என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    கோடை காலத்தில் கேழ்வரகை அதிகளவு சேர்த்து கொள்வது உடல் சூட்டை தணிக்க உதவும். இன்று கேழ்வரகு, மிளகு சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 1/2 கப்
    கோதுமை மாவு - 1/4 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    சீரகம் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் அல்லது மோர் - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடானதும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான கேழ்வரகு மிளகு தோசை ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தியானம் என்பது எண்ணத்தால் இறைவனை ஆழ்ந்து சிந்தித்தல் என்று பொருளாகும். ஆழ்நிலை தியானம் செய்வதற்கான விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
    மனிதனை நல்ல மனிதனாக்க மதம், கடவுள், தியானம், பக்தி போன்றவை இன்றியமையாததென்பதை இன்னும் பலரால் சரிவரப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய சக்திகள் யாவும் வாழ்வை நெறிப்படுத்தி, சரியான வழி நடத்தி அவன் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியையும், இன்பத்தையும் வாரி வழங்கும் மாபெரும் சக்திகளாகவே காலங்காலமாக அமைந்து வந்துள்ளன.
     
    இவ்வுலக வாழ்க்கையிலேயே நிம்மதியையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்கும் வல்லமை, மதம் கடவுள் நம்பிக்கை போன்ற ஆன்மீக எண்ணங்களாலேயே நிறைவேற்றி வைக்க முடியுமென்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.
     
    ஆழ்நிலை தியான விதிமுறைகள்
     
    1. ஆழ்நிலை தியானத்தை தினமும் காலையிலும், மாலையிலும், பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் செய்யலாம்.
     
    2. உட்காரும் போது சௌகரியமாக உட்கார்ந்து கொள்ள வேண்டும், நேராக உட்கார வேண்டுமென்ற அவசியமில்லை.
     
    3. தியானத்தின் போது வயிறு காலியாக இருப்பது நல்லது.
     
    4. தூங்கப் போகும் முன்பாக தியானத்தில் ஈடுபடக் கூடாது.
     
    5. தியானம் செய்யும் போது ஆடாமல் அசையாமல் இருக்க வேண்டுமென்பதில்லை.
     
    6. ஆற அமர உட்கார்ந்து பின் கண்களை மூடி பதட்டமேதுமின்றி அரைநிமிடம் கழிந்த பின்பு தியானத்தைத் தொடங்க வேண்டும்..
     
    7. தியானம் செய்யுமிடம் அமைதியான சூழ்நிலையில் திகழ வேண்டும்.
     
    8. தியானத்தின் போது நித்திரை வந்தால் விழித்திருக்க முயற்சிக்க வேண்டாம்.
    குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.
    இன்றைய இளந்தலைமுறையினர் நல்ல தங்காளின் கதையை அறிந்திருக்கமாட்டார்கள். அரை நூற்றாண்டுக்கு முன்புவரை பல கிராமங்களில் இரவு நேரங்களில் நல்ல தங்காளின் கதையை உடுக்கை அடித்து பாட்டு பாடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதேபோன்று கிராமங்களில் விடிய விடிய நல்ல தங்காள் நாடகம் நடைபெறுவதும், பொழுது விடியும் நேரத்தில் வறுமையின் காரணமாக தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் நல்லதங்காள் கிணற்றில் தூக்கிப்போட்டுக் கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் காட்சியைப் பார்க்கும் பெண்கள் அனைவரும் அழுது புலம்பியவாறு அவரவர் வீட்டை நோக்கிச் செல்லும் காட்சி அந்த கிராமத்தையே சில மணிநேரங்கள் சோகத்தில் மூழ்கடித்து விடும்.

    தான்பெற்ற ஏழு குழந்தைகளையும் தன்னுடைய அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கொலை செய்தவள் அல்ல நல்லதங்காள். வறுமை அவளது குழந்தைகளை வதைக்க, அவளது அண்ணியால் அவளுக்கு ஏற்பட்ட அவமானம் ஒருபுறம் அவளைச் சுட்டெரிக்க, இனி உயிர்வாழக் கூடாது எனக்கருதி தான் பெற்றெடுத்த ஏழு குழந்தைகளையும் கொலை செய்யும் முடிவுக்கு அவள் தள்ளப்பட்டதாக நல்லதங்காளின் கதை நகர்கிறது.

