என் மலர்tooltip icon

    தரவரிசை

    ஜிப்சி ராஜ்குமார் இயக்கத்தில் பொன்வண்ணனும், பாக்யராஜ், சாராஷெட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் `அய்யனார் வீதி' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    அய்யனார் வீதியில் வசிக்கும் பொன்வண்ணனும், பாக்யராஜும் பால்ய கால நண்பர்கள். பொன்வண்ணன் அந்த ஊரில் சாமியாடியாக இருக்கிறார். பாக்யராஜ் கோவில் பூசாரியாக இருந்துவருகிறார். பாக்யராஜின் பெண்ணான சாரா ஷெட்டி கல்லூரியில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் நாயகன் யுவனும் படித்து வருகிறார்.

    யுவனின் தாத்தா செய்த தவறுக்காக அவருடைய குடும்பத்தையே பொன்வண்ணனின் அப்பா ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார். இதனால், காலங்காலமாக அவர்கள் ஊரைவிட்டு ஒதுங்கியே இருக்கிறார்கள். இதனால், பொன்வண்ணன், பாக்யராஜ் மற்றும் ஊர்க்காரர்கள் மீது வெறுப்பில் இருக்கும் யுவனுடைய குடும்பத்தார் ஊர்க்காரர்களை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மறுமுனையில், யுவன், சாராஷெட்டியை ஒருதலையாக காதலித்து வருகிறார். சாராவோ யுவனை கண்டுகொள்வதாக இல்லை. அதேநேரத்தில், பொன்வண்ணனின் மகளான சிஞ்சு மோகன் யுவனின் மீது ஆசையாக இருக்கிறாள்.



    இந்நிலையில், அய்யனார் வீதியில் ஊர் திருவிழா நடக்கவிருக்கிறது. அந்த திருவிழாவில் கள்ளச்சாராயத்தை கொடுத்து ஊர் மக்கள் அனைவரையும் கொல்ல யுவனின் சித்தப்பா மற்றும் பெரியப்பா ஆகியோர் திட்டம் போடுகிறார்கள்.  

    இந்த திட்டம் ஊர் மக்களுக்கு தெரிய வந்ததா? யுவன் குடும்பத்தாரிடமிருந்து ஊர் மக்கள் காப்பாற்றப்பட்டார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

    யுவனுக்கு இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், இப்படத்தில் அவருக்கென்று பெரிதாக வேலையில்லை. இருப்பினும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்.



    சாரா ஷெட்டிக்கு காதலை வெறுத்து ஒதுக்கும் கதாபாத்திரம். அதேநேரத்தில், சிஞ்சு மோகனுக்கு விழுந்து விழுந்து காதலிக்கும் கதாபாத்திரம். இதை இரண்டையும் இவர்கள் அழகாக செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

    படத்தில் அதிக வசனங்கள் பேசியிருப்பது நடிகர் பாக்யராஜ்தான். பூசாரியாக இருந்தாலும் ஊர் மக்கள் இவரை ஒரு பெரிய மனிதராகத்தான் பார்க்கிறார்கள். அதற்கேற்றார்போல், தனது நடிப்பில் அந்த கதாபாத்திரத்தை நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக பொன்வண்ணன், சாமியாடியாக வந்து நம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறார்.

    வில்லனாக நடித்துள்ள செந்தில்வேல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். பாக்யராஜ், பொன்வண்ணனுக்கு இணையாக நடிப்பிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார். சிங்கம் புலி, சிங்கமுத்து காமெடி படத்தில் பெரிதாக எடுபடவில்லை.



    தமிழ் சினிமாவில் அதர பழசான இரண்டு குடும்பத்துக்குள் நடக்கும் பகை, அதையொட்டி நடக்கும் பிரச்சினையையே இப்படத்தில் இயக்குனர் ஜிப்சி ராஜ்குமார் சொல்ல வந்திருக்கிறார். ஆனால் கதைக்களம், புதிய கதாபாத்திரங்கள் என வித்தியாசமான கோணத்தை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், திரைக்கதையின் சொதப்பலால் அதை சரியான கோணத்தில் சொல்ல மறந்துவிட்டார். இரண்டு குடும்பங்களுக்குள் இருக்கும் பிரச்சினையுடன் காதலை சொல்ல வந்த இயக்குனர் அதை அழுத்தமாக சொல்லாததும் வருத்தம்.

    சக்திவேலின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி இருக்கிறது. யுகே முரளியின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘அய்யனார் வீதி’ இடைஞ்சல்.
    மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ‘பாகுபலி-2’ படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தில் நிறைய முக்கியமான விஷயங்கள் சொல்ல வேண்டி உள்ளதால், படத்தின் விமர்சனமும் பெரிதாக இடம்பெற்றிருக்கிறது. வாசகர்கள் பொறுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    போரில் காலகேயனை கொன்றுவிட்டு, பிரபாஸை மகிழ்மதி அரசாங்கத்தின் அரசனாகவும், ராணாவை படைத் தளபதியாகவும் ராஜமாதாவான ரம்யாகிருஷ்ணன் பிரகடனம் செய்கிறார். அதன்பிறகு, பிரபாஸுக்கு அரசனாக முடிசூட்ட பட்டாபிஷேகம் செய்ய நாட்கள் குறிக்கிறார்கள். இதற்கிடையே, அரசனாக இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்வதற்காக பிரபாஸை பல்வேறு தேசங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் அனுப்பி வைக்கிறார். கூடவே கட்டப்பா சத்யராஜும் செல்கிறார்.

    அவ்வாறு பிரபாஸ் செல்லும்போது குந்தலதேசத்தில் கொள்ளையர்களால் நிறைய மக்கள் கொல்லப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதேநேரத்தில், குந்தலதேசத்தின் யுவராணியான அனுஷ்காவையும் பார்க்கிறார். வாள் வீச்சில் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்யும் அவரது வீரத்தை கண்டு வியக்கிறார். மேலும், அவளது அழகிலும் மயங்குகிறார்.

    அவளிடம் தன்னை அப்பாவியாக காட்டிக்கொண்டு, கவர நினைக்கிறார் பிரபாஸ். இந்நிலையில், பிரபாஸும், சத்யராஜும் குந்தலதேசத்தில் இருக்கிறார்கள் என்று ஒற்றன் மூலமாக அரண்மனையில் இருக்கும் ராணாவுக்கு தகவல் செல்கிறது. அந்த தகவலில் பிரபாஸ், அனுஷ்காவை காதலித்து வருவதாகவும் செய்தி இருக்கிறது. கூடவே அனுஷ்காவின் ஓவியமும் இருக்கிறது. அனுஷ்காவின் ஓவியத்தை பார்த்து ராணாவுக்கும் அவள்மீது ஈர்ப்பு வருகிறது.

    அவளை தன்னுடைய மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இதை தனது அம்மாவிடம் சொல்ல, அவரும் ராணாவுக்கு அனுஷ்காவை திருமணம் செய்துவைப்பதாக உறுதி கொடுக்கிறார். பெண் கேட்பதற்கு முன்பாக விலையுயர்ந்த பொருட்களை அனுஷ்காவின் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார் ரம்யா கிருஷ்ணன். தன்னுடைய வீட்டுக்கு நேரில் வந்து பெண் கேட்க தைரியமில்லாமல், தன்னை ஒன்றும் இல்லாதவர் போல் விலையுயர்ந்த பொருட்களை அனுப்புகிறார்களே என்று பதிலுக்கு அனுஷ்கா, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் பதில் கடிதம் ஒன்றை அனுப்புகிறார்.

    இதனால் ராஜமாதாவான ரம்யா கிருஷ்ணன் கோபமடைகிறார். உடனே, அனுஷ்காவை கைது செய்துவர ஆணையிடுகிறார்கள். அந்த நேரத்தில் பிரபாஸ் அங்கிருக்கும் விஷயத்தை நாசர், ரம்யா கிருஷ்ணனிடம் சொல்ல, அவர் மூலமாகவே அனுஷ்காவை கைது செய்து அழைத்துவர தூது அனுப்புகிறார்கள்.

