என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 12-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 9-ந்தேதி(இன்று) காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி விழா நடைபெற்றது. இந்த நிலையில் கொரோனா தற்போது குறைந்த நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவிலில் ஏகாந்தமாக நடைபெற்ற கருட சேவை இந்த ஆண்டு முக்கிய வீதிகளின் வழியாக கருட வாகனத்தில் வீரராகவ பெருமாள் ஊர்வலமாக சென்றார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான வரும் 12-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 9-ந்தேதி காலை 10 மணிக்கு வீரராகவர் கோவில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

    மே மாதம் முழுவதும் மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் வனத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தும் பக்தர்கள் முறையிட்டனர்.
    கோவை அருகே உள்ள பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் புகழ்பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே தென்கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்கு 7-வது மலையில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார்.

    இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருவது வழக்கம். இந்த மலைக்கு செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதாலும், திடீரென்று சீதோஷ்ண நிலை மாறுவதால், ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் மலை மீது சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினார்கள். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் திடீரென்று பக்தர்கள் மலை மீது செல்ல வனத்துறை தடை விதித்தது. வனப்பகுதியில் ஏற்பட்டு உள்ள வறட்சி காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக காரணம் கூறப்பட்டது.

    இதன் காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கம்போல மே மாதம் முழுவதும் மலை மீது செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன் வனத்துறை உயர் அதிகாரிகளை சந்தித்தும் பக்தர்கள் முறையிட்டனர். இதையடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வெள்ளியங்கிரி மலை மீது செல்ல பக்தர்களுக்கு கடந்த 6-ந் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் மலை மீது செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லக்கூடாது. அதுபோன்று பிளாஸ்டிக் பொருட்களையும் எடுத்துச்செல்லக்கூடாது.

    அத்துடன் மலை மீது ஏற்கனவே செல்லக்கூடிய பாதையில் மட்டும்தான் செல்ல வேண்டும். பாதை தவறி கும்பலுடன் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வது, வனவிலங்குகளை சீண்டுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறினார்கள்.

    இதையும் படிக்கலாம்...வலங்கைமான் பாடைக்கட்டி மகாமாரியம்மன் கோவில்
    பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் வலங்கைமான் பாடைக்கட்டி மாரியம்மனுக்குச் சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தலச்சிறப்பு : மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைகாவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்". பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும்.

    உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார். இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.

    தல வரலாறு : வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார். அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.

    அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோவில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோவில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள். அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர். அங்கு யாரும் தென்படவில்லை. அழுது கொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது.

    அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர். கடைசியாக அந்தக் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது. அய்யனார் கோவிலில் கிடைக்கப் பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார்.

    ஊடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள். ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்).

    பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார். அன்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோவிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோவில் தோன்றி வளர்ந்த வரலாறாக கூறப்படுகிறது.

    நடைதிறப்பு : காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை.ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.

    திருவிழாக்கள் :

    ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா,

    ஆவணி கடைசி ஞாயிறு தெப்பத்திருவிழா,

    பங்குனி 2-ம் ஞாயிறு "பாடைகாவடி திருவிழா" சிறப்பானது,

    பங்குனி மூன்றாவது ஞாயிறு "புஷ்பபல்லாக்கு",

    பங்குனி "கடைஞாயிறுதிருவிழா".

    கோவில்முகவரி :

    அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்,
    வலங்கைமான் - 612 804,
    திருவாரூர் மாவட்டம்.
    நம் முன்னோர்கள் 60 ஆண்டுகளுக்கான பெயர்களை தமிழிலும் சூட்டியிருக்கிறார்கள். 60 பெயர்களும் சமஸ்கிருத பெயர்களிலேயே அறியப்படுகின்றன.
    தமிழர்களின் வருடப்பிறப்பாக சித்திரை மாதத்தின் முதல் நாள் இருக்கிறது. சித்திரை மாதம் தொடங்கி பங்குனி வரையான ஒரு வருட காலத்தை ஒரு பெயர் வைத்து அழைப்பது, தமிழர்களின் வழக்கம். நம் முன்னோர்கள் இப்படி 60 ஆண்டுகளுக்கான பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். 60 ஆண்டுகள் முடிந்ததும் மீண்டும், முதல் வருடத்தின் பெயரில் இருந்து 60 வருடங்கள் தொடர்ச்சியாக வரும். பொதுவாக இந்த 60 பெயர்களும் சமஸ்கிருத பெயர்களிலேயே அறியப்படுகின்றன. ஆனால் அவை அனைத்திற்கும் தமிழிலும் பெயர்கள் இருந்திருக்கின்றன.

