என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் சிறப்பான பானம். இன்று நெல்லிக்காய் ஜூஸை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெல்லிக்காய் - 10
    பச்சை மிளகாய் - 1
    கறிவேப்பிலை - சிறிது
    இஞ்சி - 1 இன்ச்
    சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    தண்ணீர் - தேவையான அளவு
    தேன் - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தண்ணீரைத் தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும்.

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரிமாறினால், நெல்லிக்காய் மசாலா ஜூஸ் ரெடி!

    குறிப்பு: இந்த வடிகட்டிய நெல்லிக்காய் சாற்றினை காற்றுப்புகாத பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கர்ப்ப காலத்தில் சில பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். கண்டிப்பாக அது ஒரு பயத்தை ஏற்படுத்தக் கூடிய தருணமாக இருக்கும்.
    கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். கண்டிப்பாக அது ஒரு பயத்தை ஏற்படுத்தக் கூடிய தருணமாக இருக்கும்.

    கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும்.

    "கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும். இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.

    கரு பதித்தல் கசிவு இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.



    பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும். எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

    கருச்சிதைவை யூகிக்கவோ, தடுக்கவோ எந்த ஒரு வழியும் இல்லை. ஆனால் இரத்த கசிவு ஏற்படும் போது படுக்கையில் ஓய்வாக இருப்பது அவசியமாகும். அதேப்போல் உடலுறவையும் தடுக்க வேண்டும். பெண்ணுறுப்பு பாதையில் இருந்து கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை இரத்த கசிவு நீடித்தால், வலி அதிகரித்தால், காய்ச்சல், சோர்வு, மயக்கம் போன்ற நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

    மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் நஞ்சுக்கொடி கீழே இறங்குதல் பிரச்சனையாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும். இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.
    மகிழ்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்களை நம் உடலில் எவ்வாறு அதிகமாக உருவாக்க வைப்பது என்பதை தெரிந்துக்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும்.
    இன்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம். மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது. அனைவராலும் கேட்கப்படும் ஒரு மிகப்பெரிய கேள்வி. மகிழ்ச்சி என்பது மனம் சம்பந்தப்பட்டது. இன்று பலர் மகிழ்ச்சியாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் மகிழ்ச்சி அவர்களிடத்தில் இல்லை. மகிழ்ச்சிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

    சிலர் பணம் இருந்தால் மகிழ்ச்சி வரும் என்று நினைப்பார்கள். சிலர் தங்களுக்கு வேண்டிய உடைமைகள், வீடு மற்றும் நகை போன்ற விஷயங்கள் கிடைத்தால் மகிழ்ச்சி என்று நினைப்பர். ஆனால் அது உண்மை அன்று. மகிழ்ச்சி என்பது வேறு. இதை நாம் சற்று அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் மகிழ்ச்சியாக இருப்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க முடியும்.

    மகிழ்ச்சி என்பது ஒரு உணர்வு மட்டுமல்ல, நம் உடலில் உண்டாகும் சில மாற்றங்களும் ஆகும். மகிழ்ச்சியை உருவாக்க சில ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப் பொருட்கள் உடலில் உருவாக வேண்டும். இவை இயற்கையாக உருவாகாதபோது மருந்தாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அது பல பக்கவிளைவுகளை உருவாக்கும். இயற்கையாக உருவாகும் போது எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் மகிழ்ச்சியைத் தானாக உருவாக்கும். இவற்றை இயற்கையாக நமது உடலில் உருவாக்க நாம் நம் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

    என்டார்பின், செரோடோனின், டோபமைன், ஆக்சிடோசின் போன்ற ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்கள் மகிழ்ச்சியை உருவாக்கும்.

    என்டார்பின் உடற்பயிற்சி செய்யும்போது, காதல் வயப்படும்போது உருவாகிறது. சிரிக்கும்போதும் இந்த வேதிப்பொருள் உடம்பில் உருவாகிறது. இதைத்தான் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என்ற திரைப்படத்தில் பல காட்சிகளில் ‘சிரிப்பு வைத்தியம்’ என்று சுட்டிக் காட்டி இருப்பார்கள். இதைத்தான் திருவள்ளுவரும் ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்கிறார். என்டார்பின் உடலில் வலியை மறைக்கிறது. பற்றாக்குறை ஏற்படும்போது ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, கழுத்து வலி, கூட்டத்திலும் தனிமையாக உணர்தல் போன்றவை உண்டாகும். சாக்லெட்டை சுவைக்கும்போதும், நறுமணத்தை நுகரும்போதும் மிகுதியாக உடலில் இது உருவாகிறது.

    டோபமைன், நாம் நமது குறிக்கோளை அடையும்போது உருவாகிறது. உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்த அப்பர் ‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே குறிக்கோளுடன்தான் வாழ வேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார். தன்னிச்சையாக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போதும், தான தர்மம் செய்யும்போதும், நாம் பாராட்டப்படும்போதும் டோபமைன் உருவாகிறது. டோபமைன் குறைவு பார்க்கின்சன் நோயை உருவாக்கும், தாய்ப்பாலைத் தடை செய்யும். மேலும் டோபமைன் குறைவு ஊசலாடும் மனநிலையை ஏற்படுத்தும். தெளிவான முடிவு எடுப்பதில் குழப்பம் உண்டாகும். அதாவது மாறிமாறி முடிவெடுப்பவர்களுக்கும், நிலையான முடிவெடுக்கத் தெரியாதவர்களுக்கும் டோபமைன் குறைவாக உருவாகும். இதைத்தான் ‘மனம் ஒரு குரங்கு’ என்றும் சொல்வார்கள். வள்ளுவரும் தன்னுடைய குறளில்

    ‘எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு’

    என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளார்.