    அதற்குள் குந்தல தேசத்தில் கொள்ளையர்கள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எதிர்க்க குந்தலதேசத்து வீரர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேளையில், பிரபாஸ் உள்ளே புகுந்து அவர்களை அடித்து துவம்சம் செய்கிறார். அவரது வீரத்தை கண்டு குந்தலதேசமே வியந்து நிற்கிறது. அப்போதுதான், பிரபாஸ் மகிழ்மதி அரசாங்கத்தின் இளவரசர் பாகுபலி என்ற விஷயத்தை கட்டப்பா போட்டு உடைக்கிறார். அதேநேரத்தில், அனுஷ்கா மீது அவர் காதல் கொண்டுள்ள விஷயத்தையும் கூறுகிறார்.

    இதைக்கேட்டு குந்தலதேச மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர். அதேநேரத்தில் மகிழ்மதி அரசாங்கத்தால் பறவை மூலமாக அனுப்பப்பட்ட தூது பிரபாஸ் கைக்கு கிடைக்கிறது. அன்னையின் கட்டளைப்படி அனுஷ்காவை கைது செய்யப்போவதாகவும், அதற்கு அனுஷ்கா ஒத்துழைக்கவேண்டும் என்றும் அன்பாக கூறுகிறார். முதலில் முரண்டு பிடிக்கும் அனுஷ்கா, அதன்பிறகு பிரபாஸ் அவளுடைய கற்புக்கும், மானத்துக்கும் எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் உயிருள்ளவரை உன்னுடன் இருப்பேன் என்று கொடுக்கும் வாக்கின் அடிப்படையில் அவனுடன் செல்ல முடிவெடுக்கிறாள்.

    ஒருபக்கம் ராணாவுக்கு அனுஷ்காவை மணம் முடித்துக் கொடுப்பதாக ரம்யா கிருஷ்ணன் வாக்கு கொடுத்திருக்கிறார். மறுபக்கம் திருமணம் செய்துகொள்வேன் என்று அனுஷ்காவிட்ம் பிரபாஸ் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த வாக்குகளால் யார் யாருக்கு? என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதை படம் முழுக்க டுவிஸ்டு மேல் டுவிஸ்டு வைத்து சொல்லியிருக்கிறார்கள்.

    படம் ஆரம்பிக்கும்போதே முந்தைய பாகத்தை நினைவுபடுத்துவதுபோல் முதல் பாகத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சிகளை கிராபிக்ஸில் காட்டுவது ரொம்பவும் அருமையாக இருக்கிறது. அதைப் பார்க்கும்போது படத்திற்குள் நாம் எப்போது நுழைவோம் என்ற எதிர்பார்ப்பு நம்மில் தொற்றிவிடுகிறது.

    பிரபாஸ் முந்தைய பாகத்தைவிட இந்த பாகத்தில் ரொம்பவும் வீறு கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கான மாஸ் காட்சிகள் ஏராளம். காட்சிக்கு காட்சி இவருடைய நடிப்பை பார்த்து நமக்கு வியப்பு வருகிறது. இந்த படத்திற்காக அவர் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். குந்தலதேசத்தில் கொள்ளையர்களுடன் சண்டைபோடும் காட்சியில் ஒரே வில்லில் மூன்று அம்புகளை வைத்து விடும் காட்சிகள், குந்தலதேசத்து மக்களிடம் பிரபாஸை மகிழ்மதியின் இளவரசன் என்று கட்டப்பா அறிமுகப்படுத்தும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்குள் ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    அனுஷ்கா முந்தைய பாகத்தில் அழுக்குத் துணியுடன் ஒருசில காட்சிகள்தான் வலம் வந்தார். இந்த பாகத்தில் அவருக்கு கூடுதல் காட்சிகள் இருக்கின்றது. அரசியாக அழகாக வந்து அனைவரையும் கவர்கிறார். வாள் சண்டையில் ரொம்பவும் கைதேர்ந்தவர்போல் நடித்திருக்கிறார். வீரம், காதல், பாசம், கருணை என எல்லாவற்றையும் தனது வித்தியாசமான முகபாவனைகளை கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். வசனங்களிலும் துணிச்சலான பெண்ணுக்குண்டான நடிப்புடன் அழகாக நடித்திருக்கிறார்.

    ராணா பகைமை கலந்த நடிப்புடன் ரசிக்க வைத்திருக்கிறார். முதல் பாதியில் ரொம்பவும் அமைதியாகவே தனது காய்களை நகர்த்தும் இவர், இரண்டாம் பாதியில் தனது முழு ஆக்ரோஷத்தையும் காட்டும் விதத்தில் ரசிகர்களின் வெறுப்பை பெறுகிறார். ரம்யா கிருஷ்ணன், ராஜமாதாவுக்குண்டான கம்பீரத்துடன் ரசிக்க வைக்கிறார். கம்பீரமாக பேசும் இவர் வசனங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு ஆக்ரோஷத்தை ஏற்படுத்துகிறது.

    நாசர் இந்த பாகத்தில் ரொம்பவும் சாதுர்யமாக காய் நகர்த்தும் சூத்ரதாரியாக பளிச்சிடுகிறார். ஒவ்வொரு முறையும் ராணா இவரை ஆசுவாசப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார். கட்டப்பாவாக வரும் சத்யராஜ் படம் முழுக்க ஆக்ரமித்திருக்கிறார். முந்தைய பாகத்தில் ஆக்ரோஷமான படைத்தளபதியாக வந்த சத்யராஜ், இந்த பாகத்தில் தனக்கே உரித்தான நக்கல், நையாண்டியிலும் கலக்கியிருக்கிறார். அவை எல்லாமே ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக, நாம் எல்லோரும் எதிர்பார்த்த கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும் காட்சியில் அவரது நடிப்பால் ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.

    கடந்த பாகத்தில் அனுஷ்காவுக்கு எந்தளவுக்கு குறைவான காட்சிகள் இருந்ததோ, அதைவிட குறைவான காட்சிகளே தமன்னாவுக்கு இருக்கிறது. முந்தைய பாகத்தில் இருந்த ஆக்ரோஷத்துடன் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்.

    எஸ்.எஸ்.ராஜமௌலியின் திரைக்கதைக்கு வேறு எந்த இயக்குனரும் ஈடுகொடுக்க முடியாது என்ற அளவுக்கு இந்த பாகத்திலும் திரைக்கதை மெச்சும்படியாக இருக்கிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் டுவிஸ்டு மேல் டுவிஸ்டாக நகர்ந்துக் கொண்டே செல்வதால் படம் பார்ப்பவர்களுக்கு எந்த இடத்திலும் சலிப்பே தட்டவில்லை. நிறைய புல்லரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கிறது. பிரபாஸ் அறிமுகமாகும் காட்சி பெரிதாக இல்லாவிட்டாலும், அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றும் ரொம்பவும் மாஸாக இருக்கிறது. சரித்திர கதையென்றாலும் அதிலும் கமர்ஷியலுக்குண்டான அம்சங்களையும் பொருத்தி அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படத்தை கொடுத்த இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

    இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா? என்பது சந்தேகம்தான். இப்படியொரு படத்தை கொடுத்ததற்காக ராஜமௌலிக்கு எவ்வளவு பெரிய உயரிய விருது கொடுத்தாலும் போதாது. அவருக்கு விருது ஒன்று கொடுக்கவேண்டுமென்றால், அதை இனிமேல் உருவாக்கினால்தான் உண்டு.

    அதேபோல், படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் அவை அனைத்துமே ரொம்பவும் தத்ரூபமாக அமைந்திருக்கிறது. மதன் கார்க்கியின் வசனங்கள் படத்திற்கு ரொம்பவும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வசனங்களும் ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்திருப்பது சிறப்பு.

    மரகதமணியின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமை. அதை படமாக்கியவிதமும் ரொம்பவும் அருமை. பின்னணி இசை கதைக்கு பொருத்தமாக அமைந்து, கதையை அழகாக நகர்த்தி செல்ல பலமாக அமைந்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘பாகுபலி 2’ அழிக்கமுடியாத வரலாறு.
    ஜாக்கிசான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘ரெயில் ரோடு டைகர்ஸ்’ படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது. படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    ஜப்பான், சீனாவுக்குள் ஊடுறுவி ஒவ்வொரு பகுதிகளாக ஆக்கிரமித்து வரும் காலகட்டம். சீனாவின் மாஞ்சூரியா என்ற இடத்துக்குள் ஜப்பானியர்கள் ஊடுருவி, அங்குள்ள மக்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். சீனாவை சேர்ந்த ரெயில்வே தொழிலாளர்களான ஜாக்கிசான் மற்றும் அவரது நண்பர்கள், தன் நாட்டில் மக்கள் பசியும், பட்டினியுடன் வாழும்போது, அயல்நாட்டினர் உள்ளே நுழைவதா? என்று அவர்களுக்கெதிராக களமிறங்க திட்டம் போடுகிறார்கள்.

