என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம் எளிமையாக நடைபெற்றது. #Kuralasaran #KuralasaranWedding
    இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், நேற்று சென்னையில் நடைபெற்றது. தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரும் கடந்த பிப்ரவரி 16ந்தேதி அவரின் தந்தை முன்னிலையில் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

    குறளரசன் -நபீலா அஹமத் ஆகியோரது திருமணம் சென்னை, அண்ணா நகரில் உள்ள மணமகள் வீட்டில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்றது. உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனுக்குச் சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணத்தை முன்னிட்டு சென்னை திரும்பினார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.



    மிகவும் எளிய முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் மணமக்கள் வீட்டார் மட்டுமே இருந்தனர். குறளரசன் நபீலாவின் திருமண வரவேற்பு வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருக்கிறது.

    இந்த விழாவுக்கான அழைப்பிதழைதான் சினிமா, அரசியல் பிரமுகர்களிடம் கொடுத்து வந்தார், டி.ராஜேந்தர். திருமணத்தை வீட்டிலேயே சிம்பிளாக முடித்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளனர். உடல் எடையைக் குறைத்த சிம்பு, விரைவில் `மாநாடு’ பட ஷூட்டிங்கிற்கு செல்லவிருக்கிறார். 
    உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், ஸ்டார் வார்ஸ் படத்தின் சாதனையை முறியடித்து வசூலில் சாதனை படைத்துள்ளது. #AvengersEndgame
    மார்வெல் ஸ்டுடியோ நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு தி அவெஞ்சர்ஸ் படத்தை வெளியிட்டது. காமிக்ஸ் படக்கதையை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஹாலிவுட் படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றது.

    இதைத் தொடர்ந்து தி அவெஞ்சர்ஸ் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. வசூலிலும் “அவெஞ்சர்ஸ்” படங்கள் சாதனை படைத்தன.

    இந்த நிலையில் அவெஞ்சர்ஸ் படங்களில் இறுதி படமாக கருதப்படும் “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. அவெஞ்சர்ஸ் காமிக்ஸ் படத்தொடர்ச்சியின் இறுதி படம் என்பதால் இந்த படத்துக்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.



    அமெரிக்காவில் முதல் நாளில் இந்த படம் 419 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட் படங்களில் இதுவரை “ஸ்டார்வார்ஸ்-தி போர்ஸ் அவக்கன்ஸ்” படம் தான் வசூல் சாதனை படைத்த படமாக இருந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த படம் 398 கோடி ரூபாய் வசூல் செய்ததுதான் ஹாலிவுட் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் முறியடித்துள்ளது.

    இதற்கிடையே உலகம் முழுவதும் வசூலிலும் “அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்” படம் சாதனை படைக்க தொடங்கி உள்ளது. இந்த படம் வெளியான முதல் 2 நாட்களில் மொத்தம் 2,130 கோடி ரூபாய் வசூல் செய்து இமாலய சாதனை படைத்துள்ளது.

    சீனாவில் இந்த படத்துக்கு அதிகளவு வசூலாகி இருப் பது புதிய சாதனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த படத்துக்கு கணிசமான அளவுக்கு பணம் வசூலாகி இருக்கிறது.
    முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் லீக்கானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Rajini #Darbar
    ரஜினிகாந்த் படப்பிடிப்புகளை தமிழகத்தில் நடத்தினால் ரசிகர்கள் அன்பு தொல்லைகள் இடையூறாக இருக்கும் என்று கருதியும், கதாபாத்திரங்களின் தோற்றங்களை செல்போனில் படம்பிடித்து வெளியிடுவதை தடுக்கவும் வெளிமாநிலங்களுக்கு சென்று விடுகின்றனர். ஆனால் அங்கேயும் கேமராவுடன் ரசிகர்கள் திரள்கிறார்கள்.



    ரஜினிகாந்தின் முந்தைய படங்களான கபாலி, காலா படப்பிடிப்பு தளங்களில் திருட்டுத்தனாக எடுத்த படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன. ‘தர்பார்’ படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தார். படப்பிடிப்பு அரங்குக்குள் துணை நடிகர், நடிகைகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி ரஜினிகாந்தின் தோற்றங்களை ரகசியமாக படம்பிடித்து இணையதளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். 