    அவகாடோ, பிரக்கோலி, தக்காளி, புரதச்சத்து உள்ள உணவுகளில் டோபமைன் உள்ளது.

    செரோடோனின், நம்மிடம் நேர்மறை எண்ணங்கள் உருவாகும்போதும் உருவாகிறது. மகிழ்ச்சியான மலரும் நினைவுகளில் மூழ்கும்போதும், தன்னம்பிக்கையோடு உள்ளபோதும், அடுத்தவர்களுக்கு உதவும் போதும், பாதுகாப்பாக உணரும்போதும் உருவாகிறது. சூரிய ஒளி அல்லது வெளிச்சமான இடம் போன்றவையும் செரோட்டனின் உருவாவதற்கு உதவும். சீஸ், முட்டை, அன்னாசிப் பழம், சால்மன் மீன்கள், உருளைக்கிழங்கு, பிரட், பருப்பு வகைகள் போன்ற உணவுகளைச் சேர்த்துக் கொள்வதால் செரோடோனின் உருவாகும்.

    ஆக்சிடோசின் ஹார்மோனை காதல் ஹார்மோன் எனவும் கூறலாம். கர்ப்பவதிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்கும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளைத் தொட்டுப் பேசும்போது இந்த ஹார்மோன் சுரக்கிறது. நாம் ஒருவர் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும்பொழுது இந்த ஹார்மோன் சுரக்கிறது. இதனாலேயே கணவன், மனைவியிடம் நம்பிக்கை வைக்கும்பொழுது இந்த ஹார்மோன் உருவாகிறது. மகிழ்ச்சியைத் தருகிறது. நண்பர்களை ஆரத்தழுவும்போதும் இந்த ஹார்மோன் சுரக்கிறது. மேலை நாடுகளில் கைக்குலுக்கி, கட்டிப்பிடித்து வரவேற்பார்கள்.

    இதுவும் இந்த ஹார்மோன் சுரக்க உதவும். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற படத்தில் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ என்று பல காட்சிகளில் காட்டியிருப்பார்கள். இதுவும் அறிவியல் ரீதியாக மகிழ்ச்சியை உருவாக்கச் செய்யும் செயலாகும். எண்ணெய்த் தேய்த்து மசாஜ் செய்யும்போதும் இந்த ஹார்மோன் உருவாகிறது. குற்றாலத்தில் எண்ணெய்க் குளியல் கூட ஆக்சிடோசின் உருவாக உதவுகிறது. அந்தக் காலத்தில் ‘சனி நீராடு’ என்ற பழமொழியை ஆராயும்போது ஆக்சிடோசின் பற்றி அன்றே சிந்தித்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. செல்லப்பிராணிகளை வளர்க்கும்போதும் இந்த ஹார்மோன் சுரக்கும். வாழைப்பழம், முட்டை, மிளகு போன்ற உணவுகளில் ஆக்சிடோசின் நிரம்ப உள்ளது.

    மகிழ்ச்சி ஹார்மோன்கள் மற்றும் நரம்புக்கடத்தி வேதிப்பொருட்களை நம் உடலில் எவ்வாறு அதிகமாக உருவாக்க வைப்பது என்பதை தெரிந்துக்கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும்.

    முனைவர் கி.மாசிலாமணி, பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
    (பார்மசியூட்டிக்ஸ்)
    தனியார் மருந்தாக்கியல் கல்லூரி,சென்னை
    யோகா என்பது பண்டைய இந்தியாவின் பொக்கிஷம் என்பதையும், உலக அரங்கில் உள்ள புலப்படாத பாரம்பரியங்களில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் சிறந்த நாள் இதுவாகும்.
    இன்று (ஜூன் 21-ந் தேதி) சர்வதேச யோகா தினம்.

    சுமார் 170 உலக நாடுகள் ஜூன் 21-ந் தேதியை 5-வது சர்வதேச யோகா தினமாக கொண்டாடுகின்றன. ஆனால் யோகா என்பது பண்டைய இந்தியாவின் பொக்கிஷம் என்பதையும், உலக அரங்கில் உள்ள புலப்படாத பாரம்பரியங்களில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதையும் பிரதிபலிக்கும் சிறந்த நாள் இதுவாகும்.

    கி.பி. 5-ம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உடல், மனது மற்றும் ஆன்மிக பயிற்சிக்கான நிலைதான் யோகா. உலக அளவில் தற்போது பல்வேறு நிலைகளில் யோகா பயிற்சி பின்பற்றப்படுகிறது. எனவே அதன் பெயரும், புகழும் மென்மேலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது. மிகுந்த பயனளிக்கக் கூடிய பயிற்சி இது.

    ஒருங்கிணைந்த உடல் நலம் பெறுவதற்கு அணுகக்கூடியதோடு, உடலுக்கும் மனதுக்கும் இடையிலான முக்கிய தொடர்பை அறிந்துகொள்ளச் செய்வதாகவும் யோகா அமைந்துள்ளது. சமநிலை, சாந்தம், அமைதி, கருணை போன்றவற்றை யோகா பயிற்சி அளிக்கிறது.

