search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தங்கக்குதிரை வாகனத்தில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.
    X
    தங்கக்குதிரை வாகனத்தில் சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளியதை படத்தில் காணலாம்.

    மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த சவுந்தரராஜ பெருமாள்

    மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார்.
    தாடிக்கொம்புவில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று சவுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த விழா நடைபெறவில்லை. இதற்கிடையே இந்த ஆண்டு கொரோனா வைரசின் 2-ம் அலை காரணமாக வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் மூடப்பட்டது. இருப்பினும் கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. அதைத்தொடர்ந்து சித்ரா பவுர்ணமியையொட்டி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கும் விழாவை பக்தர்கள் அனுமதியின்றி நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

    அதன்படி, நேற்று மண்டூக முனிவருக்கு சவுந்தரராஜ பெருமாள் சாப விமோசனம் வழங்கும் விழா நடைபெற்றது. வழக்கமாக பெருமாள் குடகனாற்றில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குவார். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, குடகனாற்றுக்கு பெருமாள் அழைத்து செல்லப்படவில்லை. மாறாக கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் பெருமாள் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார்.

    இதேபோல் பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று நடைபெறும் சித்திரை திருவிழாவில் அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றில் வரதராஜபெருமாள் இறங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டும், கொரோனா 2-வது அலை காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று வரதராஜ பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கோவில் முன்புற கதவுகள் மூடப்பட்டு, பக்தர்கள் இன்றி கோவில் அர்ச்சர்கள் மட்டும் பங்கேற்று மேற்படி அபிஷேகங்களை வரதராஜபெருமாளுக்கு செய்தனர்.
    Next Story
    ×