என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இயேசு பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரலோகத் தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே, கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை ‘அத்தி மரங்களுள்ள தேசம்’ என வருணித்தார் (உபாகமம் 8:8).
    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பூர்வ இஸ்ரவேலில், திராட்சைக் கொடிகளைப் போலவே நிலப்பரப்பின் கலாசாரக் கருப்பொருட்களில் ஒன்றாக இருந்தது அத்தி மரம். அது சுட்டெரிக்கும் கோடையில் நிழல் தரும் மரமாகவும் இருந்ததால் அத்தி மரங்களைச் சாலைநெடுகிலும் நிழலுக்காக நட்டு வளர்க்கும் வழக்கமும் இருந்தது. அதேபோல் திராட்சைத் தோட்டங்களின் வரப்புகளில் அத்தி மரங்கள் நடப்பட்டன. வயலில் வேலை செய்பவர்கள் இளைப்பாறுவதற்கு ஏற்ற தருவாக அத்தி மரம் இருந்தது. விவிலியத்தில் அத்தி மரம் பற்றி குறிப்பிட்டுள்ளதையும், அத்திமரம் புத்திபுகட்டும் தகவல்களையும் காணலாம்.

    இயேசு பிறக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பரலோகத் தந்தையால் தேர்ந்துகொள்ளப்பட்ட தீர்க்கதரிசியாகிய மோசே, கடவுளால் வாக்களிக்கப்பட்ட தேசத்தை ‘அத்தி மரங்களுள்ள தேசம்’ என வருணித்தார் (உபாகமம் 8:8).

    அதேபோல “அத்தி மரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவ மரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவி யாமற்போனாலும்; நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” (ஆபகூக் 3:17) என ஆபகூக் தீர்க்கதரிசி பரலோகத் தந்தை மீதான தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

    அதேபோல ஆட்சியாளர்களுக்கும், பழைமைவாதிகளுக்கும் பயப்படாத கடவுளுக்கு உண்மையாயிருந்த யூதர்களை நல்ல அத்திப் பழங்களுள்ள ஒரு கூடை என்றார் எரேமியா. ஆனால், சிறைபிடிக்கப்பட்டவர்களில் சுயநலத்தை எண்ணி நாப்பிறழ்ந்தவர்களை சாப்பிட முடியாத கெட்ட அத்திப் பழங்கள் என்றார். “அவற்றை தூக்கியெறியத்தான் வேண்டியிருந்தது”(எரேமியா 24:2) என்றார்.

    விவிலியம் முழுவதும் காணப்படும் அத்திமரமும் அதன் பழங்களும் இயேசுவின் பார்வையில் இன்னும் ஒருபடி மேலாகப் பளிச்சிட்டன.

    யூதேயா தேசத்திடம் கடவுள் பொறுமையாக இருந்ததை இயேசு அத்திமர உவமையின் வழியாகச் சுட்டிக் காட்டினார். திராட்சைத் தோட்டத்தில் விளைச்சல் அற்ற அத்தி மரத்தை வெட்டி எறியச் சொன்ன உவமையை இயேசு சொன்னார்.

    அத்தி மரம் பற்றிய ஒரு விவிலிய எடுத்துக்காட்டில் திராட்சை தோட்டத்தின் உரிமையாளர் ஒருவர் தன் தோட்டத் தொழிலாளியிடம் “இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிக் களைத்தேன்; ஒரு கனியைக்கூட அது என் கண்களுக்குக் காட்டவில்லை, இதை வெட்டிப்போடு, இது வளமான நிலத்தைக் கெடுக்கும் களைபோல் உள்ளது”(லூக்கா 13:6) என்று கூறியிருக்கிறார்.

    ஆனால், அந்தத் தோட்டக்காரனோ, “எஜமானே இந்த வருடம் மரத்தைச் சுற்றிலும் கொத்தி, எருப் போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப் போடலாம்” (லூக்கா 13:8) என்று சொன்னான்.