    யோகா என்ற வார்த்தை, சமஸ்கிருதத்தில் இருந்து வந்த சொல்லாகும். இணை அல்லது ஒன்று சேர் என்பது யோகாவின் அர்த்தமாகும். ஒருவன் தனது முன்னேற்றப் பாதையையும் உயர்ந்த நிலையையும் அடைவதற்கு உடல் தகுதிதான் மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது என்பதை நமது பண்டிதர்கள் வலியுறுத்தி உள்ளனர். யோகா தரும் தூய்மையான பலன்கள், உடல் நலனை அடையக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றை உணர்ந்தே ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினம் என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் அறிவித்தன.

    தற்போதைய சூழ்நிலைகளில், எதிர்பாராத கோணங்களில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படுவதெல்லாம் நமக்கு பெருத்த சவால்களை உருவாக்கிவிடுகின்றன. அப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வாழும் முறை, கல்வி, வேலை, மகிழ்ச்சி போன்றவையெல்லாம் துரிதமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப வாழ்க்கை முறை மாறுகிறது. பொருளாதார முன்னேற்றம், திறன் மேம்பாடு, கல்வி அறிவு ஆகியவற்றில் மிகச் சிறந்த நிலையை அடைந்தாலும் மிக அவசியமான ஒன்றை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம். அது தேசத்தின் சமநிலையாகும்.

    ஏழைகள் கவனிக்கப்பட வேண்டும். இயற்கை, தேசத்தின் ஒட்டுமொத்த அமைதி நிலைவரப்பட வேண்டும். உலகத்தைப் பற்றிய சிந்தனைக்காக நமது தனிப்பட்ட வாழ்க்கை முறைக்கு ஊக்கம் தேவைப்படுகிறது. சமநிலைப்பாடு என்பதுதான் அதற்கான மந்திரமாகும். அது யோகாவில்தான் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள், சீதோஷ்ண செயல்பாடுகள் என்பதாகும். நமது உடல் நிலையை மேம்படுத்துவதற்கு மட்டுமல்ல, நமது பூமிக்கோளின் நலனையும் பேணுவதற்கான நமது தொடர்பையும் இந்த யோகா கொண்டுள்ளது.

    யோகாவின் பயன்பாடுகள் பற்றி உலகம் மெதுவாக உணரத் தொடங்கியுள்ளது. யோகா பற்றி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர்கள், உடல், மூச்சு, ஆழ்ந்த ஓய்வு, தியானம் ஆகிய 4 அம்சங்களையும் ஒருங்கே கொண்ட நேர்மறையான விளைவுகளை அளிக்கும் பயிற்சி என்று அங்கீகரித்துள்ளனர்.

    எலும்பு தொடர்பான பிரச்சினைகள், இருதய நோய், ஒற்றைத் தலைவலி, திசுக்கள் இறுகிவிடுதல் போன்ற நோய்களுக்கு யோகா ஒரு அருமையான நிவாரணி. ரத்த நாளங்களின் நெகிள் தன்மையை 69 சதவீதம் அதிகரிப்பதோடு, ரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளையும் மருந்துகளின் உதவியில்லாமல் நீக்குவதற்கு யோகா உதவுகிறது என்று அதைப்பற்றிய ஆய்வு தெரிவிக்கிறது.

    உடலின் பல்வேறு பாகங்களில் சென்று யோகா பயிற்சி செயல்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியை உடல் பெறுவதோடு, சர்க்கரை நோய்க்கு தேவைப்படும் மருந்துகளில் 40 சதவீதம் குறைக்கப்படுகிறது என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் அறிக்கை தயாரித்துள்ளது. யோகா பயிற்சி மேற்கொள்வோர் 43 சதவீத அளவுதான் மருத்துவ சேவையை பெறுகின்றனர் என்றும், 640 அமெரிக்க டாலர் முதல் 25 ஆயிரம் டாலர் வரை ஆண்டுக்கு பணம் சேமிக்கின்றனர் என்றும் அந்த பல்கலைக்கழகம் கருத்து பகிர்ந்துள்ளது.

    இதில் நமக்கு என்ன பெருமை என்றால், கோடிக்கணக்கான உலக மக்களின் நலனை பாதுகாப்பதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதுதான். இதை பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துச் சென்றிருக்கிறார். யோகா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வைத்த தீர்மானத்தை உலகின் 177 நாடுகள் ஆமோதித்தன என்பதே அதற்கு நற்சாட்சி. இதன் மூலம் உலக மக்களின் உடல்நல மேம்பாட்டுக்கான இந்தியாவின் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

    தேசங்களின் உறவை மேம்படுத்தும் நோக்கத்தில் துணை ஜனாதிபதியாக மற்ற நாடுகளுக்கு நான் பயணம் மேற்கொண்ட போதெல்லாம், அங்கு நடக்கும் யோகா பயிற்சிகளைக் கண்டும், அதன் புகழ் மென்மேலும் பெருகி வருவதை பார்த்தும் நான் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள பள்ளிக்கூட பாடத் திட்டத்தில் யோகா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    பெரு உள்ளிட்ட சில நாடுகளில் யோகா மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. கோஸ்டா ரிக்காவில் யோகா மற்றும் தியானம் ஆகியவை பொதுமக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ளன.

    யோகா என்பது உடல் நலனுக்கான பயிற்சியோடு நின்றுவிடாமல், சிறந்த சிந்தனை, நற்குண செயல்பாடுகள், கற்பதற்கான ஆற்றல், பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகியவற்றையும் ஒருங்கிணைத்ததாக உள்ளது. மேம்பட்ட திறனோடு வெளிச் சூழ்நிலைகளில் நம்மை இணைத்துக்கொள்வதற்கு யோகா உதவுகிறது.