    அந்த தமிழ்ப் பெயர்களை இங்கே பார்க்கலாம். இங்கே சமஸ்கிருதப் பெயர்களும்.. அதற்கான தமிழ்ப் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

    1. பிரபவ - நற்றோன்றல்

    2. விபவ - உயர்தோன்றல்

    3. சுக்ல - வெள்ளொளி

    4. பிரமோதூத - பேருவகை

    5. பிரசோற்பத்தி - மக்கட்செல்வம்

    6. ஆங்கீரஸ - அயல்முனி

    7. ஸ்ரீமுக - திருமுகம்

    8. பவ - தோற்றம்

    9. யுவ - இளமை

    10. தாது - மாழை

    11. ஈஸ்வர - ஈச்சுரம்

    12. வெகுதானிய - கூலவளம்

    13. பிரமாதி - முதன்மை

    14. விக்கிரம - நேர்நிரல்

    15. விஷு - விளைபயன்

    16. சித்திரபானு - ஓவியக்கதிர்

    17. சுபானு - நற்கதிர்

    18. தாரண - தாங்கெழில்

    19. பார்த்திப - நிலவரையன்

    20. விய - விரிமாண்பு

    21. சர்வசித்து - முற்றறிவு

    22. சர்வதாரி - முழுநிறைவு

    23. விரோதி - தீர்பகை

    24. விக்ருதி - வளமாற்றம்

    25. கர - செய்நேர்த்தி

    26. நந்தன - நற்குழவி

    27. விஜய - உயர்வாகை

    28. ஜய - வாகை

    29. மன்மத - காதன்மை

    30. துன்முகி - வெம்முகம்

    31. ஹேவிளம்பி - பொற்றாடை

    32. விளம்பி - அட்டி

    33. விகாரி - எழில்மாறல்

    34. சார்வரி - வீறியெழல்

    35. பிலவ - கீழறை

    36. சுபகிருது - நற்செய்கை

    37. சோபகிருது - மங்கலம்

    38. குரோதி - பகைக்கோடு

    39. விசுவாசுவ - உலக நிறைவு

    40. பரபாவ - அருட்டோற்றம்

    41. பிலவங்க - நச்சுப்புழை

    42. கீலக - பிணைவிரகு

    43. சவுமிய - அழகு

    44. சாதாரண - பொதுநிலை

    45. விரோதகிருது - இகல்வீறு

    46. பரிதாபி - கழிவிரக்கம்

    47. பிரமாதீச - நற்றலைமை

    48. ஆனந்த - பெருமகிழ்ச்சி

    49. ராட்சச - பெருமறம்

    50. நள - தாமரை

    51. பிங்கள - பொன்மை

    52. காளயுக்தி - கருமை வீச்சு

    53. சித்தார்த்தி -முன்னியமுடிதல்

    54. ரவுத்திரி - அழலி

    55. துன்மதி - கொடுமதி

    56. துந்துபி - பேரிகை

    57. ருத்ரோத்காரி - ஒடுங்கி

    58. ரக்தாட்சி - செம்மை

    59. குரோதன - எதிரேற்றம்

    60. அட்சய - வளங்கலன்
    சனிஸ்வரனுக்கு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது. நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.
    நவக்கிரகங்களுக்கும் சனிபகவானுக்கும் பைரவர்தான் குரு. சனிபகவான் அர்த்தாஷ்டம, அஷ்டம, கண்டகம், ஏழரை ஆண்டு சனி காலம், சனி திசை காலங்களில் ஆட்டிப்படைப்பவர்.

