என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • இந்த அளவுக்குள் பருகுவது பாதுகாப்பானது.
    • வரம்பை மீறுவது எதிர்மறையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    ஒருவர் தினமும் 3 முதல் 5 கப் காபி வரை பருகலாம். அதற்கு மேல் பருகுவது நல்லதல்ல. ஏனெனில் ஒருவரின் உடலுக்கு தினமும் 400 மில்லி கிராம் காபின் போதுமானது என்று சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இது 4 கப் காபிக்கு சமம்.

    அதிகபட்சமாக 5 கப் காபியுடன் நிறுத்திக்கொள்வதுதான் சரியானது. இந்த அளவுக்குள் பருகுவது பாதுகாப்பானது. சில உடல்நல நன்மைகளுடனும் தொடர்புடையது. இந்த வரம்பை மீறுவது எதிர்மறையான உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    4 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட தினசரி காபின் வரம்பு வெறும் 45 மில்லி கிராம் மட்டுமே. இது சிறிய துண்டு டார்க் சாக்லேட்டுக்கு சமமான அளவாகும்.

    • தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது.
    • சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும்.

    வீடுகளில் இல்லத்தரசிகள் சமையல் செய்யும் பொழுது, அல்லது ஆண்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஏதேனும் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். வீடுகளில் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்கள் காரணமாகவும் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். அந்த வகையில் தீக்காயங்கள் ஏற்படும் போது எப்படிப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்த ஆலோசனைகள் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.

    இல்லத்தரசிகளை பொறுத்தவரை பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது அதிலிருந்து சூடுபட்டுக்கொள்வது வழக்கம். அத்துடன் தண்ணீர் கொதிக்க வைக்கும் பாத்திரங்கள், துணி இஸ்திரி செய்யும் அயர்ன் பாக்ஸ், எதிர்பாராத மின்சார தாக்குதல், ஆடைகள் மற்றும் பிற பொருள்களில் தற்செயலாக தீப்பிடிப்பது ஆகியவற்றால் தீக்காயங்கள் ஏற்படலாம். அது மட்டுமல்லாமல் தீ விபத்து காரணமாக உடலில் காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது மிகவும் அவசியம்.

    • தீப்புண்கள் ஏற்பட்டு விட்டால் அதன் மீது வெண்ணை, மாவு, சமையல் சோடா ஆகியவற்றை தடவுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.



    • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ஆயின்மென்ட், லோஷன் அல்லது எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.

    • தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளத்தை தாமாகவோ உடைக்கவும் அல்லது கிள்ளவோ கூடாது. அத்துடன் தீ புண்களை வெறும் கைகளால் தொடுவது துணி வைத்து துடைப்பது ஆகியவையும் கூடாது.

    • தற்போது பாலிஸ்டர் மற்றும் சிந்தடிக் ஆடை வகைகள் பயன்படுத்தப்படுவதால் தீக்காயங்களின் போது அவை உருகி தோலோடு ஒட்டிக் கொள்வது வழக்கம். அந்த நிலையில் அவ்வாறு தோலில் ஒட்டிக்கொண்ட துணிகளை தாங்களாகவே அகற்ற முயற்சிக்கக் கூடாது.

    இல்லத்தரசிகளை பொறுத்தவரை தீக்காயம் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் அதில் உள்ள ஆபரணங்களை அகற்றி விடுவது நல்லது. சிறிய தீக்காயங்களாக இருந்தால் அதன் மீது நோய் தொற்று உருவாகி விடாமல் பாதுகாப்பாக சுத்தமான பருத்தித் துணியால் தீக்காயத்தின் மீது படாமல் மூடி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டும்.

    சமையலறை மற்றும் வீடுகளில் துணிகளில் தீப்பற்றும் போது தண்ணீர் ஊற்றி அவைகளை அணைக்க வேண்டும். அப்போது தீக்காயம் பட்டிருந்தால் குளிர்ந்த நீரை தீக்காயம் பட்ட பகுதியில் மீது ஊற்றி அந்த வெப்பம் தோலை பாதிக்காத வகையில் தடுக்கலாம்.

    முகம் மற்றும் கண் பகுதிகளில் ஏற்பட்ட தீக்காயம் சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்ட நபரை அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது மிக முக்கியம்.

    பொதுவாக தீப்புண் ஏற்பட்டால் அதன் மீது பனிக்கட்டியை பயன்படுத்தாமல் குளிர்ந்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்வதுதான் நல்லது. சுய மருத்துவம் செய்வது என்பது கூடாது.

    • பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது.
    • ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது.

    ஏ.பி.சி. ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய 3 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஏ.பி.சி. ஜூஸ் ஆரோக்கியமான பானமாகும். ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. அவை ஒன்று சேர்ந்து சுவையான ஜூஸாக மாறுவதோடு உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன. தினமும் ஏன் ஏ.பி.சி. ஜூஸ் பருக வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

    தினமும் ஏ.பி.சி. ஜூஸ் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி உள்ளது. அவை ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இயற்கையாகவே பாதுகாப்பை உருவாக்கும். இரும்பு மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை பீட்ரூட்டில் உள்ளன. இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் ஆக்சிஜனின் சுழற்சியை ஊக்குவிக்கவும் பயன்படும்.

    பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் நச்சுக்களை நடுநிலையாக்கவும் உதவும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் உள்ளன. அவை அதிக பித்த உற்பத்தி மற்றும் எளிதான செரிமானம் மூலம் வளர்சிதை மாற்றக்கழிவுகள் மற்றும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. எனவே ஏ.பி.சி. ஜூஸை தினமும் பருகுவது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க வழிவகை செய்யும்.

    ஏ.பி.சி ஜூஸ் குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதாலும், ஊட்டச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க அல்லது சீராக நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தரும் என்பதால் சாப்பாட்டுக்கு இடையே நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை தடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் உதவும்.

    ஏ.பி.சி. ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது குடல் நோய்களை தடுக்கும். மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளையும் விரட்டியடிக்கும். ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் உள்ளது. அது குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பீட்ரூட் இரைப்பை அமிலங்களின் சுரப்பை ஊக்குவிப்பதால் செரிமானத்தை எளிதாக்கும். முக்கியமான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவிடும். ஏ.பி.சி. ஜூஸை தொடர்ந்து உட்கொள்வது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தும்.

    இந்த ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது. ஆப்பிள் மற்றும் கேரட்டில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடியவை. சருமத்தில் விரைவாக சுருங்கங்கள் விழுவதை தடுக்கும். பீட்ரூட்டில் உள்ளடங்கி இருக்கும் பீட்டாலைன்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து தடுக்கும்.

    • வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை, பழக்க வழக்கம் முதலானவற்றைப் பொருத்து மாறுபடுகிறது.
    • மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அவற்றிக்கான சிகிச்சை மேற்கொண்டாலே வாய் துர்நாற்றம் சரியாகிவிடும்.

    சிலருக்கு வாயில் ஒருவித துர்நாற்றம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அதனால் மற்றவர்களுடன் பேசுவதற்கே சற்று தயங்குவார்கள். வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது? வாய் துர்நாற்றம் நீங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

    பொதுவாக நமது வாயில் உள்ள துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களால் தான் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. மேலும் வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் ஒவ்வொருவரின் உடல்நிலை, பழக்க வழக்கம் முதலானவற்றைப் பொருத்து மாறுபடுகிறது. இதுதவிர மது அருந்துவது, புகைப்பழக்கம் , கார்பனேட் செய்யப்பட்ட குளிர்பானங்களை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்படும். இந்த பழக்க, வழக்கங்களை கைவிட்டாலே வாய் துர்நாற்றம் வீசுவது நாளடைவில் குறைந்துவிடும்.

    நூற்றில் எண்பது சதவீதம் பேருக்கு வாய் துர்நாற்றம் ஏற்படக் காரணம் அவர்கள் வாய் சுகாதாரத்தை சரிவர பேணாததால் தான். அதனால் அவர்கள் தினமும் இரண்டு முறை பல் தேய்க்க வேண்டும். பல் தேய்க்கும் போது நாக்கையும் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். எப்போது உணவு அல்லது நொறுக்கு தீனி எடுத்துக்கொண்டாலும் உடனடியாக வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க கட்டாயமாக உங்கள் உடல் எடைக்கு ஏற்ற அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.



    வாய் பராமரிப்பு செய்தும் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்றால், உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக சொத்தைப்பல், அஜீரணப் பிரச்சனைகள், சர்க்கரை நோய் முதலானவற்றால் வாய் துர்நாற்றம் வீசுகிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று அவற்றிக்கான சிகிச்சை மேற்கொண்டாலே வாய் துர்நாற்றம் சரியாகிவிடும்.

    எந்தவித நோய்க்கான அறிகுறியும் இல்லை. ஆனாலும் துர்நாற்றம் வீசுகிறது என்றால் பொதுவான வீட்டு வைத்திய முறையை பின்பற்றினாலே வாய் துர்நாற்றத்தைப் போக்கி விடலாம்.

    எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பட்டைப் பொடி, சோடா உப்பு, தேன் முதலானவற்றை சேர்க்க வேண்டும். இந்த கலவையுடன் வெதுவெதுப்பான நீர் ஊற்றி வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

    நன்னாரி வேரை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். நன்னாரி வேரைப்போலவே, பட்டை மற்றும் சீரகத்தையும் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.

    அன்றாடம் சிறிதளவு துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால் துளசி இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரையும் குடிக்கலாம்.

    வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் அது சரியாகும் வரை பூண்டு, வெங்காயம் மற்றும் அதிக மசாலாப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. மேலும், காரமான மற்றும் எண்ணெய் மிகுந்த உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது.

    • உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
    • ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவதற்கு சீரான உறக்க முறைகளை ஒருவர் கடைபிடிப்பது அவசியம் ஆகும்.

    இன்றைய இறுக்கமான பணி சூழலில் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி ஏற்படுவது பலருக்கும் வழக்கமாக உள்ளது. பணி வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அதன் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது. ஆனால் ஒற்றைத் தலைவலி எந்த சூழ்நிலைகளில் உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை புத்திசாலித்தனமாக தவிர்ப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு காணலாம் என்று மருத்துவர் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    ஒற்றைத் தலைவலி என்ற சிக்கலை பொறுத்தவரை சில உணவு முறைகளாலும் கூட ஏற்படலாம். அதாவது ஆல்கஹால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் கூட அது ஏற்படலாம். மோனோசோடியம் குளூட்டமேட் (MSG) மற்றும் செயற்கை இனிப்புகள் ஆகியவையும் அதற்கான காரணங்களாக இருக்கலாம்.

    அத்துடன் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய பிரகாசமான மின்விளக்குகள், சுற்றுப்புறத்தில் உள்ள சப்தம், மனம் இருக்கும் வாசனைகள் ஆகியவை காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.



    அது மட்டுமல்லாமல் உடல் நிலையில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலம் அல்லது கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

    மேலும் ஒருவருடைய ஒழுங்கு முறையற்ற தூக்கம் முறைகள், அதிகப்படியான மன அழுத்தம், உணவு உண்ணும் நேரத்தை அல்லது உணவையே தவிர்ப்பது ஆகியவையும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    ஒரு சிலர் உடற்பயிற்சிகள் மீது உள்ள அதீத ஆர்வம் காரணமாக கடுமையாக உடற்பயிற்சி செய்வது, அதிகப்படியான உடல் உழைப்பு, மன பதற்றம் ஆகியவையும் கூட ஒற்றைத் தலைவலியை உருவாக்கலாம்.

    பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம் என்று குறிப்பிட்ட மருத்துவ வல்லுனர்கள் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளார்கள். அது குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

    உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலும் கூட அது ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக அமையலாம். அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட, துரித உணவு வகைகளை தவிர்ப்பது அவசியம். தேவைப்பட்டால் மட்டும் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் அவசியமானது.

    ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவதற்கு சீரான உறக்க முறைகளை ஒருவர் கடைபிடிப்பது அவசியம் ஆகும். இரவு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து அன்றாட பணிகளை செய்வது என்ற ஒரு சீரான அட்டவணையை பின்பற்றுவதன் மூலமாகவும் ஒற்றைத் தலைவலியை வராமலேயே தடுக்க முடியும்.

    ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை விட்டமின் பி-2 என்று சொல்லப்படும் ரிபோபிளேவின் ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் தவிர்க்க உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    அதிகப்படியான உழைப்பு, மன அழுத்தம், இறுக்கம் ஆகியவற்றை தவிர்ப்பதன் மூலமாகவும் ஒற்றை தலைவலியை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். எதிலும் அளவான போக்கை கடைபிடிப்பதன் மூலமாகவே உடலின் சமநிலையை பேணிக் காப்பதோடு மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும் என்று தான் மருத்துவ வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    • நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

    தினமும் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    மன ஆரோக்கியம்

    உங்கள் உடல் உங்களை மகிழ்ச்சியாக உணர உதவும் ரசாயனங்களை வெளியிடுகிறது.

    ஆஸ்துமாவை விரட்டும்

    ஆஸ்துமாவை நெருங்கவிடாமல் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களை வலுப்படுத்த உதவுகிறது.

    ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்

    ஓடும்போது தமனிகள் சுருங்கி விரிவடைவதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்

    நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.

    உடல் எடை குறையும்

    ஓடும்போது ஒரு மணி நேரத்திற்கு 705 முதல் 865 கலோரிகள் எரிக்கப்படும். உடல் எடையும் குறையும்.

    உடல் வலிமை

    ஓடுவதன் மூலம் உடல் வலிமை கூடுவதோடு தசை நாண்கள் மற்றும் தசைநார்கள் வலுப்படும்.

    எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்

    ஓடும் சமயத்தில் உடல் அழுத்தப்படும்போது எலும்புகளை வலுப்படுத்த அத்தியாவசிய தாதுக்களை அனுப்பும். ஓடுவதன் காரணமாக எலும்புகளை அழுத்துவதால், காலப்போக்கில் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.

    மூட்டுகளை வலிமைப்படுத்தும்

    ஓடுவதன் காரணமாக தசைநார்கள் மற்றும் தசைநாண் களின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் மூட்டு பகுதி வலிமை அடையும். அதனால் கணுக்கால், இடுப்பு மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

    நீரிழிவு நோயை குறைக்கும்

    ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

    எவ்வளவு நேரம் ஓடலாம்?

    தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் ஓடுவது நல்லது. அப்படி ஓட முடியாதவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் ஓடுவது கூட உடல் உறுப்புகளுக்கு பலன் அளிக்கும்.

    • அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
    • இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

    வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெண்டைக்காய் ஏ பிரிவு ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது

    இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது. செரிமானம், நீரேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.

    இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.

    இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துகிறது.

    நீரழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வெண்டைக்காயை காய்கறி உணவாகச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், வெண்டைக்காய் தண்ணீரைக் குடிக்கலாம்.

    2அல்லது 3 வெண்டைக்காய்களை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, முனைகளை வெட்டி, சிறிய பிளவுகளை உருவாக்குங்கள்.

    அவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    நார்ச்சத்து நிறைந்த இந்த பானம் செரிமானத்தை மெதுவாக்குகிறது. சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

    இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் அல்லது லேசான வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்,

    வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும், அதே நேரத்தில் வலிமை இயற்கையாகவே அதிகரிக்கும்," என்று இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வேகவைத்த முட்டைகள் கொழுப்புகள் சேர்க்கப்படாமல் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் தன்மை கொண்டது.
    • ஆம்லெட் விரும்புபவர்கள் அதில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதுதான் சிறந்தது.

    முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் தயாரித்தோ ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது.

    இது எளிதாக ஜீரணமாகும். செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஏற்றதாக அமையும். இதில் புரதம் அதிகம் உண்டு. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி, மூளை செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். வேகவைத்த முட்டைகள் கொழுப்புகள் சேர்க்கப்படாமல் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

    ஆம்லெட் விரும்புபவர்கள் அதில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதுதான் சிறந்தது. அதிலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பொருட்களை ஆம்லெட்டில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் ஆம்லெட்டில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். கலோரி, கொழுப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆம்லெட்டை தவிர்ப்பது நல்லது.

    • அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர்.
    • ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 15 ஆய்வு முடிவுகளின் அறிக்கை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

    23 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதயநோய் அறிகுறிகளை கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பெரிதாக உள்ளது. அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இதுமட்டுமின்றி, இளம் வயது பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த 1995-2014-க்கு இடைப்பட்ட காலத்தில், 35 வயது முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு விகிதம் 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆண்களுக்கான விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீ மாக உயர்ந்துள்ளது.

    பெண்கள் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து, தங்கள் உடல்நலனை கவனத்தில் வைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

    • அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர்.
    • இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) உடல் எடை குறைப்பதற்கு நண்பை பயக்கும் கருவியாக இருக்கும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.

    "Physicians Committee for Responsible Medicine" என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வு முடிவு "Frontiers in Nutrition" இதழில் வெளியிடப்பட்டது. இதில் மெடிட்டரேனியன் உணவு (Mediterranean diet) மற்றும் குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) இடையே ஒப்பீடு செய்யப்பட்டது.

    மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானிய பொருட்கள் அடங்கியிருக்கும். இருப்பினும் மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

    இந்த ஆய்வில் 62 அதிக எடை கொண்ட வயது வந்தவர்கள் (adults) சீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு  மெடிட்டரேனியன் உணவு (Mediterranean diet)  மற்றும் மற்றொரு பிரிவுக்கு குறைந்த கொழுப்பு சைவ உணவு (low-fat vegan diet) வழங்கப்பட்டது.

    Mediterranean diet

    அவர்கள் 16 வாரங்கள் ஒரு உணவு முறையைப் பின்பற்றினர். பின்னர் நான்கு வாரங்கள் இடைவெளி எடுத்துக்கொண்டு, மீண்டும் 16 வாரங்கள் மற்றொரு உணவு முறையைப் பின்பற்றினர். 

    சோதனையின் முடிவில், குறைந்த கொழுப்பு சைவ உணவு முறையைப் பின்பற்றியவர்களுக்கு உணவு அமிலச் சுமை கணிசமாகக் குறைந்தது கண்டறியப்பட்டது. உணவு அமிலச் சுமை குறைந்ததால், சைவ உணவு முறையைப் பின்பற்றியவர்கள் சராசரியாக 13.2 பவுண்டுகள் (சுமார் 6 கிலோ) எடை இழந்தனர். மெடிட்டரேனியன் உணவு முறையை பின்பற்றியவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

     விலங்குப் பொருட்கள் அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும் என்பது அறியப்படுகிறது. இது வீக்கம் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

    ஆய்வின்படி, இறைச்சி, முட்டை, பால் பொருட்கள் போன்ற அமிலத்தை உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொள்வது உடலில் உணவு அமிலச் சுமையை அதிகரிக்கும். இது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

    ஆனால் இவற்றுக்கு பதிலாக கீரைகள், பெர்ரி பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற தாவர அடிப்படையிலான சைவ உணவுகளை உட்கொள்வது எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை உருவாக்கும் என்று ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாக்டர் ஹனா காலியோவா தெரிவித்துள்ளார். 

    • பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.
    • தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

    முகத்தை வைத்துத்தான் ஒருவரின் அகத்தை எடை போடுகிறார்கள். ஆனால் சிலருக்கு கண்களுக்கு கீழ் உருவாகும் கருவளையம், அவர்களின் முக அழகையே கெடுத்து விடுகிறது.

    தூக்கமின்மை, மனஅழுத்தம், ரத்த சோகை, அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவது ஆகியவை முதன்மை காரணங்களாக இருந்தாலும், மரபணு மாற்றம், வாழ்க்கை முறை போன்றவற்றாலும் கண்ணில் கருவளையம் ஏற்படுகிறது.

    இதைச் சரிசெய்யும் முறைகளை பார்ப்போம்...

    * சிறிதளவு தக்காளிச் சாறுடன் எலுமிச்சைச் சாறு கலந்து கருவளையத்தின் மீது தடவி, 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    * கற்றாழை ஜெல்லை கருவளையத்தின் மீது தடவி, 5-10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவலாம்.

    * உருளைக்கிழங்கு சாறை எடுத்து கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவலாம்.

    * வெள்ளரிக்காயை வெட்டி கண் மீது வைத்து 15-20 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

     * காபித் தூளுடன் பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்து, காலையில் கழுவலாம்.

    * பாதாம் எண்ணெயை மட்டும் கருவளையத்தின் மீது தடவி மசாஜ் செய்யலாம்.

    * கிரீன் டீ போட்டவுடன் அதன் பேக்குகளை குளிர்பதனப் பெட்டியில் வைத்து, ஆறிய பின் கண்களில் வைத்து 10-15 நிமிடங்கள் கழித்து அகற்றலாம்.

    * தேங்காய் எண்ணெயை பஞ்சில் தொட்டு கண்களுக்கு கீழ் மசாஜ் செய்து வரலாம்.

    * ரோஸ் வாட்டரை பருத்தி துணி அல்லது பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் 15 நிமிடங்களுக்கு வைத்து எடுக்க வேண்டும். தினசரி இதனை தொடர்ந்து செய்து வர, கருவளையம் நீங்கும்.

    • தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன.
    • மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது.

    இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஐ.டி. துறையை கடந்து பல இடங்களிலும் இரவு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு பணி பெண்களுக்கு சாதகமானதா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமைந்திருக்கிறது. இரவு பணியை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.

    இரவு வேலை செய்தால் என்ன நடக்கும்?

    தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன. காலையில் சூரிய கதிர்களோ, அதன் வெளிச்சமோ உடலில் படும்போது கார்டிசோல் அளவுகள் உயர்ந்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடலை உற்சாகப்படுத்தும். மறுபுறம் இரவில் இருள் சூழ தொடங்கியதும் மெலடோனின் ஹார்மோன் தூக்கத்திற்கு உடலை தயார்படுத்தும். பெண்கள் இரவு நேர வேலைகளில் ஈடுபடுவது கார்டிசோலை தூண்டிவிடுவதோடு மெலடோனின் உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

    இரவு நேர வேலை செய்பவர்களுக்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதாகவும், மெலடோனின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதிலும் பெண்கள் இரவு முழுவதும் வேலை செய்யும் வழக்கத்தை தொடரும்போது தூக்க-விழிப்பு சுழற்சியை தொந்தரவு செய்யும். உடலில் கார்டிசோல் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

    சமீபத்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 'இரவு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மிதமாகவோ அல்லது கடுமையாகவோ ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    தூக்க சுழற்சி சீர்குலையும்

    இரவு பணியில் ஈடுபடுவது ஆரம்பத்தில் சிரமமாக தோன்றும். நாளடைவில் அதற்கு உடல் பழக்கமாகிவிடும் என்று பலரும் கூறுவதுண்டு. இரவுப்பணியில் ஈடுபடுபவர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கும். பெண்களை பொறுத்தவரை இரவுப்பணியில் ஈடுபடுவது இயற்கையான தூக்க சுழற்சியை கடுமையாக சீர்குலைத்துவிடும். ஆரம்பத்தில் சமாளிக்கக்கூடிய விஷயமாக தோன்றலாம். ஹார்மோன் சமநிலையின்மைக்கும் வழிவகுத்துவிடும். வேறு சில உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும்.

    மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது. பூமியின் இரவு, பகல் சுழற்சிக்கு ஏற்ப உடலும் தூக்க சுழற்சியை சீராக பராமரிக்கும். கார்டிசோல், மெலடோனின் ஆகிய இரண்டும் முக்கியமான தூக்க ஹார்மோன்களாகும். இதில் விழிப்பு நிலைக்கு தூண்டி, தூக்கத்தில் இருந்து எழுப்பும் பணியை கார்டிசோல் ஹார்மோன் செய்யும். இருள் சூழ தொடங்கியதும் உறக்க நிலைக்கு அழைத்து செல்லும் பணியை மெலடோனின் ஹார்மோன் மேற்கொள்ளும்.

    ×