என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    சருமத்தில் வழக்கத்தை விட அதிகமாக எண்ணெய் பசை தன்மை இருப்பதற்கு ஒரு சில தவறான அழகியல் முறைகளை பின்பற்றுவதும் காரணமாக அமைந்திருக்கிறது.
    பெண்களில் சிலருடைய சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டிருக்கும். சருமத்தில் வழக்கத்தை விட அதிகமாக எண்ணெய் பசை தன்மை இருப்பதற்கு ஒருசில தவறான அழகியல் முறைகளை பின்பற்றுவதும் காரணமாக அமைந்திருக்கிறது.

    * நிறைய பேர் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும் மாய்ச்சுரைசர்களை பயன்படுத்துவார்கள். அதனை எண்ணெய் வழியும் சமயத்தில் மட்டுமே பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால்தான் எண்ணெய் சுரப்பது கட்டுப்படும்.

    *முகத்திற்கு அதிகம் மேக்கப் போடுவதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் முகத்தில் ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை அதிகம் உபயோகிப்பதும் எண்ணெய் சுரப்பதற்கு காரணமாக இருக்கும்.

    * பெண்களில் பலர் சோப்பை பயன்படுத்தி அடிக்கடி முகம் கழுவும் வழக்கத்தை பின்பற்றுவார்கள். அப்படி கழுவுவதும் எண்ணெய் சுரப்புக்கு வழிவகுத்துவிடும்.

    *மன அழுத்தமும் எண்ணெய் பசைத்தன்மைக்கு காரணமாகும். ஏனெனில் மன அழுத்தத்தில் இருக்கும்போது ஹார்மோன்கள் சுரப்பு சீரற்ற தன்மையில் இருக்கும். அதன் காரணமாகவும் எண்ணெய் சுரக்க தொடங்கும்.

    * போதுமான அளவு தண்ணீர் பருகுவதை தவிர்ப்பதும் சருமத்தில் எண்ணெய் சுரக்க காரணமாகி விடும். சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தண்ணீர் பருக வேண்டியது அவசியமானது.

    பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவி விடுவார்கள். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல.
    பச்சிளம் குழந்தை சாப்பிட மறுத்தால் சிலர் நாக்கில் தேன் தடவி விடுவார்கள். அழுகையை நிறுத்துவதற்கும் சிலர் தேன் கொடுப்பது வழக்கம். குழந்தையும் தேனை விரும்பி ருசிக்கும். ஆனால் ஒரு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுப்பது நல்லதல்ல. தேனில் கிளோஸ்ட்ரிடியம் போட்லினம் எனும் ஒரு பாக்டீரியம் இருக்கிறது. இந்த வகை பாக்டீரியா குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை கொண்டது.

    பச்சிளம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு வயதை கடந்த பிறகுதான் உருவாகும். அதுவரை குழந்தையின் உடலால், இந்தவகை பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட முடியாது. தேனில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் குழந்தையின் செரிமான அமைப்பையும் பாதிப்புக்குள்ளாக்கும். இதன் காரணமாக, குழந்தைக்கு ‘பொட்டூலிசம்’ எனும் நோய் ஏற்படக்கூடும். அதனால் குழந்தை சுவாசிப்பதில் சிக்கல் உருவாகும். அல்லது உடல் பலவீனமாகும். பொதுவாக இந்தவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மலச்சிக்கல்தான் முதல் அறிகுறியாக தென்படும். மேலும் சில அறிகுறிகளும் இருக்கின்றன.

    * குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருக்கும். எவ்வளவோ முயற்சி செய்தாலும் அதனை அமைதிப்படுத்த முடியாது.

    * குழந்தையின் அடி வயிற்றில் வலி ஏற்படும். அந்த சமயத்தில் கையை வயிற்று பகுதியில் நகர்த்தி கொண்டே தொடர்ந்து அழுது கொண்டிருக்கும்.

    * பசியாக இருந்தாலும் பால் குடிக்காது. அதனால் குழந்தையின் உடல் பலவீனமாகும். உடல் எடையும் குறைய தொடங்கும்.

    * உடல்நிலை மோசமடையும் சூழலில் குழந்தைகள் இமைகளை இறுக்கமாக அழுத்தி கண்களை மூடத்தொடங்கும்.

    இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

    குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக ஒரு வருடமாகும் என்பதால் அதுவரை தாய்பால்தான் குழந்தையை பாதுகாக்கும். அதுதான் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்பட்டு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள், தொற்றுநோய் கிருமிகளிடம் இருந்து குழந்தையை பாதுகாக்கும். அதனால்தான் குறைந்தது 6 மாதங்களாவது தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுவரை வேறு உணவுகள் கொடுக்கக்கூடாது. ஒரு வயதுக்கு பிறகு தேன் கொடுக்கலாம். ஆனால் மூன்று வயதுவரை குறைந்த அளவே தேன் கொடுக்க வேண்டும்.
    கீரை மற்றும் பருப்பு கொண்டு செய்யப்படும் இந்த கிச்சடி ஆரோக்கியம் நிறைந்தது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் இரண்டையும் உள்ளடக்கிய இந்த கிச்சடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    சிறுகீரை - 1 கட்டு
    வெங்காயம் - 1
    தக்காளி - 2
    அரிசி - 1 1/2 கப்
    பருப்பு- 1 கப்
    சீரகம் - 1 தேக்கரண்டி
    கடுகு - 1 தேக்கரண்டி
    மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கேற்ப
    மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - 5-6
    நெய் - 1 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
    தண்ணீர் - 1 டம்ளர்

    செய்முறை

    கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
    பருப்பை 2 அல்லது 3 முறை நன்கு கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

    அடுப்பில் ப்ரஷர் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அனைத்து நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    அத்துடன் கழுவி வைத்த பருப்பு மற்றும் அரிசியை போட்டு அதில் தண்ணீர் ஊற்றவும். இரண்டு நிமிடங்கள் வேகவிட்டு, நறுக்கி வைத்த கீரையை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்த பிறகு இறக்கி அதில் நெய் சேர்த்து பரிமாறினால் பருப்பு கீரை கிச்சடி தயார்.

    இதற்கு எந்த கீரையை வேண்டுமானலும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குளிர் காலத்தில் உடல் நலனையும், உடல் எடையையும் சீராக பராமரிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    குளிர்காலத்தில் சோம்பேறித்தனம் எட்டிப்பார்ப்பது இயல்பானது. குளிர்ந்த காலநிலை உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால் அன்றாடம் உடற்பயிற்சி செய்பவர்கள் கூட குளிர்காலத்தில் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வதற்கு தடுமாறுவார்கள். வெயிலின் தாக்கம் குறைவாக இருப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைப்பதும் குறைந்துபோகும். உடற்பயிற்சியிலும், உணவு பழக்கவழக்கங்களிலும் போதுமான கவனம் செலுத்தாவிட்டால் குளிர்காலத்தில் உடல் எடை சட்டென்று அதிகரித்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குளிர் காலத்தில் உடல் நலனையும், உடல் எடையையும் சீராக பராமரிப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * குளிர்காலத்தில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது கடினமானது என்றாலும் அந்த வழக்கத்தை மாற்றக்கூடாது. நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற இலகுவான பயிற்சிகளையாவது செய்ய வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்தால் உடலில் இருந்து தினமும் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு குறைந்து போய்விடும். அதன் காரணமாக உடல் பருமன் பிரச்சினை எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். வீட்டில் உள்ளவர்களுடன் குழுவாக சேர்ந்து இசைக்கு நடனமாடி கூட பயிற்சி செய்யலாம். அது சோம்பலையும் விரட்டியடித்துவிடும்.

    * குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. தண்ணீர் தாகம் எடுக்காவிட்டாலும் உதட்டில் ஏற்படும் வறட்சி தண்ணீர் அருந்துவதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும். சீரான இடைவெளியில் சிறிதளவாவது தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பசி உணர்வு எட்டிப்பார்க்கும். உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு நீர்ச்சத்தை தக்க வைப்பது அவசியம். இல்லாவிட்டால் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்கும் திறன் குறைந்து உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும்.

    குளிர் காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவது கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவும். நிறைய பேர் டீ, காபி பருகுவதற்கு விரும்புவார்கள். அது தண்ணீர் பருகும் அளவை குறைந்துவிடும். வெறுமனே தண்ணீர் பருக விருப்பம் இல்லாவிட்டால் மூலிகை டீ பருகலாம்.

    * டீ, காபிக்கு மாற்றாக சூப் வகைகளையும் தேர்ந்தெடுக்கலாம். அவற்றில் இருந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அத்தனையையும் பெறலாம். அவை உடலுக்கு உற்சாகத் தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.