    யோகாவை இசை என்று நிபுணர் ஒருவர் வர்ணிக்கிறார். மத எல்லைகளைத் தாண்டி உலக அளவில் இந்த இசை சென்றடைந்துள்ளது. இதன் மூலம் உலக மக்கள் அனைவரும் நோய்களின் பிடியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

    வெங்கையா நாயுடு, இந்திய துணை ஜனாதிபதி
    டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த காளான் கோப்தா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பட்டன் காளான் - 200 கிராம்
    கேரட் - 1
    முட்டைகோஸ் - 1
    பச்சைப்பட்டாணி - கால் கப்
    மைதா - 1 டீஸ்பூன்
    சோள மாவு - 3 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
    மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவைகேற்ப



    செய்முறை :


    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    முட்டை கோஸ், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து அரைத்து கொள்ளவும்.

    காளானை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்.

    மற்றொரு பாத்திரத்தில், துருவிய கேரட், பொடியாக வெட்டப்பட்ட முட்டைகோஸ், அரைத்து வைத்த பச்சைப்பட்டாணி, மைதா, சோள மாவு, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக மாவு போல் பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஏற்கனவே வேகவைக்கப்பட்ட காளான்களை, இந்த கலவையால் முழுவதுமாக மூடும்படி நன்றாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டி வைத்த காளான் உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பொரித்த காளான்களை ஒரு தட்டில் வைத்து அதனை நேர்வாக்கில் இரண்டாக வெட்டி வைத்து அதன் மேல் கொத்தமல்லிதழைகளை தூவினால், சூடான, சுவையான, மொறுமொறுப்பான காளான் கோப்தா தயார்.

    இதனை சாம்பார் அல்லது தயிரில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.
    இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவு உண்ணும் ஆர்வம் குறைந்து, நொறுக்குத்தீனிகளை எந்நேரம் பார்த்தாலும் அரைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் வந்துவிட்டது; பெற்றோர்களும் குழந்தையின் தேவைக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகளை வாங்கி குவித்து விடுகின்றனர்..! பெற்றோர் செயலில் மனம் மகிழ்ந்த குழந்தைகளும், அவற்றை தின்று வயிற்றை நிரப்பிக்கொண்டே, கூடவே உடல் எடையையும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றனர்.

    ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள் தாங்கள் வாங்கிக் கொடுக்கும் நொறுக்குத்தீனிகளால் குழந்தைக்கு புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமலேயே வாங்கிக்கொடுக்கின்றனர்.! அப்படி குழந்தைகளுக்கு புற்றுநோய் அளிக்கும் நொறுக்குத்தீனிகள் எவை என்று இப்பதிப்பில் பார்க்கலாம்..!

    1. சீட்டோஸ் எனப்படும் சில்லுகள் பார்க்க அழகாக, கண்ணைக் கவரும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுவதால், நாம் எதைப்பற்றியும் எண்ணாமல், ஏமாந்து குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்துவிடுகிறோம்..! ஆனால், இந்த சில்லுகளில் அதிகப்படியான சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன; இந்த சில்லுகள் அடர்ந்த ஆரஞ்சு அல்லது அடர்ந்த நிறத்தில் இருக்க பெட்ரோலியம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை உண்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய், ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி எனும் அதிகப்படியான செயல்பாடு, ஒவ்வாமை போன்றவை ஏற்படுகின்றன..!

    2. PFOA (perfluorooctanoic acid), diacetyl and propyl gallate போன்ற வேதிப்பொருட்கள் இன்றைய எண்ணெயில்லாத பாப்கார்னை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் PFOA எனும் அமிலம் நச்சுத்தன்மை வாய்ந்தது; ஆனால் இதையெல்லாம் அறியாமல் பாப்கார்ன் குழந்தைகளின் உடலுக்கு நல்லது என்று பெற்றோர் வாங்கிக் கொடுக்கின்றனர்.

    3. உருளைக்கிழங்கு சிப்ஸ்களை அதிக வெப்பநிலையில் பொரித்து எடுப்பதால், அவற்றில் காரசினோஜெனிக் எனும் புற்றுநோய் உருவாக்கும் காரணி தோன்றிவிடுகிறது; இதை அக்ரிலாமைட் என்றும் அழைப்பர். மேலும் இதில் அதிக உப்பு சேர்ப்பதும் குழந்தைகளின் உடல் நலத்தை மிகவும் பாதிக்கும்..!

    4. பல குளிர்பானங்கள் குழந்தைகளின் உடல் நலத்தைக் குதறும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டவையே! இவற்றைப் பருகுவதால், குழந்தைகளுக்கு pancreatic, colon and rectal cancer போன்ற புரியாத பல நோய்களும், பற்சிதைவு, குண்டாதல், சர்க்கரை நோய் போன்றவையும் ஏற்படுகின்றன. இந்த மாதிரியான பானங்களில் அத்தனித்த சுவையை கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், குழந்தைகளுக்கு இருதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

    6. பிரட்டுகளை தயாரிக்க சேர்க்கப்படும் வேதி ஈஸ்டுகள், செயற்கை சர்க்கரை போன்றவை குழந்தைகளில் புற்றுநோய் மற்றும் அவர்களின் உடற்செயலிய மாற்றத்தைக் குழைத்து, அவர்களை குண்டாக்கி குழந்தைகளின் உடலை நிலைகுலைய செய்கின்றன..

