங்கள் தங்கள் கடமை என்னவென்று சிந்திக்க வேண்டும். புத்தாண்டு பிறந்த தருணத்தில் உங்கள் எண்ணங்கள் சிறந்தவையாகவும், ஒழுக்கத்தை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும்.

    நாட்டு நலனை கருத்தில் கொண்டு நீங்கள் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இளமையில் தொண்டு மனப்பான்மையுடன் திகழவேண்டும். இதற்காக பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றில் சேர்ந்து சமூக பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். தங்கள் கிராமத்தில் மரக்கன்று நடுதல், ஏரி, குளம் ஆகியவற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும்.

    முதியோர்களுக்கு கல்வி கற்று கொடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்தல் ஆகிய சமூக தொண்டாற்றுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும். விவசாயிகளிடம், அவர்களுக்கு அறியாத வேளாண் தொழில்நுட்பங்களை விளக்கி கூறி, பயிர் விளைச்சலுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். தங்கள் பகுதியில் கழிவுநீர் தேங்குவதாலும், குப்பைகளை சாலையில் கொட்டுவதாலும் ஏற்படும் சுகாதாரக்கேட்டை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

    மாணவர்கள் பொழுதுபோக்கு நேரத்தை வீணாக்காமல் சமுதாய பணிகள் செய்வதில் ஈடுபட்டால் தேவையில்லாத வீண்பிரச்சினைகளில் சிக்காமல் நல்வழியில் செல்வதற்கு வழிவகுக்கும். இன்னும் சில மாணவர்கள் தங்கள் படிக்கும் நேரம்போக மீதி நேரத்தில் செல்போனில் இணையதளம் மூலம் கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எந்த பயனும் ஏற்படுவதில்லை. மாறாக சமூக விரோத செயல்களில் ஈடுபட மாணவர்களை தூண்டுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை சீர்கேடாகிறது. இளம் வயதில் படித்து முன்னேறாமல் தவறான எண்ணங்கள் தோன்றி திசை மாறி செல்கின்றனர்.

    எனவே மாணவர்களாகிய நீங்கள் வருங்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு அறிவு செல்வத்தை தேடி செல்லவேண்டும். இளம் பருவத்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுங்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் தேவையான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் ஆர்வம் காட்ட மாணவர்கள் முயலவேண்டும். நாட்டுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்கள் எண்ணி செயலாற்றவேண்டும்.

    ஏனென்றால் மாணவர்களை நம்பித்தான் வருங்காலம் இருக்கிறது. இதனை ஒருபோதும் மறக்கலாகாது. நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு, நமக்கு நாமே செய்து கொள்ளும் தொண்டாகும். ஏனென்றால் நாம் இல்லாமல் நாடு இல்லை. சிறுதுளி பெரு வெள்ளம் போல், நாம் ஒவ்வொருவரும் செய்யும் சிறு தொண்டு பெருந்தொண்டாய் நாட்டை வளப்படுத்தும் என்று நினைவில் கொண்டு செயல்படுவோம்.
    வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது.
    வயிற்றில் புழுக்கள் அதிகம் இருப்பின் நீங்கள் உண்ணும் உணவு செரிமான மண்டலத்துக்குள் செல்லாமல் வயிற்று போக்கை ஏற்படுத்தக்கூடும். அத்துடன் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் ஒருவித எரிச்சலும் காணப்படும். நார்ச்சத்து உணவை குழந்தைகளுக்கு தருவதன் மூலம் பிரச்சனையை போக்கலாம். ஒருவேளை நார்ச்சத்து உணவையும் எடுத்துக்கொண்டு இப்பிரச்சனை இருக்குமெனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.

