என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பாடகி பவதாரிணி சமீபத்தில் காலமானார்.
    • 'புயலில் ஒரு தோணி’ திரைப்படத்திற்கு பவதாரிணி இசையமைத்துள்ளார்.

    இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி சமீபத்தில் காலமானது திரைத்துறைக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு. சமீபத்தில் அவர் கடைசியாக இசையமைத்த திரைப்படம் தான் 'புயலில் ஒரு தோணி'. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங் ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார்.

    'புயலில் ஒரு தோணி' படத்தின் இயக்குனர் ஈசன் பேசியதாவது, பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகியிருக்கிறது. நான் கதையை தேர்வு செய்யும் முன்பாகவே பவதாரிணியை தான் இசையமைப்பாளராக வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.


    நான் முழுபடத்தையும் முடித்த பின்பு பவதாரிணியை நேரில் சந்தித்து முழு படத்தையும் திரையிட்டு காட்டினேன். அவருக்கும் மிகவும் பிடித்து போனது. படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள். இரண்டையும் கவிஞர் சினேகன் தான் எழுதியுள்ளார். இரண்டு பாடல்களையும் மிக விரைவாகவே எங்களுக்கு கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார்.

    இரண்டு பாடல்களும் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். ஒரு பாடலை  ஜி.வி.பிரகாஷ் குமாரும், மானசியும் பாடியுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா ஒரு பாடலை பாடியுள்ளார். மேலும், பின்னனி இசை மிக நேர்த்தியாகவும், சிறப்பாகவும் அமைத்துள்ளார்.



    படம் வெளிவருவதற்கு முன்பாக இவ்வாறு நிகழும் என்று துளியலவும் நினைத்து பார்க்கவில்லை. இப்போதும் எங்களால் அவர் இல்லை என்பதை நம்பமுடியவில்லை. எங்கள் திரைப்படத்தின் மிக பெரியப் பலம் அவர், பவதாரிணி கிரீடத்தில் உள்ள வைரக்கல். எங்கள் திரைப்படத்தின் வெற்றியை அவருக்கு கூடிய விரைவில் அர்ப்பணிப்போம் என்று கூறினார்.

    • தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் 'ஹார்ட் பீட்'.
    • இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைத்துள்ளார்.

    இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் சூப்பர் சுப்பு எழுத்தில் உருவாகியுள்ள சீரிஸ் 'ஹார்ட் பீட்'. இதில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    எ டெலி பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த சீரிஸிற்கு ரெஜிமெல் சூர்யா தாமஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த சீரிஸுக்கு சரண் ராகவன் இசையமைக்க, விக்னேஷ் அர்ஜுன் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். இந்த சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், 'ஹார்ட் பீட்' சீரிஸில் இடம்பெற்றுள்ள "ஹார்ட் பீட் பாட்டு" எனும் பெப்பியான பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேட்லி ப்ளூஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடல், 'ஹார்ட் பீட்' சீரிஸின் சாரத்தையும் அதன் ஆன்மாவையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


    'ஹார்ட் பீட்' சீரிஸ் இளைஞர்களைக் கவரும் வகையில் நட்பு, ரொமான்ஸ், காமெடி என அனைத்தும் கலந்த கலக்கலான பொழுதுபோக்கு சீரிஸாக இருக்கும். இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.



    • சூரி நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை 1’ மற்றும் ‘விடுதலை 2’.
    • இப்படங்கள் நெதர்லாந்தில் திரையிடப்பட்டது.

    தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி திரைப்பிரபலங்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரி முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சூரி நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 'கொட்டுக்காளி', 'கருடன்', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் சூரி நடிப்பில் உருவான 'விடுதலை 1', 'விடுதலை 2', 'ஏழு கடல் ஏழு மலை' போன்ற படங்கள் நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.