    கள்ளக்காதலுக்காக தன் குழந்தைகளை கொலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த சம்பவம். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது 3 வயது மகனை தோசைக் கரண்டியால் தாய் அடித்துக் கொலை செய்து உள்ளார். திருச்சி அருகே நடந்த மற்றொரு சம்பவத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஒரு தாய் தன்னுடைய 5 வயது மகளை தென்னை மட்டையால் அடித்து கொலை செய்து உள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. காதல் திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு அழகிய பெண் குழந்தையும், 7 வயதில் சுட்டிப் பையன் ஒருவனும் இருந்தனர். தனியார் வங்கி ஒன்றில் கணவன் பணிபுரிந்து கொண்டிருந்தான். மகிழ்ச்சிகரமான அந்த குடும்பம் வசித்துவந்த பகுதியிலுள்ள ஒரு பிரியாணி கடைக்கு குடும்பத்துடன் அவர்கள் அவ்வப்பொழுது சாப்பிடச் செல்வதுண்டு. நாளடைவில் அந்த கடையில் வேலை செய்து வந்த இளைஞன் ஒருவனுடன் இரு குழந்தைகளுக்குத் தாயான அந்த பெண்ணுக்குக் காதல் ஏற்பட்டது.

    குழந்தைகள் இருவரையும், கணவனையும் கொலை செய்துவிட்டு வெளியூர் சென்று மறுமணம் செய்துகொள்வதென அவர்கள் இருவரும் திட்டம் தீட்டினர். அதைத் தொடர்ந்து ஒரு நாள் இரவு நேரத்தில் தான் பெற்றெடுத்த அன்புக் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு கணவனையும் தீர்த்துக்கட்ட அவள் காத்திருந்தாள். அலுவலக வேலையை முடித்துவிட்டு கணவன் அதிகாலையில்தான் வீடு திரும்பினான். அதுவரை காத்திருக்க முடியாத அவள் காதலனுடன் மறுமணம் செய்துகொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்க இரவோடு இரவாக சென்னையை விட்டு வெளியேறிவிட்டாள்.

    அவளது வாழ்க்கையில் விதி வேறுவிதமாக விளையாடிவிட்டது. ஓரிரு நாட்களில் அவளும் அவனும் போலீசாரால் கைது செய்யப்பட்டு இரட்டைக் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் தென்மாவட்டங்களில் நிகழ்த்தப்படும் பல கொலை சம்பவங்களில் பெண்களுக்கு மிகுந்த பங்களிப்பு உண்டு. குறிப்பாக கணவனைப் பறிகொடுத்த பெண்கள் பலர் கொலையாளிகளைப் பழி வாங்கும்வரை கணவன் கட்டிய தாலியை அகற்ற மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொண்ட சம்பவங்கள் பல உண்டு. காலப்போக்கில் இம்மாதிரியான நடைமுறைகள் தென்மாவட்டங்களில் மறையத் தொடங்கின. ஆனால் சென்னையை அடுத்துள்ள பகுதிகளில் தாதாக்கள் போன்று பெண்களே முன்நின்று நிகழ்த்திய கொலை சம்பவங்களைச் சமீப காலங்களில் காணமுடிகிறது.

    சென்னையின் மையப் பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வந்த நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த ரவுடி தலைமையிலான கும்பல் ஒன்று பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையிலேயே பட்டப்பகலில் கடந்த ஆண்டு கொலை செய்தது. அக்கொலைக்குப் பழி வாங்கும் செயலில் கொலையானவரின் மனைவி ஈடுபட்டாள். திட்டமிட்டபடி தன் கணவனைக் கொலை செய்தவர்களில் முக்கியமான ரவுடியை இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை புறநகர் பகுதியில் கொலை செய்ததும், அதைத் தொடர்ந்து அவளைப் போலீசார் கைது செய்த செய்தியும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    சமுதாயத்தில் நிகழும் குற்றங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் கூறும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. தேசிய குற்ற ஆவணக்கூட அறிக்கையின்படி 2016-ம் ஆண்டில் இந்தியாவில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதற்காக பெண்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறப்பு சட்டங்களின்படி 31,036 பெண்கள் 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களில் 296 பேர் கொலை குற்றத்திற்காகவும், 298 பேர் கொலை முயற்சி செய்த குற்றத்திற்காகவும், 132 பேர் ஆட்களை கடத்திய சம்பவங்களில் ஈடுபட்டதற்காகவும், வழிப்பறி வழக்குகளில் 37 பேரும், மோசடி வழக்குகளில் 326 பேரும், போதைப் பொருட்கள் கடத்திய மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 625 பேரும், திருட்டு வழக்குகளில் 890 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதிக அளவில் குற்ற வழக்குகளில் பெண்கள் தண்டனை பெற்ற மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவணக்கூட புள்ளிவிவரங்கள் தெரியப்படுத்துகின்றன. இதற்கான காரணம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழ் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