    7. கெலாக்ஸ், சாக்கோஸ் என குழந்தைகளுக்கு நலம் பயக்கும் என பெற்றோர்கள் அளிக்கும் செயற்கை தானிய உணவுகள், குழந்தைகளின் உடல் நலத்தை முற்றிலுமாக கெடுத்துவிடுகின்றன. இந்த தானிய உணவுகளில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை, நிறங்கள் மேலும் பல வேதிப்பொருட்கள் போன்றவை குழந்தைகளுக்கு அதிக தீங்கினை விளைவிக்கின்றன.
    குழந்தைகளால் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்த இயலாமல், அதை மறக்க முடியாமல் தொடர்ந்து தானும் கஷ்டப்பட்டு தாயையும் கஷ்டப்படுத்துவர். இந்த பதிப்பில் குழந்தைகளை தாய்ப்பாலினை எப்படி மறக்கச் செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.
    குழந்தைகளுக்கு பிறந்தது முதல் ஓரிரு வயது ஆகும் வரை நிறுத்தாமல் கொடுக்கப்படும் உணவு, தாய்ப்பால்; குழந்தைகள் தாயின் அரவணைப்பிலேயே பிறந்தது, வளர்ந்து வருகின்றனர். குழந்தைகள் அழுதால், உடனே தாய் அவர்களுக்கு பால் அளித்து அவர்தம் அழுகையை நிறுத்தச் செய்திடுவாள்; குழந்தைகள் பயந்தாலோ அல்லது அவர்களின் மீது தனது நேசத்தை காட்ட எண்ணினாலோ, அவர்களை மார்போடு அணைத்துக் கொள்வாள் அன்னை. இந்த மாதிரியான விஷயங்களால் குழந்தைகளால் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்த இயலாமல், அதை மறக்க முடியாமல் தொடர்ந்து தானும் கஷ்டப்பட்டு தாயையும் கஷ்டப்படுத்துவர். இந்த பதிப்பில் குழந்தைகளை தாய்ப்பாலினை எப்படி மறக்கச் செய்வது என்று அறிந்து கொள்ளலாம்.

    1. தாய்ப்பாலை உடனே நிறுத்துவதால், தாயின் உடலில் சில மாற்றங்கள் மற்றும் பாதிப்புகள் உண்டாகலாம்; மார்பகங்களில் பால் கட்டிக்கொள்வது, மார்பகத்தில் வலி, மார்பகம் வீக்கமடைதல் - இது போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

    2. குழந்தைக்கோ மனரீதியாக அழுத்தம் உண்டாகலாம்; தாய் தாய்ப்பால் கொடுக்காமல் தவிர்ப்பது குழந்தையிடத்தில் ஏக்கத்தை ஏற்படுத்திவிடும்; குழந்தையை தவிப்பில் ஆழ்த்திவிடும்.

    நிறுத்துவது எப்படி?

    1. முதலில் தாய் தன்னை கூர்ந்து கவனிக்க வேண்டும்; அதாவது, தாய்ப்பால் சுரக்க சில உணவுகளை உண்டிருப்பீர். அதேபோல் இப்பொழுது தாய்ப்பாலை நிறுத்த உதவும் உணவுகள் என்னென்ன என்று அறிந்து அவற்றை உண்ண வேண்டும்; அல்லது தாய்ப்பால் சுரப்பை தூண்டும் உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

    2. முட்டைகோஸ் இலைகளை மார்பக பகுதியில் சில மணிநேரம் வைத்திருப்பதால் கூட தாய்ப்பால் சுரப்பை நிறுத்த இயலும்.

    3. குழந்தைகள் தாயின் மார்பகத்தை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்; அதாவது குழந்தைகள் முன் உடை மாற்றுவது, அவர்களுடன் சேர்ந்து குளிப்பது, பால் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    4. குழந்தைக்கு பாலை புட்டியில் வைத்து அளிக்க வேண்டும்; அதுவும் குழந்தைக்கு பிடித்த வண்ணம், வடிவம் கொண்ட பாட்டிலில் பால் ஊற்றி அளிக்க வேண்டும்.

    5. குழந்தையுடன் சேர்ந்து உறங்கும் போது, குழந்தை மார்பகத்தை தொடாமல், பால் அருந்த முயற்சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    6. குழந்தையின் கவனத்தை திசை திருப்ப அவர்களுக்கு கதை சொல்வது, அவர்களுடன் பேசுவது, வீடியோ கட்டுவது, பாடல் கேட்க வைப்பது, வெளியே அழைத்துச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

    பொதுவாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலை நிறுத்தும் போது, உடனடியாக எதுவும் செய்துவிடாமல், மெதுவாக, படிப்படியாக நிறுத்த வேண்டும்; அதே சமயம் குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் அளித்திருக்க வேண்டும். குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் பொழுது தாய்ப்பாலை நிறுத்துவது உசிதமானது.!
    கூந்தலை குளிக்கும் போது பராமரித்தாலே பல குறைபாடுகள் நீங்கிவிடும். இதனை ஒவ்வொரு முறை குளிக்கும் போது கவனத்தில் கொண்டால் போதும் கூந்தல் உதிர்வதை கூடுமானவரை தவிர்க்கலாம்.
    கூந்தல் பராமரிப்பு என்பது அடிப்படையான விஷயங்களில் இருந்து துவங்குகிறது. தலைக்கு குளிக்கும் போது செய்யும் சில தவறுகள் உங்கள் கூந்தலை (Hair) மங்கச்செய்யலாம்.