    மும்பையில் கடந்த 30-ந் தேதி முதல் தொடர்ந்து நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பையும் பாதுகாப்பை மீறி திருட்டுத்தனமான படம் பிடித்து இணையதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்தும் யோகிபாபுவும் நடித்த காட்சி, ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வரும் காட்சிகள் போன்றவற்றை செல்போனில் படம் எடுத்து இணையதளங்களில் கசிய விட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
    யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் அவருக்கு அம்மாவாக பிரபல நடிகை நடித்து வருகிறார். #YogiBabu #DharmaPrabhu
    பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரேகா. இவர், 1990-களில் தமிழ், மலையாள முன்னணி கதாநாயகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜோடியாக நடித்து, பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவர், தற்போது அம்மா, அக்காள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

    யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்து இருக்கிறார். எமன் மற்றும் எமலோக பின்னணி கொண்ட கதை இது. ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், கும்கி அஸ்வின், மாஸ்டர் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.



    ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அழகம்பெருமாள் வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பவர் முத்து குமரன்.

    யோகிபாபுவுடன் ரேகா மற்றும் படத்தில் இடம் பெரும் நடிகர் நடிகைகள் நடித்த காட்சிகள், பிரம்மாண்டமாக அமைக்கபட்டிருந்த  எமலோகம் அரங்கில் படமாக்கப்பட்டது. ஏ.வி.எம். ஸ்டூடியோ மற்றும் சென்னை, பொள்ளாச்சி சுற்றுவட்டரங்களில் வளர்ந்துள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.
    நடிகை ஸ்ருதிஹாசனுக்கும் லண்டனை சேர்ந்த மைக்கேலுக்கும் இடையேயான காதல் முறிந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #ShrutiHaasan
    தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் குறுகிய காலத்தில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ஸ்ருதிஹாசன். இவருக்கும், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல்லுக்கும் காதல் மலர்ந்தது. லண்டனில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சந்தித்து காதல் வயப்பட்டனர்.

    இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தனர். மைக்கேலை இந்தியாவுக்கு அழைத்து வந்து தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா ஆகியோரிடம் ஸ்ருதிஹாசன் அறிமுகப்படுத்தினார். திருமண நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் பட்டு வேட்டியும் ஸ்ருதிஹாசன் பட்டு சேலையும் அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தின.



    ஸ்ருதிஹாசன் சில வருடங்களாக புதிய படங்களில் நடிக்கவில்லை. எனவே இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் - மைக்கேல் காதலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

    ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த மைக்கேல் புகைப்படங்களை நீக்கி மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக பதிவிட்டுள்ளார். மைக்கேலும் டுவிட்டரில் காதல் முறிந்ததை உறுதிப்படுத்தி உள்ளார். நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், கூகுள் தேடலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. #AvengersEndgame



    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று வெளியானது. உலகம் முழுக்க அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் கூகுளையும் விட்டுவைக்கவில்லை.

    எண்ட்கேம் திரைப்படம் வெளியானதில் இருந்து இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கான சினிமா டிக்கெட் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது. இந்நிலையில் புதிய மார்வெல் திரைப்படம் பற்றிய தேடல்களில் அவெஞ்சர்ஸ் அபிமானிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.



    இவர்களை குஷிப்படுத்த கூகுள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வில்லன் கதாபாத்திரமான தானோஸ்-ஐ தேடுபவர்களுக்கு கூகுள் சுவாரஸ்யம் அளிக்கிறது. அந்த வகையில் கூகுளில் ‘Thanos’ என டைப் செய்து பின் திரையின் வலதுபுறம் இடதுபக்கத்தில் தோன்றும் நவரத்தின கற்களை க்ளிக் செய்ய வேண்டும். 

    இவ்வாறு செய்ததும் தானோஸ் கையுறை தானாக விரல்களை மடித்துக் கொண்டு சொடக்கு போடும். பின் கூகுள் தேடல் பக்கத்தில் தோன்றிய பதில்கள் மேலும், கீழுமாக ஒவ்வொன்றாக காற்றில் மறைந்து போகிறது. மீண்டும் தானோஸ் கையில் இருக்கும் நட்சத்திர கற்களை க்ளிக் செய்ததும் மறைந்து போனவை திரையில் தோன்றுகிறது.



    தானோஸ் கதாபாத்திரம் திரைப்படத்தில் செய்த நடவடிக்கைகள் கூகுள் தேடலில் அப்படியே பிரதிபலிப்பது அவெஞ்சர்ஸ் ப்ரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என தெரிகிறது. அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முந்தைய பாகத்தில் தானோஸ் கதாபாத்திரம் நவரத்தின கற்களை கொண்டு உலகின் பாதி மக்கள் தொகையை ஒரே சொடக்கில் அழித்து விடுவார். 