    அதிக அளவில் பெண்கள் கல்வி கற்று வரும் தமிழ் சமூகத்தில் குற்ற வழக்குகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரிக்கக் காரணம் என்ன?கல்வி கற்பது வாழ்க்கை முறையையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்காகத்தான் என்ற புரிதல் இல்லாமல் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் என்ற எதிர்பார்ப்பு சமூகத்தில் மேலோங்கியிருப்பதைக் காணமுடிகிறது. முறையற்ற வகையில் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதில் தவறில்லை என்ற உணர்வு சமுதாயத்தில் துளிர்விடத் தொடங்கிவிட்டது. வருமானம் கிடைக்கிறது என்பதற்காக முறையற்ற வகையில் செயல்பட்டால் ஒரு நாள் சட்டத்தின் முன் குற்றவாளியாக நிற்க நேரிடும் என்பதைப் பலர் பொருட்படுத்துவதில்லை.

    ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைவரின் வீட்டு வரவேற்பறைகளில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் செய்தி எத்தகையது? பெண்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி தொடர் நாடகம் ஒன்றில் வரும் பெண் கதாப்பாத்திரம் தன்னுடைய பேத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களைப் பழிவாங்க பெண் குற்றவாளி ஒருவரைத் தேர்வு செய்து அவள் மூலம் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் குற்ற நிகழ்வுகளை மையப்படுத்தும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

    குற்ற செயல்களில் பெண்கள் ஈடுபடுவதைக் கதைக்களமாக கொண்டு தொலைக்காட்சிகள் நாடக சீரியல்களை வர்த்தக ரீதியாக தயாரித்து ஒளிபரப்புவதால் நிகழும் சமூகக் குற்றங்களை நம் சமூகம் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது. குற்றம் புரிந்ததற்காக ஒரு பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது அவளது குடும்பத்தை மட்டுமின்றி அவளது குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கி அவர்களைச் சமூகத்திற்குப் பாரமாக்கிவிடுகிறது.

    பொருளாதார பாதுகாப்பு இன்மை, குடும்ப வாழ்வில் ஏற்படும் மனஅழுத்தம், ஆடம்பர வாழ்க்கை மீதான மோகம், கூடா நட்பு, எதிர்பார்ப்பில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராமங்களில் இருந்து நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் நகர சூழலை அனுசரித்துக்கொள்ள இயலாத நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குற்ற சம்பவங்களில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வந்தாலும் அவர்கள் சார்ந்த சமூகப் பாதுகாப்பிலிருந்து பெண்கள் விலகிச் செல்லும் சூழல் அவர்களை குற்ற நிகழ்வுகளில் சிக்க வைத்துவிடுவதை காலம் கடந்துதான் அவர்கள் உணர்வதைக் காணமுடிகிறது.

    பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்.,

    காவல்துறை தலைவர்(ஓய்வு) சென்னை.
    75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா...
    75 வகையான அத்தியாவசிப் பொருட்கள் கற்றாழையில் மிகுந்திருக்கிறது. கற்றாழையின் அருமை, பெருமைகளை அறிவோமா...

    * கற்றாழையின் இரண்டு பாகங்களான சதை (ஜெல்) மற்றும் பாலில் இருந்து பல்வேறு பொருட்கள் தயாராகிறது. கற்றாழைப் பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கற்றாழையின் அடிப்புறத்தை உற்றுக் கவனித்தால் இதை அறியலாம். கற்றாழை தோலை நீக்கிவிட்டுப் பார்த்தால் கெட்டியான கூழ்போன்ற சதைப்பகுதி தெளிவாகத் தெரியும்.

    * கற்றாழையில் 240 வகைகள் உள்ளன. 4 கண்டங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் இப்போது மக்கள் 4 வகை கற்றாழைகளையே அதிகமாக பயிரிடுகிறார்கள். ஆரோக்கியம் வழங்கும் மருந்து மற்றும் உணவுப்பொருளாக இவை பயன்படுகின்றன. ‘அலோ வேரா பார்படென்சிஸ்’ இனம்தான் அதிகமாக பயிரிடப்படும் கற்றாழை இனமாகும். இது வட ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டது.

