search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இஸ்லாம் வழிபாடு
    X
    இஸ்லாம் வழிபாடு

    நிறைவான வாழ்வு தரும் இறையச்சம்

    இஸ்லாம் என்பது நாவால் கலிமா மொழிந்து, உள்ளத்தால் அதை நம்பும் நம்பிக்கை மட்டும் அல்ல. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வணக்க வழிபாடுகளை கடைப்பிடிப்பதும் இஸ்லாம் தான்.
    புனித ரமலானுக்கு ‘ஷஹ்ருல் இஸ்லாம்’ - ‘இஸ்லாமிய கலாச்சார மாதம்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு.

    ‘இஸ்லாம்’ என்பதன் பொருள் கட்டுப்படுதல், அமைதி காத்தல், அடிபணிதல், அபயம் அளித்தல் போன்ற பல அர்த்தங்களை உள்ளடக்கியது.

    ‘அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் ஆவார்’ எனும் ஏகத்துவத்தை மொழிந்த ஒரு முஸ்லிம் அடுத்தகட்ட செயல்பாடுகளுக்கு, வணக்க வழிபாடுகளுக்கு, இஸ்லாமிய கடமைகளுக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாத்தின் உண்மையான அர்த்தம் ஆகும். இதுகுறித்த நபி மொழி வருமாறு:

    வானவர்களின் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்கள் ஒருமுறை மனித உருவத்தில் வந்து, நபி (ஸல்) அவர்களை சந்தித்து, ‘இஸ்லாம் என்றால் என்ன?’ என வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இறைவனை வணங்கிட வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக்கூடாது; கடமையான தொழுகைகளையும், கடமையான ஜகாத்தையும், ரமலான் மாத கடமையான நோன்பையும், கடமையான ஹஜ்ஜையும் நிறைவேற்றிட வேண்டும்’ என பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

    இஸ்லாம் என்பது நாவால் கலிமா மொழிந்து, உள்ளத்தால் அதை நம்பும் நம்பிக்கை மட்டும் அல்ல. அந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள வணக்க வழிபாடுகளை கடைப்பிடிப்பதும் இஸ்லாம் தான்.

    அதிலும், குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் கலாச்சார செயல்பாடுகளையும், வணக்க வழிபாடுகளையும் அதிகம் வெளிப்படுத்த வேண்டும். மற்ற மாதங்களை காட்டிலும் புனித ரமலானில் முஸ்லிம்கள் அனைவரும் நோன்பு உட்பட அனைத்து வழிபாடுகளையும் தீவிரமாக முழுவீச்சில் செயலாற்றுவதை உலகம் முழுவதும் காணமுடிகிறது.

    மேலும், இஸ்லாம் என்பது அமைதியை தன்னுள் வைத்திருப்பதால் ரமலானிலும், மற்ற மாதங்களிலும் முஸ்லிம்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும்.

    ‘பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ, அவரே உண்மையான முஸ்லிமாவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    “ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது?’ எனக் கேட்டதற்கு, ‘பசித்தோருக்கு நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும்’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளையும், பிறருக்கு செய்ய வேண்டிய உரிமைகளையும், பிறருக்கு நோவினை தருவதிலிருந்து தவிர்ந்திருப்பதும், பசித்தவருக்கு உணவளிப்பதையும் தான் இஸ்லாம் அதிகமாக வலியுறுத்துகிறது.

    இந்த கடமைகளை செய்ய நம் அனைவருக்கும் வழிகாட்டுவது தான் இந்த புனித ரமலான் மாதத்தின் கலாச்சாரம். இறையச்சத்துடன்கூடிய இறைவழிபாடு, பசித்தோருக்கும், தேவை உள்ளவர்களுக்கும் உதவுவது போன்ற நற்செயல்களை நாம் ரமலானில் கடைப்பிடிப்பது போன்று வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்போம். இறையருள் பெற்று நிறைவான வாழ்வை ஈருலகிலும் பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.38 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.29 மணி
    Next Story
    ×