    இந்நிலையில், எண்ட்கேம் திரைப்படம் வெளியானதையொட்டி கூகுளில் தானோஸ் சொடக்கு செயற்கையாக சேர்க்கப்பட்டுள்ளது. இது கூகுள் செய்வோருக்கு சுவாரஸ்யத்தை கொடுப்பதோடு மட்டுமின்றி, திரைப்படத்திற்கும் ஒருவித விளம்பரமாக மாறியிருக்கிறது.
    கவுதம் கார்த்திக்குடன் தேவராட்டம் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா மோகன், நான் ரொம்ப பாவம் என்று கூறியிருக்கிறார். #Devarattam #ManjimaMohan
    அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தை தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கவுதம் கார்த்திக்கு ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

    மாலைமலருக்கு கவுதம் கார்த்திக் அளித்த பேட்டியில், மஞ்சிமா மோகன் மிகவும் திறமையானவர், தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு ஆழமாக விவரிப்பார். நான் எதாவது கேள்வி கேட்டு அதை விட்டுவிடுவேன். ஆனால், மஞ்சிமா அதைப்பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார். இதைப் பார்த்த பாபா மாஸ்டர், என்னப்பா அந்த பெண்ணை பேச வைத்துக் கொண்டே இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கும் மஞ்சிமா ஒரு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்று கூறினார்.



    இதற்கு மஞ்சிமா, நான் என்னுடைய கண்ணோட்டத்தில் இருப்பதை மற்றவர்களுக்கு விவரிப்பேன். அதற்காக கொஞ்சம் பேசுவேன். இதை கவுதம் இப்படி கூறுகிறார். நான் படப்பிடிப்பு தளத்தில் பாவமாக இருப்பேன். 

    இதற்கு கவுதம் கார்த்திக், மஞ்சிமாவை நம்பாதிங்க, நான்தான் பாவம் என்று கலகலப்பாக கூறினார்.
    காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் பிரபலமான ஷில்பா மஞ்சுநாத், தற்போது நயன்தாரா, திரிஷா வரிசையில் பின் தொடர்கிறார். #ShilpaManjunath
    காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் படங்களின் மூலம் பிரபலமானவர் ஷில்பா மஞ்சுநாத். இவர் அடுத்து இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. 

    கிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி தயாரித்து இயக்கியுள்ளார். ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார். 



    படம் குறித்து பேரழகி விஜயன் கூறியதாவது: ‘இது ஒரு அறிவியல் புனைவு படம். சீரியசாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, திரிஷா வரிசையில், ஷில்பா மஞ்சுநாத்தும் இணைந்துள்ளார். 
    மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #Lawrence #RaghavaLawrence
    காஞ்சனா 3 படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னை பற்றியும் எனது சேவைகளை பற்றியும் அவதூறு பேசுவர்களை பற்றி கவலை படாதீர்கள்.

    என் மீது அக்கறை உள்ள ஒரு சில மாற்றுத்திறனாளிகளும் திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்மந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடை பிடியுங்கள். 



    நான் மும்பையில் காஞ்சனா இந்தி படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அது வரை அமைதி காப்போம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமாகி வரும் நிவேதா பெத்துராஜ், தற்போது ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காண்பித்து வருகிறார். #NivethaPethuraj
    அமெரிக்கா வாழ் தமிழ்ப்பெண்ணான நிவேதா பெத்துராஜ் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் என்று தமிழ் படங்களில் நடித்து வரும் நிவேதா அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.



    நான்கு தெலுங்குப்படங்கள், இரண்டு தமிழ்ப்படங்கள் என்று நிவேதா பெத்துராஜ் பிசியாக வலம் வருவதற்கு அவரது அர்ப்பணிப்பு உணர்வு தான் காரணம் என்கிறார்கள். நிவேதாவுக்கு தற்போது ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் எளிமையான வாழ்க்கையை கடைபிடிக்க தொடங்கியுள்ளார்.
    பல சூப்பர் ஹீரோக்களை கொண்டு பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் விமர்சனம். #Avengers #AvengersEndgame
    திரை உலக ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்ஸ் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், அவெஞ்சர்ஸின் இறுதி பாகம் ஆகும்.

