என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • அஜித் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவரின் 63-வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் என பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதையடுத்து அஜித்தின் 63-வது படத்தை 'மார்க் ஆண்டனி' படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் 'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பின்போது ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை அஜித்திற்கு பிடித்திருந்ததால் தற்போது அந்த கதையை படமாக்குவதற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

    இந்நிலையில், நடிகர் அஜித்தின் புதிய புகைப்படத்தை அவரது மனைவி நடிகை ஷாலினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கூலாக அஜித் இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


    • நடிகை நிவேதா பெத்துராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    கடந்த 2015-ஆம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி பட்டத்தை வென்ற நிவேதா பெத்துராஜ் 'ஒரு நாள் கூத்து' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.


    இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்துள்ளார். தெலுங்கில் மெண்டல் மதிலோ, சித்ரலேகாரி, ப்ரோச்சேவரவருரோ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இளம் நடிகையாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ் கார் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.


    இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் போட்டியிலும் கலக்கியுள்ளார். அதாவது, டால்பின் ஸ்போர்ஸ் மேனேஜ்மெண்ட் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணி சார்பில் கலந்து கொண்ட நிவேதா பெத்துராஜ் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    • உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
    • இதன் கும்பாபிஷேக விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.


    சுஷ்மிதா சென் பதிவு

    இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


    பார்வதி பதிவு

    இந்நிலையில், பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென் தனது சமூக வலைதளத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தை பகிர்ந்துள்ளார். அப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடிகை பார்வதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
    • இந்த விழாவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கடந்த 2019-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் அயோத்தி சர்ச்சையானது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.


    இந்த விழாவில், பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ராமர் கோவில் திறப்புக்கு ஆதரவாக பல நடிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், மதச்சார்பற்ற நாட்டில் மசூதியை இடித்துவிட்டு கோவிலை கட்டுவது சரியா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    இந்த நிலையில், ராமர் கோவில் திறப்பை விமர்சித்து நடிகர் கிஷோர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கோவில், மன்னர்கள் மற்றும் அரசியலை வைத்து அடக்குவது என்பது நாம் இதுவரை பார்த்திராத ஒன்று அல்ல. இன்று நாம் மன்னர்களின் காலத்திற்கு சென்றுவிட்டதாக உணர்கிறேன். கடவுளின் பெயரால் சாமியார்களுடன் கைகோர்த்து, மக்களை அடக்கி வருகின்றனர்.


    கோவிலை கட்டி அதில் தங்களின் பெயர்களை செதுக்கி வைத்து கொள்வது, கோவிலை கட்டிய நபர்களின் கையை வெட்டுவது, தங்களின் பெருமையை பேசி வானுயர பேனர் வைத்து கொள்வது முடிவின்றி தொடர்கிறது. மதமும், கடவுளும் அரசியல்வாதிகளின் கைகளில் சிக்குவதும், அவர்களை கேள்வி கேட்க முடியாத இடத்துக்கு எடுத்து செல்வதும் மிகவும் ஆபத்தானது. நாட்டின் கலாசாரத்தின் எதிர்காலத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என பதிவிட்டுள்ளார்.


    • நடிகர் விஷால் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தினை இயக்குனர் ஹரி இயக்குகிறார்.

    இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இதையடுத்து 'ரத்னம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'ரத்னம்' படத்தின் புதிய அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளார். அதன்படி, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னை போன்ற இடங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை விஷால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் தன்ராஜ் கொரனானி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்தில் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கி நடிக்கும் திரைப்படம் 'ராமம் ராகவம்'. தெலுங்கு திரையுலகில் தற்பொழுது பிசியான நடிகராக வலம்வரும் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , பிருத்வி போலவரபு தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அருண் சிலுவேறு இசையமைக்கிறார். துர்கா பிரசாத் கொல்லி ஒளிப்பதிவு செய்கிறார். அப்பா மகன் உறவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ராஜமந்திரி, சென்னை, மதுரை தேனி, திண்டுக்கல் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது.


    ராமம் ராகவம் போஸ்டர்

    இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சமுத்திரகனி மற்றும் தன்ராஜ் கொரனானி இடம்பிடித்துள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    • ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


    இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ரஜினியின் குட்டி கதைக்கு ரெடியாகும் படி குறிப்பிட்டுள்ளது.


    • இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள், யார் யார் என்னென்ன செய்தார்கள்.
    • எது சரித்திரத்திலேயே நிற்கிறது என கணக்கு பாருங்கள்.