    ஜப்பானியர்களுக்கு தெரியாமலேயே ரெயில் கொள்ளையடிப்பது போன்ற சிறுசிறு வேலைகளை செய்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த ரெயில் போக்குவரத்தை துண்டித்தால் ஜப்பானியர்களின் ஆதிக்கம் சீனாவுக்குள் இருக்காது என்று நினைக்கும் ஜாக்கிசான் மற்றும் அவரது நண்பர்கள், ஜப்பானியர்களின் ரெயில் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் மார்கோ போலோ பாலத்தை உடைக்க திட்டம் போடுகிறார்கள். இதற்காக ஜப்பானியர்களின் ஆயுதக்கிடங்கில் இருந்து வெடிகுண்டுகளை கடத்தி, பாலத்தை உடைக்க பார்க்கிறார்கள்.



    இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

    ஜாக்கிசான் இந்த வயதிலும் இளமை துள்ளலுடன் சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். ஜாக்கிசான் ரசிகர்களுக்கு ஏற்றவாறு காமெடி, ஆக்ஷன் என இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, வெடிகுண்டை திருடச் செல்லும் காட்சிகளில் எதிரிகளை தனது சக கூட்டாளியுடன் சேர்ந்து சண்டையிடும் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.

    ஜாக்கிசானின் நண்பர்களாக வருபவர்களும் மற்றும் ஜப்பானியர்களாக வருபவர்களும் கதைக்கேற்றபடியும், அவர்களின் கதாபாத்திரத்திற்கேற்றவாறும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கதைக்களம் என்று சொல்லும்படியாக எதுவும் இல்லை. இரண்டு மூன்று செட்டுகளை மட்டுமே போட்டு அதற்குள்ளாகவே படமாக்கியிருக்கிறார்கள்.



    மேலும், பெரும்பாலான காட்சிகளில் ரெயிலேயே அதிகமாக காட்டியிருக்கிறார்கள். இதனால், படத்தில் முக்கால்வாசி நேரம் நம் காதுக்குள் நீராவி எஞ்சினின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆக்ஷனிலும் பெரிதாக ஜாக்கிசானுக்கு ஏற்றவாறு அமைக்காதது வருத்தமளிக்கிறது.

    படத்தின் ஆரம்பம் கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், பிற்பாதி கொஞ்சம் விறுவிறுப்படைகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சண்டைக் காட்சிகளிலும் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

    மொத்தத்தில் ‘ரெயில் ரோடு டைகர்ஸ்’ வேகமில்லை.
    மார்க்ஸ் இயக்கத்தில் பாலாஜி, தீக்‌ஷிதா மாணிக்கம், பால சரவணன், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள `நகர்வலம்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார்கள் நாயகன் பாலாஜி பாலகிருஷ்ணன் மற்றும் யோகி பாபு. பாலாஜிக்கு ஒத்தாசையாக பால சரவணன் வருகிறார். யோகி பாபு தண்ணீர் சப்ளை செய்யும் பகுதியில், 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியான நாயகி தீக்‌ஷிதா மாணிக்கம், ஒரு இசை பிரியர். அதுவும் இளையராஜா பாடல்கள் என்றால் தீக்‌ஷிதாவுக்கு உயிர். ஒருநாள் அவசர வேலையாக யோகி பாபு வெளியூர் செல்ல, தனது லாரியை எடுத்துக் கொண்டு தீக்‌ஷிதா இருக்கும் குடியிறுப்புக்கு தண்ணீர் சப்ளை செய்ய வருகிறார் பாலாஜி.

    அப்போது, தனது லாரியில் இளையராஜா பாடல்களை போடுகிறார். அங்கு தீக்‌ஷிதாவை பார்த்த பாலாஜிக்கு அவள் மீது ஈர்ப்பு வர தினமும் அதே பகுதிக்கு தண்ணீர் சப்ளை செய்ய வருகிறார். தினமும் இளையராஜா பாடல்களையே போடுவதால் பாலாஜி மீது தீக்ஷிதாவுக்கு காதல் ஏற்படுகிறது. இதையடுத்து தனது கல்லூரி படிப்பை தொடங்கும் தீக்ஷிதா ஒருகட்டத்தில் தனது காதலை பாலாஜியிடம் கூற, அவரும் நாயகியை காதலிப்பதாக கூறுகிறார்.



    இந்நிலையில், இவர்களது காதல் தீக்‌ஷிதாவின் வீட்டிற்கு தெரியவர, தீக்‌ஷிதாவின் தந்தையான மாரிமுத்து, அரசியல்வாதி சித்தப்பாவான ரவி மற்றும் அண்ணன் முத்துக்குமார் தீக்‌ஷிதாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதில் பாலாஜி தங்களது பிரிவை சேர்ந்தவன் இல்லை என்பதால் தீக்‌ஷிதாவை விட்டு பிரிய சொல்லி மிரட்டுகின்றனர். ஒருகட்டத்தில் தீக்‌ஷிதாவை விட்டு பிரிய மறுக்கும் பாலாஜியை கொலை செய்ய சித்தப்பா ரவி முடிவு செய்கிறார். அதற்காக முத்துக்குமாரை அனுப்புகிறார்.

    தனது சித்தப்பா சொல்லுக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதை அப்படியே செய்யும் முத்துக்குமார், தனது அடியாளான `அஞ்சாதே' ஸ்ரீதருடன் சேர்ந்து பாலாஜியை கொன்றாரா? அல்லது தனது தங்கையுடன் பாலாஜியை சேர்த்து வைத்தாரா? தீக்‌ஷிதா என்ன ஆனார்? இறுதியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.



    பாலாஜி ஒரு லாரி டிரைவராக நடித்திருக்கிறார். `காதல் சொல்ல வந்தேன்' படத்தில் அமைந்தது போல ரசிக்கும் படியான, கவரும்படியான கதாபாத்திரம் அவருக்கு இப்படத்தில் அமையவில்லை. நாயகியை கவரும்படியாக எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. மாறாக இளையராஜா பாடலை போட்டே நாயகியை காதல் வலையில் விழ வைக்கிறார்.

    பள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் தீக்‌ஷிதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இளையராஜாவின் ரசிகையாக அழகாக நடித்திருக்கிறார். யோகி பாபு எப்போதும் போல, இப்படத்திலும் தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைக்கிறார். இப்படத்தில் தமிழ் உச்சரிப்பு சரியாக வராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சிரிக்க வைத்திருக்கிறார். பால சரவணன் தனக்கே உரித்தான ஸ்டைலில் கலாய்த்து ரசிக்க வைக்கிறார். அவரும் யோகி பாபுவும் வரும் காட்சிகளை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது. யோகி பாபுவை கலாய்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலா, அவரது கதாபாத்திரத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.



    முத்துக்குமார் நாயகியின் அண்ணனாகவும், வில்லனாகவும் வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தங்கைக்கு பொறுப்பான அண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் வில்லனாக வந்தாலும், இரண்டாவது பாதியில் தனது தங்கையின் மீது உள்ள பாசத்தில் பொறுப்பான முடிவை எடுக்கும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். `அஞ்சாதே' ஸ்ரீதருக்கு ஒரு சாதாரண கதாபாத்திரம் என்றாலும், படத்திற்கு திருப்புமுனையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்டோரும் அவர்களது கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    இயக்குநர் மார்க்ஸ், லாரி ஒட்டுநருக்கும் - மாணவிக்கும் இடையே நடக்கும் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார். முத்துக்குமாரின் கதாபாத்திரத்தை சிறப்பாக அமைத்திருப்பதற்காக அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்திற்கும், தேவையான முக்கியத்துவத்தை அளித்த இயக்குநர், நாயகன் கதாபாத்திரத்திற்கு மெனக்கிடவில்லை என்று தான் செல்ல வேண்டும். அதுவே படத்திற்கு பலவீனத்தை அளிக்கிறது.



