
நிறுவன அதிகாரிகள் கோபமாக பேசினாலும் இளம்வயதினர் பொறுத்துக்கொள்வார்கள். காரணம், நாம் நல்ல திறமை பெற வேண்டுமானால் இவற்றை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கும். சற்று வயதாகி விட்டால் இந்த சகிப்புத்தன்மை பெரும்பாலும் இருக்காது. 80 வயதில் கூட சுறுசுறுப்பாக இருப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையான சுறுசுறுப்பு இளமைக்குத்தான் சொந்தம்.
இளமையின் சுறுசுறுப்பு ஆக்கப்பூர்வமாக பயன்படும். இளம்வயதினருக்கு உழைப்பில் சலிப்பு வராது. எனவே நீண்ட நேரம் வேலை செய்யலாம். புதிதாக கற்க வேண்டும் என்ற ஆதங்கம் இளம் வயதில் மேலோங்கி இருக்கும். எனவே அங்கு சலிப்புக்கு இடம் இல்லை. மேலும் விற்பனையாளர், விற்பனை பிரதிநிதிகள் வாகனங்களில் நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை வரும். வெயில், மழை என காலத்தின் அவதிகளும் உண்டு. இவைகளை இளம் வயதினர் பொருட்படுத்த மாட்டார்கள். அடாது மழை பெய்யினும் விடாது செயல்படுவார்கள்.
விற்பனை பிரதிநிதிகளுக்கு மிகவும் தேவையான அம்சம் ஆரோக்கியம். இந்த ஆரோக்கியம் இளம்வயதினருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும் அவைகளை மருத்துவ சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். பழுதற்ற ஓர் எந்திரம் எந்த அளவு துல்லியமாக, விரைவாக, நேர்த்தியாக செயல்படுமோ, அது போலதான் இளமையானவர்களை வேலைக்கு அமர்த்தினால் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இதை கருத்தில் கொண்டுதான் இளமை துடிப்புள்ள விற்பனை பிரதிநிதி தேவை என அனைத்து நிறுவனங்களும் விரும்புகின்றன. நீங்கள் இளமையானவர்தானே, ஆர்வமும், துடிப்பும் உள்ளவர்தானே, புத்தம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயன்படுத்திக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களுக்கு வெற்றிதான்.