    இயேசு அத்திமர உவமையைச் சொன்ன காலத்தில் அவர் ஏற்கனவே மூன்று ஆண்டுகளாக யூதேயா தேசத்தாருக்கு பிரசங்கித்து, பரலோகத் தந்தை மீதான அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்த பாடுபட்டுவந்தார். ஆனால் யூதேயா மேசியாவைப் புறக்கணித்தும் தனது சொந்த மக்களாலேயே இயேசு கைவிடப்பட்டதும் வரலாறாகிவிட்டது. ஆன்மிக ரீதியாக யூதேயா தேசம் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதை விளக்கவே இயேசு அத்தி மரத்தை பயன்படுத்தினார்.

    அவர் வாதைமிகுந்த தனது மரணத்தை எதிர்கொள்வதற்கு நான்கு தினங்களுக்கு முன், பெத்தானியாவிலிருந்து எருசலேமுக்கு வரும் வழியில் இலைகள் நிறைந்திருந்த ஒர் அத்தி மரத்தைக் கண்டார்; ஆனால் அதில் பழங்களே இல்லை. அது பயனற்ற மரம் என்பதைக் காட்டியது (மாற்கு 11:13). என்றாலும் கனிகளற்ற அந்தமரம் செழிப்பாக காட்சியளித்தது. அதைப்போலவே யூதேயா தேசமும் ஆன்மிகத்தில் செழித்திருப்பதுபோல ஒரு மாயத் தோற்றத்தைத் தந்தது. ஆனால் அது கடவுளுக்கேற்ற கனியைக் கொடுக்கவில்லை.

    பரலோகத் தந்தையின் சொந்த குமாரனையே புறக்கணித்துவிட்டது. கனியற்ற அத்தி மரத்தை இயேசு சபித்தார், அடுத்த நாள் அந்த மரம் பட்டுப்போய் இருப்பதை அவரது சீடர்கள் கண்டு அதிர்ந்தார்கள். ‘‘இறைமக்களாக தேர்ந்தெடுத்த யூதர்களைக் கடவுள் நிராகரித்து விடுவார் என்பதற்குப் பட்டுப்போன அந்த மரம் பொருத்தமான அடையாளமாக இருந்தது’’ (மாற்கு 11:20) என்கிறார் மாற்கு.

    இத்தகைய அத்தி மரங்கள் தற்காலத்திற்கும் புத்தி புகட்டும் ஒன்றாகவே காற்றில் அசைந்தாடுகிறது.

    அழகன்குளத்தில் நீலப்பட்டு உடுத்தி செயற்கை வைகையில் சந்தானகோபால கிருஷ்ண சாமி கள்ளழகர் வேடத்தில் எழுந்தருளினார். மிகவும் எளிமையாக கோவில் நிர்வாகத்தினர் இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் இன்றி நடத்தினர்.
    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அழகன்குளம் கிராமத்தில் மிகவும் பழமையான கோவிலான சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவிலில் ஆண்டுதோறும் மிக விமர்சையாக சித்திரை திருவிழா நடைபெறும். அப்போது கள்ளழகர் வேடம் அணிந்து சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருவது வழக்கம்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். தற்போது கொரோனா 2-வது அலையால் அதிகமான மக்கள் பாதிக்கப் பட்டு வருவதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதால் இந்த ஆண்டு கடந்த ஆண்டைபோல் சித்திரை திருவிழா மிக எளிமையாக நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் செயற்கையாக உருவாக்கிய வைகையில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    இதற்காக வைகையாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று காலை 6.45 மணி அளவில் அழகன்குளம் மெயின் சாலையில் உள்ள சந்தான கோபால கிருஷ்ணன் கோவிலில் குதிரை வாகனத்தில் நீலப்பட்டு உடுத்தி கள்ளழகர் செயற்கை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. மிகவும் எளிமையாக கோவில் நிர்வாகத்தினர் இந்த நிகழ்ச்சியை பக்தர்கள் இன்றி நடத்தினர்.

    மேலும் கோவிலில் அறங்காவலர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு விழா இனிதே முடிவுற்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வாசுகி ஸ்ரீதரன், கிருஷ்ண தெய்வபிரகாசம், அசோகன் அமுதா, சுமுகி பிரகலாதன் ஆகியோர்கள் செய்திருந்தனர்.
    குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும் செவ்வாய் தோஷத்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும்.
    எப்போதும் இளமையானவனான அழகன் முருகன், பக்தர்களுக்கு அருள்வதில் மிகப் பெரியவன். அந்த ஏரகச் செல்வன் நம்மை ஏறெடுத்துப் பார்த்தால், காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெண்களுக்கு உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும். கந்தவேளை விரதம் இருந்து வழிபட, அவனைப் போலவே அழகான ஆண் மகவு, பொற்சிலையாய்ப் பிறக்கும்.