    * கற்றாழையின் ஜெல்லில் 96 சதவீதம் நீர் நிரம்பி இருக்கிறது. இதுவே வறண்ட சூழலில் அவை தாக்குப்பிடித்து வாழ காரணமாகவும் அமைகிறது.

    * கற்றாழை சதைப்பகுதியில் பல்வேறு வகை வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள் உள்ளிட்ட 75 வகை பொருட்கள் அடங்கி உள்ளன. இவ்வளவு சத்துப்பொருட்கள் நிரம்பியிருப்பதுதான் அவற்றை மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக மாற்றியிருக்கிறது.

    * கற்றாழையின் சதைப்பகுதி நீரிழிவு, ஆஸ்துமா, வலிப்பு, வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். பல்வேறு சரும பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தருகிறது.

    * கற்றாழைப் பொருட்கள் உடல்சூடு தணிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்.

    * கற்றாழையை ஜூஸ் செய்தும், மற்ற உணவுப்பொருட்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்களுடன் சேர்த்தும் சாப்பிடப்படுகிறது. அப்படியே தனித்துச் சாப்பிடுவதும் உண்டு. கசக்கும், பிடிக்காது என்று காரணம் காட்டி கற்றாழையை தவிர்ப்பது ஆரோக்கியமற்ற பழக்க வழக்கமாகும்.

    * மருத்துவ உலகில் பல்வேறு மருந்துகளிலும், சத்து பானங்களிலும் கற்றாழை சேர்க்கப்படுகிறது. பற்பசை, சருமப் பொருட்கள், வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும் சேர்க்கப்படுகிறது.

    * எகிப்தியர்கள் கற்றாழையை புனிதமான தாவரமாக கருதினர். அவர்கள் மனிதர்களின் இறுதிச்சடங்கிலும் இதை பயன்படுத்தி உள்ளனர். வரலாற்றில் பேரழகியாக வர்ணிக்கப்படும் கிளியோபாட்ரா தனது சரும அழகுப் பொருளாக கற்றாழையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

    * கற்றாழை, கடுமையான வறண்ட சூழலிலும் 100 ஆண்டுகளைத் தாண்டி வாழக்கூடியது. எனவே இதை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் பெறுவார்கள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அமெரிக்கர்கள், கற்றாழையை ‘சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் மந்திரத் தாவரம்’ என்று போற்றுகிறார்கள். பலவிதங்களில் அவர்கள் கற்றாழையை பயன்படுத்து கிறார்கள். தொட்டிச்செடியாக இந்த மருத்துவ தாவரத்தை வீடுகளிலேயே வளர்க்கலாம்.
    சப்பாத்தி, நாண், சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மீல் மேக்கர் கிரேவி. இன்று மீல் மேக்கர் கிரேவியை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்ப்போம்.
    தேவையான பொருட்கள்:

    மீல் மேக்கர் - 1/2 கப்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 1/2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
    தண்ணீர் - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    பால் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    அரைப்பதற்கு...


    தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகு - 1/2 டீஸ்பூன்
    சோம்பு - 1 டீஸ்பூன்
    வெங்காயம் - 1 (சிறியது)
    தக்காளி - 2 (சிறியது)

    தாளிப்பதற்கு...

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
    சீரகம் - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது



    செய்முறை:

    கொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

    பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, 3/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

    2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

    3. 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

    4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

    5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

    6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

    7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

    8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

    9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

    10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

    11. கேரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

    12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.
    உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
    நவீன யுகத்தில் எல்லாமே விரைவாக நடக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையை 50 ஆண்டுகள் கழித்து இதுவரை என்ன பெற்றிருக்கிறோம் என ஆராய்ந்தால் நண்பர்கள் தான் நினைவுக்கு வருவர். உலகில் பெற்றோர், காதலி, உறவினர் ஏன் கல்வி அறிவு கூட இல்லாமல் வாழமுடியும் ஆனால் நண்பர்கள் இல்லாதவர் யாருமே இருக்கமுடியாது.

    பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு, நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது.

    ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரெயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம். “நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,” என யங் என்ற அறிஞர் கூறுகிறார்.

    பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ, மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது அவரவர் வீட்டு உணவுகள் அடுத்தவர் தட்டுக்கு பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இருதயங்களும் தான். பொதுவாக வேறுபாடுகளை களையும் விஸ்வரூப விருட்சம் தான் நட்பு.

    நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின்தடையே வராது. என்ன தான் நமக்கு பிரச்சினை என்றாலும், அதை மனதுக்குள்ளே பூட்டி வைத்தால், அது நம்மை நோய் பாதிப்புக்கு கொண்டு போய் விட்டு விடும். ஏனெனில் தாய், தந்தையிடம் பேச அளவு உண்டு. உறவினர்களிடம் பேச அளவு உண்டு. காதலியிடம் பேச அளவு உண்டு. ஆனால் இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்மைகளை ஒளிக்காமல் ஒருவன் பேசுவது தன் நண்பனிடம் மட்டும் தான்.

    உன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன் கொடுத்த வரம்தான். தாய், தந்தையை விட நம் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே.உயிர் காப்பான் தோழன் என்பார்கள். தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. அதனால் தான் நட்பை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்கிறார்கள்.

    திருக்குறளில் நட்பின் மேன்மையை திருவள்ளுவரும், நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் அருமையாக விளக்குகிறார். நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல. அது இருதயம் கலந்து பழகுவது. உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது.

    நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். தீயநட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்.
    தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும். அதில் முக்கியமாக 5 வகை தியான முறைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
    வாழ்க்கையில் தோன்றும் இது போன்ற வெறுமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தை தேட ஒதுக்கும் நேரத்தில் ஒரு சில துளிகளை நமது மனத்திற்காகவும் ஒதுக்கினால் வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும். அந்த ஒரு துளியை தியானம். யோகம் போன்றவற்றிற்கு செலவழித்தால் வாழ்க்கையில் புத்துணர்ச்சி கிடைக்கும்.

    நம் மனமாகிய குரங்கை வெளியே இறக்கி வைத்து, வெளியில் இருந்து தன்னை பார்க்கும் தியான முறையைப் பற்றி பல்வேறு சித்தர்கள் பல்வேறு சமயங்களில் பல வகையில் கூறியுள்ளனர். அதில் முக்கியமாக 5 வகை தியான முறைகள் மிகவும் முக்கியமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

    இந்த தியான முறையை, குரு மூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட ஒரு ஐந்து தியான முறைகளைப் பற்றி பார்ப்போமா.

    கேசரி, பூசரி, மத்திய லட்சணம், ஷண்முகீ, சாம்பவி. இதுதான் அந்த தியான முறைகளின் பெயர்.

    1. கேசரி: யோகி தனது இரு கண்களின் கருவிழிகளை நடுவில் நிறுத்தி, அசையாமல் மேல் நோக்கி, அருள் வெளியாகிய சிதம்பரத்தை மனதில் நிறுத்தி பார்த்துக் கொண்டிருப்பது.

    2. பூசரி: இதில் யோகியானவர் அசைக்காமல் இருகண்களின் கருவிழிகளால் மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டிருப்பது.

    3. மத்திய லட்சணம்: இருகண்களையும் அரைப்பார்வையாக மூடிக் கொண்டு, அசையாமல் கருவிழிகளால் மூக்கின் மத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பது.

    4. ஷண்முகீ: இதில் யோகியானவர் தன் மூக்கு, கண்கள், வாய்,காது இவற்றை கைவிரல்களால் மூடிக் கொண்டு. வெளிப் பார்வையையும் மனதையும் உள்முகமாகத் திருப்பி, இருகருவிழிகளையும் அசையாமல் நடுவில் புருவ மத்தியில் நிறுத்தி பார்க்க வேண்டும்.

    5. சாம்பவி: சிதாகாசம் என்கிற சகஸ்ராரத்தில் மனதை நிறுத்தி இரு கண்களையும் மூடாமல் கருவிழிகளை மேல் நோக்கி பார்த்தபடி அசையாமல் சொக்கியிருப்பது. இதில் எல்லாமே நாம் உள்ளிருந்துதான் தியானம் செய்கிறோம் என்றாலும் மனமானது வெளியில் இருப்பதாக பாவித்துக் கொள்ள வேண்டும். எல்லாமே பழகப்பழக கைகூடும்.

