என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தேவஸ்தான அதிகாரி கூறியுள்ளார்.
    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

    பின்னர் தூய்மை பணிகள் முடிந்ததும் வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதையொட்டி தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெலுங்கு வருடபிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி ஆகிய நிகழ்வுகளுக்கு முன்பு ஒரு வருடத்தில் நான்கு முறை செவ்வாய்க்கிழமைகளில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    இதையொட்டி கோவில் கர்ப்பாலயத்தின் கூரைகள், சுவர்கள் மற்றும் பிற உபாலயங்களில் பரிமளம் என்ற சிறப்பு நறுமண கலவை பூசப்படும்.

    வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும் என்பதால், திருமலையில் இன்று அறைகளை ஒதுக்கவில்லை.

    பக்தர்கள் அனைத்து கொரோனா விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்றி தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
    பவுர்ணமி வரும் கிழமைகளில் எந்தெந்த ஆடை அணிவித்து அம்பிகையை வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று செய்யும் வழிபாடு அம்பிகைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி வரும் கிழமைகளில் எந்தெந்த ஆடை அணிவித்து அம்மனை வழிபட்டால் எந்தப் பலன் கிடைக்கும் என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை..

    ஞாயிறு  -  சிவப்பு நிற ஆடை -  நோய்கள் நீங்கும்
    திங்கள்  -  ஆரஞ்சு நிற ஆடை -  செல்வ வளம்
    செவ்வாய் -  வெண்பட்டு -  நவகிரக தோஷங்கள் நீங்கும்
    புதன் -  பச்சை நிற ஆடை -  குழந்தைப்பேறு
    வியாழன் -  மஞ்சள் நிற ஆடை -  கல்வி, கேள்வி ஞானம் சித்திக்கும்.
    வெள்ளி -  பொன்னிற ஆடை -  மகிழ்ச்சி கிட்டும்
    சனி -  நீலநிற ஆடை -  நலமான வாழ்வு.
    நாமக்கல் அரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆன்லைனில் முன்பதிவு செய்து, 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    நாமக்கல் மலைகோட்டையின் அடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சொர்க்க வாசல் திறப்பின் போது அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரை கட்டளைதாரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனம் கிடையாது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு hrce.tn.gov.in என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு மணி நேரத்திற்கு 250 நபர்கள் வீதம் கட்டண வழி அல்லது இலவச தரிசன வழியில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப முன்பதிவு செய்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல் கோவில் அலுவலகத்திலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு கோவிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோய் போன்ற இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

    உடல் வெப்பநிலையை அறியும் பொருட்டு, தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விழா பக்தர்கள் காணும் வகையில் வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை உற்சவர் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 19-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    தைத்தேர் உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை உற்சவர் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்த 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார். 15-ந் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளுகிறார். 16-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேர் உற்சவம் 17-ந் தேதி நடைபெறுகிறது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளியபின் தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம்வந்து பின்னர் நிலையை அடையும்.

    ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் பெருமாள் தைத்தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கோவில் வளாகத்தில் உள்ள கருட மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 18-ந் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 19-ந் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

    பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்து கோவிலை வலம் வந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
    கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோவில்கள் சாத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாத்தப்பட்டது. கோவில் நடை சாத்தப்பட்டாலும் அம்மனுக்கு உரிய பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி தைத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்தநிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டதால் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காலையிலிருந்தே கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சமயபுரம் வந்து குவிந்தனர்.

    அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றியும், நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபட்டு சென்றனர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடிகாணிக்கை செலுத்தியும், கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்து கோவிலை வலம் வந்து அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

    இதேபோல், சமயபுரம் போஜீஸ்வரர் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசாமி கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் நேற்று காலை நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்று சாமியை வணங்கினர்.
    நம்முடைய எல்லாக் காரியங்களிலும் நேர்மையாய், கடவுளுக்கு பயந்து நடக்கும்போது, மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிக்கும் தேவன் நம்மை தப்புவிக்கிறார்.
    மேதியனாகிய தாரியு என்பவர் அரசராய் இருந்த போது, அவருக்கு கீழ் வரி வசூலிப்போருக்கு மேற்பார்வையாளராக தானியேல் பணியாற்றினார். அவர் நேர்மையாகவும் உத்தமமாகவும் பணி செய்தால், அவரிடம் அரசின் முழு பொறுப்பையும் ஒப்படைக்க அரசர் விரும்பினார். அதை கேள்விப்பட்ட மற்ற மேற்பார்வையாளர்களும், வரி வசூலிப்போர்களும் தானியேல் மீது பொறமை கொண்டனர். அதோடு தானியேல் பற்றி அரசரிடம் குறை சொல்வதற்கான காரணத்தைத் தேடினர்.