    ஷவரில் இருந்து சூடான தண்ணீர் பொழியும் போது அதன் கீழ் நின்று கொண்டிருப்பது இதமளிப்பதாக தோன்றலாம். ஆனால் இது உங்கள் கூந்தலின் நீர்த்தன்மையை நீக்கி, உலர் தன்மை மற்றும் உடைந்த முனை பாதிப்பை உண்டால்லாம். எனவே எப்போதும், வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை(Hair) அலசவும். இதன் மூலம் கூந்தலில் உங்கள் ஈர்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.

    ஷாம்பு உங்கள் கூந்தலில் இருந்து அழுக்கு மற்றும் எண்ணெயை பசையை அகற்ற உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு இயற்கை மற்றும் செயற்கை எண்ணெய் பசை இடையே வேறுபாடு தெரியாது. எனவே உங்கள் ஷாம்புவில் சிறிதளவு தண்ணீர் கலந்து அதை நீர்க்கச்செய்து அதன் பின் பயன்படுத்தவும்.

    தினமும் உங்கள் கூந்தலை(Hair) அலசாமல் இருப்பது ஆரோக்கியம் இல்லாதது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை என்ன எனில் தினமும் கூந்தலை (Hair) அலசும் அவசியம் இல்லை என்பது தான். இது இயற்கை எண்ணெய் பசையை அகற்றி, முடி உதிர்தலை உண்டாக்கலாம்.

    முடிந்த வரை, உங்கள் கூந்தலை (Hair) இயற்கையாக உலர வையுங்கள். டிரையர் பயன்படுத்துவது தவிர்க்க இயலாது எனில், கூந்தலை (Hair) ஓரளவு உலர வைத்துவிட்டு பின்னர் டிரையர் பயன்படுத்தவும்.

    ஈரமான, பாதி உலர்ந்த மற்றும் இப்போது தான் உலர வைத்த கூந்தலில் எப்போதும் பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தவும். இது கூந்தல் பாதிப்படைவதை குறைக்கும்.

    ஈரமான, எண்ணெய் பசை நிறைந்த கூந்தலில் அழுக்கும், எண்ணெய் பிசுபிசுப்பும் எளிதாக ஒட்டிக்கொள்ளும் என்பதால், தலைக்கு குளித்தவுடன் ஈரமான கூந்தலுடன் வெளியே செல்ல வேண்டாம்.

    இந்த காரணங்களால் தான் கூந்தல் உதிர்கின்றது என்று சொல்ல முடியாது. நாம் உண்ணும் உணவும் மிக முக்கிய காரணமாகும். கூந்தலை குளிக்கும் போது பராமரித்தாலே பல குறைபாடுகள் நீங்கிவிடும். இதனை ஒவ்வொரு முறை குளிக்கும் போது கவனத்தில் கொண்டால் போதும் கூந்தல் உதிர்வதை கூடுமானவரை தவிர்க்கலாம்.

    முருங்கைக்கீரை மிகவும் சத்து நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இதனை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    எண்ணெய்  - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    பூண்டு - 7
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    முருங்கை இலை - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு, மிளகு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

    பூண்டை நசுக்கி வைக்கவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
     
    வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    பிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.

    கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    இந்த சூப் மிகவும் சத்து நிறைந்தது. வாரம் மூன்று முறை இந்த சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சரியான குறிக்கோள் மற்றும் நேரத்தை திட்டமிடும் திறன் இல்லையென்றால், நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும்(self improvement) எந்த முன்னேற்றமும் இல்லாமல் ஒரே இடத்திலேயே நிற்ப்பீர்கள்.
    சுய முன்னேற்றம் என்பது ஒருவர் தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதை குறிக்கும். அது அவரது குணங்கள், பழக்கங்கள், மற்றவரிடம் அணுகும் முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று பல அதனுள் அடங்கும். இதில் முக்கியமான ஒன்று, உங்கள் குறிக்கோளை நீங்கள் நிர்ணயிப்பதும், உங்கள் நேரத்தை சரியான விதத்தில் திட்டமிடுவதும் தான். பலர் தெளிவற்ற குறிக்கோள்களுடன் இருப்பதை நாம் காண்கிறோம். மேலும் பலர் தங்களது நேரத்தை சரியாகத் திட்டமிடத் தெரியாமல், வீணாக்குவதையும் நாம் காண்கிறோம். இப்படி சரியான குறிக்கோள் மற்றும் நேரத்தை திட்டமிடும் திறன் இல்லையென்றால், நீங்கள் என்ன தான் முயற்சித்தாலும்(self improvement) எந்த முன்னேற்றமும்(self improvement) இல்லாமல் ஒரே இடத்திலேயே நிற்ப்பீர்கள்.

    சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட பின், அதனை எப்படி செயல் படுத்துவது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பலரும் என்னதான் சுய முன்னேற்றத்தின் முக்கியத்துவம் பற்றி புரிந்திருந்தாலும் எப்படி அதை செயல் படுத்துவது என்று தெரியாததால் வெற்றி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க நீங்கள் சில விடயங்களை தெரிந்து கொண்டு அதனை பின்பற்றினால், உங்கள் முன்னேற்றத்தில் வெற்றி பெறலாம்.