    * குளிரை கட்டுப்படுத்துவதற்காக ஜன்னல், கதவுகளை மூடி வைப்பது தவறானது. ஏற்கனவே சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும் சமயத்தில் இருட்டான சூழலை வீட்டுக்குள் ஏற்படுத்தக்கூடாது. நல்ல காற்றோட்டமான சூழலில் இருக்க வேண்டும். அது மனநிலையை மேம்படுத்த உதவும். காலை வேளையில் குளிர்ச்சியான காலநிலையில் சிறிது நேரம் வெளியே நடமாடுவது உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்வை தரும்.
    பெண்கள் சுயதொழில் ரிஸ்க் என்கின்றனர். துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம். சுய தொழிலின் ஒரு சிறப்பம்சம் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே அதை அமைக்க சற்று வேலைகள் இருக்கும்.
    தொழில் வளர்ச்சிதான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. துரதிர்ஷ்டவசமாக நமது இளைஞர்கள் அரசு ஊழியராகவோ, தனியார் நிறுவனங்களில் சம்பளத்திலோ முடங்கி போய் குண்டு சட்டியில் குதிரை ஓட்டவே விழைகிறார்கள். உலகின் முதல் 1000 பணக்காரர்களும் சரி, அல்லது எந்த நாட்டின் முதல் 1000 பணக்காரர்களும் சரி, யாரும் சம்பளம் வாங்கி அந்நிலையை எட்டியவர்கள் இல்லை. சுயதொழில் செய்துதான் இந்த உச்சத்தை அடைந்துள்ளனர். சுயதொழில் ரிஸ்க் என்கின்றனர். நீங்கள் சாலையில் நடப்பது கூட ரிஸ்க்தான். துணிந்து இறங்கினால் வெற்றி பெறலாம். சுய தொழிலின் ஒரு சிறப்பம்சம் ஆரம்ப கட்டங்களில் மட்டுமே அதை அமைக்க சற்று வேலைகள் இருக்கும்.

    சரியாக அமைத்து விட்டால் அது தானாக வேலை செய்யும். உதாரணமாக ஒரு ஏஜென்சி ஆரம்பிக்க கடை, மூலப்பொருள், வாடிக்கையாளர், பணியாளர் என வேலைகள் இருக்கும். அமைத்து விட்டால் கம்பெனிகள் சப்ளை தரும். பணியாளர் வாடிக்கையாளருக்கு சப்ளை செய்து பணம் பெறுவார். இது ரொட்டீனாக நடக்கும். நீங்கள் மேற்பார்வை மட்டும் பார்த்தாலே நல்ல லாபம் பெற்றுக் கொண்டிருப்பீர்கள். சுய தொழிலில் 4 ஆண்டுகள் சிரமப்பட்டால் 40 வருடம் நன்றாக இருக்கலாம். வேலை செய்பவர்கள் 4 வருடத்தில் உள்ள நிலையே பெரும்பாலோருக்கு 40 வருடத்திலும் இருக்கிறது.

    இன்று பல இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ளனர். ஆனால் எந்த தொழில் செய்தால் சிறந்த லாபத்துடன் வெற்றி பெறலாம் என்ற சந்தேகத்துடன் உள்ளனர். இன்று பிளாஸ்டிக் சம்பந்தமான பொருட்களுக்கு தடை ஏற்பட்டுள்ள நிலையில் பேப்பர் கப், பேப்பர் பிளேட் போன்றவைகளுக்கு அதிகமான கிராக்கி ஏற்பட்டு உள்ளது. வருங்காலத்தில் அதிக தேவையுள்ள இந்த பொருட்களை தயார் செய்து கொடுத்து சிறந்த லாபம் பெறலாம்.

    இன்று அனைத்து டீக்கடைகள், திருமணம் உள்பட அனைத்து விசேஷங்களிலும் பேப்பர் கப்புகளையே பயன்படுத்துகின்றனர். இந்த பேப்பர் கப்களை மார்க்கெட்டிங் செய்வது எளிது. எங்கும் விற்கலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். பேப்பர் கப் மெஷினை இயக்குவதற்கு ஒரு ஆள் போதும். சிறிய அறை போதும். பேப்பர் கப் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களான பேப்பர் அனைத்து இடங்களிலும் எப்போதும் தடையில்லாமல் கிடைக்கும். பேப்பர் கப் மெசின் புதிதாக வாங்கும் போது அரசின் மானியம் கிடைக்கிறது. இதனை முறையாக தொழிலாக செய்யும் போது மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.
    கர்ப்பகாலத்தில் பிரச்சனைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.
    கர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குரிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத் திரும்ப முடியும்.

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் உற்பத்தி மற்றும் மாற்றம் காரணமாக பெரும்பாலான பெண்கள் முகப்பரு பிரச்னையை சந்திப்பார்கள். இதனால் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுகிறார்கள். உடலில் துத்தநாகத்தின் அளவு குறைவதும், முகப்பரு தோன்றுவதற்கான அடிப்படை காரணம். இதனால் முகப்பருக்கள் எளிதில் குணமாகாது. அந்த காலக்கட்டத்தில் வைட்டமின் சி, சத்துள்ள உணவினை சேர்த்துக் கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மேலும் முகப்பரு பரவுவதையும் தடுக்கும்.

