என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது.
    சுதர்சனச் சக்கரம் என்பதே சக்கரத்தாழ்வார். மகாவிஷ்ணுவின் திருப்பாதத்தை தரிசிப்பதும் பிரார்த்திப்பதும் எத்தனை விசேஷமோ அதேபோல், சக்கரத்தாழ்வாரை பூஜித்து வருவதும் விசேஷமானது. நம் வாழ்வில் நமக்கு வருகிற எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்த்தருள்கிறார் சக்கரத்தாழ்வார்.

    ஓம் சுதர்ஸனாய வித்மஹே.
    மஹா ஜ்வாலாய தீமஹி
    தந்நோ சக்ர ப்ரஸோதயாத்:

    என்று முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 அல்லது 108 முறை என முடிந்த அளவுக்கு சொல்லி சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள். எதிர்ப்புகளையும் தடைகளையும் தகர்த்து அருளுவார்.
    திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலின் மாசித்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மாசித்திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி பூத்தமலர் பூ அலங்கார மண்டகப்படி சார்பில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இதற்கு மண்டகப்படி விழாக்குழு தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

    இதையொட்டி காலை 10.30 மணியளவில் அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்பட 11 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் கோவில் முன் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசி திருவிழாவில், இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடக்கிறது.
    திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 11 மாதத்திற்கு பிறகு தங்கத் தேர் வலம் வந்தது. கோவில் அதிகாரிகள் வடம்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர் தங்களது தலைவர்கள் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி தங்கத் தேர் இழுத்து வழிப்பட்டு வந்தனர். இதே பக்தர்கள் தங்களது பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களை கொண்டாடும் விதமாகவும், திருமணம் மற்றும் குழந்தை வரம் கேட்டும் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி தங்கத் தேர் இழுத்து வழிப்பட்டு வந்தனர்.

    கோவிலுக்குள் தங்கத்தேர் வலம் வருவதால் கோவிலுக்கு கணிசமான வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டில் மார்ச் மாதம் 17-ந்தேதி பக்தர்கள் தங்கத்தேர் இழுத்தனர். இந்த நிலையில் உலகத்தையே உலுக்கிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் மாதம் 20-ந்தேதி கோவில் மூடப்பட்டது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திறகு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதற்கிடையில் கடந்த 3-ந்தேதி முதல் அர்ச்சனைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தை அமாவாசையையொட்டி கடந்த 11 மாதத்திற்கு பிறகு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் தங்கத்தேர் வலம் வந்தது. கோவில் உள்துறை சூப்பிரண்டு அங்கயற்கன்னி, உதவி கோட்டப் பொறியாளர் சிவமுருகானந்தம், பேஸ்கார்கள் தேவகி, புகழேந்தி மற்றும் கோவில் ஊழியர்கள் தங்கத்தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

    இதனையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பக்தர்கள் தங்கத் தேர் இழுக்க பதிவு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகவே பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தங்கத் தேர் இழுத்து வழிபடுவதற்காக ஆர்வத்துடன் முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

    தங்கத்தேரின் மேல்புறத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக உருண்டைவடிவில் ரசக் குண்டுகள் உள்ளன. அதில் சில குண்டுகள் சேதமாகி விழுந்துவிட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் ரசக்குண்டுகள் இல்லாத நிலை உள்ளது.. இந்த நிலையை தவிர்க்க வேண்டும். அதற்காக தங்கத்தேரில் இடைவெளியாக உள்ள மேல்புறத்தில் ரசக்குண்டுவை பொருத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தை அமாவாசை திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சிகர நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா, 10-ம் திருநாளான நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் சுவாமி உருகுபலகை தரிசனம் நடந்தது. தொடர்ந்து மஞ்சள், பால், பன்னீர், இளநீர், தயிர், சந்தனம், சிகைக்காய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மாலையில் இலாமிச்சைவேர் சப்பரத்தில் சுவாமி சேர்மத் திருக்கோலத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தை அமாவாசை விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள், தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    விழாவையொட்டி ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி, நெல்லை, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏரலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்துள்ளார்.
    காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீங்க நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
    காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கவல்லது நாகராஜ விரத வழிபாடு. நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். நாகராஜ காயத்ரி சொல்லுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

    நவக்கிரகங்களில், ராகுவும் கேதுவும் சர்ப்ப கிரகங்கள். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலானவை இருந்தால், திருமணம் முதலான சந்ததி தடைகள் வரும். காரியத்தில் தடைகள் இருந்துகொண்டே இருக்கும்.

    எதைத் தொட்டாலும் நஷ்டம், தோல்வி, அவமானம் என சந்திக்கும்படியான சூழல்கள் இருக்கும். திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் நீடிக்காமல், வேலை விட்டு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும்.

    கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள், குடும்பத்தில் குழப்பங்கள் என நிம்மதியக் குலைக்கவல்லது சர்ப்ப தோஷம்.

    சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து ராகுகால வேளையில் நாகராஜ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். குறிப்பாக, எல்லா நாட்களிலும் உள்ள ராகுகாலவேளையில், விரதம் இருந்து நாகராஜரை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிபட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, தமிழ் புத்தாண்டு, தீபாவளி ஆகிய 3 நாட்கள் மட்டும் மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். அதன்படி இந்தாண்டு தை அமாவாசை தினமான நேற்று மூலவர் மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம், வைர கிரீடமும், சுந்தரேசுவரர் சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையும் அணிவிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று காலை 7 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் மூலவர் அம்மனுக்கு வைரகிரீடம், தங்ககவசம், சாமிக்கு வைர நெற்றிபட்டை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இது தவிர அமாவாசை என்பதால் அம்மனுக்கும், சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. அதனை காண மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    மேலும் தை அமாவாசையொட்டி இறந்தவர்களுக்கு கோவில்களிலும், நதிக்கரைகளிலும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். தற்போது கொரோனா தடை உத்தரவு காரணமாக முக்கியமான பெரிய கோவில்களில் தர்ப்பணம் கொடுக்க விதிக்கப்பட்டது. மதுரை வைகை ஆற்றிலும், எஸ்.எஸ்.காலனி, மேலமடை, கோமதிபுரம் பகுதியில் உள்ள சிறிய கோவில்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
    அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி திருப்பாடல்களை பாட பாட ஒவ்வொரு பாட்டிற்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அபிராமி அம்மன் தனது பக்தர் அபிராமி பட்டரின் பக்திக்கு இணங்க தை அமாவாசை நாளில் அமாவாசையை பவுர்ணமியாக மாற்றிய அதிசய நிகழ்வின் காரணமாக ஆண்டுதோறும் அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்று வருவது வழக்கம்.

    நேற்று ஓதுவார் மூர்த்திகள் அபிராமி அந்தாதி திருப்பாடல்களை பாட பாட ஒவ்வொரு பாட்டிற்கும் தீப நைவேத்தியம் செய்தும் வழிபட்டனர். மேலும் 26-வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் கொடுத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின்னர் அபிராமி அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி மற்றும் வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைப்பெற்றது. முன்னதாக ஆணைக்குளத்தரையில் அமைந்துள்ள எதிர்காளிஸ்வரர் கோவிலில் இருந்து 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிராமி அம்மனுக்கு பால்குடம் சுமந்து வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மார்த்தாண்டம் குறும்பேற்றிநகர் பகவதியம்மன் கோவில் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது.
    மார்த்தாண்டம் குறும்பேற்றிநகர் பகவதியம்மன் கோவில் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை நடக்கிறது. இன்று பகல் 11 மணிக்கு கணபதிக்கு அபிஷேகம், மாலை 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை போன்றவை நடக்கிறது.

    நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு சிவபெருமானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், 14-ந் தேதி காலையில் பண்பாட்டு போட்டிகள், இரவு 8 மணிக்கு மகளிர் மாநாடு, 15-ந் தேதி காலையில் கலச பூஜை, கலசாபிஷேகம், இரவு 8 மணிக்கு இந்து சமய ஆன்மிக மாநாடு போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 16-ந் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் வழிபாடு, மாலை 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு முன்னாள் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொள்ளும் ஆன்மிக சிறப்பு மாநாடு ஆகியவை நடைபெறும்.

    திருவிழா ஏற்பாடுகளை குறும்பேற்றி பகவதியம்மன் அறக்கட்டளை செய்து வருகிறது.
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையையொட்டி நடைபெறும் குண்டம் திருவிழா புகழ் பெற்றதாகும். இந்த விழா 18 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா தை அமாவாசையான நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்று விழாவையொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு முதற்கால அபிஷேக பூஜை நடைபெற்றது. இதையடுத்து தலைமை முறைதாரர் மனோகரன் தலைமையில் விரதம் இருந்த பக்தர்கள் குழுவினர் சர்க்கார்பதி மலையில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட மூங்கில் கொடிமரத்துடன் உப்பாற்றங்கரைக்கு சென்றனர். அங்கு கொடிகம்பத்தை சுத்தம் செய்து, அதற்கு மாவிலை, மலர் மாலை, பூக்கள் தூவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க 80 அடி நீள மூங்கில் கொடிமரத்தில் சிம்ம வாகனம் பொறித்த மஞ்சள் நிறகொடி கட்டப்பட்டது. இதை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக கொடி மரத்தை தோளில் சுமந்து கோவிலுக்கு வந்தனர். காலை 10.30 மணிக்கு மாசாணியம்மன் கோவிலுக்கு கொடி மரம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து 10.40 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.