    ஒரு வளர்பிறைச் செவ்வாய்க்கிழமை அன்று விரதத்தை தொடங்கி தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த பூஜையைச் செய்தல் வேண்டும். அதிகாலையில் குளித்து மடியுடுத்திக்கொண்டு, வீட்டு பூஜை அறையில் சுத்தமான மணைப் பலகையில் பச்சரிசி மாவினால் சடாட்சர கோலம் போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வைக்கவேண்டும். கோலத்தில் எழுதப்பட்டுள்ள, ‘ஓம் சரவணபவ’ என்ற எழுத்துக்கள் மேல் செவ்வரளி மலர்களை வைக்க வேண்டும். அந்த மணைப் பலகைக்கு இருபுறமும் குத்து விளக்குகளும், முன்பக்கத்தில் கல்யாண கோல முருகன் படமும் வைக்கவேண்டும்.

    அன்றைய திதி- வாரம், நட்சத்திரம், யோகம் உள்ளடக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டு ‘மம, அங்காரக தோஷ நிவர்த்தியர்த்தம் சடாட்சர பூஜாம் கிருத்வா’ என்று சொல்லவேண்டும். அடுத்து,

    ‘ஓம் கார்த்திகேயாய வித்மஹே குக்குட த்வஜாய தீமஹி
    தந்தோ சண்முக பிரசோதயாத்’
    என்ற சண்முக காயத்ரியை இரண்டு முறையும்,
    ‘ஓம் சக்தி அஸ்தம் விரூபாட்சம் சிகி வாகம் ஷடானனம்
    தாருணம் ரிபுரோகக்னம் பாவயே குக்குடத்வஜம்’

    என்ற முருகனின் தியானச் சுலோகத்தை மூன்று முறையும் சொல்ல வேண்டும். தொடர்ந்து செவ்வரளி, முல்லை மலர்களைக் கலந்து வைத்துக் கொண்டு, கீழ்க்காணும் போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.

    ஓம் வேலனே போற்றி
    ஓம் வரமருள் தேவா போற்றி
    ஓம் சக்தி மைந்தனே போற்றி
    ஓம் சரவணனே போற்றி
    ஓம் தோஷம் அகற்றுவாய் போற்றி
    ஓம் மங்களனே போற்றி
    ஓம் சிவனார் மகவே போற்றி
    ஓம் வள்ளி மனதோய் போற்றி
    ஓம் அங்காரக் கடிவே போற்றி
    ஓம் குரு குணனே போற்றி
    ஓம் மயில்வாகனா போற்றி
    ஓம் சேவற்கொடி செவ்வேளே போற்றி, போற்றி!

    இப்படி மும்முறை கூறி, ‘சரவணபவ’ எனும் அட்சரங்களில் ஒவ்வொரு மலராகப் போட வேண்டும். பிறகு, வெல்லம் கலந்த தினைமாவு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை வைத்துப் படைத்து, முல்லைமலர், செவ்வரளி (அரளி கிடைக்காவிடில் செம்பருத்தி) மலர் கலந்து கைகளில் வைத்துக் கூப்பியபடி…

    நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த
    கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
    தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

    என்று முருகனின் துதி கூறி, சடாட்சர கோலத்தில் மலரிட்டுக் கற்பூர ஆரத்தி செய்து, விபூதி குங்குமம் எடுத்துக்கொண்டு ஆறு முறை திருச்சுற்றுதலும் மூன்று முறை ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றிவரல்) செய்ய வேண்டும். முல்லை மலர் குருபகவானுக்கு உரிய மலர். குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும் செவ்வாய் தோஷத்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும். வீட்டில் விரைவில் கெட்டிமேளம் கொட்டும்.
    கொரோனா பரவல் எதிரொலியாக கோவில்களுக்கு உள்ளே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடையை தொடர்ந்து கோவில்களில் வெளியில் நின்று பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர்.
    கொரோனா 2-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் கோவில் களுக்கு வரும் பக்தர்கள் வெளியில் நின்று மன வேதனை யுடன் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளிட்ட ஏராளமான கோவில்கள் உள்ளன.