    உடலில் உள்ள நச்சுத்தன்மை கூட முகப்பரு தோன்ற காரணமாகும். அதை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்.பொதுவாக முகப்பரு தோன்றும் போது, டாக்டர்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்வது வழக்கம். கர்ப்பகாலத்தில் நாம் வேறு எந்த மருந்துகளையும் உட்கொள்ள கூடாது என்பதால் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே மருந்துகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் சந்தனக் கட்டையை உரைத்து பரு உள்ள இடத்தில் அப்ளை செய்து வரலாம். மஞ்சளும் உரசி பூசலாம்.

    பிரசவமும், பால் சுரப்பும் சருமத்தில் நீரிழப்பை உண்டாக்கும். மேலும் சருமம் மந்தமான மற்றும் உயிரற்ற தோற்றத்தில் காட்சியளிக்கும். ஆரோக்கியமான ரத்த அணுக்கள் நல்ல முறையில் செயல்பட, தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் தாய்ப்பாலின் ஒரு முக்கிய அங்கமாகும். பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்ல பால் சுரப்புக்கு தண்ணீர் மிகவும் அவசியம். கர்ப்ப காலத்தின்போதும் அதற்கு பிறகும் நிறைய திரவங்கள் குடிப்பது, மலச்சிக்கலை எளிதாக்கும், தோலை மென்மையாக்கும், நச்சுத்தன்மையை வெளியேற்றும், நீர்க்கட்டை குறைக்கும், சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த் தொற்றுகள் போன்ற அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

    வெறும் தண்ணீர் மட்டுமே எப்படி குடிப்பதுன்னு பலருக்கு தோன்றலாம். தண்ணீர் மட்டும் இல்லாமல் மற்ற திரவ சார்ந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது, பால், பழச்சாறுகள், சூப் வகைகள், ஸ்பார்க்லிங் வாட்டர் (நுரைக்கும் தண்ணீர்), டீ, காபி (காபீன் நீக்கப்பட்டது), பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகளையும் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். இதை எல்லாம் மீறி, உங்கள் சருமம் வறண்டு இருப்பதை நீங்கள் உணர்ந்தால் சரும நிபுணரை அணுகி மெடிஃபேஷியல்ஸ் ஃபார் ஹைட்ரேஷன் (MediFacials for Hydration) சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். இது சருமத்தில் ஏற்பட்டுள்ள நீரிழப்பை கட்டுப்படுத்தும். கர்ப்ப காலத்தின் போதும் அதற்கு பிறகும் கூட இந்த சிகிச்சையை டாக்டரின் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளலாம்.

    கர்ப்பகாலத்தில் குழுந்தை கருவில் இருப்பதால், வயிறு பெரிசாகும். உடல் வேகமாக வளரும்போது வரித் தழும்புகள் தோன்றும். சரும அடிப்பகுதியில் உள்ள மீள்நார்கள் விரிவடைவதாலும் வரித் தழும்புகள் ஏற்பட ஒரு காரணமாகும். இவை பெரும்பாலும் அடிவயிறு, மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதி, கால்கள் போன்ற இடங்களில் ஏற்படும். ஒரு பெண்ணுக்கு கர்ப்ப காலத்தில் ஒன்பதாவது மாதத்தில், சராசரியாக 9 முதல் 12 கிலோ வரை எடைக் கூடும். இதற்கு மேல் எடை கூடினால் வரித் தழும்புகள் அதிகம் தோன்ற வாய்ப்புள்ளது. சில சமயம் வரித் தழும்பு காரணமாக அரிப்பு ஏற்படும். அந்த சமயத்தில் மாய்சரைசிங் கிரீம் பயன்படுத்துவது நல்லது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும். கர்ப்பத்திற்கு பிறகும் சிலருக்கு மறைந்துவிடும். ஒரு சிலருக்கு தங்கிவிடும். அவர்கள் லேசர் சிகிச்சை மூலம் சீர் செய்து கொள்ளலாம்.

    பிரசவத்திற்கு பிறகு முடி உதிர்தல் என்பது பொதுவானது. குழந்தைப் பிறப்புக்கு பிறகு 50% பெண்களுக்கு முடிஉதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. அதே சமயம் அந்தப் பிரச்னை அதிகமாக இருந்தால், உடனடியாக சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெறவும்.