    ஆனால் தானியேல் தன்னுடைய பணியில் நேர்மையாக செயல்பட்டதால், மற்றவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே அவர்கள் “ தானியேல் கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் உறுதியானவர். அந்த சட்டத்தை வைத்து அவர் மீது குற்றம் சுமத்துவதைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர் மீது குற்றம் காண முடியாது” என்றார்கள்.

    அதனால் அவர்கள் அரசரிடம் வந்து “முப்பது நாள் வரையில் அரசராகிய உங்களைத் தவிர, வேறெந்த தெய்வத்திடமோ, மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றி தடையுத்தரவு போடவேண்டும்” என்று வலியுறுத்தினர். அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டு உத்தரவு பிறப்பித்தான்.

    நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக மண்டியிட்டு மன்றாடி, அவருக்கு நன்றி செலுத்துவது தானியேலின் வழக்கம். அவர் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்று, மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருக்க, முழந்தாளிலிருந்து மன்றாடி கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

    அவரை குற்றப்படுத்த வகை தேடிக் கொண்டிருந்த மனிதர்கள், முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, தானியேலின் அறையின் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். அதையே காரணம்காட்டி அரசரிடம் சொல்லி அவரை சிங்கக் குகையில் தள்ளினார்கள். அரசருக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், மற்றவா்களின் வலியுறுத்தலால் ஒப்புக்கொண்டார்.

    தானியேல் சிங்கக் குகையில் தள்ளப்படும் முன்பு, அரசர் அவரிடம், “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றார். அதுமட்டுமல்ல சிங்கக் குகையில் தானியேல் இருந்த அந்த இரவு நேரத்தில் அரசனால் உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. பொழுது விடிந்தவுடன் குகை நோக்கி விரைந்து வந்த அவர், உரத்த குரலில், “தானியேல்! என்றும் உள்ள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னை சிங்கங்களிடம் இருந்து விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.

    அதற்குத் தானியேல், “அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பி, சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே!” என்று மறுமொழி கொடுத்தார்.

    இதன் வழியாக தானியேல் தன்னுடைய தேவன் மேல் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டிலும், அரசன் தானியேலின் கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். குகையில் பசியுடன் இருந்த சிங்கங்களின் நடுவில் தானியேல் நிம்மதியாகவும், மனநிறைவுடன் இருந்தபோதும், அரண்மனையில் இருந்த அரசனால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ‘தானியேலை இறைவன் காப்பாரா?, இல்லையா?’ என்ற கவலையுடன், உண்ணவோ, உறங்கவோ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் பொழுது விடிந்ததும், குகை நோக்கி விரைந்து வந்து தானியேல் நலமாக இருப்பதை கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

    தானியேல் இறைவனின் முன்பு உத்தமாய் நடந்து கொண்டபடியால் அவரை சிங்கத்தின் வாய்க்கு தப்புவித்த தேவன், தாமே தானியேல் வழியாக தம்முடைய மகிமையை அரசருக்கும் வெளிப்படுத்தினார்.

    அப்பொழுது தாரியு அரசர், நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும், நாட்டினருக்கும், மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தார். “உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இருக்காது. தானியேலை சிங்கங்களின் பிடியில் இருந்து காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!" என்று தேவனை அனைவர் முன்பும் உயர்த்தி அவரது நமது நாமத்தை மகிமைப்படுத்தினார்.

    நாம் செய்யும் செயல்கள் யாவும், எப்போதும் மற்றவர்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் எப்போது தவறு செய்வோம், எந்த வகையில் நம்மை சிக்க வைக்கலாம் என்று சிலர் காரணம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய எல்லாக் காரியங்களிலும் நேர்மையாய், கடவுளுக்கு பயந்து நடக்கும்போது, மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிக்கும் தேவன் நம்மை தப்புவிக்கிறார். அதன் வழியாக நம்மோடு அவர் இருப்பதை அவர்களும் அறியும்படி செய்கிறார்.

    நாமும் தானியேலை போல உலகக் காரியங்களிலும், தேவனுடைய காரியங்களிலும் நேர்மையாய் நடப்பதன் மூலம், நம்முடைய பெயர் மட்டுமல்ல, தேவனுடைய பெயரும் மகிமைப்படும் என்பதை உணர்ந்து, எல்லாவற்றிலும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.
    18-ந்தேதி தைப்பூசத்தையொட்டி அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 151-வது தைப்பூச விழா 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை அகவல் பாராயணம் நடைபெறுகிறது. பின்னர் 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி, வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக்குப்பம் மற்றும், தருமச்சாலையில் சன்மார்க்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சத்தியஞானசபையில் விழா கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து 18-ந்தேதி தைப்பூசத்தையொட்டி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. அதன்படி அன்று காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 ஆகிய நேரங்களில் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து 20-ந்தேதி பகல் 12 மணி முதல் மாலை வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்திபெற்ற திருஅறைதரிசனம் நடைபெறுகிறது. முன்னதாக வடலூர் ஞானசபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டுசெல்லப்படும். அங்கு பக்தர்கள் வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும். தைப்பூச திருவிழாவையொட்டி வழக்கமாக நடைபெறும் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி, நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

    மேலும் ராட்டினம், சர்க்கஸ் கூடாரங்கள் உள்ளிட்டவை நடத்தவும் அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதில் மாற்றம் இருக்கலாம் என செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் தெரிவித்துள்ளார். விழாவையொட்டி வடலூர் ஞானசபையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று (திங்கட் கிழமை) முதல் நாளை வரை தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதல் நிகழ்ச்சியும், 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஞானசபையில் அருட்பா முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    பக்தர்கள் வருகையால் கோவில் வெளிப்பிரகாரம், படிப்பாதை, கிரிவீதி, நுழைவு பகுதியான குடமுழுக்கு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.
    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் (வெள்ளி, சனி, ஞாயிறு) வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தரிசன தடை, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பழனிக்கு வந்த பாதயாத்திரை பக்தர்கள் பாதவிநாயகர் கோவில் முன் தரிசனம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ஒருசில பக்தர்கள் நேற்று தரிசனம் செய்வதற்காக அடிவார பகுதியில் அறை எடுத்து தங்கினர்.

    இதையடுத்து 3 நாள் தரிசன தடைக்கு பிறகு நேற்று காலை பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிகாலை முதலே பழனி அடிவாரம், கிரிவீதிகளில் பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். கோவில் திறந்ததும் பக்தர்கள், முருகனுக்கு அரோகரா...கந்தனுக்கு அரோகரா...என சரணம் கோஷம் முழங்கியபடி பக்தி பரவசத்துடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகையால் கோவில் வெளிப்பிரகாரம், படிப்பாதை, கிரிவீதி, நுழைவு பகுதியான குடமுழுக்கு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. திருவிழா போல் பக்தர்கள் குவிந்ததால் பழனி முருகன் கோவில் அடிவார பகுதி ஸ்தம்பித்தது. இதடையே பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    எனவே பஸ்நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.மேலும் மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப்கார், மின்இழுவை ரெயில் மற்றும் பொது, கட்டண தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேர காத்திருப்புக்கு பின்னரே சாமி தரிசனம் செய்ய முடிந்தது. கூட்டம் காரணமாக பழனி முருகன் கோவில், அடிவார பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க திண்டுக்கல், தாராபுரம் பகுதிகளில் இருந்து தனியாக நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இந்த பாதைகளில் பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் பாதயாத்திரை நடைபாதையில் செடிகள் வளர்ந்தும், மண் மேவியும் காணப்பட்டது. இதையடுத்து அதை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பாதயாத்திரை நடைபாதையை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது. பழனி அருகே ஆயக்குடி பகுதியில் சுத்தப்படுத்தும் பணியை கோவில் இணை ஆணையர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    “அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)
    தனக்கும், தன் அருகில் வாழும் மனிதர்களுக்கும் பேச்சுக்களாலும், செயல்களாலும் தீங்கு விளைவிக்காமல் இருப்பதே சமூக ஒழுக்கம். வாழும் காலமெல்லாம் இவை நம்முடன் பயணிப்பது, நம்மை மேன்மக்களாக சமூகத்தில் உயர்த்தச் செய்யும்‌. அண்டை வீட்டில் வசிப்பவர்களுடன் அன்போடு பழக இவ்வாறு வழி காட்டுகிறது இஸ்லாம்:

    “மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36)

    “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

    வீதிகளில் அமரும் போதும், வீதிகளைக் கடக்கும் போதும் சில ஒழுக்கங்களை இஸ்லாம் போதிக்கின்றது. மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை அகற்றுதல், சாலைகளை கடப்பவர்களுக்கு உதவுதல், அவர்களுக்கு அரணாக மாறுதல் தர்மம் என்கிறது இஸ்லாம். இதுகுறித்த நபி மொழி வருமாறு:

    ‘நீங்கள் பாதைகளில் அமர்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களிடம் கூறினார்கள். ‘நாங்கள் அமர்ந்து பேசுவதற்கு வேறு இடம் இல்லையே’ என்று நபித் தோழர்கள் வினா எழுப்பினர். ‘அப்படியென்றால் பாதைக்கான கடமைகளை முழுமையாக நிறைவேற்றுங்கள்’ என்று நபி (ஸல்) கூற, ‘பாதைக்கான கடமைகள் என்றால் என்ன?’ மறுபடியும் நபித் தோழர்கள் கேட்க, ‘பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், தொந்தரவு செய்யாமல் இருங்கள், முகமன் கூறுங்கள், நல்லவற்றை ஏவி தீமைகளைத் தடுங்கள்’ என்று பாதைகளுக்கான கடமைகளைப் பட்டியலிட்டார்கள் நபி (ஸல்) அவர்கள்.

    நம்மையும், நம்மைச் சுற்றியும் வசிக்கும் மாற்று மத நண்பர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ளுதல் வேண்டும். இதை இறைவனே தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

    “அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள். அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள்”. (திருக்குர்ஆன் 6:108)

    ‘ஒருவர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார், (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), நூல்: புகாரி)

    தும்மும் போது கைக்குட்டையைக் கொண்டு மூடிக்கொள்ளுதல், கொட்டாவி விடும் நேரத்தில் கைகளால் வாயை மூடிக் கொள்ளுதல், எச்சில் துப்பினால் மண் கொண்டு மூடுதல், சபை நாகரீகம் கருதி பேசுதல், இவை அனைத்தும் சமூக ஒழுக்கத்தின் முக்கிய தூண்களாகும். பேச்சுகளையும், செயல்களையும் மனித சமூகத்திற்கு எதிராக இல்லாமல் பார்த்துக்கொள்வது சமூக ஒழுக்கமாகும். இதைப் பேணுதலில் உலக அமைதி பிறக்கிறது. சமூக ஒழுக்கத்தை திருக்குர்ஆனும், நபி மொழியும் பல இடங்களில் இவ்வாறு பதிவு செய்கின்றன.

    ஏ.எச். யாசிர் அரபாத் ஹசனி, லால்பேட்டை.
    பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து பச்சை அல்லது காவி நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர்.
    தமிழகத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருவதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஆகமவிதிப்படி வழக்கம்போல் அனைத்து கால பூஜைகளும் நடைபெற்றன. 3 நாட்களுக்கு பின்னர் நேற்று சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால், கோவிலில் பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.

    பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் மாலை அணிந்து பச்சை அல்லது காவி நிற ஆடை அணிந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இதனால் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் பாதயாத்திரை பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    மேலும், பக்தர்களின் தரிசனம் 3 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
    ஜனவரி மாதம் 11-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    11-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * வளர்பிறை நவமி
    * குரங்கனி முத்து மாரியம்மன் புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - உத்திரம், ஹஸ்தம்

    12-ம் தேதி புதன் கிழமை :
     
    * அமிர்தயோகம்
    * கோவை பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் பவனி
    * பழனி ஆண்டவர், மருதமலை முருகப்பெருமான் உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை
     
    13-ம் தேதி வியாழக்கிழமை :

    * போகிப்பண்டிகை
    * கார்த்திகை விரதம்
    * ஸ்ரீவைகுண்ட ஏகாதசி
    * சர்வ ஏகாதசி
    * சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு விழா
    * சந்திராஷ்டமம்- சித்திரை, சுவாதி

    14-ம் தேதி வெள்ளிக்கிழமை  :


    * தைப்பொங்கல் (பொங்கல் வைக்க நல்லநேரம் காலை 9.30 முதல்10.30 வரை)
    * கரிநாள்
    * சபரிமலையில் மகரஜோதி தரிசனம்
    * சந்திராஷ்டமம் - சுவாதி, விசாகம்

    15-ம் தேதி சனிக்கிழமை :

    * மாட்டுப்பொங்கல்
    * திருவள்ளுவர் தினம்
    * சனிப்பிரதோஷம்
    * கரிநாள்
    * சந்திராஷ்டமம் - விசாகம், அனுஷம்

    16-ம் தேதி ஞாயிற்று கிழமை :


    * உழவர் திருநாள்
    * காணும் பொங்கல்
    * கரிநாள்
    * சந்திராஷ்டமம் - அனுஷம்

    17-ம் தேதி திங்கள் கிழமை  :

    * பௌர்ணமி
    * வடசாவித்திரி விரதம்
    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம் -  கேட்டை
    காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது.
    சிவபெருமானின் ஐந்து குமாரர்களாக கணபதி, முருகன், பைரவர், வீரபத்திரர், சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. ஐவரில் மகா பைரவர் பொதுவாக எல்லா ஆலங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையிலே நிர்வாணக் கோலத்தினராய் நீல மேனியராய் நாய் வாகனத்துடன் காட்சி தருபவர்தான் பைரவர் பெருமாள்.

    காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்ய பூஜா விதி கூறுகிறது. அதேபோல ஆலயத்தின் மற்ற திருச்சன்னதிகளை பூட்டிச் சாவியை பைரவர் பாதத்தில் வைத்து விட்டு அதன்பின் வெளிக் கதவை பூட்டிச் சாவியை எடுத்துச் செல்லும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

    சிவபிரானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றியவர் காசியம்பதியில் சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ஆணவம் கொண்ட பிரம்மனின் சிரம் கொய்தவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். முனிவரின் சாபத்திலிருந்து தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்தவர்.
    சனியை சனீஸ்வரராக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமைச் சேர்த்தவர் என்ற பெருமைமிகு சிறப்புகளைக் கொண்டவர். இவரைக் காலபைரவர், மார்த்தாண்ட பைரவர், க்ஷேத்ரபாலகர், சத்ரு சம்ஹார பைரவர், வடுக பைரவர், சொர்ணகர்சன பைரவர் என்று பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறோம்.

    ஒரு சமயம் அந்தகாசுரன் என்னும் அரக்கனின் அட்டூழியங்களை ஒழிக்க தேவர்கள் சிவனாரை வேண்ட ஈசன் தன் இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்க அது விஸ்வரூபமெடுத்து ஒன்றாகி, ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்காகி அசுரர்களை முழுவதுமாக அழித்து தேவர்களுக்கு அமைதியை வழங்கியதாகவும் இதனால் மகிழ்வடைந்து தேவர்கள் அறுபத்து நான்கு யோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் தற்சமயம் தம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்ட பரைவ யோகினிகள் யார், யார் என்பதைக் காண்போம். அசிதாங்க பைரவர் பிராம்ஹி, குரு பைரவர் மாகேஸ்வரி, சண்டபைரவர் கவுமாரி, குரோதான பைரவர், வைஷ்ணவி, உள் மத்த பைரவர், வாராஹி, கபால பைரவர், இந்திராணி, பீஷண பைரவர், சாமுண்டி, சம்ஹார பைரவர், சண்டிகா தேவி ஆகியோர் ஆவர்.

    தாட்சாயிணி தேவி தன் தந்தை தட்சன் செய்த யாகத்தில் தனது மருமகனான சிவனாருக்கு யாகத்தில் தரவேண்டிய அவிர்பாகத்தை தராது அவமதித்ததால் தச்சனின் மகளான பார்வதிதேவி யாக குண்டத்தில் தனது உயிரைத் தியாகம் செய்தபோது அதனால் உக்கிரநிலை அடைந்த சிவனார் தாட்சாயணியின் உடலைத் தாங்கி உலகமெல்லாம் சுற்றி அலைந்த போது திருமால் தன் சக்கரத்தால் தேவியின் உடலை பல கூறுகளாக்கி இப்பூலோகத்தில் பல இடங்களில் விழச் செய்தார் என்றும் தேவியின் உடலுறுப்புகள் விழுந்த ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு சக்தி பீடங்களாயின என்றும் அவ்வாறு ஏற்பட்ட சக்தி பீடங்களுக்குப் பாதுகாவலராக பைரவ வேடம் தாங்கி சிவப்பிரானே காவல் காத்து வருவதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
    ×