    இந்த முறை தியானங்கள் மனித மனதிற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் மிகுந்த பயன் தரக்கூடியதாக அமையும். 
    மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
    இஞ்சி உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் அரிப்பு ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சியை சருமப் பராமரிப்பிற்கும் பயன்படுத்த முடியும். இஞ்சி சாறை முகம் மற்றும் முடிக்கான மாஸ்க்காக பயன்படுத்த முடியும். தலை முடியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. இஞ்சி சாறு பொடுகு, தலை முடி உதிர்தல் மற்றும் அரிப்பு நீக்கவும் பயன்படுகிறது.

    1. இஞ்சியை எடுத்து பொடி பொடியாக வெட்டியோ அல்லது துருவியோ  வைக்கவும்.

    2. பொடியாக நறுக்கிய இஞ்சியை தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பில் கொதிக்க விடவும். சிறிது நேரத்தில் தண்ணீரில் நிறம் மாறத்தொடங்கும். மென்மையான மஞ்சள் நிறத்தில் மாறியிருக்கும்.

    3. அடுப்பை அணைத்து விட்டு வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.

    4. நன்றாக பிழிந்து அதிகபட்ச இஞ்சி சாறை எடுத்து தனியாக கண்டெய்னரில் வைக்கவும்.

    5. இஞ்சி சாறு நன்றாக சூடு தணிந்த பின் சின்ன ஸ்பிரே பாட்டிலில் வைத்து நேரடியாக தலை முடியின் வேர்கால்களில் படும் விதமாக பயன்படுத்தவும்.

    6. அரை மணி முதல் 1 மணிநேரம் வரை இந்த மாஸ்க் தலையில் இருக்கும் விதமாக வைத்துவிட்டு ஷாம்பு தேய்த்த்து தலை முடியையை மென்மையாக கழுவவும். இந்த ஹேர்மாஸ்க்கை வாரம் ஒரு முறை பயன்படுத்துவது நல்லது. இதனால் பொடுகு குறைந்து தலை அரிப்பும் குறைந்து விடும். அன்றாடம் தலைக்கு எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதும் மிகவும் அவசியம். 
    வெயில் காலத்தில் வெள்ளிரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். இன்று சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தயிர் - 1 கப்
    வெள்ளரி - 1
    தக்காளி - 1
    மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
    தேன் - 1/4 டீஸ்பூன்
    உப்பு - தேவையானளவு
    கொத்தமல்லி இலை - அலங்கரிக்க



    செய்முறை :

    வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தயிரை நன்றாக கலந்து கொள்ளவும்.

    நறுக்கிய வெள்ளரி, தக்காளி, மிளகு தூள், தேன், உப்பை தயிரில் சேர்த்து நன்கு கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

    சுவையான, குளு குளு வெள்ளரி தளிர் தக்காளி சாலட் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும்.

    சூழலை எதிர்நோக்குவதற்கு குழந்தைகள் தடுமாறும். குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. 7 மாதத்திற்கும் பிறகும் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்தாவிட்டால், மேல் தாடையின் பற்கள் வெளியே நோக்கி வளரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளின் முக அழகையே கெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே 8-10 மாதங்களுக்குள் குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை விடும்படி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் கை சூப்ப சில காரணங்கள்

    குழந்தைகள் விரல் சூப்புவது சாதாரணமான ஒரு நிகழ்வுதான். குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க மார்பகங்களை சூப்பிதான் பால் அருந்துகின்றனர். இது அவர்களின் இயற்கையான செயல்பாடு. இப்படி கை சூப்பும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், பாதுகாப்பாக உணர்வதாகவும், சௌகர்யமான ஒரு சூழல் இருப்பதாகவும் குழந்தைகள் நினைத்துக் கொள்கின்றனர்.

    சோர்வாக இருக்கும்போது
    பசி உணர்வு வந்தவுடன்
    போர் அடிக்கும் சூழலில் இருந்தால்
    யாரும் கவனிக்காத சூழலில் இருந்தால்
    உடல்நலம் சரியில்லை என்றாலோ
    மகிழ்ச்சியான மனநிலை இல்லை என்றாலோ
    சில குழந்தைகளுக்கு விரல் சூப்புவது ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல உணரலாம்.

    இது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் விரல் சூப்பத் தொடங்குகின்றனர்.

    விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த வழிகள்

    * எதனால் உங்கள் கை சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது எனக் கவனியுங்கள்.

    * பசி, போரடிக்கும் உணர்வு, கவனிக்காமல் இருப்பதாலா, சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலா, தூக்கம் வருகிறதா எனக் கவனியுங்கள். பிரச்னை எது எனக் கண்டறிந்தாலே சரி செய்து விடலாம்.



    * போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.

    * கை சூப்புவதை நீங்கள் பார்த்தால், மெதுவாக மென்மையாக கை சூப்ப கூடாது எனச் சொல்லுங்கள். சத்தம் போடவோ மிரட்டுவதோ அடிப்பதோ கூடாது.

    * கை சூப்பும் நேரத்தில் குழந்தையின் கவனத்தைத் திருப்ப விளையாடுவது, வேடிக்கை காண்பிப்பது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

    * தனியாக, பாதுகாப்பில்லாத உணர்வைப் போக்கி விட்டாலே குழந்தைக்கு கை சூப்பத் தோன்றாது.

    * கொஞ்சம் அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை அடித்து மிரட்ட கூடாது. வீட்டில் மட்டும் கை சூப்ப அனுமதித்து, வெளி இடங்களில் கை சூப்பத் தவிர்ப்பதை அறிவுரையாக சொல்ல வேண்டும்.

    * விரல் சூப்புவதை குழந்தைகள் நிறுத்திவிட்டால் அவர்கள் கேட்கும் பொருளை வாங்கித் தருவதாக சொல்லி அதையும் நிறைவேற்ற வேண்டும்.

    * விரல் சூப்பும் குழந்தைகளின் வாயில் அடிப்பது, கேலி செய்வது, மற்றவர்களிடம் சொல்லி காண்பிப்பது இப்படியான செயல்களைத் தவிருங்கள்.

    * குழந்தைகள் வாயில் விரல் வைத்தால்… ‘வாயில் விரல் வைத்திருக்கிறாய்’ என ஞாபகப்படுத்தி விரலை எடுக்க சொல்ல வேண்டும்.

    * எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளின் கையில் நாற்றமடிக்கும் மருந்துகளையோ எண்ணெய்களையோ பூசவே கூடாது.

    * குழந்தைக்குப் பொறுமையாக, மென்மையாக, அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். வாயில் கை வைக்க கூடாது. கிருமிகள் உள்ளே சென்று உடலைப் பாதிக்கும். மற்றவர்கள் கேலி செய்ய கூடும் என நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.

    * எவ்வளவு அன்பாக சொல்லியும் குழந்தைகள் கை சூப்ப நிறுத்தவில்லை என்றால் குழந்தைகள் நல மருந்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது. 
    ஒரு குழந்தை எடை குறைவோடோ, ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
    கருவுற்றிருக்கும் ஒவ்வொரு தாயும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் இது. இதனை நீங்கள் தெரிந்தும் புரிந்தும் கொண்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கலாம். ஒரு குழந்தை எடை குறைவோடோ அல்லது ஆரோக்கியமாகவோ பிறப்பதற்கு அந்தக் குழந்தையின் தாயே முக்கிய காரணம். அதனால் ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் இந்த தகவலைத் தெரிந்து கொள்வது மிக அவசியம்.

    1. முழுமையாக 37 வாரங்கள் முடிவதற்கு முன்னரே குழந்தை சில சமயம் பிறப்பதால் எடை குறைவு ஏற்படக்கூடும். அதாவது குழந்தை குறை மாதத்தில் பிறந்துவிடுவது. இதற்குக் காரணம் தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின் எடை கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்திலே போதிய எடை வளர்ச்சியை அடையும். இது நிகழாத போது, குழந்தையின் எடை நிச்சயம் குறைவாகத் தான் காணப்படும்.

    2. ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கருவில் சுமக்கும் போது இத்தகைய எடை குறைவு ஏற்படக்கூடும். இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் கருத்தரித்திருந்தால் குழந்தைகளுக்குப் போதுமான சத்துணவு கிடைக்காமல் 2500 கிராமிற்கும் கீழே எடை குறையக்கூடும். ஏனென்றால் ஒரு குழந்தைக்குச் செல்ல வேண்டிய சத்துக்கள் இன்னொரு குழந்தைக்குச் சென்று விடலாம். அதனால் ஏதாவது ஒரு குழந்தை பலவீனமாக இருக்கலாம் அல்லது ஏனைய குழந்தைகளும் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம்.ஆக இந்தக் குழந்தைகள் பிறக்கும்போது எடைக் குறைவோடே காணப்படுவார்கள்.