    இப்படி சனி பகவானால் ஏற்படக்கூடிய துன்பங்களைத் தீர்ப்பவர் பைரவர். ராகு காலத்தில் பைரவருக்கு வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயாசம், படையலிட்டு அல்லது கறிவேப்பிலை மாலை, பாகற்காய் மாலை அணிவித்து ஒரு பூசணியில் மிளகு தீபம், ஒரு பாகற்காய் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ பைரவருக்கு அர்ச்சனை செய்தால் சனி பகவான் பிடியிலிருந்து விடுபடலாம். இது பொதுவான பரிகார பூஜை. இதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.

    சனிஸ்வரனுக்கு எள் சட்டி தீபம் ஒரு போதும் ஏற்றவே கூடாது. நெய் தீபம் ஏற்றவும். அல்லது எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பைரவருக்கு தீபமேற்றினால் சனி தோஷம் நிவர்த்தியாகும்.

    ராசிக்கு சனிப்பார்வை இருந்தால் சனிக்கிழமை காலையில் ஒன்பது கருப்பு மிளகைத் தூள் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன் பிறகே கோவிலுக்குச் சென்று சனிஸ்வரருக்கும் ஸ்ரீபைரவருக்கும் வழிபாடு செய்து வரவேண்டும்.

    ராசிக்கு சனிபகவான் பார்வை இருக்கும் வரை பொதுவான பரிகாரத்தை சனிக்கிழமையில் செய்து வரவேண்டும். இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்வது சிறந்தது.
    பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கோடை காலத்தில் அக்னி நட்சத்திர கழு திருவிழா கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தின் கடைசி 7 நாட்கள், வைகாசி மாதத்தின் முதல் 7 நாட்கள் என 14 நாட்கள் அக்னிநட்சத்திர கழு திருவிழாவாக கொண்டாடப்படும். இந்த 14 நாட்களில் பழனி பகுதியை சேர்ந்த பக்தர்கள் காலை, மாலை வேளையில் பழனி கிரிவீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.

    இவ்வாறு கிரிவலம் வரும்போது சுத்தமான காற்று வீசும் என்றும், இதனால் உடல் புத்துணர்ச்சி பெறும் என்பதும் நம்பிக்கை. இந்த ஆண்டு அக்னி நட்சத்திர கழு திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    இதையடுத்து பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான பணியாளர்கள், ஊழியர்கள் கிரிவீதிகளில் பாதையை ஆக்கிரமித்து கடைக்காரர்கள் வைத்திருந்த பொருட்களை அகற்றி வேனில் ஏற்றினர். மேலும் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
    இந்த கோவிலில் அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : குமாரர் சுவாமி
    தீர்த்தம் : சித்ராநதி
    தலவிருட்சம் : மகிழம்
    தலச்சிறப்பு : அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார்.

    தல வரலாறு : இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்தப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால், வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதை சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணித்தார். இறைவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை புறப்பட, அகத்தியர் பொதிகை மலையின் குற்றாலத்திற்கு வந்தார் . அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவ திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.

    எனவே அவர் சித்ரா நதி தீர்த்தத்ற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். வெண்மணலுக்கு “தேவாகைரியில் இருவானுகம்” என்ற பெயர் இருந்ததால் அதற்கு “இருவாலுக ஈசர்” என்ற பெயர் ஏற்பட்டது. வந்த வேலை முடிய வேண்டுமே, இன்னும் முடியவில்லையே என எண்ணிய, அகத்தியர் முருகபெருமானை வேண்டினார். முருகபெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி, “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல். அங்கு சென்று அங்குள்ள திருமாலை குறுக்கி குற்றாலநாதராக்கு” என பணித்தார். அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த பணியை முடித்தார்.

    நடைதிறப்பு :

    காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

    பூஜை விவரம் :

    தினசரி ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. திருவனந்தல், விளாபூசை, காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, அர்த்த சாமம் ஆகிய ஆறு கால பூசைகள் தினமும் நடைபெறுகிறது.