    இதில் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    தற்போது மீண்டும் கொரோனா தொற்று காரணமாக கோவில்களில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்றும், கோவில் கோபுரத்தை தரிசனம் செய்தும் சாமியை வழிபட்டு செல்கின்றனர்.
    மானாமதுரையில் வீர அழகர் பச்சைப்பட்டு உடுத்தி கோவிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    மானாமதுரை வீர அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சித்திரை திருவிழா நடைபெறவில்லை.

    இதே போல் இந்த ஆண்டும் தமிழக அரசு விதித்துள்ள தடையால் தினந்தோறும் கோவில் உள்பகுதியில் சாமி வலம் வந்தார்.இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான எதிர்சேவை நிகழ்ச்சிக்காக வீர அழகர் கள்ளழகர் வேடம் அணிந்து கோவிலுக்கு உள்ளேயே வலம் வந்தார்.

    வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு தடையால் கள்ளழகர் வேடம் பூண்ட வீர அழகர் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கோவிலில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகளும் தீபாராதனை நடைபெற்றது.

    சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் கோவில் வெளியே கிடா வெட்டியும், வைகை ஆற்றில் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். பிறகு அரிசி காய்கறிகள் தானமாக வழங்கினர்.
    மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார்.
    தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று சவுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இதற்கிடையே இந்த ஆண்டு கொரோனா வைரசின் 2-ம் அலை காரணமாக வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூடப்பட்டது. இருப்பினும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து சித்ரா பவுர்ணமியையொட்டி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழாவை பக்தர்கள் அனுமதியின்றி நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி, நேற்று மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக பெருமாள் குடகனாற்றில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, குடகனாற்றுக்கு பெருமாள் அழைத்து செல்லப்படவில்லை. மாறாக கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார்.

    இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் சித்திரை திருவிழாவில் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் வரதராஜபெருமாள் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டும், கொரோனா 2-வது அலை காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று வரதராஜ பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவில் முன்புற கதவுகள் மூடப்பட்டு, பக்தர்கள் இன்றி கோவில் அர்ச்சர்கள் மட்டும் பங்கேற்று மேற்படி அபிஷேகங்களை வரதராஜபெருமாளுக்கு செய்தனர்.
    இஸ்லாம் என்பது நாவால் கலிமா மொழிந்து, உள்ளத்தால் அதை நம்பும் நம்பிக்கை மட்டும் அல்ல. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வணக்க வழிபாடுகளை கடைப்பிடிப்பதும் இஸ்லாம் தான்.
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இஸ்லாம்’ - ‘இஸ்லாமிய கலாச்சார மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ‘இஸ்லாம்’ என்பதன் பொருள் கட்டுப்படுதல், அமைதி காத்தல், அடிபணிதல், அபயம் அளித்தல் போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியது.

    ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவார்’ எனும் ஏகத்துவத்தை மொழிந்த ஒரு முஸ்லிம் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு, வணக்க வழிபாடுகளுக்கு, இஸ்லாமிய கடமைகளுக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாத்தின் உண்மையான அர்த்தம் ஆகும். இதுகுறித்த நபி மொழி வருமாறு:

    வானவர்களின் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்கள் ஒருமுறை மனித உருவத்தில் வந்து, நபி (ஸல்) அவர்களை சந்தித்து, ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இறைவனை வணங்கிட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக்கூடாது; கடமையான தொழுகைகளையும், கடமையான ஜகாத்தையும், ரமலான் மாத கடமையான நோன்பையும், கடமையான ஹஜ்ஜையும் நிறைவேற்றிட வேண்டும்’ என பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    இஸ்லாம் என்பது நாவால் கலிமா மொழிந்து, உள்ளத்தால் அதை நம்பும் நம்பிக்கை மட்டும் அல்ல. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வணக்க வழிபாடுகளை கடைப்பிடிப்பதும் இஸ்லாம் தான்.

