
* குளிர்காலத்தில் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்வது கடினமானது என்றாலும் அந்த வழக்கத்தை மாற்றக்கூடாது. நடைப்பயிற்சி, ஜாக்கிங் போன்ற இலகுவான பயிற்சிகளையாவது செய்ய வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்தால் உடலில் இருந்து தினமும் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு குறைந்து போய்விடும். அதன் காரணமாக உடல் பருமன் பிரச்சினை எட்டிப்பார்க்க தொடங்கிவிடும். வீட்டில் உள்ளவர்களுடன் குழுவாக சேர்ந்து இசைக்கு நடனமாடி கூட பயிற்சி செய்யலாம். அது சோம்பலையும் விரட்டியடித்துவிடும்.
* குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதில்லை. தண்ணீர் தாகம் எடுக்காவிட்டாலும் உதட்டில் ஏற்படும் வறட்சி தண்ணீர் அருந்துவதற்கான அறிகுறியை வெளிப்படுத்தும். சீரான இடைவெளியில் சிறிதளவாவது தண்ணீர் பருகிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பசி உணர்வு எட்டிப்பார்க்கும். உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு நீர்ச்சத்தை தக்க வைப்பது அவசியம். இல்லாவிட்டால் உடலில் உள்ள கொழுப்புகளை எரிக்கும் திறன் குறைந்து உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும்.
குளிர் காலத்தில் போதுமான அளவு தண்ணீர் பருகுவது கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவும். நிறைய பேர் டீ, காபி பருகுவதற்கு விரும்புவார்கள். அது தண்ணீர் பருகும் அளவை குறைந்துவிடும். வெறுமனே தண்ணீர் பருக விருப்பம் இல்லாவிட்டால் மூலிகை டீ பருகலாம்.
* டீ, காபிக்கு மாற்றாக சூப் வகைகளையும் தேர்ந்தெடுக்கலாம். அவற்றில் இருந்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அத்தனையையும் பெறலாம். அவை உடலுக்கு உற்சாகத் தையும் ஏற்படுத்தி கொடுக்கும்.
* குளிரை கட்டுப்படுத்துவதற்காக ஜன்னல், கதவுகளை மூடி வைப்பது தவறானது. ஏற்கனவே சூரிய வெளிச்சம் குறைவாக இருக்கும் சமயத்தில் இருட்டான சூழலை வீட்டுக்குள் ஏற்படுத்தக்கூடாது. நல்ல காற்றோட்டமான சூழலில் இருக்க வேண்டும். அது மனநிலையை மேம்படுத்த உதவும். காலை வேளையில் குளிர்ச்சியான காலநிலையில் சிறிது நேரம் வெளியே நடமாடுவது உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்வை தரும்.