    இதில், 'விடுதலை' முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், பார்வையாளர்கள் ஐந்து நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டல் கொடுத்து படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை ரெட் ஜெயன் மூவிஸ் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’.
    • இந்த படத்தை லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.



    இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பா.இரஞ்சித் பேசியதாவது, 'புளூ ஸ்டார்' படம் ரீலிசாகி நான்கு நாட்களில் ஒரு பெரிய ஹீரோ அப்படத்தை இரண்டு முறைப் பார்த்துவிட்டு, போன் செய்து நாம் ஒரு படம் பண்ணலாம் என்று ஜெயக்குமாரிடம் பேசியிருக்கிறார். இது எனக்குக் கூட நடந்தது இல்லை. ஜெயக்குமாருக்கு நடந்திருப்பது எனக்கு சந்தோசம்.

    சென்சாரில் இப்படத்திற்கு பிரச்சனை இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்படம் வெளியாகக்கூடாது என்பது போன்ற கருத்து வெளியானது எனக்கு ஆச்சரியம் அளித்தது. ஒருவர் மிகக் கடுமையாக படத்தை எதிர்த்தார் என்றார்கள். மூர்த்தி அண்ணனின் படம் இருப்பதை காரணமாக சொன்னார்கள். அவரை ரவுடி என்றார்கள். அவர் எங்களைப் படிக்க வைத்தவர், நிறைய பேர் எங்கள் ஊரில் படித்துக் கொண்டிருப்பதற்கு அவர்தான் காரணம். அவர் பெரிய தலைவர், அவரை எப்படி நீங்கள் ரவுடி என்று சொல்லலாம் என்று கேட்டேன்.. பின்னர் ரிவைசிங் கமிட்டிக்கு திரும்பவும் அனுப்பினோம். சில கதாபாத்திரங்களின் பெயரையும், எதிர் கிரிக்கெட் அணியின் பெயரையும் மாற்றச் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் சென்சார் கொடுத்தார்கள்.



    ஒரு படம் ஒற்றுமையைப் பேசுகிறது. ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வேற்றுமைகளுக்கு எதிராக எல்லோரும் ஒன்று கூட வேண்டும் என்று சொல்லுகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் நபர்கள் சென்சாரில் இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான் இப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது. படத்தில் எனக்கு எப்போதும் இரண்டு மூன்று காட்சிகள் தான் திருப்தி கொடுக்கும். புளூ ஸ்டார் படத்தில் ரஞ்சித் தன் தாயை பேர் சொல்லி அழைத்த தருணத்தை சொல்லி கண்கலங்கும் இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்கலங்கச் செய்தது.



    அது போல் சுசீலா என்று பேர் சொல்லிக் கூப்பிட்ட ராஜேஷ், அடுத்து மனம் திருந்தி வரும் போது அம்மா என்று அழைப்பான். அவர்களும் ஒரு தாய் போல் வாஞ்சையுடன் அவனிடம் பேசுவார்கள். அது தான் எங்கள் அம்மா. ஜெயக்குமாரின் அம்மா. அதுதான் புளூ ஸ்டார். புளூ ஸ்டார் பேசுவது பொதுவில் பங்கு கோருதல் தான். வேறுபாடுகள் அற்ற இடத்தில் நாம் வாழணும். உங்கள் கோவில் தான் எங்கள் கோவில். உங்கள் தெய்வம் தான் எங்கள் தெய்வம். வாங்க, நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும், என்பது தான் இப்படம் பேசுவது. அம்மாற்றத்தை விரும்புகிற மனிதர்கள் நாங்கள். இப்பிரச்சனை இப்போதும் இருப்பதால் தான் நாங்கள் பேசுகிறோம். இதைப் பேசியதாலே இப்படம் வெற்றியடையவில்லை. அதை மீறி படத்தின் செய்நேர்த்தி, அந்த தத்துவத்தை சரியான மொழியில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதனால் தான் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.