    தமிழ் திரையுலகில் மூத்த இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா தனது இசையின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் வாழ்க்கையில் பிணைந்திருக்கும் அளவிற்கு கால் ஊன்றியிருக்கிறது. இவர் மூன்று தலைமுறையுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.

    இதுவரை ஆயிரத்திற்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையராஜா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும், இவர் மாநிலங்களவை எம்.பி.யும் ஆவார்.


    இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜா, மோடிக்கு பகவான் அந்த எழுத்தை எழுதியுள்ளார் என்றார். அவர் பேசியதாவது, இன்றைய நாள் சரித்திரத்திலேயே முதல் முறையாக, சிறப்பான நாள். ராமர் கோவில் நிகழ்வு பிரதமர் மோடிக்கு அழியாப் புகழைத் தேடித் தரும்.

    யாரால் முடியும்? எல்லோராலும் செய்ய முடியுமா? யாராலும் செய்ய முடியாது. அவருக்கு பகவான் அந்த எழுத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்; யார் யார் என்னென்ன செய்தார்கள். எது சரித்திரத்திலேயே நிற்கிறது என கணக்கு பாருங்கள். யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்குப் பாருங்கள்.


    இதையெல்லாம் சொல்லும்போது என் கண்ணில் நீர் வருகிறது. இந்த நாளில் அயோத்தியில் இருக்க வேண்டிய நான்; இந்த இடத்தில் இருப்பது எனக்கு வருத்தத்தை தந்தாலும், உங்கள் முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலை அளிக்கிறது" என்றார்.

    மேலும் "இந்தியாவில் எத்தனை கோவில்கள் உள்ளன; அந்தந்த கோவில்கள் எல்லாம் அந்த நேரத்தில் ஆண்ட மன்னர்கள் கட்டியதாக இருக்கும். இன்று இந்தியாவுக்கு என்று ஒரு கோவில் எழும்பி உள்ளது என்றால் அது ராமர் கோவில் தான். மன்னர்கள் கோவில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோவில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் செய்துள்ளார் என்றார்.

    • ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் ‘சைரன்’.
    • இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.


    சைரன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சைரன்' திரைப்படம் பிப்ரவரி 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.
    • ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் இன்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது.

    அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல இன்றைய விழாவை கொண்டாடினார்கள்.

    இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது.

    பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

    முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதில், அரசியல் முக்கிய தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.

    இந்நிலையில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முடிந்து வீடு திரும்பும்போது நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன். ஒவ்வொரு வருடமும் கண்டிப்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
    • இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.


    பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், மாதுரி தீக்ஸிட், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைஃப், கங்கனா ரனாவத், சச்சின் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.


    பார்வதி பதிவு

    இந்நிலையில், நடிகை பார்வதி தனது சமூக வலைதளத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் '1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தில் இறையாண்மை , சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போதும் இருக்கும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


    • 'புளூ ஸ்டார்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.


    'புளூ ஸ்டார்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் பா.இரஞ்சித், "இன்று முக்கியமான நாள், வீட்டில் சென்று கற்பூரம் ஏற்றவில்லையென்றால் நாம் தீவிரவாதி ஆகிவிடுவோம். தீவிரமான காலக்கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 - 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயத்தை உணர்த்துகிறது.

    அதுபோன்ற காலக்கட்டத்தில் நுழையும் முன்பு நம் மூளையில் ஏற்படுத்தி வைத்திருக்கும் பிற்போக்குத்தனத்தையும் தினம் தினம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கிற மதவாதத்தையும் அழிக்க நம்மிடம் இருக்கும் கலை என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தி வருகிறோம். மக்களை சரி செய்வதற்கான சக்தி இதற்கு உள்ளது என நம்புகிறேன்" என பேசினார்.


    மேலும், "இன்று ராமர் கோவில் திறப்பை ஒட்டி அதன் பின்னால் நடக்கும் மத அரசியலை நாம் கவனிக்க வேண்டும். மதசார்பற்ற இந்தியா எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுப்பும் நிலை உள்ளது. இப்போது கோவில் கூடாது என்பது நம் பிரச்சனை இல்லை. ரஜினி ராமர் கோவிலுக்கு சென்றது அவருடைய விருப்பம். இது தொடர்பான கருத்துகளை அவர் முன்பே கூறியிருக்கிறார். இப்போது அவருடைய கருத்துப்படி 500 ஆண்டுகள் பிரச்சனை தீர்ந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இதற்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டியுள்ளது" என்று பேசினார்.

    ×