    அதிலும், குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் கலாச்சார செயல்பாடுகளையும், வணக்க வழிபாடுகளையும் அதிகம் வெளிப்படுத்த வேண்டும். மற்ற மாதங்களை காட்டிலும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு உட்பட அனைத்து வழிபாடுகளையும் தீவிரமாக முழுவீச்சில் செயலாற்றுவதை உலகம் முழுவதும் காணமுடிகிறது.

    மேலும், இஸ்லாம் என்பது அமைதியை தன்னுள் வைத்திருப்பதால் ரமலானிலும், மற்ற மாதங்களிலும் முஸ்லிம்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.

    ‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ, அவரே உண்மையான முஸ்லிமாவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ எனக் கேட்டதற்கு, ‘பசித்தோருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளையும், பிறருக்கு செய்ய வேண்டிய உரிமைகளையும், பிறருக்கு நோவினை தருவதிலிருந்து தவிர்ந்திருப்பதும், பசித்தவருக்கு உணவளிப்பதையும் தான் இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது.

    இந்த கடமைகளை செய்ய நம் அனைவருக்கும் வழிகாட்டுவது தான் இந்த புனித ரமலான் மாதத்தின் கலாச்சாரம். இறையச்சத்துடன்கூடிய இறைவழிபாடு, பசித்தோருக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவுவது போன்ற நற்செயல்களை நாம் ரமலானில் கடைப்பிடிப்பது போன்று வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்போம். இறையருள் பெற்று நிறைவான வாழ்வை ஈருலகிலும் பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
    கொரோனா 2-வது அலை தீவிரம் அடைந்து வருவதால், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது.
    கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. தினசரி 200-க்கும் மேற்பட்டோா் நாமக்கல் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளாகி அரசு, தனியாா் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

    நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, அனைத்து வழிபாட்டு தலங்கள், திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை நேற்று முதல் செயல்படாது என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலுக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் நேற்று சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆஞ்சநேயரை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்டால் சாமியை தரிசனம் செய்ய முடியாது. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயரை கோவிலின் வெளியில் நின்றபடி தரிசிக்க வாய்ப்புள்ளது.

    மேலும் அரசின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் சினிமா தியேட்டர்களும், வணிக வளாகங்களும் நேற்று முதல் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    நேற்று வெளியூரில் இருந்து தரிசனத்துக்காக வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கோவிலில் அன்னதானமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தை நம்பி உள்ள முதியவர்கள் நேற்று சிரமப்பட்டனர்.
    கொரோனா பரவல் எதிரொலி காரணமாக மருதமலை முருகன் கோவில் மூடப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் படிக்கட்டு முன்பு சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.
    கோவை வடவள்ளியில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

    இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கோவில்களில் பக்தர்களுக்கு தடை, வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் திறக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் காரணமாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மூடப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவிலில் வழக்கம்போல் நடைபெறும் பூஜை மட்டும் நடைபெற்றது.

    மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதால் மலைப்பாதை முன்புறம் உள்ள படிக்கட்டுகளில் தங்கள் குடும்பத்துடன் சூடம் மற்றும் விளக்கு ஏற்றி தேங்காய் பழம் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கொரோனோ பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலை விரைவில் மாறியதும் பக்தர்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
    ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார்.

    ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார்.

    அப்போது கடல் கொந்தளித்து அவற்றைக் குலைக்க முற்பட, ராமன் தன் திருக்கரத்தை உயர்த்தி கடலின் கொந்தளிப்பை அடக்கினார். அதற்கு சாட்சியாக இன்றுவரைக்கும் அந்தப் பகுதியில் கடல், அலைகள் இன்றி அமைதியாகக் காட்சியளிக்கிறது.

    அங்கு அருளும் பெருமாளுக்கும் கடலடைத்த பெருமாள் என்பது திருநாமம். இங்கு ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும் என்பது நம்பிக்கை.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவையில் இன்று உற்சவர் மலையப்பசாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருமலை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு 7 மணியளவில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் தங்கக் கருட வாகனத்தில் (கருடசேவை) உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    அதேபோல் இந்த மாதத்துக்கான பவுர்ணமி கருடசேவை இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    ×