    படத்தில் பாடல்கள் ரசிக்கும்படி இருந்தாலும், பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களும், இசையும் வருவதால் பவண் கார்த்திக்கின் இசை சற்று எடுபடவில்லை. மற்றபடி படத்தின் பின்னணி இசை ரசிக்கும்படி இருந்தது. ஆர். தமிழ் தென்றலின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.

    மொத்தத்தில் `நகர்வலம்' வேகமில்லை.
    ஒரு பெண் கல்விக்காக எந்தளவுக்கு கஷ்டத்தை அனுபவிக்கிறாள்? என்பதை விளக்கிச் சொல்லும் படமாக வெளிவந்துள்ள ’இலை’ படம் எப்படியிக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    பெண்களை படிக்க வைக்க விரும்பாத ஒரு கிராமத்தில் வாழ்ந்துவரும் நாயகி சுவாதி நாராயணன், நன்றாக படித்து சமூகத்தில் சாதிக்கவேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறாள். இதற்கு அவளது அப்பாவும் ஆதரவு கொடுத்து வருகிறார். ஆனால், அவளது அம்மாவுக்கோ இதில் துளியும் விருப்பமில்லை. அதேநேரத்தில் தனது தம்பியான நாயகிக்கு அவளை திருமணம் செய்து வைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறார்கள்.

    சுவாதி படிக்கும் அதே பள்ளியில் படிக்கும் பணக்கார பெண்ணான இன்னொரு மாணவியின் அப்பா, தனது மகள் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதற்காக சுவாதியை தேர்வுக்கு வரவிடாமல் தடுக்க பல சதி வேலைகள் செய்கிறார். மறுபுறத்தில் சுவாதியின் தாய்மாமா, அவள் பெரிய படிப்பு படித்துவிட்டால் தனக்கு கிடைக்காமல் போய்விடுவாலோ என்ற எண்ணத்தில் அவளுடைய படிப்புக்கு தடை போடும் வகையில் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.



    இதையெல்லாம் தாண்டி சுவாதி தேர்வு எழுதினாளா? அவளது படிப்பு என்ன நிலைமைக்கு சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இலை கதாபாத்திரத்தில் வரும் நாயகி சுவாதி நாராயணன் முழு படத்தையும் தனது தோளில் சுமந்து தாங்கி சென்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். படிப்புக்காக போராடும் மாணவியாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். படத்தில் இவரை ரொம்பவும் ஓட வைத்திருக்கிறார்கள். தனது படிப்புக்கு ஆதரவாக இருக்கும் அப்பா உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவமனையில் இருக்க, அவரது ஆசையை நிறைவேற்ற தேர்வு எழுத செல்லும் சுவாதிக்கு ஏற்படும் தடங்கல்களை எதிர்கொள்ளும் காட்சிகளில் எல்லாம் பரிதாபப்பட வைக்கிறார்.



    நாயகியின் முறைமாமனாக வரும் ஜெனிஷ், கன்னட நடிகர் கிங் மோகன், மலையாள நடிகை ஸ்ரீதேவி, கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம், காவ்யா என படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரியான தேர்வு. அவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.

    இன்றைய காலசூழ்நிலையில் நகரத்தில் வாழும் மாணவர்களுக்கு படிப்பதற்கு நிறைய வசதிகள் இருந்தும் அவர்கள் கல்வியை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், கிராமங்களில் கல்வி கற்பதற்கு வசதியில்லாமல் இருக்கும் குழந்தைகள் கல்விக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை இப்படத்தில் இயக்குனர் அழகாக எடுத்துக் கூறியிருக்கிறார். இன்றைய காலகட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கூறலாம்.



    குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு சொல்ல வந்த கருத்தை இயக்குனர் பீனிஸ் ராஜ் அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு தடையும் தாண்டி நாயகி தேர்வு எழுதுவாரா? என்று படம் முழுவதும் பரபரப்பு பயணிக்கிறது. இருப்பினும், நாயகியை படம் முழுக்க ஓடவிட்டு படமாக்கியிருக்கிறார். அதுவும் அந்த காட்சிகளின் நீளம் பார்ப்பவர்களுக்கு சற்று பொறுமையை சோதிக்கிறது. மற்றபடி, இயக்குனரின் இந்த புதிய முயற்சியை பாராட்டலாம்.

    சந்தோஷ் அஞ்சலி ஒளிப்பதிவு அருமையாக இருக்கிறது. படத்தில் விஷுவல் எபெக்ட்ஸ் அதிகம் இடம்பெற்றிருக்கிறது. இருப்பினும், அது தெரியாமல் ரொம்பவும் எதார்த்தமாக இருப்பதுபோல் தெரிகிறது. விஷ்ணு வி.திவாகரனின் இசை கதைக்கேற்ற உணர்வை கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘இலை’ பசுமை.
    ராகவா இயக்கத்தில் ஆர்யா - கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியுள்ள கடம்பன் படம் எப்படி இருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கடம்பவனம் எனும் மலை கிராமத்தில் மலைவாழ் மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகிறார் ஆர்யா. இந்த கூட்டத்திலேயே ஆர்யா கைதேர்ந்த வேட்டைக்காரனாகவும், துணிச்சல்காரனாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இதே கூட்டத்தை சேர்ந்த நாயகி கேத்தரின் தெரசா, ஆர்யா மீது காதல் வலை வீசுகிறார்.

    ஆனால், ஆர்யாவோ, கேத்தரின் தெரசாவின் அண்ணன் ராஜசிம்மனுக்கும் தனக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதால் கேத்தரின் தெரசாவை முதலில் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பின்னர் ஒருகட்டத்தில் கேத்தரின் மீது ஆர்யாவும் காதல் வயப்படுகிறார்.



    இந்நிலையில், இவர்கள் வசிக்கும் பகுதியில் சிமெண்ட் தயாரிப்பதற்கான தாதுப் பொருட்கள் பூமிக்கடியில் புதைந்து கிடப்பதாக அறியும் சிமெண்ட் கம்பெனி உரிமையாளர் தீப்ராஜ் ராணா, மலைவாழ் மக்களை அங்கிருந்து எப்படியாவது அப்புறப்படுத்த நினைக்கிறார். அடித்து விரட்டினால், அது அரசாங்கத்துக்கு தெரிந்து பெரிய விஷயமாகிவிடும் என்பதால், தந்திரமாக செயல்பட நினைக்கிறார்.

    அதன்படி, சமூக சேவைகள் செய்துவரும் ஒய்.ஜி.மகேந்திரனையும், அவரது மகளையும் கடம்பவனம் மலைக்கிராமத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு நல்லது செய்வதுபோல் நடித்து, அங்கிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற நினைக்கிறார்கள். ஒருகட்டத்தில், இந்த திட்டம் ஆர்யா மற்றும் மலைவாழ் மக்களுக்கு தெரியவர, அவர்களை எதிர்த்து நிற்க துணிகிறார்கள்.

    இதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.



    ஆர்யா இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. படம் முழுக்க உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அவரது உடல்வாகை பார்க்கும்போதே பிரமிக்க வைக்கிறது. அதேபோல், செருப்பே அணியாமல் மரம், செடி, கொடிகள் இடையே பாய்ந்து செல்லும் காட்சிகளில் எல்லாம் ஆச்சர்யப்பட வைக்கிறார்.

    கேத்தரின் தெரசாவை மலைவாழ் பெண்ணாக பார்ப்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. மலைவாழ் மக்களின் வலியை தனது நடிப்பால் அழகாக பிரதிபலித்திருக்கிறார். அவரைது அண்ணாக வரும் ராஜசிம்மன் பார்வையாலேயே மிரட்டுகிறார். முதலில் ஆர்யாவுக்கு எதிரியாகவும், பிறகு அவருக்கு உதவி செய்வதுமாக மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.



    ஆர்யாவின் அப்பாவாக வரும் சூப்பர் சுப்ராய், மூப்பன் என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சிமெண்ட் கம்பெனி அதிபராக வரும் தீப்ராஜ் ராணா, கார்ப்பரேட் வில்லனாக வந்து ரசிக்க வைக்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன், முருகதாஸ் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.

    இருப்பிடத்தையும் வாழ்வாதாரத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள துடிக்கும் மலைவாழ் மக்களின் போராட்டத்தை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராகவா. ஆனால், அவர் சொல்ல வந்த கருத்து, மலைவாழ் மக்களின் வலி, படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாதது வருத்தம். இப்படத்திற்காக நிறைய பேர் கஷ்டப்பட்டிருப்பது திரையில் தெரிகிறது. ஆனால், அந்த கஷ்டங்களுக்கெல்லாம் இந்தப் படம் தகுதியானதா? என்பது சந்தேகம்தான்.

    யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது. பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார். சதீஷ் குமாரின் கேமரா காட்டுக்குள் புகுந்து விளையாடியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘கடம்பன்’ புதிய முயற்சி.
    ராகவா லாரன்ஸ் - ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சிவலிங்கா’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
    சக்திவேல் வாசு மற்றும் அவரது அப்பா சந்தானபாரதி இருவரும் பிரியாணி மாஸ்டர்கள். நடிகை சாராவும் அவரது அப்பாவான ராதாரவியும் சைவ உணவு மாஸ்டர்கள். இந்த இரு குடும்பமும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகவே சமைப்பார்கள். இந்த நெருக்கமானது, சக்திவேல் வாசுவுக்கும், சாராவுக்கும் இடையே காதலை உண்டாக்கியது.

    ஆனால், இவர்களுடைய காதல் சாராவின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. சக்தி சமைப்பதோடு மட்டுமில்லாமல் புறா ஒன்றயும் பாசமாக வளர்த்து வருகிறார். இந்நிலையில், வெளியூருக்கு சமையல் வேலையாக ரெயிலில் சென்று கொண்டிருக்கும்போது, மர்ம நபர் ஒருவர் சக்தியை ரெயிலில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துவிடுகிறார். இந்த கொலையில் ரெயில்வே போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காததால் சக்தி தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி வழக்கை முடிக்கிறது.



    ஆனால், சாராவோ இது தற்கொலை இல்லை, கொலை என்று போலீசில் புகார் கொடுக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி வசம் செல்கிறது. சிபிசிஐடியில் பெரிய போலீஸ் அதிகாரியாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கும், ரித்திகா சிங்கிற்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு, சக்தி கொலை வழக்கு லாரன்ஸ் வசம் செல்கிறது. அவர் இதைப்பற்றி விசாரிப்பதற்காக தனது மனைவியுடன் வேலூரில் இருக்கும் ஒரு பங்களாவில் குடியேறுகிறார்.

    அங்கு தங்கியதும் அவ்வவ்போது சில அமானுஷ்ய விஷயங்கள் நடந்து இவர்களை பயமுறுத்துகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் திருட வந்த வடிவேலு, ராகவா லாரன்சிடம் மாட்டிக் கொள்கிறார். தான் சிபிசிஐடி என்பது வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வடிவேலுவையும் அங்கேயே தங்க வைக்கிறார் லாரன்ஸ்.



    இந்நிலையில், ரித்திகா சிங் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தெரியவே, இதை பார்க்கும் வடிவேலு, லாரன்சிடம் சொல்ல, அவர் நம்ப மறுக்கிறார். ஒருகட்டத்தில் ரித்திகாவின் உடம்பில் ஏதோ ஆவி புகுந்து இருப்பது லாரன்ஸ் மற்றும் வடிவேலுக்கு தெரியவர, அந்த ஆவி கொலை செய்யப்பட்ட சக்தியின் ஆவிதான் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்.

    சக்தியின் ஆவி ரித்திகா சிங்கின் உடம்பில் புகுந்துகொண்டு, தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. அந்த ஆவியின் ஆசையை நிறைவேற்றினால்தான் தன்னுடைய மனைவியை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், ராகவா லாரன்ஸ் அதன்பிறகு என்ன முடிவெடுத்தார்? சக்தியை கொலை செய்தது யார்? அவரை எதற்காக கொன்றார்கள்? சக்தியின் கொன்றவர்களை ராகவா லாரன்ஸ் எப்படி கண்டுபிடித்தார்? என்பதை திகில் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.



    சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக வரும் ராகவா லாரன்ஸ் நடனம், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என எல்லாவற்றையும் ரொம்பவும் சிறப்பாகவே செய்திருக்கிறார். பேய் படங்களில் நடிக்க இவருக்கு எதுவும் சொல்லிக் கொடுக்கவேண்டியதில்லை. அந்தளவுக்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    ரித்திகா சிங், துறுதுறு பெண்ணாக ரொம்பவும் ரசிக்க வைக்கிறார். இவர் பாக்சர் என்பதை மனதில்வைத்து பேயாக வரும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் இவரை அந்தரத்தில் தொங்கவிட்டு நடிக்க வைத்திருக்கிறார். ரித்திகா சிங் அதையெல்லாம் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் நேர்த்தியாகவே செய்திருக்கிறார். இந்த படத்தில் புதிய முயற்சியாக புடவையில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அதேபோல், நடனத்திலும் லாரன்ஸுக்கு இணையாக ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்.



    சக்திவேல் வாசுவை மையப்படுத்திதான் கதையே நகர்கிறது. கிளைமாக்சில் தன்னுடைய வேதனையை சொல்லி இவர் அழும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. இப்படம் அவருக்கு நல்ல ரீ-என்ட்ரியாக அமையும் என நம்பலாம்.

    வடிவேலு எந்தவித கெட்டப்பும் இல்லாமல் சாதாரணமாக வந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர் காமெடியனாக மீண்டும் நடிக்கத்தொடங்கியதில் இந்த படம்தான் இவரது காமெடியை தூக்கி நிறுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். மற்றபடி, ஊர்வசி, ராதாரவி, ஜெயப்பிரகாஷ், பானுப்ரியா, இன்னொரு நாயகியாக வரும் சாரா, பிரதீப் ராவத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். வில்லனாக வரும் ஷாகிர் ஹூசைனும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.



    கன்னடத்தில் தான் இயக்கி வெற்றிபெற்ற படத்தையே தமிழிலும் எடுத்திருக்கிறார் பி.வாசு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படியான ஜனரஞ்சகமான படத்தை கொடுத்திருக்கிறார். தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையிலும் சற்று மாற்றங்கள் கொண்டுவந்து விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார். கொலைக்கான விசாரணையில் ஒவ்வொரு டுவிஸ்டுகளாக வைத்து அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை படம் முழுக்க கொடுத்திருக்கிறார். அதேபோல், கதாபாத்திரங்கள் தேர்வும் சிறப்பு.

    தமன் இசையில் பாடல்கள் பிரமாதம். சில பாடல்கள் ஆட்டம் போட வைத்தாலும், மெலோடி பாடல்கள் தென்றலாகவும் வருடி சென்றிருக்கிறது. பின்னணி இசையும் மிரட்டல். சர்வேஸ் முராரேயின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் திகில் ஊட்டியிருக்கிறது.

    மொத்தத்தில் ‘சிவலிங்கா’ திரிலிங்கா இருக்கு.
    தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரேவதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ப.பாண்டி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான ராஜ்கிரண், தன் மகன் பிரசன்னா, மருமகள் சாயா சிங், பேரன் பேத்திகளுடன் வாழ்ந்து வருகிறார். வயதானாலும் இவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கிறார்.

    இதனால் போலீஸ் இவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறது. இது பிரசன்னாவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் ராஜ்கிரணிடம் பிரசன்னா கடுமையாக நடந்துகொள்கிறார். எனவே, இவர்களுக்கு இனிமேல் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைக்கும் ராஜ்கிரண், வீட்டைவிட்டு வெளியேறி தனது புல்லட்டில் நீண்ட தூரம் பயணம் செய்கிறார்.



    அப்போது வழியில் அவரது வயதையொட்டிய சிலபேர் நண்பர்களாக கிடைக்க, அவர்களிடம் தனது முதல் காதலியை பார்க்க செல்வதாக கூறுகிறார். அவள் எங்கிருக்கிறாள்? என்பது தெரியாத ராஜ்கிரணுக்கு, நண்பர்கள் பேஸ்புக் பற்றி அவருக்கு தெரியவைத்து, அதன்மூலம் அவரது காதலியை தேட துணை புரிகிறார்கள்.

    அதன்படி, ராஜ்கிரணும் தனது காதலி ஐதராபாத்தில் இருப்பதாக அறிந்து, அங்கே செல்ல முடிவெடுக்கிறார். இதற்கிடையில், அப்பாவை காணாது தவிக்கும் பிரசன்னா, அவரை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.