    அப்போது வானில் கருடன்கள் வட்டமிட்டன. இதை பார்த்த அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘மாசாணி தாயே, மாசாணி தாயே’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் மாசாணியம்மன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி கம்பத்திற்கு பால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது. குண்டம் திருவிழாவையொட்டி வருகிற 1-ந்தேதி வரை அம்மனுக்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற உள்ளது.

    ஆனைமலை ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்தில் வருகிற 24-ந்தேதி நள்ளிரவு 1 மணிக்கு மயான பூஜை நடக்கிறது. 25-ந்தேதி காலை 7.30 மணிக்கு சக்தி கும்பஸ்தாபனம், மாலை 6.30 மணிக்கு மகாபூஜை, 26-ந் தேதி காலை 10 மணிக்கு ஆனைமலை குண்டம் மைதானத்தில் குண்டம் கட்டுதல் நடைபெறுகிறது.

    அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு சித்திரத்தேர் வடம்பிடித்தல், அம்மன் திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு குண்டம் பூ வளர்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. மறுநாள் 27-ந்தேதி காலை 7.30 மணிக்கு விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குகின்றனர். 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு மகாமுனி பூஜையையும் நடக்கிறது. 1-ந்தேதி பகல் 11.30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜையுடன் விழா நிறைவடைகிறது.
    புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து நாகராஜ காயத்ரியைச் சொல்லி வழிபடுங்கள்.
    ஸ்ரீநாகராஜ காயத்ரி

    ஓம் ஸர்ப்ப ராஜாய வித்மஹே
    நாகமணி சேகராய தீமஹி
    தந்நோ நாகேந்த்ர ப்ரசோதயாத்

    அதாவது, சர்ப்பங்களின் மன்னனே. பேரொளியைக் கொண்ட நாகமணியை வைத்திருப்பவனே. நாகதேவனே. எங்களையும் எங்கள் குலத்தையும் காத்தருள்வாய் என்று அர்த்தம்.

    இந்த நாகராஜ காயத்ரியைச்சொல்லுங்கள். வழிபடுங்கள். அருகில் உள்ள புற்றுக் கோயிலுக்குச் சென்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமை ராகுகால வேளையிலும் புற்றுக்கு பால் வார்த்து வழிபட்டு வாருங்கள். கால சர்ப்ப தோஷம் நீங்கும். திருமண வரம் கைகூடும். உத்தியோகம் நிலைக்கும். தம்பதி இடையே ஒற்றுமை நீடிக்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.
    அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமனை வழிபட்டனர்.
    தமிழகத்தில் மிகப் பிரசித்தி பெற்றதும், பக்தி காவியமான ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டதுமான அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவிலில் தை மாத அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் வழிபட்டனர்.

    மூன்று கண்களும் பத்து கைகளும் உள்ள ஆஞ்சநேயர் அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.

    ராமபிரான் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து அனுமன், ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருக்கும்போது, அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். அப்போது இயற்கை அழகுடன் இருந்த இப்பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள அனுமனை வழிபட்டால் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மூன்று கடவுள்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைப்பதுடன், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை. தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில் முனைவோர், திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர் என ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அனுமனை வழிபடுகின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால், ஆண்டுதோறும் இந்த அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் அனுமனை தரிசிக்க இங்கு வருவர். அதை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.

    தை அமாவாசையை முன்னிட்டு, மூலவருக்கு நேற்று அதிகாலை திரு மஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தமிழகத்தின் பல இடங்களில் இருந்து விடியற்காலை முதலே இங்கு வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமனை வழிபட்டனர்.

    அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை மற்றும் வெற்றிலை மாலைகள் சாற்றி, குங்கும அர்ச்சனையும் செய்து வழிபட்டனர். மகா தீபாராதனையும் நடந்தது. இதில் பொறையாறு, காரைக்கால், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நெல்லையப்பர் கோவிலில் சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பத்ர தீப திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தலும், 11 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு மகேசுவர பூஜையும் நடந்தது. மாலை 6.30 தங்க விளக்கில் இருந்து தீபம் ஏற்றி சுவாமி சன்னதிக்கு சென்று விட்டு நந்தி முன்பு உள்ள நந்தி தீபம் மேளதாளம் முழங்க ஏற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வந்தனர். அதை தொடர்ந்து இரவு 9 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்களுடன் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அம்பாசமுத்திரம் அகத்தீஸ்வரர் கோவில் செங்குந்தர் இளைஞர் அணி சார்பில் பத்ர தீப விழா நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் கோவில் முழுவதும் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சங்கு சபாபதி, சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருக சுவாமிநாதன், செங்குந்தர் சமுதாய தலைவர் சண்முகசுந்தரம், இளைஞரணி தலைவர் ஞான சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதபோல் அம்பை காசிநாதசுவாமி கோவிலிலும் பத்ரதீப விழா நடந்தது. விழாவில் கட்டளை தாரர் சேது முத்தையா குடும்பத்தினர் மற்றும் கோவில் ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவ ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    ×