    கடந்த பாகத்தில் அனைத்து நவரத்தின கற்களை கைப்பற்றிய தானோஸ், தனது சக்தியின் மூலம் உலகில் உள்ள பாதி மக்களை அழித்து விடுகிறார். இது அவெஞ்சர்ஸ் குடும்பங்களையும் பாதிக்கிறது. 

    இதன் தொடர்ச்சியாக இப்படம் ஆரம்பிக்கிறது. அவெஞ்சர்ஸ் அனைவரும் சோகத்தில் இருக்க கேப்டன் மார்வல் விண்வெளியில் இருந்து ஐயர்ன் மேனை பூமிக்கு அழைத்து வருகிறார். உடல்நிலை மோசமாக இருக்கும் இவருக்கு சிகிச்சை அளிக்கிறார்கள்.



    தானோஸிடம் இருக்கும் நவரத்தின கற்களை வைத்து இழந்த அனைவரையும் மீட்க நினைக்கிறார்கள் அவெஞ்சர்ஸ். ஒரு வழியாக தானோஸ் மகள் மூலம் தானோஸ் இருக்கும் கிரகத்தை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், தானோஸிடம் கற்கள் இல்லாததை கண்டு விசாரிக்கும் போது, கற்களை அழித்து விட்டதாக தானோஸ் கூறுவதை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். 

    நவரத்தின கற்கள் இல்லாமல் அவெஞ்சர்ஸ் இழந்தவர்களை எப்படி மீட்டார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை. 

    பல பாகங்களை விட இறுதி பாகத்தை பார்க்க உலக திரை ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்தி செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆக்‌ஷன், காமெடி, செண்டிமெண்ட், பிரம்மாண்டம் என்று ரசிகர்களுக்கு விருந்து கொடுத்திருக்கிறார்கள்.



    கதாபாத்திரங்களைப் பற்றி சொல்ல தேவையில்லை. அனைவரும் கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஐயர்ன் மேன், கேப்டன் அமெரிக்கா, கேப்டன் மார்வல், தோர், ஹல்க் உள்ளிட்டவர்களை திரையில் பார்க்கும் போது அனல் பறக்கிறது. இந்த முறை தோர் காமெடியில் கலக்கி இருக்கிறார். 

    சின்ன சின்ன விஷயங்கள் கூட பிரம்மாண்டமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்திருக்கிறார்கள். இறுதி காட்சி பிரம்மாண்டத்தின் உச்சம். அதுவும் 3-டியில் பார்க்கும் போது புது அனுபவத்தை கொடுக்கிறது. தமிழில் பார்க்கும் போது விஜய் சேதுபதியின் பின்னணி குரல் படத்திற்கு மைனசாக அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதியை தவறு சொல்லவில்லை. ஆனால், ஐயன்மேனுக்கு விஜய் சேதுபதியின் பின்னணி குரல் சூட்டாகவில்லை. 

    மொத்தத்தில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ பிரம்மாண்டத்தின் உச்சம்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன், தற்போது பவர் படத்தின் மூலம் கேங்ஸ்டராக களமிறங்க இருக்கிறார். #ShrutiHaasan #Power
    ஸ்ருதிஹாசன் சிங்கம்-3 படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி விட்டு விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கிறார். துப்பாக்கி, அஞ்சான் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    முதன் முறையாக நடிகை ஸ்ருதி ஹாசனும் வித்யூத் ஜம்வாலும் இணையும் இந்த இந்தி படத்திற்கு பவர் என தலைப்பிடப்பட்டுள்ளது. மகேஷ் மஞ்சரேக்கர் இப்படத்தை இயக்குகிறார். முழுக்க மும்பையை மையப்படுத்திய தாதா கதையாக உருவாகிவரும் இப்படத்தில், வித்யூத் ஜம்வால் தலைமறைவு தாதாவாக இருக்கும் தன் அப்பாவின் இடத்தைக் கைப்பற்றப் போராடும் தாதாவாக நடிக்கிறார்.



    அவரது ஜோடியாக நடிக்கும் ஸ்ருதி ஹாசனும் படத்தில் கேங்க்ஸ்டராக நடிக்கிறார். 1972ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் கிளாசிக் படமான காட்பாதர் திரைப்படத்திற்கு சமர்ப்பணமாக உருவாகிவரும் இப்படம் வரும் ஜூலை 12ந்தேதி ரிலீசாக இருக்கிறது.
    ×