    திருவிழாக்கள் :

    சித்திரை பிரமோத்ஸவம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி தனுர்பூஜை தைபூசம், மாசி மகம் ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    கோயில் முகவரி :

    அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில்,
    இலஞ்சி -627805,
    திருநெல்வேலி மாவட்டம்.
    வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) உச்சிக்காலத்தில் சிவபெருமான் திருமணகோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் அகத்திய முனிவருக்கு, சிவபெருமான் திருமணகோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பின்புறம் திருமண கோலத்தில் அமைந்துள்ள மணவாளசுவாமிக்கு (சிவன்-பார்வதி) ஆண்டிற்கு ஒரு முறை கையால் அறைத்து சாத்தப்படும் சந்தனம் அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, தைல அபிஷேகம் நடைபெறும். இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) மணவாளசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

    இதை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) உச்சிக்காலத்தில் சிவபெருமானுக்கு கையால் அறைத்த சந்தனம் பூசப்பட்டு மலர்களால் அலங்கரித்து பெருமாள் முன்னிலையில் சிவபெருமான் திருமணகோலத்தில் அகத்தியருக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
    சென்னை எண்ணூர் கத்தி வாக்கத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் இன்று (சனிக்கிழமை) ஆண்டு பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது.
    சென்னை எண்ணூர் கத்தி வாக்கத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டு திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பெருவிழா கொண்டாட்டங்கள் கடந்த மாதம் 28ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினமாக கொண்டாடப்பட்டு சிறப்பு ஜெபம் மற்றும் திருப்பலிகள் நடத்தப்பட்டன.

    கடந்த மாதம் 29ந்தேதி ஆசிரியர் தினம், 30ந்தேதி தம்பதியர் தினம் கொண்டாடப்பட்டது. மே 1ந்தேதி உழைப்பாளர் தினமாக விழா நடத்தப் பட்டது. 2ந்தேதி உபகாரிகள் தினமாக கொண்டாடப்பட்டது. 3ந்தேதி நலம் நாடுவோர் தினம், 4ந்தேதி இளையோர் தினமாக விழாக்கள் நடத்தப்பட்டன.

    நேற்று மாலை தேவ அழைத்தல் தினம் கொண்டாடப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு நற்கருணை தினம் கொண்டாடப்படுகிறது. பங்கு தந்தை ஜேக்கப் மாசிலாமணி விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

    இன்று (சனிக்கிழமை) ஆண்டு பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடக்கிறது. இந்த திருவிழாவுக்கு திருவொற்றியூர் பங்கு தந்தை ராக் சின்னப்பா தலைமை தாங்குகிறார்.

    8ந்தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் திருவள்ளூர் பங்கு தந்தை கிளமெண்ட் பாலா பங்கேற்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை ஜேக்கப் ஆல்பர்ட் செய்துள்ளார்.
    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரத்தில் பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்படும்.
    தஞ்சை மாவட்டத்தில் பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து, திருப்பலியை நிறைவேற்றினார். இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் சாம்சன் மற்றும்உதவி பங்குத்தந்தையர்கள், அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பரத்தில் பவனியும், திருப்பலியும் நிறைவேற்றப்படும். பூண்டி மாதா பேராலய திருவிழா நாளான வருகிற 14-ந்தேதி நடைபெறும் பெரிய தேர்பவனியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தொடங்கி வைக்கிறார்.

    15-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அன்று மாலை கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவுபெறும். விழாவையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கொடியேற்றத்தில் கலந்துகொண்டனர்.

    மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.
    சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.
    விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.

    சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணெய் போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.
    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை திருவிழா நாட்களில் காலை- இரவு நேரங்களில் பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.
    கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணிகோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் காலை- இரவு நேரங்களில் பெருமாள், தாயார் பல்வேறு வாகனங்களில் வீதி உலாநடைபெறுகிறது. வருகிற 9-ந்தேதி ஓலை சப்பரத்தில் சாரங்கபாணி மற்றும் தாயார் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பணியாளர்கள் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ×