என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஐக் இயக்கத்தில் ஜீவா - ஸ்ரீதிவ்யா - சூரி - தம்பி ராமைய்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் விமர்சனம்.
    ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஜீவா மற்றும் சூரி, பொய் சொல்லி வீடுகளை விற்பதில் வல்லவர்கள். என்ன தான் மற்றவர்களுக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்தாலும், ஜீவா தனது அம்மா ராதிகாவுடன் சொந்த வீடு இல்லை என்ற வருத்தத்துடனே வாழ்ந்து வருகிறார். தனது கணவர் இறந்த நிலையில் வாடகை வீட்டில் பட்ட கஷ்டம் காரணமாக, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஜீவாவை ஊக்கப்படுத்தும் தாயாக வருகிறார் ராதிகா.

    தனது தாயின் ஆசையை நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் ஜீவா, ஒரு பெரிய மாளிகை போன்ற வீட்டில் பேய் இருப்பதாக வதந்தியை பரப்ப வைக்கிறார். இதனால் அந்த வீட்டை வாங்க யாரும் முன்வராததால், குறைவான காசு கொடுத்து அந்த வீட்டை தானே வாங்கி, தனது அம்மா ராதிகா, மாமா இளவரசன், அவரது மகள், நண்பன் சூரி உள்ளிட்டோருடன் அங்கு குடிபெயர்கிறார்.



    அதேநேரத்தில், அந்த வீட்டை உரிமை கொண்டாடி தம்பி ராமைய்யா, அவரது மனைவி தேவதர்ஷினி, மகள் ஸ்ரீதிவ்யா அதே வீட்டில் இருக்கின்றனர். முன்னதாக வீடு விற்க வந்த போது ஜீவாவை பார்த்த ஸ்ரீதிவ்யாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. தனது காதலை ஜீவாவுக்கு புரிய வைத்த பிறகு இருவரும் மகிழ்ச்சியுடன் காதலித்து வருகின்றனர். இருந்தாலும் ஜீவாவுக்கும் - தம்பி ராமைய்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட வீடு யாருக்கு சொந்தம் என்ற முடிவு தெரியும் வரை, இரு குடும்பமும் ஒரே வீட்டிலேயே தங்கும் நிலைக்கு வருகின்றனர்.

    தம்பி ராமைய்யா குடும்பத்தை அந்த வீட்டை விட்டு விரட்ட பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்யும் ஜீவா மற்றும் சூரி, அந்த வீட்டில் பேய் இருப்பது போல சூழ்நிலைகளை உருவாக்கி, பயமுறுத்துகின்றனர். ஆனால் அந்த வீட்டில் உண்மையிலேயே ஏதோ அமானுஷ்ய சக்தி இருப்பது பின்னர் தெரிய வருகிறது. இதையடுத்து, பேய் இருப்பதை உறுதி செய்ய ஜீவா, சூரி இணைந்து அரசு ஊழியரான கோவை சரளாவை வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். இதில் பேய் இருப்பது உறுதி ஆவதுடன், அவர்கள் அந்த வீட்டை விட்டு காலி செய்யும் நிலைக்கு அந்த அமானுஷ்ய சக்தி அவர்களை உந்துகிறது.

    அந்த பேயின் முந்தைய கதை என்ன? அந்த பேயை விரட்ட ஜீவா என்ன செய்தார்? ஜீவா - ஸ்ரீதிவ்யா காதல் வெற்றி அடைந்ததா? என்பது படத்தின் மீதிக்கதை.



    தொடர் சரிவுகளை சந்தித்து வந்த ஜீவா, இந்த படத்தின் மூலம் சற்றே மேலே வந்திருக்கிறார் என்று சொல்லலாம். அவரது இயல்பான நடிப்பும், காமெடி கலந்த பேச்சுமே அவரை ரசிக்க வைக்கிறது. ஒரு மகனாகவும், காதலானகவும், பேய்க்கு பயப்படும் காட்சிகளிலும்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் முழுக்க அழகு தேவதையாக வரும் ஸ்ரீதிவ்யா, காதல் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆடைகுறைப்பு நடிகைகளுக்கிடையே முழுக்க போத்திக் கொண்டு வந்தாலும், ரசிக்கர்களை கவரும் ஸ்ரீதிவ்யாவுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். ஜீவா - ஸ்ரீதிவ்யா இருவருக்கும் இடையேயான காதல் ரசிக்கும்படி இருக்கிறது.

    ஒரு அம்மாவாகவும், வீடு வாங்க வேண்டும் என்ற வைராக்கியத்துடனும், சாதாரண குடும்பப் பெண்ணாகவும் ராதிகா முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பிளாஸ்பேக்கில் வரும் ராதாரவி ஒரு தந்தையாகவும், பேயாகவும் வந்து மிரட்டியிருக்கிறார். ஜீவாவுடன் இணைந்து படம் முழுக்க வரும் சூரி, வெகு நாட்களுக்கு பிறகு தனது ஸ்டைலில் காமெடி வசனங்களை உதிர்த்திருக்கிறார். திரையில் அவரது நகைச்சுவைகள் ரசிக்கும்படி இருக்கிறது. அவருக்கு ஈடுகொடுக்கும் விதமாக தம்பி ராமைய்யாவும், தேவதர்ஷினியும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர்.



    பேய் படம் என்றாலே கோவை சரளா இல்லாமல் இருப்பதில்லை. அதற்கேற்றாற்போல் கோவை சரளா, இப்படத்தில் குறைவான காட்சிகளில் வந்தாலும் அவரது பாணியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். இளவரசு, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்டோரும் தங்கள் பங்குக்கு காமெடிக்கு கைக் கொடுத்திருக்கின்றனர்.

    புதுமுக இயக்குநர் ஐக் ஒரு புதுவிதமான காமெடி த்ரில்லர் கதையை முயற்சி செய்திருக்கிறார். பேய் படங்கள் என்றாலே ஒரே மாதிரி தான் இருக்கும் என்ற நினைப்புக்கு மத்தியில், இவரின் புதிய முயற்சி ரசிக்கும்படி இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும். சுயநலத்துடன் பிரிந்து சென்று தனித்தனியே வாழ வரும்புபவர்களை கூட்டுக் குடும்பமாக வாழ வேண்டும் என்பதை பேய் மூலமாக உணர்த்தி இருப்பது சிறப்பு.

    சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு தத்ரூபமாக இருக்கிறது. குறிப்பாக பேய் வரும் காட்சிகளை காட்டுவதில் சிறப்பாக கேமராவை பயன்படுத்தி இருக்கிறார். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டி இருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக பிரேம்ஜி பாடியிருக்கும் பாடல் ரசிகர்கள் மனதில் நிற்கிறது.

    மொத்தத்தில் `சங்கிலி புங்கிலி கதவ தொற' சற்றே தொறந்துள்ளது.
    ஷங்கர், சுரேஷ் இணை இயக்கத்தில் கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `இணையதளம்' படத்தின் விமர்சனம்.
    படத்தின் தலைப்பிற்கு ஏற்ப ஒரு இணையதளத்தில் நேரலையில் ஒரு வீடியோ ஓடிக்கொண்டிருக்கிறது. டெல்லி கணேஷ் தனது மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக தனது உயிரை இழந்து வரும் டெல்லி கணேஷின் உயிர் எவ்வாறு பிரிகிறது என்றால், இணையதளத்தில் அந்த வீடியோவை நேரலையில் பார்க்கும் பயனர்களிகன் எண்ணிக்கை கூட கூட அவர் மரண கட்டத்தை நெருங்குகிறார்.

    இவ்வாறாக அந்த வீடியோவின் வெயிட் அதிகரிக்க, இதுகுறித்த தகவல் அறியும் மாநகர போலீஸ் கமிஷனர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு முடுக்கிவிடுகிறார். இணையதளத்தின் மூலமாக நடைபெறும் குற்றம் என்பதால் இணைய குற்றப்பிரிவுக்கு (Cyber Crime) உத்தரவு செல்கிறது. அந்த பிரிவின் பொறுப்பாளராக வரும் ஸ்வேதா மேனன், ஈரோடு மகேஷ், இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போதே, அந்த வீடியோவிற்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து டெல்லி கணேஷ் இறந்து விடுகிறார்.



    இதையடுத்து, இந்த குற்றப்பிரிவுக்கு சிறப்பு துணை ஆணையராக வரும் நாயகன் கணேஷ் வெங்கட்ராம், இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த இணையதளத்தில் அடுத்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது. அந்த வீடியோவில் பத்திரிக்கை நிரூபர் ஒருவர் உயிருக்கு போராடி வருகிறார். ஒரு கட்டத்தில் அந்த வீடியோவிற்கான இணைய பார்வையாளர்களும் அதிகரிக்க பத்திரிக்கையாளரும் உயிரிழக்கிறார். இந்த சம்பவத்தை அடுத்து, ஈரோடு மகேஷ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுகிறார்.

    இருந்தாலும் மீண்டும் பணிக்கு திரும்பும் உத்வேகத்தில், இந்த குற்றம் குறித்து கண்டறிய, மகேஷ் தன்னால் இயன்ற உதவியை செய்து வர அடுத்த வீடியோவில் கணேஷ் வெங்கட்ராமுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்னவெக்றால், இதுவரை அந்த குற்றம் குறித்து கண்டறிய உதவிய ஈரோடு மகேஷ் மரண மேடையில் நிற்க, இந்த கொலைகளை செய்வது யார் என்பது தெரியாமல் கணேஷ் குழம்பி நிற்கிறார்.



    மகேஷை காப்பாற்றுவதற்காக நாயகன் கணேஷ் வெங்கட்ராம் ஒருபுறம் போராட, அவரது முயற்சி பலிக்காமல், ஈரோடு மகேஷ்-ம் இறந்துவிடுகிறார். அடுத்ததாக மரண மேடைக்கு செல்லும் ஸ்வேதா மேனனை கணேஷ் வெங்கட்ராம் மீட்டாரா? இந்த சம்பத்திற்கு காரணம் யார்? ஏன் வரிசையாக இணைய கொலைகளை செய்கிறார்? அதன் பின்னணியில் நடந்தது என்ன? என்பது படத்தின் மீதிக் கதை.

    பொதுவாக போலீஸ் அல்லது ராணுவ வேடத்திலேயே அதிகளவில் நடித்திருக்கும், கணேஷ் வெங்கட்ராம், இப்படத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஸ்வேதா மேனன் தனது முதிர்ந்த நடிப்பால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அழகான போலீஸ் அதிகாரியாக திரையில் ரசிக்க வைக்கிறார்.

    சுகன்யா ஸ்ரீதரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. ஈரோடு மகேஷ் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், காமெடியில் தோல்வியையே சந்தித்திருக்கிறார். படம் முழுக்க காமெடிக்காக அவர் செய்த முயற்சிகள் அனைத்துமே தோல்வியிலேயே முடிந்திருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ் அவர்களது முதிர்ந்த நடிப்பால் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கின்றனர். படவா கோபி, கௌசிகா உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிக்கும்படி இருந்தது.



    ஷங்கர், சுரேஷ் என இரு இயக்குநர்கள் இயக்கியிருந்தும், படம் சொல்லும்படியாக பெயர் வாங்கவில்லை. இணையதளத்தின் மூலமாக நடைபெறும் கொலையை தெளிவாக காட்டியிருந்தாலும், அதற்கான திரைக்கதையை சரிவர அமைக்கவில்லை. அது படத்தை பார்ப்பவர்களுக்கு சுளிப்பை உண்டாக்குகிறது. கொலை பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நில இடங்களில் த்ரில்லர், திருப்புமுனைகள் இருந்தாலும் அதை காட்சிப்படுத்துவதில் தவறியது படத்திற்கு பலவீனம். பல இளம் இயக்குநர்கள் அவர்களது முதல் படத்திலேயே சிறிய விஷயங்களை காட்சிப்படுத்தி வெற்றி பெற்று, தமிழ் சினிமாவில் ஒரு நிலையான பெயர் வாங்கும் நிலையில், இரு இயக்குநர்கள் இணைந்தும் படத்திற்கு முழுமையை அளிக்க தவறிவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

    ஏ.கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும், அரோல் கோரெலியின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. ஒருசில பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `இணையதளம்' வேகமில்லை.
    புதுமுக நடிகர்கள் யாகவன், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘மங்களாபுரம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    டெல்லிகணேஷ் தனது பேரன், பேத்திக்கு கதை சொல்லுவதாக படத்தின் கதை ஆரம்பிக்கிறது.

    மங்களாபுரம் ஜமீனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் திருமணமாகி ஜமீனுடன் இருக்கிறான். இளையவனான நாயகன் யாகவன் சென்னையில் படித்து வருகிறார். படிக்கும்போதே நாயகி காயத்ரியை காதலித்து அவளை திருமணமும் செய்துகொள்கிறான்.

    சொந்த ஊருக்கு திரும்பும்போது அவரது அப்பா, அண்ணன், அண்ணி அனைவரும் இறந்துபோயிருக்கிறார்கள். அண்ணன், அண்ணி புகைப்படத்துக்கு மட்டும் மாலை போடப்பட்டிருக்க, அப்பாவின் புகைப்படம் இல்லாதது குறித்து யாகவனிடம் அதுபற்றி கேட்கிறார் காயத்ரி. ஆனால், யாகவனோ அவளிடம் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு நழுவுகிறார்.

    அன்றுமுதல் காயத்ரியின் உடம்பில் ஒரு ஆவி புகுந்துகொண்டு, யாகவனை அவளிடம் சேரவிடாமல் தடுக்கிறது. இறுதியில், அவள் உடம்பில் ஆவி புகுந்திருப்பதை அறியும் யாகவன் ஜோசியரின் உதவியை நாடுகிறான். அவரோ அந்த வீட்டில் நடந்த அனைத்து விவரங்களையும் சொன்னால், அதற்கு தீர்வு சொல்வதாக கூறுகிறார்.

    யாகவன் வேறு வழியில்லாமல் நடந்ததை கூறுகிறார். அதன்படி, நிறைமாத கர்ப்பிணியான தனது அண்ணி கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக கிடந்ததாகவும், அவள் இறந்த சோகத்தில் அண்ணனும் சில காலத்தில் இறந்துவிட்டதாகவும் கூறுகிறார்.

    அண்ணியை மர்மமான முறையில் கொன்றவர் யார்? காயத்ரியின் உடம்பில் புகுந்துள்ள ஆவி யாருடையது? அவளுடைய உடம்பில் எதற்காக அந்த ஆவி புகுந்துள்ளது? என்பதற்கெல்லாம் பிற்பாதியில் விடை சொல்லியிருக்கிறார்கள்.

    யாகவன் ரொம்பவும் அப்பாவியான தோற்றத்துடனே படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். புதுமுகம் என்பதால் இவரிடமிருந்து பெரியதாக நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருப்பினும், கொஞ்சம் சிரத்தை எடுத்து நடித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஏனென்றால், இவருக்கான காட்சிகள் ரொம்பவும் குறைவுதான். அந்த காட்சிகளுக்காகவாவது கொஞ்சம் சிரமம் எடுத்திருக்கலாம்.

    அதேபோல், நாயகி காயத்ரியின் கதாபாத்திரமும் படத்தில் பெரிதாக இல்லை. அவரும் ஏதோ பொம்மை போல் வந்து போயிருக்கிறார். நாயகனுடன் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் இல்லை.

    அண்ணியாக வரும் கமலிக்குத்தான் படத்தில் நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இருந்திருக்கிறது. படத்தின் இன்னொரு கதாநாயகி இவர்தான் என்று சொல்லலாம். ஆக்ரோஷமான காட்சிகளில் இவரது நடிப்பு பலே சொல்ல வைக்கிறது. செண்டிமென்டிலும் ஓகே சொல்ல வைக்கிறார்.

    ஜமீனாக வரும் அஜய் ரத்தினம் தனது அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார். டெல்லி கணேஷ் வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார். போண்டா மணி தனது குழுவுடன் செய்யும் காமெடிகள் எல்லாம் பெரிதாக ரசிக்க முடியவில்லை.

    இயக்குனர் கோபால், செண்டிமென்ட் கலந்த ஒரு திரில்லர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் திரில்லருக்குண்டான காட்சிகளை சரியாக அமைக்காதது வருத்தமே. அதேபோல், கதாபாத்திரங்களிடம் சரியாக வேலை வாங்க தவறியிருக்கிறார்.

    இளநாயகனின் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. பின்னணி இசையிலும் வேகம் கூட்டியிருக்கலாம். திருஞானசம்பந்தத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு கைகொடுக்கவில்லை.

    மொத்தத்தில் ‘மங்களாபுரம்’ மங்களமில்லை.
    கன்னடத்தில் ‘டேஞ்சர் ஜோன்’ என்ற பெயரில் வெளிவந்த திகில் படம் ‘மர்மக்காடு’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இதுகுறித்த விமர்சனத்தை பார்ப்போம்.
    திருமணமான புதுத் தம்பதியர் தங்களது தேனிலவை கொண்டாட காட்டுப் பகுதிக்குள் செல்கிறார்கள். இவர்கள் செல்லும் வழியிலேயே காரை நிறுத்தி, இருவரும் உறவு கொள்ள முயற்சிக்கிறார்கள். அப்போது மர்மமான ஒரு உருவம் இவர்களை தாக்கி கொலை செய்கிறது. இதையடுத்து மீடியா பரபரப்பாகிறது.

    அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து பல்வேறு தகவலும் பரவுகிறது. இதையடுத்து டிவி ரிப்போர்ட்டரான நாயகி ரம்யா, இந்த கொலை பற்றி தனியாக ஒரு நிகழ்ச்சி தயாரிக்கப்போவதாக சொல்லி காட்டுக்குள் தனது நண்பர்களுடன் புறப்படுகிறார்.

    அவரை காதல் செய்வதாக சுற்றி வரும் நாயகனையும் கூடவே அழைத்துச் செல்கிறாள். சென்ற இடத்தில் நாயகியின் நண்பர்களும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அந்த மர்ம உருவம் பெண்களையே குறி வைத்து தாக்குகிறது. இதற்கு காரணம் என்னவென்பதை நாயகி மற்றும் நாயகன் கண்டுபிடித்தார்களா? அந்த மர்மமான உருவத்தில் சுற்றும் நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.



    கன்னடத்தில் டேஞ்சர் ஜோன் என்ற பெயரில் வெளிவந்த படமே தமிழில் மர்மக்காடு என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இயக்குனர் தேவராஜ் குமார் படத்தில் திகில் ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய வைத்திருக்கிறார். ஆனால், அதை சரியாக படமாக்கப்படாததுதான் மிகப்பெரிய குறையாக தெரிகிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே படமாகியிருந்தாலும், காட்சிகள் தெளிவாகத்தான் இருக்கின்றன. இருப்பினும் திகில் ஏற்படாதது வருத்தமே.

    படத்தின் நாயகி ரம்யா ஏற்கெனவே பார்த்த முகம்தான் என்றாலும், இந்த படத்தில் ரிப்போர்ட்டருக்குண்டான மிடுக்கு இவருக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். திகில் காட்சிகளிலும் அதற்குண்டான முகபாவனைகளை கொடுக்க தவறியிருக்கிறார். நாயகன் ரூபேஷ் ஷெட்டிக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்புகள் ரொம்பவும் குறைவுதான். இருப்பினும், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது.

    மற்றபடி படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை. வீனஸ் மூர்த்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. சதீஷ் ஆர்யனின் பின்னணி இசை இரைச்சலாகவே இருக்கிறது. பாடல்களும் பெரிதாக இல்லை.

    மொத்தத்தில் ‘மர்மக்காடு’ மர்மம் இல்லை.
    ஏலியன்களை மையப்படுத்தி ஏலியன் கவனன்ட் என்ற பெயரில் ஹாலிவுட் படம் ஒன்று உருவாகியுள்ளது. அந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
    பூமியிலிருந்து 2000 பேர் கொண்ட குழு ஒரு கிரகத்தை நோக்கி விண்வெளி கப்பலில் தனது பயணத்தை தொடருகிறது. அந்த கிரகத்தில் மனிதர்கள் வாழமுடியும் என்று கிடைத்த தகவலின்படி மனிதனின் கருமுட்டையை எடுத்துக்கொண்டு அந்த கிரகத்தை நோக்கி பயணிக்கிறார்கள். அந்த கிரகத்தை சென்றடைய அவர்களுக்கு 8 வருடங்கள் ஆகும். எனவே, அவர்கள் பயணிக்கும் விண்வெளிக் கப்பலில் அனைவரும் தூக்கத்திலேயே இருக்கும்படி செய்து, அவர்களை ஒரேயொரு ரோபோ மட்டும் கண்காணித்துக் கொண்டே செல்கிறது.



    இந்த பயணத்தின்போது விண்வெளியில் திடீரென ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டு இவர்கள் பயணிக்கும் விண்வெளி கப்பலில் பழுது ஏற்பட்டு விடுகிறது. இதனால், தூக்கத்தில் இருந்த சிலபேர் விழித்துக் கொள்கிறார்கள். மேலும், சில பேர் மரணமும் அடைகிறார்கள். அவர்களில் விண்வெளி கப்பலின் கேப்டனும் மரணமடைகிறார். இதனால், கேப்டன் பொறுப்பை வேறொருவர் ஏற்றுக் கொண்டு விண்வெளி கப்பலில் ஏற்பட்ட பழுதை நீக்க முயற்சிக்கிறார்கள்.

    இதற்கிடையில், இவர்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் இருந்து ஒரு சிக்னல் கிடைக்கிறது. அந்த சிக்னலை அவர்கள் ஆராயும்போது, அது அருகில் இருக்கும் ஒரு கிரகத்தில் இருந்து வருவதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த கிரகத்தை அடைய ஒருவார காலம் மட்டுமே ஆகும் என்பதால், அந்த கிரகத்திற்கு சென்று அங்கு உயிர்வாழ்வதற்கு ஏதாவது வழி கிடைக்கிறதா? என்பதை அறிய அங்கு பயணப்படுகிறார்கள். அந்த கிரகத்தையும் அடைகிறார்கள்.



    விண்வெளிக் கப்பலை விண்வெளியில் நிலைநிறுத்திவிட்டு, 10 பேர் கொண்ட குழு மட்டும் அந்த கிரகத்திற்குள் சிறு கப்பல் மூலம் இறங்குகிறார்கள். அவர்களில் சிலபேரை அங்குள்ள ஏலியன்ஸ் உடம்பில் புகுந்து கொன்றுவிடுகிறது. இவர்கள் வந்த சிறு கப்பலையும் அது அழித்துவிடுகிறது. இதனால், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்வெளி கப்பலுக்கு இவர்களால் எந்தவொரு செய்தியையும் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

    இறுதியில் அந்த ஏலியன்ஸ்களிடமிருந்து மற்றவர்கள் எப்படி தப்பித்தார்கள்? இவர்கள் தேடிச்செல்லும் கிரகத்தை இறுதியில் அடைந்தார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.



    படத்தில் பிரம்மாண்டம் என்று சொல்லப்போனால் கிராபிக்ஸ் காட்சிகள்தான். ராட்சத விண்வெளி கப்பல், ஏலியன்ஸ் என அனைவற்றையும் ரொம்பவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் கதாநாயகன், கதாநாயகி என யாரையும் தனியாக பிரிக்காமல் அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

    இருப்பினும், ஒரு ஹாலிவுட் படத்தை பார்க்கிற உணர்வு இந்த படத்தை பார்க்கும்போது கிடைக்கவில்லை என்பதுதான் பலவீனம். பின்னணி இசை படத்திற்கு பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏலியன்ஸ்களின் அட்டகாசத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக காட்டியிருக்கலாம்.



    படத்தில் பெரும்பாலும் வசனங்கள் பேசிக்கொண்டே செல்வதால் படத்தின் விறுவிறுப்பு தடை ஏற்பட்டிருக்கிறது. இப்படியாக சிறு சிறு விஷயங்களை கவனத்தில் கொண்டிருந்தால் இப்படம் கண்டிப்பாக ஹாலிவுட் தரத்திற்கு இருந்திருக்கும் என்பது மட்டும் உண்மை.

    மொத்தத்தில் ‘ஏலியன் கோவினன்ட்’ புதுமையில்லை. 
    கே.ஜி.வீரமணி இயக்கத்தில் ஜெய ஆனந்த் - ரஹானா இணைந்து நடித்திருக்கும் `திறப்பு விழா' படத்தின் விமர்சனம்.
    நடிகை ரஹானா அவளது அப்பாவான ஜி.எம்.குமாருடன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். மறுபுறத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான அப்பாவால் தனது குடும்பத்தை இழந்த நாயகன் ஜெயஆனந்த், அவனது சொந்த ஊரில் உள்ள மதுபானக் கடையில் வேலைக்கு வருகிறான்.

    குடிப்பழக்கத்தை வெறுக்கும் நாயகன், குடியால் ஆங்காங்கே மயங்கி விழுந்துக் கிடக்கும் குடிமகன்களின் வீட்டிற்கு தகவல் தெரிவித்து, தேவையான பண உதவிகளையும் செய்கிறார். இவ்வாறு தனக்கென ஒரு கொள்கையுடன் வாழ்ந்து வரும் ஜெயஆனந்தின் மீது நாயகி ரஹானாவுக்கு காதல் வருகிறது. நாயகன் மீதான தனது காதலை அவரிடம் தெரிவித்த போது, அவளை காதலிக்க ஜெய ஆனந்த் மறுப்பு தெரிவிக்கிறார்.

    இதுஒருபுறம் இருக்க அந்த மதுபானக் கடையின், பார்களில் போலி மதுபான விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது நாயகனுக்கு தெரிய வர, அதனை எதிர்த்து போராடும் ஜெய ஆனந்த் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறார். இவரது போக்கு பிடிக்காத போலி மதுபான கும்பல் இவரை போலீசில் சிக்க வைக்கிறது.



    போலீசும் போலி மதுபான கும்பலுக்கு ஆதரவாக ஜெயஆனந்த்தை கைது செய்து மிரட்டி அனுப்புகிறது. இந்நிலையில், தனது மகளின் மனதை புரிந்து கொண்ட ரஹானாவின் தந்தை ஜி.எம்.குமார், அவளை திருமணம் செய்து கொள்ளும்படி நாயகனிடம் கேட்கிறார். தனக்கென சில கொள்ளைகள் இருப்பதாக கூறி மறுப்பு தெரிவிக்கும் ஜெயஆனந்த், பின்னர் ஜி.எம்.குமார் குடிப்பதை நிறுத்தினால் தான் நாயகியை திருமணம் செய்து கொள்வதாக தெரிவிக்கிறார்.

    நாயகனின் கோரிக்கையை ஏற்கும் ஜி.எம்.குமார் கடைசியாக ஒரு முறை குடிப்பதாக கூறி, தனது நண்பர்களுக்கும் மது வாங்கிக் கொடுக்கிறார். அந்த மதுவில் மர்ம கும்பல் போலி மதுபானத்தை கலந்து வைக்கிறது. அதனை குடித்த நாயகியின் தந்தை உள்பட பலரும் உயிரிழந்து விடுவதால், மறுபடியும் ஜெயஆனந்தை போலீசார் கைது செய்கின்றனர்.



    பின்னர் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் நாயகன், தனது கொள்கையான அந்த மதுபானக் கடையை மூட என்ன செய்தார்? மதுபானக் கடையை மூடுவதற்காக நாயகனுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தார்களா? மதுபானக் கடைக்கு மூடுவிழா நடந்ததா? நாயகன் - நாயகி என்ன ஆனார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

    புதுமுக நாயகன் ஜெயஆனந்த் தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மதுக்கடைக்கு எதிராக போராடும் ஒரு இளைஞனாக அவரது துடிப்பு படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. நாயகி ரஹானா தனது கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார். அவரது இயல்பான நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

    குடிகாரர்களாக ஜி.எம்குமார், பசங்க சிவக்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். மற்றபடி பாவா லஷ்மன், முனிஸ், விஜய் சந்தர், கவிதா பாலாஜி, ரெங்கநாயகி என அனைவரும் அவரவர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக அளித்திருக்கின்னறர்.



    தற்போதைய சூழலின் முக்கிய பிரச்சனையாக கருதப்படும் மதுபானக் கடையால் ஏற்படும் பாதிப்பு, மதுப்பிரியர்களால் அவர்களது குடும்பத்திற்கு ஏற்படும் பிரச்சனையை சிறப்பாக திரையில் காட்டியிக்கிறார் படத்தின் இயக்குநர் கே.ஜி.வீரமணி. மது, மதுக்கடையால் ஏற்படும் பிரச்சனையை சுளிப்பு இல்லாமல் சிறப்பாக இயக்கிப்பதற்காக வீரமணிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். நிலம் என்பவரின் வசனங்கள் படத்திற்கு மேலும் பலத்தை கூட்டியிருக்கிறது. மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தை இழக்காமல், தனது மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை படத்தின் இந்த மூலம் உணர்த்தி இருக்கின்றனர். குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல்நலத்தை கெடுக்கும் என்பதற்கு சாட்சியாக தற்போது நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், மதுவுக்கு எதிராக இப்படம் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தின் பின்னணி இசையில் வசந்தரமேஸ் முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது.

    மொத்தத்தில் `திறப்பு விழா' மதுபானக்கடையின் மூடு விழா.
    எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - ரெஜினா கசாண்ட்ரா - ஸ்ருஷ்டி டாங்கே - சூரி நடிப்பில் உருவாகியுள்ள `சரவணன் இருக்க பயமேன்' படத்தின் விமர்சனம்.
    டெல்லியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசியக் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மதன் பாப் பிரியானியில் சிக்கன் பீஸ் இல்லாத காரணத்தால் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்குகிறார். அந்த  கட்சியில் தமிழக தலைமைப் பொறுப்புக்கு சூரி பொறுப்பேற்கிறார். மறுபுறத்தில் வேலை இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் நாயகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது நண்பன் யோகி பாபு, சூரியுடன் அந்த கட்சியில் இணைகின்றனர்.

    பின்னர் போஸ்டர் அடிக்கும் பிரச்சனை ஒன்றில் சூரிக்கும், அதே ஊரிலேயே அரசியல்வாதியாக இருக்கும் மன்சூர் அலிகானுக்கும் இடையே புதிய பிரச்சினை ஒன்று கிளம்ப, சூரியை கொல்லப்போவதாக மன்சூர் அலி கான் மிரட்டுகிறார். இதனால் பயப்பிராந்திக்கு உள்ளாகும் சூரி தலைமறைவாகி, பின்னர் உதயநிதியின் அறிவுரைப்படி துபாய்க்கு செல்கிறார்.

    இந்த இடைவெளியில் உதயநிதி கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல, இந்த தகவல் மதன்பாப்புக்கு தெரிய வருகிறது. இதையடுத்து கட்சியின் தலைவராக உதயநிதி நியமிக்கப்படுகிறார்.



    இந்நிலையில், சிறிய வயதில் ஊரை விட்டு சென்ற நாயகனின் தோழியும், தனது எதிரியுமான ரெஜினா, மீண்டும்  உதயநிதி இருக்கும் ஊருக்கு வருகிறார். இருவரும் மீண்டும் சண்டைப்பிடிக்கிறார்கள். எனினும் ரெஜினாவை பார்த்த உடனேயே உதயநிதிக்கு பிடித்து விடுகிறது. அவள் மீது காதல் கொள்கிறார். இந்நிலையில், துபாயில் இருந்து வரும் சூரி, தனது வாழ்க்கையை வீணாக்கியது இவன் தான். இவனை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று உதயநிதிக்கு எதிராக சூரி களமிறங்க, ரெஜினாவும் சூரியுடன் இணைந்து உதயநிதியை தொல்லை செய்கிறார்.

    இந்த கூட்டணிக்கு எதிராக உதயநிதிக்கு உதவி பண்ணும் விதமாக, உதயநிதியின் முன்னாள் தோழியான, உயிரிழந்த ஸ்ருஷ்டி டாங்கே ஆவியாக வந்து அவருக்கு உதவி செய்கிறார்.

    இறுதியில், ரெஜினா, சூரி கூட்டணி வெற்றி பெற்றதா? ஸ்ருஷ்டி உடன் இணைந்து ரெஜினாவை, உதயநிதி காதலிக்க வைத்தாரா? அவர்களின் அரசியல் பயணம் என்ன ஆனது என்பது படத்தின் மீதிக்கதை.



    முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் அரசியல் சாயல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும், நடனம் ஆடுவதிலும் முந்தைய படத்தை விட தற்போது மெருகேறி இருக்கிறார்.

    ரெஜினா, படம் முழுக்க ஸ்லீவ்லெஸிலே வந்து ரசிக்க வைக்கிறார். உதயநிதிக்கு எதிராக சூரியுடன் சேர்ந்து ரெஜினா போடும் ஆட்டம் ரசிக்கும் படி இருக்கிறது. ஒரு பாடல் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே அவரது கதாபாத்திரத்திற்கு தேவையானதை பக்காவாக கொடுத்திருக்கிறார்.



    யோகிபாபு எப்போதும் போல தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக அவரை பார்க்கும் போதே சிரிப்பு வருகிறது, அந்தளவுக்கு தனது முக பாகுபாடுகளை காட்டுகிறார். காமெடி வில்லனாக நடித்திருக்கும் சூரி இப்படத்தில், உதயநிதிக்கு எதிராக செயல்படுகிறார். மன்சூர் அலி கான் காமெடி கலந்த வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.

    மற்றபடி லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், சாம்ஸ், ரவி மரியா என அனைவரும், அவரவர் பங்குக்கு படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளனர்.

    கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது. காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி.இமானின் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களை பார்ப்பதற்கும் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `சரவணன் இருக்க பயமேன்' காமெடி அரசியல் 
    சக்தி ராஜசேகரன் இயக்கத்தில் கலையரசன் - சாத்னா டைட்டஸ் இணைந்து நடித்திருக்கும் `எய்தவன்' படத்தின் விமர்சனம்.
    சென்னையில் தனது அப்பா வேல ராமமூர்த்தி, அம்மா, தங்கையுடன் வசித்து வருகிறார் நாயகன் கலையரசன். கலையரசனும் அவரது நண்பன் ராஜ்குமாரும் இணைந்து, பணம் எண்ணும் எந்திரத்தை விற்பனை செய்யும் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகின்றனர். சிறுவயது முதலே கலையரசனின் தங்கையை மருத்துவராக்க வேண்டும் என்று அவரது குடும்பமே ஊக்குவித்து வருகிறது. மறுபக்கம் கலையரசனின் முறைப் பெண்ணான நாயகி சாத்னா டைட்டஸ், போலீஸ் அதிகாரியாக வருகிறார். கலையரசனுடன் பேசுவதற்காகவும், அவருடன் பழகுவதற்காகவும், கலை வசிக்கும் பகுதியிலேயே பணிமாற்றம் கேட்டு வருகிறார்.

    இதில் 12 வகுப்பு இறுதித்தேர்வில் உயர்ந்த மதிப்பெண் எடுத்த தனது தங்கையை, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்க கலை முயற்சி செய்கிறார். அதற்காக மருத்துவ கவுன்சிலிங்கிற்கும் அழைத்து செல்கிறார். உயர்ந்த மதிப்பெண்கள் எடுத்தும் கலையின் தங்கைக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.



    தனது தங்கையை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கும் கலை, பின்னர் சில தனியார் கல்லூரிகளை தொடர்பு கொள்கிறார். பெரும்பாலான கல்லூரிகளில் சீட் வாங்குவதற்கு லஞ்சமாக ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது. அதன் பின்புலத்தில் இருக்கும் இடைத்தரகர்கள் மருத்துவ சீட்களை விற்று வருகின்றனர். அதில் வசூலிக்கப்படும் பணத்தை கல்லூரி நிர்வாகம் பெற்றுக் கொண்டு சீட் வழங்குகிறது.

    இவ்வாறாக தனது சொந்த நிறுவனத்தின் மூலம் சேகரித்த பணத்துடன், அவருக்கு நெருக்கமானவர்கள் என நடுத்தர வர்க்கத்தினர் பலரும் பணஉதவி செய்ய, தேவையான பணத்தை சேகரிக்கும் கலையரசன், தனது தங்கையை வில்லன் கவுதமின் தனியார் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். இதில் கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே அந்த கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.



    இதனால் தனது தங்கையின் படிப்பும் நின்று போக, தனது பணத்தையும் இழந்த கலை, பணத்தை கொடுத்த தரகரிடம், பணத்தை திரும்பத் தர சொல்லி முறையிடுகிறார். ஆனால் அந்த தரகர், கலையை போலீஸை வைத்து மிரட்டி அனுப்பி விடுகிறார். கடைசியில் பணத்தை நல்ல முறையில் அவர்களிடம் இருந்து பெறமுடியாத வேதனையில், தனது குடும்பத்துடன் வெளியே செல்கிறார். அந்த சமயம் நேரே வந்த கார் ஒன்று கலையின் தங்கை மீது மோதியதில், அவரது தங்கை சம்பவ இடத்திலேயே பலியாகிறாள். கலையரசன் பணம் கொடுத்த புரோக்கர், அந்த காரில் இருந்து இறங்கி ஓடுகிறான்.

    இதனைப் பார்த்து, கோபத்தின் உச்சிக்கே செல்லும் கலை, அதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை பழிவாங்க துடிக்கிறார். பின்னர் அவர்களை எப்படி தீர்த்துக் கட்டுகிறார்? தனது பணத்தை எப்படி மீட்டார்? இவ்வாறாக கல்லூரிகளில் நடக்கும் ஊழல், அங்கீகாரம் போன்ற பிரச்சனைகளை எப்படி களையெடுக்கிறார் என்பது படத்தின் மீதிக்கதை.

    கலையரசனுக்கு இப்படத்தின் மூலம் ஒரு நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மற்ற படங்களில் நடித்ததைப் போல இல்லாமல், இந்த படத்தில் கலையரசன் ஒரு நல்ல அண்ணனாக, சமூக அக்கறையுள்ள இளைஞனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 



    பிச்சைக்காரன் படத்தின் மூலம் பிரபலமான சாத்னா டைட்டஸ், இப்படத்தின் மூலம் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக அவதாரம் எடுத்திருக்கிறாரர். போலீஸ் அதிகாரி வேடம் சாத்னாவுக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறது. மேலும் அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.

    வில்லனாக வலம் வரும் கவுதம் பணக்காரனுக்கான ஸ்டைலிலும், லுக்கிலும் மிரட்டுகிறார். தனது கல்லூரியை நல்ல நிலைக்கு கொண்டு வர எந்த முயற்சியும் செய்ய தாயராக இருக்கும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள கிருஷ்ணா, தனது முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறார். வில்லத்தனமான கதாபாத்திரத்தில், கலையரசனுக்கு துணையாக நிற்கும் அவரது கதாபாத்திரம் படத்திற்கு கூடுதல் பலம். படம் முழுக்க எதிர்மறையான கதாபாத்திரத்தில் வந்து கிருஷ்ணா மிரட்டியிருக்கிறார்.

    ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி அவர்களது முதிர்ந்த நடிப்பால் ரசிக்க வைத்திருக்கின்றனர். தரகர்களாக வலம் வரும் சரிதிரன், வினோத் என அனைவரும் அவர்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.



    மருத்துவ படிப்பில் நடக்கும் ஊழல்கள் குறித்து பல படங்கள் வந்திருந்தாலும், அதனை பிரதிபலிக்காமல் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கும் சக்தி ராஜசேகரன் புதிய முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. சமூகத்தில் தற்போது நிலவும் பிரச்சனையை புதிய கண்ணோட்டத்தில் காட்டியிருப்பது படத்திற்கு பலம். அதுவும் பள்ளி பருவத்தை முடித்துவிட்டு கல்லூரியில் சேரவிருக்கும் மாணிகள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார். மருத்துவ கவுன்சிலிங் தொடங்கவிருக்கும் வேளையில், இந்த படத்தை ரிலீஸ் செய்திருக்கும் அவரது மனநிலையை பாராட்டலாம். இன்றளவும் கல்லூரிகள் பல அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகிறது. அதில் அதிக கட்டணங்களை செலுத்தி மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இவ்வாறு சேரும் மாணவர்கள் சரியான கல்லூரியை தேர்தெடுக்க பெற்றோர் உறுதிணையாக நிற்க வேண்டும்.  இல்லையேல் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திப்பார்கள் என்பதை எய்தவன் மூலம் சிறப்பான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார் இயக்குநர். படத்தில் வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருப்பதுடன் ரசிக்கும்படியும் இருக்கிறது.

    பிரேம் குமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைக்கிறது. பார்த்தவ் பார்கோ பின்னணி இசையில் நல்ல முயற்சி மேற்கொண்டிருக்கிறார். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக சாண்ட்ரா எமி ஆடியிருக்கும் சிங்காரி என்ற குத்துப்பாடல் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் `எய்தவன்' மருத்துவத்தின் மறுபக்கம்.
    வெற்றிமாறன் தயாரிப்பில் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் - ஆனந்த்சாமி - மிஷா கோஷல் - அஷ்வதி லால் இணைந்து நடித்திருக்கும் `லென்ஸ்' படத்தின் விமர்சனம்.
    மிஷா கோஷாலை திருமணம் செய்துகொண்ட நாயகர்களுள் ஒருவரான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் திருமண வாழ்க்கையில் கவனம் செலுத்தவில்லை. மாறாக தகாத வழியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். அதற்காக சமூக வலைதளங்களான பேஸ்புக், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு தளங்களின் மூலம் மற்ற பெண்களுடன் உரையாடுவது, அந்த பெண்களிடம் தனிப்பட்ட தகவல்களை பரிமாறிக் கொள்வது என தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

    இவ்வாறு சுமூகமாக சென்று கொண்டிருக்கும் அவரது வாழ்க்கையில், ஒரு பெண் அவரை ஸ்கைப் மூலம் தொடர்பு கொண்டு பேசுகிறாள். இருவரும் அவர்களது சொந்த தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனர். மறுநாள் அந்த பெண்ணுடன் தொடர்பு கொண்ட தகவல்களை வைத்து மர்ம நபர் ஒருவர் ராதாகிருஷ்ணனை மிரட்டுகிறார். அந்த மர்ம நபர் வேறு யாரும் இல்லை, படத்தின் மற்றொரு நாயகனான ஆனந்த்சாமி தான்.



    ஆனந்த்சாமி தனது வாழ்க்கையை, வாய்பேச முடியாத தனது மனைவி அஷ்வதி லாலுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூக வலைதளம் பக்கமே வராத ஆனந்த் சாமியின் மனைவி சமூக வலைதளத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ள, அவளது தற்கொலைக்கான காரணத்தை அறிய தீவிரம் காட்டும் ஆனந்த் சாமி, சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்கவும் முடிவு செய்கிறார்.

    இவ்வாறு தேடி வரும்போது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தான் தனது மனைவி தற்கொலைக்கு காரணமானவர் என்பதை அறியும் ஆனந்த்சாமி, ஜெயப்பிரகாஷின் மனைவியை சமூக வலைதளத்தின் மூலமாக ஈடுபடுத்தி, ஜெயப்பிரகாஷிடம் தொடர்பு கொண்டு அவரை மிரட்டுகிறார்.



    ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் அப்படி என்ன தான் தவறு செய்தார்? அவரை எதற்காக ஆனந்த்சாமி பழிவாங்க துடிக்கிறார்? ஆனந்த்சாமி மனைவி தற்கொலைக்கு காரணம் என்ன? அதன் பின்னணியில் நடந்தது என்ன? கடைசியில் ஜெயப்பிரகாஷ், ஆனந்த்சாமி என்ன ஆனார்கள்? என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.

    ஆனந்த்சாமி தனது தத்ரூபமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அவரது இயல்பான நடிப்பும், மனைவியை இழந்த அவரது ஆக்ரோஷமும் திரையில் ரசிக்கும்படியாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் வீறு நடை போடும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், சமூக வலைதளத்தாலேயே பாதிக்கப்பட்டு கதறும் காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் அஷ்வதி லால், மிஷா கோஷால் இருவருமே காட்சிக்கு தேவையானதை சிறப்பாக அளித்திருக்கின்றனர். ஆனந்த்சாமி மற்றும் ஜெயப்பிரகாஷே அதிகளவிலான காட்சிகளில் நடித்திருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாரும் பேசும்படியாக இல்லை.



    நடிகரும், இயக்குநருமான ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் சமூக வலைதளங்களால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, அதனால் அந்த குடும்பத்தினர் படும் கஷ்டங்கள், தற்கொலை என பல்வேறு கோணத்தில் தனது ஆய்வை நடத்தி இப்படத்தை இயக்கி இருக்கிறார். தற்போதைய சூழ்நிலையில், சமூக வலைதளத்தின் போக்கு வேறு கட்டத்தை எட்டியிருக்கிறது. அதனால் ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடைகள், தங்கும் விடுதிகள் என மக்கள் செல்லும் பொது இடங்களில் அவர்களது பாதுகாப்புக்கு விரோதமாக ரகசிய கேமாரக்களை வைத்து அவர்களின் அந்தரங்கங்களை பதிவு செய்து இணையதளங்களில் வெளியிடுவதன் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களால், அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை படத்தில் தெளிவாக காட்டியிருக்கிறார்.

    எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் காட்சிகள் துல்லியமாக, புதுமையானதாக இருக்கிறது. அவர் அதை காட்சிப்படுத்தி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் `லென்ஸ்' தெளிவு
    ஜேம்ஸ் கன் இயக்கத்தில் கிறிஸ் பிராட், ஜோ சைதானா, டேவ் பௌதிஸ்தா, பேபி குரூட் நடிப்பில் வெளியாகி இருக்கும் கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி 2வது பாகத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    அதிக சக்தி வாய்ந்த பேட்டரிகள் ஒரு கிரகத்தில் உள்ளது. அந்த பேட்டரிகளை பாதுகாக்கும் பொறுப்பு கார்டியன்ஸ் ஆகிய கிறிஸ் பிராட், ஜோ சைதானா, டேவ் பௌதிஸ்தா, பேபி குரூட், ராக்கெட் ஆகியோர்களிடம் இருக்கிறது. ஆனால், அந்த பேட்டரிகளில் சிலவற்றை சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிடுகிறார்கள். எனவே, அவர்களை தேடிக்கண்டுபிடித்து இவர்கள் 5 பேரும் அந்த கிரகத்தின் ராணியிடம் ஒப்படைக்கிறார்கள்.

    இதற்கு பரிசாக ராணி, பேட்டரியை திருடியதாக கைது செய்து வைத்திருந்த சைதானாவின் சகோதரியான கரேன் கில்லென்னை அவர்களிடமே ஒப்படைக்கிறார். கார்டியன்சும் கில்லென்னை கைதிபோலவே நடத்தி அழைத்துச் செல்கிறார்கள். இந்நிலையில், கார்டியன்ஸ் குழுவில் உள்ள ராக்கெட், அந்த கிரகத்தில் உள்ள சில பேட்டரிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துவிடுகிறது.



    இதையறியும் ராணி தனது படை வீரர்களை அனுப்பி கார்டியன்சை தாக்குகிறார். ஆனால், யாரென்று தெரியாத ஒருவர் அவர்களிடமிருந்து கார்டியன்சை காப்பாற்றுகிறார்கள். முடிவில் அந்த மர்ம நபர் கிறிஸ் பிராட்டின் அப்பா என்பது தெரிய வருகிறது. அவர் தனது கிரகத்திற்கு அழைத்துச் செல்லவே இங்கு வந்ததாக கூறுகிறார். முதலில் அவருடன் கிறிஸ் பிராட்டை அனுப்ப சக கார்டியன்ஸ் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

    ஆனால், கிறிஸ் பிராட்டோ அவருடன் போக விருப்பப்படவே, பேபி குரூட், ராக்கெட்டிடம் கில்லென்னை ஒப்படைத்துவிட்டு, அவள் தப்பிக்கவோ, அல்லது ஏதேனும் செய்ய நினைத்தால் அவளை கொன்றுவிடுமாறு கூறிவிட்டு, கிறிஸ் பிராட்டோவின் அப்பாவுடைய கிரகத்துக்கு மற்ற மூன்று பேரும் பயணமாகிறார்கள்.

    இதற்குள், பேட்டரியை திருடிச்சென்ற கார்டியன்சை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மைக்கேல் ரூக்கர் தலைமையில் ஒரு குழுவை அனுப்புகிறார் ராணி. அவர்கள் பேபி குரூட்டும், ராக்கெட்டும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சிறைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில், மைக்கேல் ரூக்கர் குழுவுக்குள் பதவி ஆசை ஏற்பட்டு, மைக்கேல் ரூக்கரையும் கைது செய்கிறார்கள்.



    இதன்பிறகு பேபி குரூட்டும், ராக்கெட்டும் அந்த கும்பலிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? மைக்கேல் ரூக்கர் மற்றும் கில்லெனின் நிலைமை என்னவாயிற்று? தனது அப்பாவின் கிரகத்திற்கு சென்ற கிறிஸ் பிராட் தனது சக நண்பர்களை மீட்க திரும்பி வந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

    முந்தைய பாகத்தைப் போலவே இந்த பாகமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றிருக்கிறது. கிறிஸ் பிராட், ஜோ சைதானா, டேவ் பௌதிஸ்தா, பேபி குரூட் முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் நடித்து அசத்தி இருக்கின்றனர். கரேன் கில்லென் குறைவான காட்சிகளில் வந்தாலும், காட்சிக்கு தேவையான பங்கை அளித்திருக்கிறார். ரங்கூனான ராக்கெட் செய்யும் வம்புகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் பேபி குரூட்டாக வரும் சிறு மரம் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன.



    குறிப்பாக மைக்கேல் ரூக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது, அவரை காப்பாற்றுவதற்காக இது செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் தியேட்டரை கலகலப்பாக வைத்திருக்கிறது. ரூக்கர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அனைவரையும் ஒரே விசிலில் துவம்சம் செய்வது மாஸ்.

    இயக்குநர் ஜேம்ஸ் கன், இப்படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தையும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார். கார்டியன்ஸ் அனைவரும் அண்டத்திலேயே சுற்றிக்கொண்டு வரும்படி தத்ரூபமாக திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. அவர்களின் உடல்மொழி, உருவங்கள் என அனைத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். திடீரென கிறிஸ் பிராட்டோ வரும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்படி இருப்பது சிறப்பு. காட்சிகளும் ரசிக்கும்படி இருப்பது படத்திற்கு ப்ளஸ். அண்டத்தை காட்டுவதில் ஒரு புதுமுயற்சியை எடுத்திருப்பதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

    படத்தின் கிராபிக் காட்சிகள் அனைத்தும் ரொம்பவும் தத்ரூபமாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, பேபி குரூட் அட்டகாசங்களை கிராபிக்சில் செய்த காட்சிகள் எல்லாம் அருமை. ப்ரெட் ரஸ்கின், கிரெக் வூட்டின் எடிட்டிங் பணிகள் சிறப்பாக வந்துள்ளன. ஹென்றி பிரஹாம் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டைலர் பேட்ஸின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் `கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி' பாதுகாப்பு வளையம்.
    ‘லொள்ளு சபா’ ஜீவா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    நாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்யமுடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லியே வளர்க்கிறார்.

    வளர்ந்து பெரியவனானதும் ஜீவா, ஒருநாள் நாயகி சங்கீதா பட்டை பார்க்கிறார். அவளைப் பார்த்ததும் இவருக்குள் காதல் பிறக்கிறது. மறுநாளும் நாயகியை பார்க்கும் சூழ்நிலை ஜீவாவுக்கு கிடைக்க இருவரும் நட்பாகிறார்கள். இந்த நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.



    காதலர்களான பிறகு நாயகி கேட்கும் அனைத்தையும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொடுக்கிறார் ஜீவா. அவளுக்கு செலவு செய்வதற்காகவே தனது நண்பர் சாம்ஸிடம் சொல்லி, அவரது கம்பெனியிலேயே வேலைக்கும் சேர்கிறார். இந்நிலையில், ஜீவா வேலை விஷயமாக வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை வருகிறது.

    வெளியூர் சென்றபிறகு சங்கீதாவிடமிருந்து எந்தவொரு அழைப்பும் ஜீவாவுக்கு வரவில்லை. சந்தேகத்தின் பேரில் சென்னை திரும்பும் ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சங்கீதா மற்றொருவருடன் நெருக்கமாக பழகி வருகிறார். அதை தட்டிக்கேட்க செல்லும் ஜீவாவை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறாள் நாயகி.



    இதன்பிறகு ஜீவா நாயகியை விட்டுக்கொடுத்துவிட்டு பிரிந்து சென்றாரா? அல்லது அவளை பழிவாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    ஜீவா இதுவரை காமெடி நடிகராக வலம்வந்தவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார்.  ஹீரோவுக்குண்டான முகம், வசனம் உச்சரிக்கும் விதம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்கியிருக்கிறார். காதல் தோல்விக்கு இவர் முகத்தில் கொடுத்திருக்கும் பாவணைகள் ரசிக்குமபடியாக இருக்கிறது. இப்படத்தில் நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார். இவரது நடிப்பில் கொஞ்சம் ரஜினியின் சாயல் இருக்கிறது. அதை தவிர்த்து தனக்கேற்றவாறு தனி ஸ்டைலை ஏற்படுத்திக்கொண்டு நடித்தால் இவருக்கென்று சினிமாவில் தனி மார்க்கெட் உருவாக்கலாம்.



    சங்கீதா பட்டை சுற்றிதான் கதையே நகர்கிறது. அதை உணர்ந்து அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். சாம்ஸ், வையாபுரி ஆகியோரின் காமெடி படத்தின் இடைவேளை வரை கதையை நகர்த்தி செல்கிறது. பாண்டியராஜன் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். பதிவாளராக வரும் ஞானசம்பந்தம் பேசும் வசனங்கள் எல்லாம் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. இன்றைய கால காதலர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ளது.

    இயக்குனர் ரங்கா இன்றைய கால இளைஞர்களை காதலித்து கழட்டிவிட்டு செல்லும் பெண்களுக்கு புகட்டும் பாடமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். தங்களுடைய காதலிக்காக ஆண்கள் எந்தளவுக்கெல்லாம் இறங்கிச் செல்கிறார்கள் என்பதையும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். காதல், ஊடல் அதனிடையே காமெடியையும் கலந்து சிறப்பாக கொடுத்திருக்கிறார்.



    ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஒயின்ஷாப்பில் வரும் பாடல் காட்சிக்கு இவர் அமைத்திருக்கும் ஒளியமைப்பு பிரமாதமாக இருக்கிறது. ஜெயா கே தாஸின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.

    மொத்தத்தில் ‘ஆரம்பமே அட்டகாசம்’ தூள்.

    ‘கபாலி’ படத்திற்கு பிறகு தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘எங்க அம்மா ராணி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    மலேசியாவில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. இவரது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றவர் திரும்பி வராததால் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், தன்ஷிகாவின் ஒரு குழந்தை திடீரென மயக்கமடைந்து கீழே விழ, அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அன்று இரவே அந்த குழந்தை இறந்து போகிறது.



    தன்னுடைய கவனிப்பில்லாமல்தான் அவள் இறந்துவிட்டாள் என்ற குற்ற உணர்வுடன் இருக்கும் டாக்டரான சங்கர் அந்த குழந்தை எதனால் இறந்தது என்பதை கண்டறிய முற்படுகிறார். அப்போது, அந்த குழந்தை வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுதான் இறந்துபோனாள் என்று கண்டுபிடிக்கிறார். அந்த குழந்தைகள் இரட்டையர்கள் என்பதால் மற்றொரு பெண்ணுக்கும் அந்த நோய் தாக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில், அந்த பெண்ணையும் அவர் சோதிக்கிறார்.

    பரிசோதனையில் அந்த பெண்ணுக்கும் வினோதமான நோய் தாக்கியிருப்பது தெரிய வருகிறது. ஒருபக்கம் தனது கணவரை தேடும் பணியிலும், மறுமுனையில் தன்னுடைய மகளை அந்த நோயிலிருந்து காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் தன்ஷிகா.



    இறுதியில், தனது கணவரை தன்ஷிகா தேடிக்கண்டுபிடித்தாரா? தன்னுடைய மற்றொரு பெண்ணையாவது காப்பாற்றினாரா? தன்னுடைய பெண்ணுக்கு வந்துள்ள அந்த விநோதமான நோய்க்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தன்ஷிகா முதலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க ஒப்புக்கொண்டதற்காக அவரை பாராட்டலாம். இருப்பினும், தனது குழந்தையை காப்பாற்ற நினைக்கும் பரிதவிப்பு, தனது கணவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் துடிதுடிப்பு இவற்றில் எல்லாம் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிக்கலாமோ என்று தோன்றுகிறது. மற்றபடி, ஒருசில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.



    தன்ஷிகாவின் குழந்தைகளாக வரும் வர்ணிகா, வர்ஷா இருவரும் இந்த படத்திற்குண்டான தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். நமோ நாராயணா சொக்கு என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைக்கிறார். இவருக்கு ஒருசில காட்சிகள் என்றாலும் தனது நடிப்பில் நிறைவை கொடுத்திருக்கிறார். டாக்டராக வரும் சங்கர்ஸ்ரீ ஹரி புதுமுகம் என்றாலும் அவருடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.



    இயக்குனர் பாணி படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. தன்ஷிகா தொலைந்துபோன தனது கணவரை ஒரு பக்கம் தேடுகிறார்? மற்றொரு பக்கம் தனது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார்? இரண்டு பேரின் கதையையும் முழுதாக சொல்லாமல் அந்தரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். படம் பார்ப்பவர்களுக்கு படத்தில் என்ன கதை இருக்கிறது என்பதே புரியவில்லை. அதேபோல், அம்மா செண்டிமென்டும் பெரிதாக எடுபடவில்லை.

    இளையராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். அம்மாவை பற்றிய பாடலில் சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். குமரன், சந்தோஷ் குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக இருக்கிறது. கலர் கரெக்ஷனும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘எங்க அம்மா ராணி’ அழகில்லை.
    ×