    3. கருவுற்றிருக்கும் தாய் அதிக இரத்தக் கொதிப்போடு பிரசவ காலத்திலிருந்தால் அது குழந்தையைப் பாதிக்கக் கூடும். இதனால் குழந்தை குறைந்த எடையோடு பிறக்கக்கூடும். இதனைத் தவிர்க்கத் தாய் கர்ப்பகாலத்தில் அமைதியான மனநிலையோடு இருப்பதோடு ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கூடுதலாக மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பதும் நல்லது.அதே கருவில் வளரும் குழந்தையின் எடை வளர்ச்சிக்கு நல்லது.

    4. கருவுற்றிருக்கும் பெண் புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும் வாழ்க்கைமுறைப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது குழந்தையின் எடை குறைபாட்டிற்குக் காரணம். மேலும் பதப்படுத்திய உணவுகளை உண்பது, துரித உணவுகளை அதிகம் உண்பது போன்ற விசயங்கள் எல்லாம் குழந்தைக்குப் போதுமான பிராண வாய்வு கிடைக்காமலும் போதிய சத்து கிடைக்காமலும் போகும் வாய்ப்பையும் அதிகரிக்கின்றன. இதனால் கருவில் இருக்கும் குழந்தை எடை குறைவோடு பிறக்கும் சதவீதம் அதிகம்.

    5. கருவுற்றிருக்கும் தாயிற்கோ அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கோ சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் கர்ப்ப காலத்தில் உள்ளது. இதனால் குழந்தை பிறக்கும் போது எடை குறைவு அல்லது அதீத எடை போன்ற பிரச்சனைகளோடு பிறக்கக்கூடும்.இதைத் தவிர்க்கக் கர்ப்பிணிப் பெண்கள் உணவு மேலாண்மையைக் கையாள வேண்டும்.



    6. கருவுற்றிருக்கும் தாய்க்குக் கருப்பையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தை எடை குறைவோடு பிறக்கக்கூடும். இதனால் வேறு பல பிரச்சனைகளும் குழந்தைக்கு ஏற்படக்கூடும். இது மருத்துவ பரிசோதனைகளும், ஆலோசனைகளும் மிக முக்கியம்.

    7. கருவுற்றிருக்கும் தாய் போதுமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக சத்தான கீரை வகைகள், பழங்கள், காய் மற்றும் பசும் பால் போன்ற ஊட்டச்சத்து நிரம்பிய உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் குழந்தை சீரான உடல் எடையோடு பிறக்கும்.

    8. தாய் கருவுற்றிருக்கும் போது தாயிற்கோ அல்லது குழந்தைக்கோ நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் குழந்தை பிறக்கும் போது உடல் எடை குறைபாட்டோடு பிறக்கக்கூடும். இதனால் கர்ப்ப காலத்தில் நோய்த் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் தாயிற்கு ஏற்படும் எந்த வித நோய்ப் பாதிப்புகளும் கருவில் வளரும் குழந்தையையும் தாக்குகின்றன. இதன் விளைவாக அந்த குழந்தை பிறக்கும் போது உடல் எடை குன்றியே காணப்படுகிறது.

    9. சரியான பருவத்தில் தாய் கருவுற வேண்டும். குறைந்த வயதிலோ அல்லது அதிக வயதிலோ ஒரு பெண் கருவுற்று குழந்தை பெற எண்ணினால், அதுவும் உங்கள் குழந்தை எடை குறைபாட்டோடு பிறக்க ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். அதனால் பெண்கள் இயன்ற வரை உரிய வயதில் தாய்மை கொள்வது நல்லது.

    10. கருவுற்றிருக்கும் பெண் முடிந்த வரை மகிழ்ச்சியாகவும் புத்துணர்ச்சியோடும் தனது கர்ப்ப காலத்தில் இருக்க வேண்டும். தாய் மனச் சோர்வோடும் மன அழுத்தத்தோடும் இருந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக் கூடும். ஆக தாய் மனத் தெளிவோடு எந்த ஒரு விசயத்திற்கும் கவலை கொள்ளாது தன் கர்ப்ப காலத்தைக் கழித்தால் பிறக்கும் குழந்தை போதிய எடையோடு நிச்சயம் இருக்கும்.

    இங்கு குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை ஒவ்வொரு கருவுற்றிருக்கும் பெண்ணும் புரிந்து கொண்டு தன் குழந்தை சரியான உடல் எடையோடும் ஆரோக்கியத்தோடும் பிறக்க உதவ வேண்டும். 
    ×