என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம், மங்கலப்பொருட்களை கொண்டுவந்தனர். அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்,
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தில் ஆடிப்பூர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அன்றைய தினம் தேரோட்டம் நடைபெறும்.

    அதேபோல இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 3-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் கோவில் உள்பிரகாரத்தில் ஆண்டாள்- ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வருகின்றனர்.

    ஆடிப்பூர தினமான இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையால், கோவில் வளாகத்திற்கு உள்ளேயே தங்கத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளி தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.

    இதையொட்டி நேற்று காலை ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம், மங்கலப்பொருட்களை கொண்டுவந்தனர். அவற்றை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்,

    அதேபோல் மாலை 6 மணிக்கு மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவுக்கான பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப்பொருட்களை கொண்டு வந்தனர். அதையும் அதிகாரிகள் பெற்றுக்கொண்டு ஆண்டாளுக்கு அணிவித்தனர்.
    கடந்த ஆடி மாத கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்தது.
    பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா 3-ம் அலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன்படி கடந்த ஆடி மாத கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு ஆகிய நாட்களில் பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு அறிவித்தது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) ஆடிப்பூரம் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    விழாவில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளையொட்டி பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கோவிலின் வெளி பகுதிகளில் ஏராளமான பெண் பக்தர்கள் நின்று வழிபட்டனர்.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் வைபவம் நேற்று நடைபெற்றது.

    அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் காந்திமதி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, அம்பாளுக்கு கண்ணாடி காட்டி நலுங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முளைகட்டிய தானியங்களை சிறப்பு பூஜை செய்து அம்பாளுக்கு மடியில் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளையொட்டி பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கோவிலின் வெளி பகுதிகளில் ஏராளமான பெண் பக்தர்கள் நின்று வழிபட்டனர்.

    ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்து செல்வி அம்மன் கோவிலில் நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு பேராத்துசெல்வி அம்மனுக்கு வளைகாப்பு வைபவமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில், கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

    ஆடிப்பூரத்தையொட்டி நெல்லை டவுன் சாலியர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், நெல்லை கொக்கிரகுளம் காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள விசாலாட்சி அம்மன், மேல குலவணிகர்புரம் தான்தோன்றியப்பர் கோவிலிலுள்ள சிவகாமி அம்பாளுக்கும் நேற்று மதியம் வளைகாப்பு வைபவம் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகமாக வந்து அம்மனை வழிப்படுவர்.
    ஆண்டுதோறும் ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் கஞ்சி, கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் மற்றும் 2-வது செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களுக்கு திரளான பக்தர்கள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர்.

    ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 1-ந் தேதி முதல் 3 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை அம்மனை தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    நாகர்கோவில் புலவர்விளை முத்தாரம்மன் கோவிலில் ஏராளமான பெண் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.

    பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் அதிகமாக வந்து அம்மனை வழிப்படுவர். நேற்று ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் குவிந்து அம்மனை வழிபட்டனர்.

    ஆரல்வாய்மொழி அருகே முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமை கொடை விழா நடைபெறும். தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைவிழா ரத்து செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு மட்டும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    இதுபோல், செண்பகராமன்புதூர் அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவில், முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோவில், ஆரல்வாய்மொழி தாணுமாலயன் புதூரில் உள்ள பேச்சியம்மன் கோவில், ஆரல்வாய்மொழி துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோவில், இலங்கை மாகாளியம்மன் கோவில், குட்டி குளத்து இசக்கி அம்மன் கோவில், சோதனைச்சாவடி அருகே உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.
    அம்பாளை வழிபடுவதற்கான சிறப்புமிக்க தினங்களில் ஒன்று, ஆடிப்பூரம். இந்த நல்ல நாளில், அம்மன் கோவில்கள் அனைத்திலும் அம்பாளுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்படும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்தக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம் அன்று பக்தர்கள், குறிப்பாக பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள்.

    பலரும் கொடுக்கும் வளையல்கள் ஒன்றாக பூஜையில் வைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கே மீண்டும் பிரசாதமாக வழங்கப்படும். அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் விரதம் இருந்து வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

    * திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் விழா நடத்தப்படும். அதில் 4-ம் நாளில் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு நடத்துவார்கள்.

    * திருவாரூர் - கமலாம்பாள், நாகப்பட்டினம் - நீலாயதாட்சி, திருக்கருகாவூர் - கர்ப்பரட்சாம்பிகை ஆகிய சிறப்புமிக்க அம்மன்கள் அருளாட்சி புரியும் திருக்கோவில்களிலும், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    * சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், கற்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் செய்யப்படும்.

    * ஆடிப்பூரம் அன்று, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    * திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும், திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவர். இங்குள்ள அம்மனின் மூர்த்தமானது, அஷ்ட கந்தகம் என்ற எட்டுவிதமான வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அம்மன் தன்னுடைய மார்பில் ஸ்ரீசக்கரத்தை பதக்கமாக அணிந்திருக்கிறாள். இந்த அம்மனுக்கு, வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே முழுமையாக அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி மற்றும் ஆடிப்பூரம் ஆகியவையே அபிஷேகம் நடைபெறும் நாட்களாகும்.

    * ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் இந்நாளில், ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. மேலும் இந்த நாளில், தாலிக்கு புதிய மஞ்சள் கயிறு கோர்ப்பது நன்மை அளிக்கும்.

    * ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில்விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும், உற்சவருக்கு ஸ்ரீ ராமர்-அகல்யா சாப விமோசனம் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ரெங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்று வருகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    ஆடிப்பூர உற்சவத்தின் 3-வது நாளான 4-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு திருப்பாற்கடல்நாதன் அலங்காரமும், உற்சவருக்கு கண்ணன் ஆண்டாளின் சிற்றில் சிதைத்தல் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 4-ம் நாளான 5-ம்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு பரமஸ்வாமி அலங்காரமும், உற்சவருக்கு கள்ளழகர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் மூலவர் ஆண்டாளுக்கு ராஜகோபாலன் அலங்காரமும், உற்சவருக்கு ஸ்ரீ ராமர்-அகல்யா சாப விமோசனம் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

    இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிகழ்ச்சியை இணையதளத்தில் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
    ஆடிப்பூரம் திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. ஆனால் திருச்செந்தூர் கோவிலில் ஆடிப்பூரம் விழா இன்று மாலை நடக்கிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகளின்படி கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

    ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி அமாவாசை நாட்களிலும் பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள் எளிமையான முறையில் நடைபெற்றது.

    இந்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் ஆடிப்பூரம் திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்செந்தூர் கோவிலில் ஆடிப்பூரம் விழா இன்று மாலை நடக்கிறது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. பின்னர் உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மற்ற கால பூஜைகள், பிற்பகல் உச்சிகால தீபாராதனை நடைபெற்றது.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று மாலை மகாமண்டபத்தில் விநாயகர் சன்னதி அருகே உள்ள பார்வதி அம்மன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    பின்னர் வளைகாப்பு நடத்தப்பட்டு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து ஊஞ்சல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் பார்வதி அம்மன் மகா மண்டபம் சன்னதி செல்கிறார். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இன்று காலை 6 மணி முதல் திருச்செந்தூர் கோவிலில் வழக்கம் போல பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடிப்பூரத்தையொட்டி நாளை அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் கோவிலிலும் அனுமதி வழங்கப்படவில்லை.

    நாளை மறுநாள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு வருகிற 23-ந் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்துள்ளது. எனவே அந்த நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
    13-ந்தேதி கருட பஞ்சமி அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களின் சிறப்பான இல்வாழ்க்கைக்காகவும், கருடனை போல் நல்ல பலமுள்ள குழந்தையை பெற வேண்டும் என்றும் விரதம் மேற்கொள்வர்.
    திருப்பதியில் இந்த மாதம் 2 முறை கருட வாகன சேவை நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்றும் மற்றும் பிரம்மோற்சவம், ரதசப்தமி அன்றும் கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதேபோன்று கருட பஞ்சமியன்றும் கருட சேவை நடைபெறுவது ஐதீகம்.

    இந்த மாதம் 13-ந்தேதி கருட பஞ்சமி அன்றும், 22-ந்தேதி ஆடி பவுர்ணமி அன்றும் கருட சேவை உற்சவம் நடைபெற உள்ளன.

    2 நாட்களிலும் இரவு 7 மணிக்கு ஏழுமலையான் 4 மாடவீதிகளிலும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

    13-ந்தேதி கருட பஞ்சமி அன்று புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களின் சிறப்பான இல்வாழ்க்கைக்காகவும், கருடனை போல் நல்ல பலமுள்ள குழந்தையை பெற வேண்டும் என்றும் விரதம் மேற்கொள்வர்.

    மகா விஷ்ணுவின் வாகனமான கருடனின் பிறந்த தினம் என்பதால் அந்நாளில் திருப்பதியில் கருட வாகன சேவை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பதியில் நேற்று 20,016 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11,353 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.2 கோடி உண்டியல் வசூலானது.
    காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன.
    அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.

    முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.

    காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்த அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    மண்டகொளத்தூர்

    சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.

    கரைப்பூண்டி

    போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், ‘கரைப்பூண்டி’ என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் ‘துலா ஸ்நானம்’ சிறப்பானதாக கருதப்படுகிறது.

    பழங்கோயில்

    திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது ‘மத்திய கயிலாசம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன்பாக பெரிய அளவிலான துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் ‘ஷோடச மூர்த்தி’ ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.

    தாமரைப்பாக்கம்

    திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.
    பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் இன்று மற்றும் நாளை சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, புஷ்ப காவடிகள் எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு ஆடிப்பூரம் விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கொரோனா தொற்று அதிகரித்து வருவதாலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதியும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையிலும் திருத்தணி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களில் பக்தர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை(புதன்கிழமை) சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    மேலும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சாமி கோவிலிலும் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் செவ்வாய்க்கிழமை நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்குள் திரளானோர் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
    கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.

    அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி நாட்களான கடந்த 6,7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்கப்பட்டது. இதனால் திரளானோர் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
    இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
    ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத்தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டி நேற்று மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர்பட்டர் பட்டு வஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் பணியாளர்கள் மங்கல பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தினரால் இந்த மங்கல பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை (புதன்கிழமை) நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர விழாவில் தேரில் எழுந்தருளுவார்.
    ×