    கர்ப்ப காலத்தின் போது உங்க எடை கூடுவதால், நீங்கள் முன்பு பயன்படுத்திய உடை உங்களுக்கு பொருந்தாது. பிரசவத்திற்கு பிறகு உணவு ஆலோசகர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை பெற்று கட்டக்கோப்பான உடலை நீங்கள் மீண்டும் பெறலாம். பிரசவ காலத்தில் சருமம் விரிவடைவதால் பல பெண்களுக்கு வயிற்று பகுதியில் சருமம் தளர்வடையும். அதனை தோல் இறுக்கம் சிகிச்சை மூலம் சீர் செய்யலாம். இடுப்பு அங்குலங்களையும் சிகிச்சை மூலம் குறைக்கலாம்.
    மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது எனலாம்.
    மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல.. நமது கைகளை.. கைவிரல்களை.. எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கும் கைகளுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பது எனலாம். புத்துணர்ச்சி கிடைப்பதன் மூலமாகவே கை மற்றும் விரல்கள் சுருக்கம் நீங்கிய நிலையில் பார்க்க மிகவும் அழகாக மினுமினுப்பாக வெளிப்படுகிறது.

    கைகளுக்கு மெனிக்யூர் செய்வதற்கு நாம் செலவழிக்கும் பணத்தைப் பொறுத்து நிறைய வகைகள் உள்ளது. சுருக்கமாக மெனிக்யூரில் நான்கு விதமான பிரிவுகளைச் சொல்லலாம்.

    * க்ளீன் அப்(clean up)
    * பேசிக் (basic)
    * டீலக்ஸ் (deluxe pack)
    * ஸ்பா(Spa)
    * ஸ்டார் (star pack)

    க்ளீன் அப்

    வெதுவெதுப்பான நீரில் நமது இரண்டு கைகளையும் நனைத்து, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி நகங்களை வடிவமைப்பது.

    பேசிக்

    வெதுவெதுப்பான நீரில் அழுக்கை நீக்குவதற்கென உள்ள உப்பை இட்டு, அவற்றில் கைகளை சற்றே ஊறவைத்து சுத்தம் செய்யப்படும். இதற்கென க்யூட்டிகல் க்ரீம் (cuticle cream) உள்ளது. அதை பயன்படுத்தும்போது அழுக்கு வெளியில் வரத் துவங்கும். நகங்களைச் சுற்றி வளர்ந்திருக்கும் தேவையற்ற இறந்த தோல்கள் நீக்கப்பட்டு, நகங்கள் புஷ் செய்யப்படும்போது விரல் நகங்கள் வெளியில் நீண்டு பெரிதாகத் தெரியும். பிறகு வேண்டிய வடிவில் சீர் செய்யலாம்.

    டீலக்ஸ் மற்றும் ஸ்டார்

    பெரும்பாலும் இரண்டும் ஒரே மாதிரிதான். இதில் ப்யூட்டி புராடக்ட்கள் மட்டுமே வேறுபடும். பேசிக் மெனிக்யூர் செய்த பிறகு கைகளை ஸ்க்ரப் செய்தபின் பேக்(pack) அப்ளை செய்து அதன் பிறகு மசாஜ் கொடுக்கப்படும்.

    ஸ்பா

    இதில் மசாஜ் கூடுதலாகக் கிடைப்பதுடன், நெயில் ஆர்ட் கூடுதலாக செய்யப்படும். நெயில் ஆர்ட்டுக்கென மெஷின்கள் வந்துள்ளன. ரெடிமேட் ஸ்டிக்கர்களும் கிடைக்கிறது.
    குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
    தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை உங்கள் குழந்தைக்கு எடுத்துக் கூறுவது கஷ்டமான ஒன்றாக இருந்தாலும், இன்றைய சூழலில் சேமிக்கும் பழக்கத்தை உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுப்பது அவசியமாகும். சேமிப்பது மிகுந்த நல்ல பழக்கமாகும். குழந்தையிடம் சேமிக்கும் பழக்கத்தை வளர்க்க எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. குழந்தைக்கு 5 வயது ஆனவுடனேயே இந்த பழக்கத்தை அவர்களுக்கு மெல்ல கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கலாம். அதற்கு காரணம் அந்த வயதில் தான் அவர்களுக்கு கருத்தமைவுத்திறன் வளரத் தொடங்கும்.

    சேமிப்பதைப் பற்றி குழந்தைகளுக்கு இப்படி கற்றுக் கொடுக்கலாம்…

    * இந்த டிஜிட்டல் காலத்தில் உண்டியல் வைத்திருப்பதெல்லாம் பழமையாகி இருக்கும். ஆனாலும் கூட சேமிப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அது இன்னமும் பயன்படுகிறது. பணத்தை சேமித்து வைத்தால், தங்களுக்கு தேவையானவற்றை வாங்குவதற்கான பணம் சேரும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். ஒவ்வொரு மாதமும் அவர்களின் சேமிப்பிற்காக நீங்கள் ஒரு தொகையை அவர்களிடம் வழங்கலாம். இதுவே அவர்களின் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும். கொஞ்சம் வளர்ந்த பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் பாக்கெட் மணியில் இருந்து சேமிக்க சொல்லுங்கள்.