    மலவாயில் அரிப்பு ஏற்பட இதனால் இரவில் தூக்கம் கெட்டு தேவையில்லாத களைப்புடன் ஒருவர் காலையில் காணப்படவும் கூடும். குழந்தைகளுக்கு இப்பிரச்சனை பெரிதும் காணப்படுவது வழக்கம். அப்படி என்றால் அவர்கள் வயிற்றில் புழுக்கள் இருக்கிறது என அர்த்தமாகும். வயிற்றில் புழுக்கள் இருந்தால் எவ்வளவு தான் நாம் சத்தான உணவை சாப்பிட்டாலும் அதை உறிஞ்சி ஒருவித சோர்வை உங்கள் குழந்தைகளுக்கு தருகிறது. வாரத்திற்கு ஒரு முறை வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க வேண்டியது அவசியமாகும்.

    பசி எடுக்காமல் இருப்பதோடு, உங்கள் எடையும் குறைய ஆரம்பித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதாவது புழுக்கள் நம் வயிற்றில் அதிகளவில் பெருகி இருக்க அப்போது சாப்பிடும் சாப்பாடு என்பது செரிமான மண்டலத்தை எட்டாது. இதனால் பசி என்பது அற்று உங்கள் குழந்தையின் உடல் காணக்கூடும். புழுக்கள் உடலில் இருந்தால் பற்களை கொறிப்போம். இதற்கு காரணம் உடலில் தேங்கிய வழியும் புழுக்களால் தேவையற்ற மன அழுத்தம் கொண்டு நாம் பற்களை என்ன செய்வதென அறியாது செய்வோம்.

    உங்கள் குழந்தைகள் இரவில் படுக்க செல்லும்போது பற்களை கொறித்தால் வயிற்றில் புழுக்கள் இருப்பதாக அர்த்தம். அதேபோல் உடலில் ஏற்படும் இரத்த சோகை போன்றவை ஏற்பட காரணம், உருளை புழுக்கள் உங்கள் குழந்தைகள் சாப்பிடும் இரும்பு சத்து, வைட்டமின் அடங்கிய உணவை உறிஞ்சுவதாலே ஆகும். உடலில் ஒட்டுண்ணிகள் இருந்தால் சரும அரிப்பு மற்றும் எரிச்சல் கூட சில சமயத்தில் ஏற்படும். இந்த அறிகுறிகளெல்லாம் உங்களுக்கு காணப்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
    ஒற்றைக் குழந்தைகளின் இயல்புக்கு பெற்றோர்களும் வளர்ப்பு முறையும்தான் காரணமே தவிர, அவர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதல்ல.
    ஒற்றைக் குழந்தைகள், பிரைவஸியை விரும்புபவர்களாகவும், சுயநலமுடையவர்களாகவும், எளிதில் பிறருடன் சேராதவர்களாகவும், சேர முடியாதவர்களாகவும், திமிர் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்னும் பொதுவான கருத்தில் உண்மையே இல்லை. ஓர் ஒற்றைக் குழந்தை, உறவினர்கள் நிறைந்த பெரிய குடும்பத்தில், பகிர்ந்து வாழும் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டது என்றால், அதுவும் பகிர்ந்துகொள்ளுதலைக் கற்றுக்கொள்ளும்.

    விளையாட்டுத் துணைக்கும் பேச்சுத்துணைக்கும் யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட குழந்தை, பேசிப் பழக வாய்ப்பு கிடைக்காமல் போவதால்தான், பிற்காலத்தில் மற்றவர்களுடன் சேர முடியாத குணம்கொண்டவராக நேர்கிறதே தவிர, அது அவரின் இயல்பு கிடையாது.

    அதேபோல, இரண்டு பிள்ளைகளாகப் பிறந்தாலும், தனிக் குடும்பத்தில், பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் சூழலில், பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி விளையாடாமல், இரண்டு அறைகளிலும் இரண்டு டி.வி-க்கள், கேட்ஜெட்ஸில் மூழ்கும் பழக்கம் என்றிருக்கும் வீடுகளிலும், அந்தக் குழந்தைகளுக்கு மேற்சொன்ன இயல்பு மாற்றங்கள் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒற்றைக் குழந்தைகளைப் பற்றி இன்னொரு விஷயமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள், பெற்றோரால் வளர்க்கப்படும்போது ஒரு முறையிலும், பாட்டி தாத்தாவிடம் வளரும்போது இன்னொரு முறையிலும் வளர்வார்கள். அவை இரண்டு முறைகளே அன்றி, ஒன்று தவறு, இன்னொன்று சரி என்றெல்லாம் கிடையாது. அதனால் குழந்தைகளின் குணாதிசயங்கள், வளரும் சூழ்நிலைகளுக்கு ஏற்றார்போல வேறுபடுகின்றன. குழந்தை வளர்ப்பில் வெவ்வேறு நிலைகளில் பல இடர்ப்பாடுகள் வரும், போகும். அவற்றைப் பொறுத்தும் ஒரு குழந்தையின் வளர்ச்சி இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

    இனிமேல், பிடிவாதக்கார குழந்தை என்றாலே, `அது வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாக இருக்கும்' என்று தீர்மானித்துவிடாதீர்கள். குழந்தைகள், பெற்றோர்கள் கற்றுக்கொடுப்பதைச் செய்வதில்லை. ஆனால், தங்கள் பெற்றோர் செய்வதைப் பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள். அதனால், அவர்களின் இயல்புக்கு பெற்றோர்களும் வளர்ப்பு முறையும்தான் காரணமே தவிர, அவர்கள் வீட்டுக்கு ஒற்றைப் பிள்ளையாய் இருப்பதல்ல.
    தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.
    மத்திய பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியிலான லோயர் டிவிஷன் கிளார்க், ஷார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்டல் அசிஸ்டன்ட், ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு வரும் 10-ந்தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    இந்த பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு வரும் மார்ச் 16-ந்தேதி முதல் நடக்கிறது. தேர்வுக்கு இன்னும் சுமார் 3 மாதங்கள் இருக்கிறது. அதுவரை தேர்வுக்கு எப்படி திட்டமிட்டு தயாராக வேண்டும் என்று பார்க்கலாம்...

    முதலில் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை 4 அல்லது 5 முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். பின்பு, தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகளை சேகரியுங்கள். சந்தையில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

    இவற்றை நேரடியாக படிப்பதைவிட, பாடப்புத்தகங்களை படித்து சுயமாக குறிப்பெடுத்து படித்த பின்பு, படிப்பது நல்ல பலனைத் தரும். ஆங்கிலப் பகுதி மற்றும் புத்திக்கூர்மை பகுதிக்கு நேரடியாக சந்தையில் கிடைக்கும் இவை சார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.

    முந்தைய தேர்வு வினாத் தாள்களை பொறுமையாக வாசித்து, வினாக்கள் கேட்கப்படும் விதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பின்பு எந்த பகுதிக்கு அதிக நேரம் படிக்க வேண்டும், எந்த பாடத்திற்கு பிறரின் உதவி தேவை, எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை படித்து முடிக்க முடியும் என்பது குறித்து ஆழமாக சிந்தித்து ஒரு கால அட்டவணையை உருவாக்குங்கள்.

    உதாரணமாக, சிலருக்கு கணிதப்பகுதியில் பிறரின் உதவி தேவைப்படலாம். சிலருக்கு ஆங்கிலப் பகுதியில் தேவைப்படலாம்.

    தினமும் பயிற்சி

    எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை முடிக்கலாம் என்பது அவரவர் கல்வித் திறன், தேர்வுகள் எழுதிய அனுபவம், தினசரி படிக்கும் முறை, ஆர்வம் ஆகியவற்றை பொறுத்தது. எவ்வாறாயினும், அதிகபட்சம் 45 தினங்களுக்குள் ஓரளவு முடித்துவிடலாம்.

    பின்பு தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.

    ஆங்கிலம்

    பெரும்பாலானவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தயங்கக் காரணம் ஆங்கிலப் பகுதி மற்றும் கணிதப்பகுதியைக் கண்டுதான். ஆங்கில வினாக்கள் நீங்கள் நினைக்குமளவிற்கு கடினமானவை அல்ல.

    பத்தாம் வகுப்பு தரத்தில்தான் கேட்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை திருப்பிப் படித்தாலே போதுமானது. எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் போன்றவற்றையும் படிப்பது நல்லது.