    ஒரே சிந்தனை அரசியல் கொண்ட நபர்களைக் கூட ரஞ்சித் எதிர் திசையில் நிறுத்துவார். ஆனால் இயக்குனர் ஜெயக்குமார் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார். அவருடைய அரசியல் சிறப்பானது என்று கூட புளூ ஸ்டார் படம் குறித்து சிலர் பேசியதையும் எழுதியதையும் கவனித்தேன். அதற்காகவும் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஒரே விசயத்திற்காகப் போராடினாலும் என் மொழி வேறு; ஜெயக்குமாரின் மொழி வேறு என்று பேசினார்.

    • சஷிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘டெஸ்ட்’.
    • இப்படத்தில் பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.

    தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் மாதவன், சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


    'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. சமீபத்தில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகி சக்தி ஸ்ரீ கோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.


    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.




    • தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, பத்து தல படத்தின் வெற்றிக்கு பிறகு 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'எஸ்.டி.ஆர். 48' படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கின்றனர்.


    இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இ்ப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


    இந்நிலையில், 'எஸ்.டி.ஆர். 48' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் பிப்ரவரி 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘பர்த் மார்க்’.
    • இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மிர்னா நடிக்கிறார்.

    இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படம் 'பர்த் மார்க்'. இந்த திரைப்படத்தில் 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸ்' என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பால் புகழ் பெற்ற நடிகர் ஷபீர் கல்லராக்கல் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மிர்னா நடிக்கிறார்.


    மேலும், தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி.ஆர். வரலட்சுமி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்திற்கு உதய் தங்கவேல் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.


    இந்நிலையில், 'பர்த் மார்க்' திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'போர் தீருமா' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    • முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அடுத்து வரும் எண் அமையும்
    • "24157817, இது பிபனாச்சி நம்பரா?" என ஒரு நிபுணர் சிட்டியிடம் கேட்பார்

    கணித அறிவியலில் "சீக்வென்ஸ்" (sequence) எனப்படும் வரிசைக்கிரமம் முக்கிய இடம் வகிக்கிறது.

    இதில் "பிபனாச்சி வரிசை" (Fibonacci sequence) எனப்படும் வரிசைக்கிரமம் மிகவும் பிரபலமானது.

    இந்த எண் தொடரில், முதல் இரண்டு எண்களின் கூட்டுத்தொகையாக அடுத்து வரும் எண் அமையும்.

    எடுத்துக் காட்டாக 1,1,2,3,5,8,13,21,34,55... என இது தொடர்கிறது.

    இத்தாலி நாட்டை சேர்ந்த "பிபனாச்சி" எனும் கணித வல்லுனர் உருவாக்கியதாக கூறப்பட்டு அவர் பெயரால் அழைக்கப்பட்டாலும், பிபனாச்சி வரிசைக்கிரமம், கி.மு. 200ல் இந்திய கணித வித்வான் "பிங்கள ஆசார்யா" என்பவரால் சம்ஸ்கிருத கவிதைகளில் சொற்றொடர் கையாளுதல் குறித்து பதிவு செய்யப்பட்டதாகவும் வரலாறு உண்டு.

    2010 அக்டோபர் மாதம் உலகெங்கும் பல மொழிகளில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம், எந்திரன் (Enthiran).

    அறிவியல், ஆன்மிகம், கணினிகள், க்ரைம் ஆகியவற்றில் எண்ணற்ற புத்தகங்களை எழுதிய சுஜாதா, இப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார்.


    எந்திரன் படத்தில் வசீகரன் எனும் விஞ்ஞானி வேடத்தில் வரும் ரஜினிகாந்த், "சிட்டி" எனும் ரோபோவாக மற்றொரு வேடத்தில் நடித்திருந்தார்.

    இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், வசீகரன், தான் உருவாக்கிய ரோபோவை வல்லுனர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார். அப்போது அதில் பல துறையை சேர்ந்த நிபுணர்கள் அதன் திறனை பரிசோதிக்க பல கேள்விகளை கேட்பார்கள்.