    * சேமிக்கும் பழக்கத்தை குழந்தைகள் பின்பற்ற வேண்டுமானால், நீங்கள் சேமிப்பில் ஈடுபட்டு அவர்களுக்கு ஒரு உதாரணமாக விளங்க வேண்டும். உங்கள் செயல்களின் மூலமாக, சேமித்த பணத்தை எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் உதாரணமாக விளங்கிடுங்கள்.

    * உங்கள் குழந்தையின் டீனேஜ் பருவத்தில் அவர்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கை திறந்து கொடுப்பது சிறந்த வழியாகும். உங்கள் குழந்தையை அவர்களாகவே வங்கிக்கு போக சொல்லி அவர்களின் கணக்கில் பணத்தைக் கட்டச் சொல்லி ஊக்குவியுங்கள். அதனால் அவர்கள் உற்சாகம் அடைந்து இந்த பழக்கத்தை தொடர்வார்கள்.

    * சீரான சேமிப்பில் ஈடுபட்டால் உங்கள் குழந்தைக்கு வெகுமதி அளியுங்கள். எவ்வளவு சேமித்துள்ளார்கள் என்பது முக்கியமல்ல. மாறாக, சேமிக்கும் பழக்கம் தான் இங்கு முக்கியமான ஒன்றாகும். சீரான முறையில் சிறிய தொகையை சேமிக்க குழந்தைகளுக்கு உதவினால், அவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் உண்டாகும். இது அவர்களின் வாழ்க்கை முழுவதும் பயனை அளிக்கும்.
    பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பீர்க்கங்காய் கொண்டு சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பீர்க்கங்காய் - 1
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    புளி - 1 நெல்லிக்காய் அளவு
    வரமிளகாய் - 6
    உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    தாளிப்பதற்கு…

    கடுகு - 1/4 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை :

    பீர்க்கங்காயை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

    பின்பு நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய், புளியையும் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்க வேண்டும்.

    பிறகு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்ற வேண்டும்.

    இப்போது சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!!!

    பீர்க்கங்காய் சட்னியை தோசை, இட்லி, ஏன் சாதத்துடன் கூட சேர்த்து சாப்பிடலாம்.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    அதிகாலையில் துயில் எழும் போது நமக்கு, நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியோடு மனமகிழ்வோடு இருக்கும். மேலும் நமக்கு ஒவ்வொரு நாளும் அதிகப்படியான நேரங்கள் கிடைத்தது போல் இருக்கும்.
    அதிகாலைப் பொழுதில் துயில் எழுவது மிகப்பெரிய சாதனையாளர்களின் பழக்கமாக ஆக இருந்து வருவது.

    அதிகாலையில் துயில் எழும் போது நமக்கு, நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியோடு மனமகிழ்வோடு இருக்கும். மேலும் நமக்கு ஒவ்வொரு நாளும் அதிகப்படியான நேரங்கள் கிடைத்தது போல் இருக்கும். காரணம் காலை நேரத்தில் நம்மால் மிக விரைவாக வேலைகளை செய்து முடிக்க முடியும். நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் அதிக பரபரப்பு இல்லாமல் தட்பவெட்ப நிலையும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு நாம் காலையில் எழுந்து கொள்ளும் போது சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நலம். பின்னர் அமைதியாக சில நிமிடங்கள் அமர்ந்து அன்றைய தினம் நாம் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிடலாம்.

    காலை உணவை நன்கு ரசித்து ருசித்து உண்ண வேண்டும். அவசரஅவசரமாக உணவு உட்கொள்வது உணவு உண்ணும் போது இடையிடையே தண்ணீர் குடிப்பது போன்றவை இல்லாமல் நிதானமாக உண்ண வேண்டும்.

    நாம் அணியும் ஆடை மிக முக்கியமானது எனவே நாம் அன்றைய தினம் அணியப் போகும் ஆடையை நம் விருப்பப்படி தேர்வு செய்து அணிய வேண்டும்.

    நம் உடலில் இருக்கும் நேர்த்தியும் அழகும் தான் நம்மை புதிதாக பார்ப்பவர்களுக்கு நம்மேல் ஒரு மரியாதையை உண்டு செய்யும்.

