என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது ஏன்? அதற்கு காரணம் யார் என்பது குறித்து நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார்.
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர். இந்தவாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகென், மதுமிதா ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மதுமிதா திடீரென வெளியேற்றப்பட்டார். 

    தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா போட்டி விதிகளின்படி வெளியேற்றப்பட்டார். வெளியேற்றப்பட்டுள்ள மதுமிதா தனியார் இணைய தளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார். 

    கமல்ஹாசன், மதுமிதா

    பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- ‘பிக்பாஸ் 2வது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது நான் இன்னொரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. மூன்றாவது சீசனில் அழைக்கும்போது இந்த முறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என நினைத்து சம்மதித்துவிட்டேன். பிக்பாஸ் வீட்டில் எனக்கு முதன் முதலில் பிரச்சினை ஏற்பட்டது ஷெரீனுடன் தான். 

    நாம் தமிழ் ரசிகர்களுக்காக தான் நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆனால் ஷெரீன், அபிராமி என யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதை தான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திருப்பிவிட்டனர். கவின் யாரையும் மதிக்கமாட்டார். பெண்களுடன் மட்டும் தான் சுத்துவார். ஒரு அக்கா மாதிரி இருந்து அவருக்கு புத்திமதி சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவே இல்லை. 

    எனக்கு குள்ளச்சி என பெயர் வைத்தது கவின் தான். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. சாண்டி விவகாரத்திலும் எனக்கு அது தான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக தான் நினைக்கிறார். ஆனால் லாஸ்லியா சேரனை அப்படி பார்க்கவில்லை. முதலில் லாஸ்லியா நன்றாக தான் இருந்தார். ஆனால் கவினுடன் சேர்ந்த பிறகு அவரது மனம் மாறிவிட்டது. 

    மதுமிதா

    பிக்பாஸ் வீட்டில் ஆண், பெண் பேதம் இருக்கிறது. அங்கு உள்ள ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடந்த 55 நாட்களாக இதுதான் தொடர்கிறது. அபிராமி சிறைக்கு சென்ற விவகாரத்திலும் இது தான் நடந்தது. அதை நான் தட்டி கேட்டதற்காக தான் என்னிடம் சண்டைக்கு வந்தனர். கடந்த வியாழக்கிழமை தனியார் ஆப் டாஸ்கில் நான் என்னுடைய கருத்தை சொன்னேன். வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போலிருக்கு. 

    நமக்கு மழையே கொடுக்க மாட்டேங்கிறார். தயவுசெய்து வருண பகவான் கருணை காட்ட வேண்டும் என்று கூறினேன். இதற்கு ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவை சேர்ந்த நான் இங்கு இருக்கும் போது எப்படி நீ இப்படி ஒரு கருத்தை கூறலாம். இது ஒன்றும் உன்னுடைய சமூக வலைதளம் கிடையாது என ஷெரீன் கத்தினார். இதற்கு நானும் பதில் அளித்தேன். தனியார் ஆப் ஒரு சமூக வலைதளம் தானே. அதில் என்னுடைய கருத்தை சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டேன்.

    ஆனால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. நீ என்ன எப்ப பார்த்தாலும் தமிழ் பெண் என சொல்ற. தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக்கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக்கொண்ட போது எனக்கு ஆதரவாக இருந்தது சேரனும், கஸ்தூரியும் தான். வேறு யாரும் என்னிடம் வரவில்லை. இனி பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன்’.

    இவ்வாறு மதுமிதா தெரிவித்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனான விவேக்கின் நீண்ட கால கனவை இயக்குனர் ஷங்கர் நிறைவேற்றியுள்ளார்.
    நடிகர் விவேக் 1987-ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சுமார் 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி காமெடியனாக வலம் வருகிறார். இந்த 30 ஆண்டுகளில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற பெரும்பாலான உச்ச நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட அவர் நடித்ததில்லை. 

    கமல்ஹாசன், விவேக்

    கமலுடன் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட கால கனவு என விவேக் பல்வேறு நிகழ்ச்சிகளில் தெரிவித்திருந்தார். தற்போது அது நிறைவேற உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் விவேக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    விளம்பர படத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் தருவதாக கூறியும், அதில் நடிக்க மறுத்து ஏன் என்பது குறித்து ஷில்பா ஷெட்டி விளக்கமளித்துள்ளார்.
    தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான ‘அப்னே’ என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார்.

    அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும், தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிக்பிரதர்ஸ் நிகழ்ச்சியில் இனவெறிக்கு ஆளான சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வருகிறார் ஷில்பா. இந்தியில் தயாராகும் பெயரிடப்படாத நகைச்சுவை படத்தில் நடிக்க ஷில்பா ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தை சபீர்கான் இயக்குகிறார். 