    ஒரு நிபுணர், "சிம்பிளா கேட்கிறேன். 24157817, இது பிபனாச்சி நம்பரா?" என சிட்டியிடம் கேட்பார்.

    அதற்கு சிட்டி, "ஆமா, 22-வது பிபனாச்சி நம்பர். பை தி வே, அது மந்தைவெளி சுப்ரமணியத்துடைய போன் நம்பர்" என நகைச்சுவையாக பதிலளிக்கும்.

    இந்நிலையில், இத்திரைப்படம் வெளியாகி சுமார் 13 ஆண்டுகளுக்கும் மேல் கடந்த நிலையில், "சிட்டி அளித்திருக்கும் பதில் தவறு. 37-வது பிபனாச்சி எண்தான் 24157817. 22-வது எண் 17711" என சுட்டி காட்டி ஒரு பயனர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.


    எழுத்தாளர் சுஜாதா, இயக்குனர் ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட அனைவரும் எவ்வாறு இதனை கவனிக்க தவறினர் என கேட்டும், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இந்த தவறை கண்டுபிடித்து வெளி உலகிற்கு கூறிய பயனரை பாராட்டியும், சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக பதிவிட்டு வருகின்றனர்.

    • 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'புளூ ஸ்டார்' (Blue Star). இந்த படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். 'புளூ ஸ்டார்' திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    இதையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி படகுழுவினர் கலந்துகொள்ள சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தனு பேசியதாவது, "இந்த மேடையில் இருப்பது எனக்கு கனவு மாதிரி இருக்கிறது. இந்த படம் எனக்கு நிறைய பரிசுகள் கொடுத்தது. இந்த படத்தில் என் கதாபாத்திரத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளீர்கள். இது என்னுடைய வாழ்க்கையில் கிடைத்தது இல்லை. இது 'புளூ ஸ்டார்' எனக்கு கொடுத்த பரிசு.


    இந்த படம் சினிமா பற்றிய பாடத்தை எனக்கு கற்றுக் கொடுத்தது. இது எல்லாம் தாண்டி என் அப்பா- அம்மாவிற்கு சந்தோஷத்தை கொடுத்தது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்த்தேன். நான் எவ்வளவு ஏக்கத்தில் இருந்தேனோ அதை விட நூறு மடங்கு ஏக்கத்தில் என் பெற்றோர்கள் இருந்தார்கள். அதற்கு 'புளூ ஸ்டார்' எனக்கு கொடுத்த பரிசு" என்று பேசினார்.

    • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
    • இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இவர் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பல வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியின்போது ஆர்.சி.பி அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடி தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு இணையத்தில் வைரலானது.


    அதில், "அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு அப்போது கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து இனி தமிழ் படங்களில் நான் நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.



    இந்நிலையில் தற்போது 'லால் சலாம்' படத்தில் தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. மேலும், தமிழர்களை இழிவுப்படுத்தியவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்படி வாய்ப்பு வழங்கலாம்? என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்போ அல்லது தன்யா பாலகிருஷ்ணா தரப்போ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகர் ரோபோ சங்கர் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தை 'ரவுத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா' உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இதில் சிகையலங்கார நிபுணராக நடித்துள்ளார்.


    இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படம் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'சிங்கப்பூர் சலூன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் ரோபோ சங்கர், முடிதிருத்தும் தொழிலாளிகளை நேரில் சந்தித்தார். இதையடுத்து முடிதிருத்தும் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக, நாளை நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அந்த நிகழ்ச்சியில், இப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்ய இருக்கிறேம் என்று கூறி அழைப்பிதழ் வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
    • மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.

    நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குற்றம் சாட்டி, நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.


    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அவரது வழக்கை தள்ளுபடி செய்து உத்தர விட்டிருந்தார். இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த தொகையை செலுத்த கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்று விட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்தனர்.

    அந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா? முடியாதா? என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    ×