    இலக்கணத்தில் தெளிவிருந்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடிவதுடன், குறைந்த நேரத்திலேயே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும் என்பது சிறப்பு. ஸ்பாட்டிங் எரர் பகுதி வினாக்கள், வங்கித் தேர்வு வினாக்கள்போல சிரமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முந்தைய கேள்வித்தாள்களைப் பார்த்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.

    கணிதம்

    கணிதப்பகுதி, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சற்று கடினமான பகுதி மற்றும் தேர்வில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பகுதியாகும். ஆனால், வங்கித் தேர்வில் இடம்பெறும் கணக்குகளைப் போல் அவ்வளவு கடினமான பகுதி அல்ல.

    நம்பர் சிஸ்டம் மற்றும் அல்ஜிப்ரா பகுதிகளில் இருந்து படிக்க ஆரம்பிப்பது சிறப்பு. பள்ளி பாடப்புத்தகங்களை படித்த பின்பு, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களில் உள்ள கணக்கு மாதிரிகளுக்கு பயிற்சி செய்யுங்கள். எளிமையான வழியில் எந்த புத்தகத்தில் கணக்கு தீர்வு செய்யப்பட்டிருக்கிறதோ அதை குறிப்பெடுத்து பின்பற்றுங்கள்.

    தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரம் கணிதப்பகுதிக்கென ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். தேர்வில் ஒரு கணித வினாவிற்கு விடை சரியாக வரவில்லையெனில் அதையே யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த வினாவிற்கு சென்றுவிடுங்கள்.

    ரீசனிங்

    இப்பகுதிக்கு இதர மூன்று பகுதிகளைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. லாஜிக்கை புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்தல் நல்ல பயனைத் தரும். அதிக மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம். ஒரே நேரத்தில் இருவேறு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதை தவிர்க்கலாம். ஒன்றை முழுமையாக படித்த பின்பு, அடுத்தவர் எழுதிய புத்தகத்தை படிப்பது தெளிவைத் தரும். குழப்பங்களை தவிர்க்கும்.

    பொது அறிவுப் பகுதி

    இந்திய வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவுப் பகுதி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.

    ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்களை படிக்கலாம். அதற்கு முன்பாக ஐந்து வருடத்திற்குரிய முந்தைய தேர்வு வினாக்களை பொறுமையாக படிப்பதன் மூலம் எந்தப் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன, கேள்விகள் கேட்கப்படும் முறை மற்றும் தரம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பின்பு பாடப்புத்தகங்களைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

    இரண்டாம் கட்டத் தேர்வு 28.06.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, தினமும் காலை, மாலை தட்டச்சு பயிற்சி செய்யுங்கள். கட்டுரைத் தேர்வுக்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.

    பயம் தவிர்ப்போம்

    எஸ்.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பதில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “ நான் ஏன் இத்தேர்வினை எழுத முடிவு செய்துள்ளேன்” என்பதுதான். உங்களது குறிக்கோள் தெளிவானதாக, உறுதியாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

    பயிற்சி வகுப்புக்கு செல்வது உங்கள் திறமையைப் பொறுத்து நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் கண்டிப்பாக பயிற்சியும், முயற்சியும் அவசியம். முந்தைய வினாக்களை படிப்பது, தகுந்த தரமான புத்தகங்களை படிப்பது, நிறைய பயிற்சி வினாக்களை செய்து பழகுவது ஆகியவை சேர்ந்தே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். எனவே, தயக்கமின்றி முழு மனதுடன் இத்தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள்.

    ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது. எனவே, இத்தேர்வுக்கு தயார் செய்வதும் ஒரு பயணமே. முழு பயணத்திற்கும் முறையாக திட்டம் வகுத்து முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்.

    நம்பிக்கையுடன் இன்றே விண்ணப்பியுங்கள். விடாமுயற்சியுடனும், ஆர்வத்துடனும் தேர்வுக்கு தயாராகுங்கள். இந்த 2020 புத்தாண்டில் உங்கள் கனவு நனவாகும். வாழ்த்துக்கள்...

    -எம்.கருணாகரன், இராமநாதபுரம்.
    ×