    நாம் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் தயார் செய்தோம் அல்லவா அதில் மிக முக்கியமான வேலை எதுவோ அதை கூடியமாணவரை காலை பத்து பதினோரு மணிக்குள் முடித்துவிடவேண்டும். அப்போதுதான் மீதி உள்ள நேரம் நமக்கு எந்தவித அழுத்தமும் இல்லாமல் இயல்பாக நம்மால் பணியை செய்ய முடியும். மற்ற பணிகளில் எந்த வேலை அதிக பயன் தரக்கூடியது என்பதை கருத்தில் கொண்டு ஒவ்வொன்றாக செய்து கொண்டு வரவேண்டும். சில வேலைகளை மற்றவர்களை வைத்து செய்து கொள்ளலாம். எல்லா வேலையும் தானே செய்கிறேன் என அதிகப்படியான பணிச்சுமையை எடுத்துக் கொள்ளக்கூடாது.

    நாம் தினப்படி பணிகளை செய்து வரும்போது அவ்வப்போது சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வதன் மூலமே தொடர்ந்து நம்மால் சிறப்பாக செயல்களை செய்ய முடியும்.

    நான் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வேன் என்பது சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் பல ஆயிரம் மைல் கடந்தவன் ஒவ்வொரு மைலாக தான் கடந்தான். என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    எனவே ஒவ்வொரு வேலையாக கவனம் செலுத்தி ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் எல்லா வேலையும் கெட்டுப் போகலாம்.

    சரி இவ்வாறு பணி செய்யும் போது நமக்கு சில நேரங்களில் அதிகப்படியான சோம்பல் வரலாம். இதை அவரவர்கள் அவரவர்களின் சூழலுக்கு ஏற்ப தான் விரட்டி அடிக்க முடியும். உங்களின் சோர்வின் காரணத்தை கண்டறியுங்கள். உங்களுக்கு உற்சாகம் ஊட்டக்கூடிய செய்திகளை எண்ணங்களை மனதில் கொண்டு வாருங்கள். நீங்கள் கடந்து போக வேண்டிய தூரத்தை நினைவில் வையுங்கள். ஜெயித்தவர்கள் உருவத்தை உங்கள் மனதில் பதிய வையுங்கள். இவையெல்லாம் உங்களை சோர்ந்து கிடக்கும் போது தட்டி எழுப்பும்.

    உங்கள் மனதில் தோன்றுகின்ற அனைத்தையும் ஒரு தாளில் அவ்வப்போது எழுதுங்கள். இவ்வாறு எழுதுவது சிறந்த பயனளிக்கும். உதாரணமாக நீங்கள் மகிழ்வாக இருக்கும் தருணம், உங்களுக்கு உதவி செய்தவர்களை பற்றி, நீங்கள் வியக்கும் சம்பவங்களைப் பற்றி, நீங்கள் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றி, என உங்கள் எண்ணங்களை இவ்வாறு பதிவிடும் போது பிறகு அதை திரும்ப படிக்கும்போது உங்களுக்குள் ஒரு புதிய மாற்றம் நிகழ்வதை உணர முடியும்.

    நாள் முழுவதுமே போதுமான அளவு தண்ணீரை அவ்வப்போது உட்கொள்ள வேண்டும். சத்தற்ற உணவுகளை சுகாதாரம் இல்லாத சூழலில் விற்கும் உணவுகளை முழுவதுமாக தவிர்ப்பது நல்லது.

    நடைப்பயிற்சி சைக்கிள் ஓட்டுதல் யோகாசன பயிற்சி என உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடங்களாவது செய்வது நன்மை பயக்கும். உங்கள் குடும்பத்துடன் குழந்தைகளுடன் கலந்துரையாட கட்டாயம் குறிப்பிட்ட நேர அளவு ஒதுக்குங்கள். இரவு தூங்க செல்வதற்கு 2 மணி நேரம் முன்பே உணவு உட்கொள்வது சிறப்பு தூங்கச் செல்லும் பொழுது இன்றைய பொழுது சிறப்பாகக் அமைந்ததை பற்றியும் செய்ய முடியாத செயல்களை அடுத்த நாள் செய்து கொள்ளலாம் என்கின்ற மனநிறைவோடு தூங்கச் செல்லுங்கள்.

    இவ்வாறாக தினமும் இருந்துவிட்டால் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சிதானே!!
    நிறுவன அதிகாரிகள் கோபமாக பேசினாலும் இளம்வயதினர் பொறுத்துக்கொள்வார்கள். காரணம், நாம் நல்ல திறமை பெற வேண்டுமானால் இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும்.
    முதுமைக்கு என்று ஓர் அழகு உண்டு. ஆனால் இளமையின் அழகே தனிதான். இளமை என்றாலே ஓர் துடிப்புதான். பலவற்றை கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வம், வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு ஓர் பிளஸ்பாயிண்ட். ஆர்வத்துடன் செயல் புரிந்தால் வியாபார வாய்ப்பும் நிறைய கிட்டும். இது விற்பனையாளருக்கு மிகவும் தேவையான ஒன்று.