    முதலில் நீங்கள் எண்ணியதில் வெற்றி அடைந்து விட்டதாகவும், சாதித்து விட்டதாகவும் எண்ணுங்கள். இந்த எண்ணம் உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தை(self improvement) நோக்கி முதல் படியை எடுத்து வைக்க உதவும். நீங்கள் எப்படி என்னுகுறீர்களோ அப்படியே உங்கள் வாழ்க்கை அமையும். அதனால் நீங்கள் வெற்றி பெற்று விட்டதாக அதிகம் கற்பனை செய்து பார்த்து உங்கள் ஆள் மனதிற்குள் ஒர் மகிழ்ச்சியையும், உற்ச்சாகத்தையும் ஏற்படுத்துங்கள்.

    நீங்கள் முன்னேற முடிவு செய்து விட்டால், அடுத்ததாக உங்கள் குறிக்கோள் என்ன மற்றும் அதற்காக நீங்கள் எனென்ன செய்யப் போகுரீர்கள் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி பட்டியலிடுங்கள். இந்த குறிப்புகள் அவ்வப்போது, காலபோக்கில் நீங்கள் சரியாக செயல் படுகுறீர்களா அல்லது உங்கள் திட்டத்தில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்படுகிறதா என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள உதவும்.



    தினமும் காலையில் எழுந்தவுடன் நீங்கள் எந்த கவனச்சிதறலும் இல்லாமல் உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். எந்த காரணம் கொண்டும் நீங்கள் உங்கள் முயற்சியில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்யும் போது உங்கள் முயற்சி(self improvement) தீவிரம் அடையும். நீங்களும் உங்கள் குறிக்கோளை விரைவாக அடைந்து விட முடியும்

    நம் வாழ்க்கையில் நாம் எவ்வளவு முயற்சி(self improvement) செய்தாலும், நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்கு சில மன உளைச்சல் மற்றும் சங்கடங்களை ஏற்படுவது இயல்பே. இதனால் நாம் கோபப் படுவது மற்றும் பதற்றம் அடைவது என்று நம் மனம் பாதிக்கப் படும். அவ்வாறு நேராமல், முடிந்த வரை உங்கள் எண்ணங்களை நேர்மறையாகவும், எந்த தடை ஏற்பட்டாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் உங்கள் குறிக்கோளை மட்டும் நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு நீங்கள் செய்யும் போது மேலும் வெற்றி பெரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

    நீங்கள் அவ்வப்போது சரியாகத் தான் உங்கள் சுய முன்னேற்றத்தை நோக்கி செல்குறீர்களா என்பதை உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். சில சமயங்களை நாம் செய்யும் சில தவறுகளை கவனிப்பதில்லை. இது என்றாவது ஒரு நாள் நம்மை சிக்கலில் கொண்டு விடக்கூடும். அதனால் நீங்கள் அவ்வப்போது ஏதாவது சுய முன்னேற்ற முயற்சியில்(self improvement) தவறுகள் இருக்கிறதா, நாம் சரியாகத்தான் செயல் படுகிறோமா என்று உறுதி படுத்திக் கொள்வது முக்கியம்.

    நீங்கள் ஒன்றை செய்ய முடிவு செய்துவிட்டால் அதை தள்ளிப் போட வேண்டாம். இப்போதே செயல் படுத்த தொடங்குங்கள். இது நீங்கள் விரைவாக உங்கள் வெற்றிப் பாதையை நோக்கி பயணிக்க உதவும்.
    முதுகு வலியினை யோகா செய்வதன் மூலம் சுலபமாக சரி செய்ய இயலும். தொடர்ச்சியான யோகா பயிற்சியின் மூலம் உங்களின் முதுகு வலியை கட்டுப்படுத்தி சரி செய்யலாம்.
    கடும் வேலை, முறையற்ற உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், அலுவலகங்களில் நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து இருத்தல் போன்ற பல காரணிகளால் முதுகு வலி (back pain)ஏற்படுகின்றது. இதனை ஆரம்ப காலத்திலேயே சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.

    இவ்வகை வலியினை யோகா (yoga) பயிற்சியின் மூலம் சுலபமாக சரி செய்ய இயலும். தொடர்ச்சியான யோகா (yoga) பயிற்சியின் மூலம் உங்களின் முதுகு வலியை (back pain)  கட்டுப்படுத்தி சரி செய்ய முடியும்.

    1. புஜங்காசனா (Bhujangaasana)

    சூரிய நமஸ்கரத்தின் 12 முறைகளுள் இதும் ஒன்று. இது கோப்ரா நிலை(ராஜ நாகம் தலையை உயர்த்துவது போல ) என்றும் அழைக்கப்படும். இது யோகாசனங்களில் முதுகுத்தண்டை பலப்படுத்தும் ஒரு ஆசனமாகும். புஜங்கா என்றால் சம்ஸ்கிருத மொழியில் ராஜநாகம் என்று பொருள்.



    செய்முறை

    வயிறுப்பகுதி தரையில் படுமாறு படுக்கவும். பின்னர் கைகளை தரையில் ஊன்றி கால்களை நேராக நீட்டவும். ராஜநாகம் படம் எடுப்பதைப்போல கைகளை மடக்கி உடலை நேராக வைத்து சுவாசிக்கவும். வயிற்று பகுதி தரையில் நன்றாக படும்படி இதனை செய்ய வேண்டும். இதனை இரண்டு  நிமிடங்கள் என மூன்று முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

    2. அர்தா மட்ஸ்யேந்திராசனா (Half Spine Twist)

    இந்த ஆசனமானது யோகி மத்ஸ்யேந்திரநாத் அவர்கள் நினைவாக வைக்கப்பட்டது.சம்ஸ்கிருத மொழியில் அர்தா என்றால் பாதி ,மாட்ஸய என்றால் மீன் மற்றும் இந்திரா என்றால் அரசன் என்று பொருள். இது முது வலியை குறைக்க வல்லது.