    கடைசியில், ராஜ்கிரண் தனது முன்னாள் காதலியை தேடிக் கண்டுபிடித்தாரா? பிரசன்னாவும் காணாமல் போன தனது அப்பாவை கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை. இதற்கிடையே, ராஜ்கிரணின் இளமை கால நினைவுகளும் வந்து கதையை நகர்த்தி செல்கிறது.

    ராஜ்கிரண், பவர் பாண்டியாக படம் முழுக்க பவருடன் வலம் வருகிறார். குழந்தைகளுக்கு நல்ல தாத்தாவாகவும், மகனுக்கு நல்ல அப்பாவாகவும் அழகாக பொருந்தியிருக்கிறார். முதல் பாதியில் பிள்ளைகளுக்காக வாழும் வாழ்க்கையில் சாந்தமாகவும், பிற்பாதியில் தனக்காக வாழும் வாழ்க்கையில் இளமை துள்ளலுடன், மாடர்ன் உடையில் வந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.



    படம் முழுக்க இவர் பேசும் பாசமிகு வசனங்கள் அனைவரையும் கவரும். ரேவதியுடன் தன்னுடைய ஆசையை சொல்லும்போது வெட்கப்படும் காட்சிகள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. பவர் பாண்டி கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு அழகாக பிரதிபலித்திருக்க முடியாது. ராஜ்கிரணை தேர்வு செய்தபோதே தனுஷ் பாதி வெற்றிபெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டும் ரேவதி, இடைவேளைக்கு பிறகே வருகிறார். இவருக்கான காட்சிகள் கொஞ்சம்தான் என்றாலும், அவருடைய அனுபவ நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. இளம்வயது ராஜ்கிரணாக வரும் தனுஷுக்கும், இளம் வயது ரேவதியாக வரும் மடோனா செபஸ்டியானுக்கும் இடையே உண்டான காதல் காட்சிகள் மனதில் ரீங்காரமிடுகின்றன.



    பிரசன்னா, பாசமிகு தந்தைக்கு பொறுப்பான மகனாக வருகிறார். ராஜ்கிரண் செய்யும் சில செய்கைகளால் அவர்மீது கோபப்படும் பிரசன்னா, அவர் பிரிந்துசென்றபிறகு, அவரை நினைத்து வருந்துவதும், அவருடைய பெருமைகளை மனைவியிடம் பகிர்ந்துகொள்ளும் காட்சிகள் பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்கும். படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் இவருக்குத்தான் அதிகமாக இருக்கிறது. அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய தோற்றமும் அனைவரையும் கவரும்விதமாக இருக்கிறது. அலுவலகத்தில் சக ஊழியர்களுக்கு இவர் கூறும் அறிவுரைகள் எல்லாம் பெற்றோர்களை உதாசீனப்படுத்தும் பிள்ளைகளுக்கு பாடம் புகட்டும்விதமாக அமைந்திருக்கிறது.

    சாயா சிங் பொறுப்பான மனைவியாகவும், மாமனாருக்கு அடங்கி நடக்கும் மருமகளாகவும் எதார்த்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார். குழந்தைகளாக வரும் மாஸ்டர் ராகவன், பேபி சவி ஷர்மா கேமரா முன் நிற்பது முதன்முறை என்றாலும், அது தெரியாத அளவுக்கு அழகாகவும், தைரியமாகவும் நடித்திருக்கிறார்கள்.



    ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பெற்றோர்களை பிள்ளைகள் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்? அந்த பெற்றோர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? பெற்றோர்களுக்கான சுதந்திரத்தை பிள்ளைகள் கொடுக்கிறார்களா? என்பதையெல்லாம் இப்படத்தில் கேள்வியாக எழுப்பி, அதற்கான பதிலையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் தனுஷ். இருக்கும்போதே அவர்களை சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் பிள்ளைகள் வாழவைக்கவேண்டும் என்றும், அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இப்படத்தின் மூலம் பிள்ளைகளுக்கு புரிய வைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு இந்த படம் ஒரு பாடமாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். தனுஷ் தனது முதல் படத்திலேயே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும்படியான ஒரு படத்தை கொடுத்ததற்கு நிச்சயம் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.



    ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. மெலோடியாக வரும் ‘வெண்பனிமலரே’ பாடல் தென்றலாக வருடிச் செல்கிறது. அதேபோல், இளம்வயது பவர் பாண்டியின் காதல் பாடலாக வரும் ‘பார்த்தேன்’ பாடலும் காதலை அழகாக சொல்லியிருக்கிறது. பின்னணி இசையிலும் ஷான் ரோல்டன் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. ஒருசில காட்சிகளில் இவரது கேமரா கோணங்கள் வசனங்கள் இல்லாமலேயே கதையை பேசவைக்கிறது.

    மொத்தத்தில் ‘ப.பாண்டி’ பவர்புல் பாண்டி. 
    வின் டீசல், ராக், ஜேசன் ஸ்டாதம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `தி ஃபேட் ஆஃப் த ப்யூரியஸ்' எனப்படும் `பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் 8'-வது பாகத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    பாஸ் அண்ட் ப்யூரியஸ் 8-வது பாகத்தில் நாயகன் வின் டீசல் மற்றும் மிச்சல் ரோட்ரிகஸ் சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். ஒரு நாள் வின்டீசலை பார்க்க வரும் சார்லிஸ் தெரோன் என்னும் பெண், அவருக்கு ஒரு வேலை கொடுக்கிறார். அதனை செய்ய மறுக்கும் வின் டீசலிடம், தெரோன் ஒரு வீடியோவை காட்ட, அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடையும் வின் டீசல், தெரோன் சொல்லும் வேலையை செய்ய சம்மதிக்கிறார்.

    அதேநேரத்தில் மற்றொரு நாயகனான ராக்குக்கு அவரது மேலதிகாரியிடம் இருந்து ஒரு வேலை வருகிறது. அந்த வேலையை வெற்றிகரமாக முடிக்க திட்டமிடும் ராக், வின் டீசல் மற்றும் அவரது குழுவின் உதவியை நாடுகிறார். ராக்கின் அழைப்பை ஏற்று தனது குழுவுடன் செல்லும் வின்டீசல், ராக்குக்கு தேவையான பொருள் ஒன்றை கைப்பற்ற உதவி செய்கிறார். இவ்வாறு அனைத்தும் சரியாக சென்று கொண்டிருக்கையில், ராக்கை தாக்கிவிட்டு, அந்த பொருளை எடுத்துச் செல்லும் வின்டீசல், ராக்கை போலீசில் சிக்க வைக்கிறார்.



    பின்னர் சிறையில் அடைக்கப்படும் ராக், அங்கு தனது விரோதியான ஜேசன் ஸ்டாதமை சந்திக்கிறார். ஒரு கட்டத்தில் ராக்கை சிறையில் இருந்து வெளியே கொண்டுவரும் அவரது மேலதிகாரி, வின் டீசலை கண்டுபிடிக்க ஜேசன் ஸ்டாதமுடன், ராக்கை இணைந்து பணியாற்ற சொல்கிறார். மேலும் வின்டீசலின் கூட்டாளிகளான ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன், லூடாகிரிஸ் உள்ளிட்டோரும் ராக்குக்கு உதவி செய்ய வருகின்றனர்.

    இவ்வாறு வின்டீசலை கண்டுபிடிக்க திட்டம் தீட்டும் வேளையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் வின் டீசல் அவர்களிடம் இருந்து `காட்ஸ் ஐ'  எனப்படும் பொருளையும் திருடிச் செல்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ராக், ஜேசன் ஸ்டாதன், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரஸ் கிப்சன் உள்ளிட்டோர் வின் டீசல் ஏன் இவ்வாறு செய்கிறார் என்று குழப்பமடைகின்றனர். பின்னர் வின் டீசலை கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.



    பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் பாகங்களை பொறுத்தவரையில், ஒரு குழுவில் இருக்கும் ஒருவர், தனது குழுவை விட்டுப்போகவோ, அல்லது காட்டிக்கொடுக்கவோ கூடாது. ஆனால் இந்த பாகத்தில் வின் டீசல், தனது குழுவை விட்டுவிட்டு, தொழில்நுட்ப தீவிரவாதியான சார்லிஸ் தெரோனுடன் கூட்டு வைக்கிறார். எதற்காக கூட்டு வைக்கிறார்? எந்த காரணத்தால் அவர்களால் மிரட்டப்படுகிறார்? அந்த சதியில் வின் டீசலை மீட்க ராக், ஜேசன் ஸ்டாதம் என்ன முயற்சி செய்கின்றனர்? என்பது படத்தின் ஸ்வாரஸ்யமான மீதிக்கதை.

    மற்ற பாகங்களில் ஒரு ஹீரோவாக வரும் வின் டீசல், இந்த பாகத்தில் ஒரு வில்லன் போன்று நடித்து மிரட்டியிருக்கிறார். குறிப்பாக மற்ற பாகங்களை போன்றே, இந்த பாகத்திலும் ஸ்டண்ட் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குழுவின் ஒரு உறுப்பினராக இருக்க முடியாமலும், தொழில்நுட்ப தீவிரவாதியிடம் சிக்கிக் கொண்டும், அதிலிருந்து மீண்டு வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. மேலும் பாசத்தை வெளிப்படுத்தம் காட்சியிலும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.



    ராக் தனக்கே உரித்தான ஸ்டைலில், சிறந்த உடற்கட்டுடன் வந்து ரசிக்க வைக்கிறார். குறிப்பாக இந்த பாகத்தில் அவரது ஸ்டன்ட் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. அவர் செய்யும் ஒவ்வொரு ஸ்டன்ட்டும் நம்புப்படியாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர் சிறப்பான உடற்கட்டுடன் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஜேசன் ஸ்டாதம், எப்போதும் போல இந்த பாகத்திலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக விமானத்தில் நடக்கும் சண்டைக்காட்சியில் அனைவரையும் அடித்து நொறுக்கி துவம்சம் செய்வது ரசிக்கும்படி இருந்தது. அந்த சண்டைக்காட்சியிலும், அவரது நகைச்சுவை ரசிக்கும்படி இருந்தது.

    மற்றபடி மிச்செல் ரோட்ரிகஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட், டைரிஸ் கிப்சன், லூடாகிரிஸ், கர்ட் ரசல், லுகாஸ் பிளாக், சார்லிஸ் தெரோன் உள்ளிட்டோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக டைரிஸ் கிப்சன் தனக்குரிய ஸ்டைலில், ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கிறார். அவரது நகைச்சுவைக்கு அரங்கமே அதிர்கிறது. அதுவும் தமிழுக்கு ஏற்றார் போல் அவரது நகைச்சுவை ஒன்றி அமைத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலத்தை அளித்திருக்கிறது.



    பாஸ் அண்ட் பியூரியஸ் தொடரை முதல்முறையாக இயக்கியுள்ள இயக்குநர் எப்.கேரி கிரேவின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த தொடரின் 7 பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், 8-வதாக வெளியாகியுள்ள இந்த பாகத்தை இயக்குநர் எப்.கேரி கிரே சிறப்பாக இயக்கியிருக்கிறார். மற்ற பாகங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்களை ஒருசில காட்சிகளுக்கு வரவைத்து நியாபகப்படுத்துவது ரசிக்கும்படி இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.

    குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், டப்பா கார்களை கொண்டும் சிறப்பான சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. விமானத்தில் எடுக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சி, சார்லிஸ் தெரோன் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக கார்களை தன்வசப்படுத்துவது போன்ற காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது.



    மேலும் உறைந்திருக்கும் பனிக்கட்டிக்கு அடியில் இருந்து வரும் நீர்மூழ்கி கப்பலை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் காட்சி என படம் முழுக்க பிரம்மாண்டமாக காட்டியிருப்பது சிறப்பு. 7-வது பாகத்தை போல இந்த பாகத்திலும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது படத்திற்கு ப்ளஸ். பல வகையான கார்களின் அணிவகுப்பு, புதுமையான கார்கள் என இந்த பாகத்திலும் பல வித்தியாசமான கார்களை பார்க்க முடிகிறது. மேலும் 7-வது பாகத்தோடு இந்த உலகத்தை விட்டு சென்ற, பால் வாக்கருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த பாகத்தின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, ரசிகர்களின் மனதில் நிற்கும்படியாக உள்ளது.

    இவ்வாறு ரசிக்கும்படியான திரைக்கதையையும், மற்ற பாகங்களை போல அல்லாமல் இந்த பாகத்தில் வின் டீசலை வில்லனாக காட்டும் காட்சிகள் என திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கிறார் கிறிஸ் மோர்கன்.

    படத்தின் பின்னணி இசையில் ப்ரெயின் டெய்லர் மிரட்டியிருக்கிறார். சண்டைக்காட்சிகளுக்கு ஏற்ப அவரது பின்னணி இசை ரசிக்கும் படியாக இருக்கிறது. ஸ்டீபன் எஃப்.விண்டனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளை எடுக்க ஸ்டீபன் கடுமையாக உழைத்திருப்பது படத்தை பார்க்கும் போது தெரிகிறது.

    மொத்தத்தில் `தி பேஃட் ஆப் த ப்யூரியஸ்' வேகம்.
    ரத்தன் கணபதி இயக்கத்தில் விருதகிரி, ஸ்வேதா நடிப்பில் உருவாகி இருக்கும் விருத்தாச்சலம் படத்தின் விமர்சத்தை கீழே பார்ப்போம்.
    நாயகன் விருதகிரியின் முறைப் பெண்ணான நாயகி ஸ்வேதாவைத்தான் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து வைக்கப்போவதாக இருவரது வீட்டிலும் சொல்லி வளர்க்கிறார்கள். இதனால், இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசத்துடன் இருந்து வருகிறார்கள்.

    இந்நிலையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஊர் தலைவரின் பையன் ஒருநாள் நாயகியை கீழே தள்ளிவிட, அவளை தள்ளிவிட்ட கையை நாயகன் வெட்டி விடுகிறான். தன் கையை வெட்டிய நாயகனை வெட்டச்செல்லும்போது தவறுதலாக நாயகியின் அண்ணனை வெட்டி விடுகிறார். இதனால் சம்பவ இடத்திலேயே நாயகியின் அண்ணன் இறந்து போகிறார்.



    இதையடுத்து, போலீஸ் நாயகனையும், ஊர் பெரியவரின் மகனையும் சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறது. பல வருடங்கள் கழித்து வளர்ந்து பெரியவர்களாகி இருவரும் வெளியே வருகிறார்கள். அதற்குள், நாயகனின் அத்தை கணவனையும், மகனையும் இழந்த சோகத்தில் அந்த ஊரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

    சீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியில் வந்ததால் ஊரில் யாரும் நாயகனுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள். இந்நிலையில், ஒரு மரக்கடையில் சேர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு அந்த ஊரில் டீச்சராக வரும் ஸ்வேதா தனது முறைப்பெண் என்பதை தெரிந்துகொண்டு அவளை பின்தொடருகிறார்.



    ஆனால், ஸ்வேதாவோ, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். தன்னுடைய நிலைமையை அவளிடம் எடுத்துக்கூற முயற்சி செய்தும் தோற்றுப்போகிறார். அதேநேரத்தில், தான் ஜெயிலுக்கு போக காரணமான நாயகனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஊர் பெரியவரின் மகனான சம்பத் முடிவெடுக்கிறார்.

    இறுதியில், நாயகன் நாயகியிடம் தன்னை பற்றி புரிய வைத்து ஒன்று சேர்ந்தாரா? சம்பத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் விருதகிரி, வழக்கமாக வரும் நடிகர்களை போல வந்து நடித்துவிட்டு சென்றிருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்றாலும், படத்தில் கோபக்காரராக நடித்து மிரட்டியிருக்கிறார். நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும், தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றொரு நடிகரான சம்பத்தின் நடிப்பு பாராட்டும்படியாக உள்ளது.



    ரத்தன் கணபதி திரைக்கதையை அமைத்திருப்பதில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். மேலும் படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும். மற்றபடி படம் கரடுமுரடாக உள்ளது.

    ஸ்ரீராம் இசையில் படத்தின் பாடல்கள் பார்க்கும்படியாக இருக்கிறதே, தவிர ரசிக்கும்படியாக இல்லை. படத்தின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. சிவனேசன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

    மொத்தத்தில் `விருத்தாச்சலம்' வெட்டுக்குத்து.

    2014-ஆம் ஆண்டில் ரஷ்ய மொழியில் வெளியாகி தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `22 நிமிடங்கள்' படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    ரஷ்யாவுக்கு சொந்தமான கப்பல் ஒன்று பல டாங்கர்கள் நிறைய எரிபொருள்களை ஏற்றிக் கொண்டு கடலில் செல்கிறது. ஏடன் வளைகுடாவை தாண்டும் சமயத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் அந்த கப்பல் சிறைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள், டேங்கர்கள் அனைத்தையும் கடற் கொள்ளையர்கள் கைப்பற்றுகின்றனர். இதையடுத்து அவர்களை மீட்க ரஷ்ய அரசு சார்பில், மீட்புக்குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

    அந்த மீட்புக்குழுவில் ஒருவராக வரும் நாயகன் டெனிஸ் நிகிஃபோரவ் உள்ளிட்ட ரஷ்ய கடற்படை அதிகாரிகள் ஏமன் வளைகுடாவிற்கு விரைந்து, சோமாலிய கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். சோமாலிய கொள்ளையர்களும் பதில் தாக்குதல் நடத்த, திணறிய ரஷ்ய ராணுவம் கரைக்கு திரும்புகிறது. இந்த தாக்குதலில் எதிர்பாராத விதமாக டெனிஸ் கடலில் விழுந்து விடுகிறார். கடலில் விழுந்த அவரை மீட்கும் கடற் கொள்ளையர்கள், டெனிசை டேங்கர்கள் இருக்கும் கப்பலுக்கு கொண்டு செல்கின்றனர்.



    இந்நிலையில், கடற் கொள்ளையர்களில் ஒருவன் டெனிசுக்கு, அவ்வப்போது சில உதவிகளை செய்து வருகிறான். அவனது உதவியுடன் கப்பலில் இருந்தபடியே, ரஷ்ய ராணுவத்திற்கு ஒளி மூலமாக டெனிஸ் சில சில தகவல்களை அனுப்பி வைக்கிறார். மேலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகளுக்கு தேவையான உணவுகளையும் அவ்வப்போது அளித்து வருகிறார்.

    மறுபக்கம் ரஷ்ய ராணுவம், போரில் கைதேர்ந்த ராணுவ வீரர்களை கப்பலுக்கு அனுப்பி வைக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கப்பலில் உள்ள கொள்ளையர்களை தாக்கி, கப்பலை எப்படி மீட்கிறது. அதற்காக என்னென்ன முயற்சிகள் எடுத்தார்கள்? மேற்கொண்டு என்னென்ன சிக்கல்கள் வந்தன. அதிலிருந்து எப்படி கப்பல் மீட்கப்பட்டது என்பது படத்தின் த்ரில்லிங்கான மீதிக்கதை.



    படத்தின் நாயகன் டெனிஸ் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பாக நடித்திருக்கிறார். தனி ஆளாக கப்பலில் சிக்கி இருப்பவர்களுக்கு உதவி செய்வதன் மூலம், தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். கப்பலின் தளபதியாக வரும் விக்டர் சுக்ரோகோவ், மகார் சேப்ரோஸ்கி, எகாட்ரினா, அலெக்சாண்டர் காப்ளின், பீட்டர் கோரோலோவ், எப்ரா டோவ் என அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக தந்திருக்கின்றனர்.

    2014-லேயே இப்படம் ரஷ்ய மொழியில் வெளியாகியது. தற்போது தமிழில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் 3 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பது சிறப்பு. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்ததற்காக இயக்குநர் வேசிலி செரிகோவ்வை பாராட்டலாம்.



    டிமிட்ரி யாஷான்கோவின் ஒளிப்பதிவில் காட்சிகள் தத்ரூபமாக உள்ளன. குறிப்பாக ஆழ்கடலில் அலைகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்திற்கு ப்ளஸ். இவான் உரியுபினின் பின்னணி இசை கூடுதல் பலம்.

    மொத்தத்தில் `22 நிமிடங்கள்' விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

    சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசும் கதையான ஜூலியும் நாலு பேரும் படத்தின் விமர்சனத்தை கீழே பார்ப்போம்.
    கலிபோர்னியாவில் ராசியான நாயாக கருதப்படும் ஜுலியை கடத்தல் கும்பல் ஒன்று அதன் உரிமையாளரை கொன்றுவிட்டு சென்னைக்கு கடத்தி வருகிறது. அந்த நாயை கடத்தி வரச் சொன்னது நாயகி அல்யாவின் தந்தைதான். அந்த நாயை கடத்தி வந்ததற்காக அந்த கடத்தல் கும்பலுக்கு ரூ.1 கோடி ரூபாய் கொடுக்கிறார் அல்யாவின் தந்தை.

    இதுஒருபக்கம் போய்க் கொண்டிருக்கையில், வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் அமுதவாணன், சதீஷ், விஜய் ஆகிய மூன்று பேரும் வேலை வாங்கித் தருவதாக கூறும் ஒரு மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து நிற்கின்றனர். அந்த நேரத்தில் இவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்டோ ஓட்டுனரான ஜார்ஜ் உடன் நட்பாகிறார்கள்.



    தாங்கள் இழந்த பணத்தை குறுக்கு வழியிலாவது சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்நிலையில், ஒருநாள் ஜுலி வீட்டைவிட்டு வெளியேறி, எதையோ சாப்பிட்டு மயக்கமடைகிறது. அதை பார்க்கும் நான்கு நண்பர்களும் ஜுலியை காப்பாற்றி, அதன் உரிமையாளரான நாயகியிடம் ஒப்படைக்க, நாயகியும் இவர்களுக்கு நண்பர்களாகிறாள்.

    நடந்த விஷயத்தை நாயகி தனது அப்பாவிடம் கூற, அவர் தனது உதவியாளரை அழைத்து நண்பர்களுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்கும்படி கூறிவிட்டு செல்கிறார். ஆனால், அவரது உதவியாளரோ இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிடுகிறார். இதனால் கோபமடைந்த நண்பர்கள் ஜுலியை கடத்திவிடுகிறார்கள்.



    ஜுலியை கடத்தியது யாரென்று தெரியாத நாயகியின் அப்பா, ஜுலி எங்கு சென்றது என்று தேடிவர, மறுபக்கம், ஜுலியை வெளிநாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வந்த கும்பல், மறுபடியும் அதை கடத்துவதற்கு திட்டம்போட்டு ஜுலியை தேடி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஜுலி என்ற பெயரில் காணாமல் போன பெண்ணை தேடி அலையும் போலீசார், சந்தேகத்தின் பெயரில் இவர்கள் பக்கம் பார்வையை திருப்புகின்றனர்.

    இறுதியில், அந்த அதிர்ஷ்ட நாய் ஜுலி யாரிடம் சேர்ந்தது? அந்த நாயால் நண்பர்கள் நன்மை அடைந்தார்களா? அல்லது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகர்கள் அமுதவாணன், சதீஷ், விஜய், ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு பேரும் தொடக்கம் முதல் கடைசி வரை ஒன்றாகவே வலம் வருகின்றனர். அந்த வகையில் அனைவருமே தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். அவர்களது நகைச்சுவையும் ரசிக்கும்படி இருக்கிறது. நாயகி அல்யா மனாசா, தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் மகாநதி சங்கர், வழக்கம்போல் நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தில் ரசிக்க வைக்கிறார்.



    இப்படத்தின் இயக்குனர் சதீஷ் ஆர்.வி. ஐடி கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அப்படியிருக்கையில் சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற அவரது முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவிக்கலாம். தான் அறிமுகமாகிய முதல் படத்தையே திரையில் அழகாக காட்டியிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல், இப்படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தும் இருக்கிறார். நண்பர்கள் 4 பேர் ஒன்றாக சேர்ந்தால், என்னென்ன கலாட்டாக்கள் நடக்குமோ அத்தனையையும் நகைச்சுவையாக காட்டியிருப்பது படத்திற்கு ப்ளஸ். அதேநேரத்தில் படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் கொஞ்சம் விறுவிறுப்பு கூடியிருக்குமோ என்று நினைக்க தோன்றுகிறது.

    இசையமைப்பாளர் ரகு ஷ்ரவன் குமார், திரைக்கதைக்கு ஏற்றபடி நல்ல இசையை அளித்திருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு ப்ளஸ். கே.ஏ.பாஸ்கரின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘ஜுலியும் 4 பேரும்’ ஓட்டம்.
    ×