    நிறுவன அதிகாரிகள் கோபமாக பேசினாலும் இளம்வயதினர் பொறுத்துக்கொள்வார்கள். காரணம், நாம் நல்ல திறமை பெற வேண்டுமானால் இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும். சற்று வயதாகி விட்டால் இந்த சகிப்புத்தன்மை பெரும்பாலும் இருக்காது. 80 வயதில் கூட சுறுசுறுப்பாக இருப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையான சுறுசுறுப்பு இளமைக்குத்தான் சொந்தம்.

    இளமையின் சுறுசுறுப்பு ஆக்கப்பூர்வமாக பயன்படும். இளம்வயதினருக்கு உழைப்பில் சலிப்பு வராது. எனவே நீண்ட நேரம் வேலை செய்யலாம். புதிதாக கற்க வேண்டும் என்ற ஆதங்கம் இளம் வயதில் மேலோங்கி இருக்கும். எனவே அங்கு சலிப்புக்கு இடம் இல்லை. மேலும் விற்பனையாளர், விற்பனை பிரதிநிதிகள் வாகனங்களில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை வரும். வெயில், மழை என காலத்தின் அவதிகளும் உண்டு. இவைகளை இளம் வயதினர் பொருட்படுத்த மாட்டார்கள். அடாது மழை பெய்யினும் விடாது செயல்படுவார்கள்.

    விற்பனை பிரதிநிதிகளுக்கு மிகவும் தேவையான அம்சம் ஆரோக்கியம். இந்த ஆரோக்கியம் இளம்வயதினருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும் அவைகளை மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். பழுதற்ற ஓர் எந்திரம் எந்த அளவு துல்லியமாக, விரைவாக, நேர்த்தியாக செயல்படுமோ, அது போலதான் இளமையானவர்களை வேலைக்கு அமர்த்தினால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டுதான் இளமை துடிப்புள்ள விற்பனை பிரதிநிதி தேவை என அனைத்து நிறுவனங்களும் விரும்புகின்றன. நீங்கள் இளமையானவர்தானே, ஆர்வமும், துடிப்பும் உள்ளவர்தானே, புத்தம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களுக்கு வெற்றிதான்.
    திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.
    திருமண உறவில் தாம்பத்தியம் முக்கியமான ஒன்று. முதல் முறை தாம்பத்தியம் கொள்பவர்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கலாம். அதனால் பயம், பதட்டம் இருக்கலாம். எனவே முதல் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

    முதலில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன பார்க்கலாம்.

    உடலுறவு கொள்வதற்கு முன் அதில் இருவருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். மகிழ்ச்சி இருக்க வேண்டும். அது இருந்தால்தான் மற்ற விஷயங்களை சிறப்பாக செய்ய முடியும்.

    குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பம் இல்லை அதற்காக முன்பே திட்டமிட்டு கருத்தடை உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்துங்கள்.

    படுக்கையில் சௌகரியமாக இருங்கள். உங்கள் துணையையும் சௌகரியமாக வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லது. எடுத்ததும் சீறிப் பாயாமல் எனவே கொஞ்சம் விளையாட்டு, குறும்பு என துவங்கினால் அது ஆர்வத்தை தூண்டும். பதட்டம் விலகும்.

    இருவரும் பேசிக்கொள்ளுதல் நல்லது. உரையாடல் துணையின் எண்ணத்தை புரிந்துகொள்ள உதவலாம். வலி இல்லா மென்மையான உடலுறவுக்கும் இது வழிவகுக்கும்.

    செய்யக் கூடாத விஷயங்கள்

    உங்கள் துணைக்கும் விருப்பம் இருக்கும் என நீங்களாக நினைத்துக்கொண்டு திட்டம் போடாதீர்கள். அவரின் விருப்பதை கேட்டு தெரிந்துகொண்டு செயல்படுவது நல்லது.

    அதிகமாக கற்பனை செய்தல், இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஓவராக மனக்கணக்கு போட்டால் பதட்டத்தில் அனைத்தையும் விட்டுவிடுவீர்கள்.

    அதிக எதிர்பார்ப்பும் தவறு. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை எனில் மகிழ்ச்சி இருக்காது. எனவே முதல் முறை உடலுறவில் எதிர்பார்ப்புகள் முற்றிலும் தவறு.

    முதல் முறை உடலுறவு கொள்ளும்போது புதிய செக்ஸ் நிலைகளை முயற்சிப்பது தவறு. இது துணைக்கு அதிக அழுத்தம் தருவதாக இருக்கும். எனவே எளிமையான முறையே சிறந்தது.

    பெண்ணாக இருப்பின் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதை தவிருங்கள். கருத்தடை உபகரணங்களே போதுமானது.

    ×