    செய்முறை

    தரையில் சம்மணமிட்டு நேராக அமரவும். முதுகுத்தண்டு நேராக இருப்பது மிகவும் அவசியம். பின்னர் வலது  காலை எடுத்து இடது  புற இடுப்பிற்கு பக்கமாக மடக்கவும்.பின்னர் இடது கையை கொண்டு இடது காலின் முட்டியை தொடுமாறு அமரவும். பின்னர் உங்கள் முகத்தையும்,இடுப்பையும் பின் பக்கமாக சற்றே திருப்பி மூச்சினை மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் இழுத்து விடவும். இதுபோல் மாற்றி மாற்றி செய்து வரவும்.

    3. மார்ஜரியாசனா (Marjari asana)

    இது பூனையை போன்றதொரு ஆசனமாகும். இதனை செய்வது எளிது மற்றும் இதன் மூலம் கிடைக்கும் பலன்கள் அதிகம்.



    செய்முறை

    நான்கு கால்களை கொண்டு பூனை அமரும் முறையில் அமரவும். இப்பொது உங்கள் கைகள் தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும். முகத்தினை நேராக  வைத்து மூச்சினை மெதுவாகவும் பின்னர் வேகமாகவும் இழுத்து விடவும். தலையை முன்னும் பின்னும் அசைத்து மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

    4. பிட்டிலாசானா(Cow Pose)  

    பிட்டிலாசானா  என்பது சம்ஸ்கிருத மொழியில் பசுவின் பெயரான பட்டிலா என்பதிலிருந்து உருவானதாகும். பெயரை போலவே நமது உடலையும் பசுவை போல வைத்து இதனை செய்ய வேண்டும்.

    செய்முறை

    கைகள் இரண்டையும் தரையில் ஊன்றி, கால்களை மடக்கி நன்கு கால்கள் கொண்ட பசுவை போல நிற்க வேண்டும். பின்னர் உங்களின் பின்பகுதியை சற்றே உயர்த்தி, உங்களின் வயிற்று பகுதியை கீழ்நோக்கி தள்ள வேண்டும். தலையை நேராகவோ அல்லது மேல் பக்கமாகவோ உயர்த்தி மூச்சினை மெதுவாகவும், வேகமாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.

    பலன்கள் (Benefits)

    இது முதுகுப்பகுதி மற்றும் அடிவயிற்று பகுதிக்கு சேர்க்கிறது. முதுகுத்தண்டின் வளைவுத்தன்மை அதிகரிக்கின்றது.மேலும் இது வளர்சிதை மாற்றத்தை சமநிலைப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

    மக்களின் அன்றாட தேவைக்கான தண்ணீருக்கே காலி குடங்களுடன் நீண்ட தொலைவுக்கு அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
    பருவமழை பொய்த்ததாலும், நிலத்தடி நீர் வேகமாக குறைந்து வருவதாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்களின் அன்றாட தேவைக்கான தண்ணீருக்கே காலி குடங்களுடன் நீண்ட தொலைவுக்கு அலையும் நிலை ஏற்பட்டு உள்ளது. லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கும் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலைதான் சென்னைவாசிகளை அச்சுறுத்தி வருகிறது.

    குடிநீருக்கே இந்த நிலைமை என்றால் பிற தொழில்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது குதிரைக்கொம்பாக மாறியுள்ளது. இதனால் பல தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன.

    தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில் அதனை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் கூறியதாவது:-

    * பாத்திரங்களை கழுவும் போது குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி கழுவலாம்.

    * பல் துலக்கும்போதும், முகம் கழுவும் போதும் குழாயை திறந்துவிட்டு பயன்படுத்தாமல், ஒரு வாளியில் நீரை நிரப்பி சிறுக சிறுக பயன்படுத்த வேண்டும்.

    * குளிக்கும்போது ‘‌‌ஷவர்’ பயன்படுத்தாமல் வாளியில் நீரை நிரப்பி குளிக்கலாம். முடிந்த அளவுக்கு ஒரு வாளி தண்ணீரில் குளிக்கவேண்டும்.

    * துணி துவைக்கும் எந்திரங்களில் (வா‌ஷிங் மெ‌ஷின்) அன்றாடம் துணிகளை துவைக்கும்போது கூடுதல் நீர் செலவாகும். அதனால், ஒரே முறையாக எல்லா துணிகளையும் துவைத்து நீரை சிக்கனப்படுத்த வேண்டும். துணி துவைத்த பிறகு மீதம் இருக்கும் நீரை வீணாக்காமல் கழிப்பறையில் ஊற்றலாம்.

    * மேற்கத்திய கழிவறையை (வெஸ்டர்ன் டாய்லட்) பயன்படுத்தாமல் நம்முடைய முறை கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.

    * தண்ணீர் குழாய்களை நன்றாக மூட வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் குழாய்களில் நீர்க்கசிவு இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். நீர் கசிவு இருந்தால் உடனே பழுது நீக்க வேண்டும்.

    * சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் தண்ணீர் குழாயை பயன்படுத்தாமல் பாத்திரத்தில் நீரை நிரப்பி கைகளை கழுவலாம்.

    * வாகனங்களை தண்ணீர் குழாய் மூலம் கழுவாமல் ஈரத்துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

    ×