    ஷில்பா ஷெட்டி

    இந்த நிலையில் உடல் எடையை குறைக்கும் ஆயுர்வேத மருந்து விளம்பர படத்தில் நடிக்க ஷில்பாவை அணுகினர். இதற்காக அவருக்கு ரூ.10 கோடி சம்பளம் தருவதாகவும் பேசினர். ஆனால் அதில் நடிக்க ஷில்பா ஷெட்டி மறுத்து விட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களில் நடிக்க நான் விரும்ப மாட்டேன். மாத்திரைகள் தற்காலிக தீர்வுதான். சரியான உணவு மற்றும் உடற்பயிற்சியால் மட்டுமே நோயில் இருந்து விடுபடலாம்” என்றார்.
    மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு எஸ்.வி.சேகர் வலியுறுத்தியுள்ளார்.
    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் கடந்த ஜூன்.23-ந்தேதி தொடங்கிய நிலையில், பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் மற்றும் சாக்ஷி என 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

    100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வார இறுதியில் சாக்ஷி வெளியேற்றப் பட்டதை அடுத்து கஸ்தூரி வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார். அவரை அடுத்து சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் போட்டியாளராக மீண்டும் களம் இறங்கினார்.

    வனிதாவின் வருகையால் அடுத்து பல்வேறு பிரச்சினைகள் மூண்டன. வீட்டில் இருந்த போட்டியாளர்கள் பல அணிகளாக பிரிந்தனர். வீட்டிலிருக்கும் ஆண்கள், பெண்களை பயன்படுத்திக் கொள்வதாகவும், அடிமைப்படுத்துவதாகவும் மதுமிதா ஆதங்கப்பட்டார். 

    பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற தனியார் ஆப் டாஸ்க்கில் மதுமிதா தெரிவித்த கருத்து கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள காவிரி நதிநீர் பங்கீடு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததாகவும், இதற்கு நடிகை ஷெரின் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    கமலுடன் மதுமிதா

    பிக்பாஸ் வீட்டில் நடந்த நிகழ்வுகளை ஒளிபரப்பாமல் மதுமிதாவை வெளியேற்றிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக்பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப் பட்டார்” என்று அறிவித்தார்.

    இதுகுறித்து நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் கூறியிருப்பதாவது:- “மதுமிதாவை தற்கொலைக்கு
    தூண்டியவர் யார் என கண்டு பிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 காமிராவுல சில வேலை செய்ய வில்லையா? இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை” என்று கூறியுள்ளார். இந்த பதிவில் அவர் தமிழக காவல்துறைத்
    தலைவரையும், தமிழக முதல்வர் அலுவலகத்தையும் டேக் செய்துள்ளார்.

    எஸ்.வி.சேகரின் இந்தப் பதிவுக்கு பதில் கமெண்ட் வெளியிட்டுள்ளவர்கள், மது விவகாரத்தில் நீதி தேவை என வலியுறுத்தி, சென்னை போலீசையும் சேர்த்து டேக் செய்துள்ளனர்.

    முன்னணி காமெடி நடிகராக நடித்து வரும் யோகிபாபு, தற்போது நடித்து வரும் படத்தில் 50க்கும் மேற்பட்ட அழகிகளுடன் நடனம் ஆடியிருக்கிறார்.
    தம்பி ராமையா, யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகிய நால்வர் இணைந்து நடிக்கும் படம் ‘காவி ஆவி நடுவுல தேவி’. 

    மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. மேலும் இதில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாக இவரின் ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். 

    குழலூதும் கண்ணனாக நடிக்கும் யோகி பாபு ஆவியாக வந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனமாடி பாடிய "இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே பாடலுக்கான காட்சிகள் சிவராக் சங்கர் நடனமாஸ்டர்  சொல்லி கொடுக்க படமாக்கப்பட்டது.

    யோகிபாபு

    பஸ் கம்பெனி முதலாளியாக தம்பி ராமையாவும், பிரபல தாதாவாக நான் கடவுள் ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் அடிக்கும் லூட்டிகள் நகைச்சுவையில் பட்டையை கிளப்பும் என்கிறார் இப்படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன்.

    விரைவில் திரைக்கு வர உள்ள "காவி ஆவி நடுவுல தேவி" படத்தை வசனம் எழுதி புகழ்மணி இயக்கி வருகிறார்.
    100 படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படத்தின் முதல் கட்டத்தை நடிகர் அதர்வா முடித்திருக்கிறார்.
    அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ''100'' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கண்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் அதர்வா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமம், கொடி போன்ற படங்களில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். 

    குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வா பிஎச்.டி பட்டதாரியாகவும், அனுபமா பரதநாட்டிய டான்சராகவும் நடிக்கிறார்கள்.

    அதர்வா, அனுபமா பரமேஸ்வரன்

    இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறார்கள்.
    சுந்தர் பாலு இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் கர்ஜனை படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
    திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

    உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவர் தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

    கர்ஜனை படத்தில் திரிஷா

    விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரேகா, சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் நடிப்பது அவருக்கு பிடிக்காது என்று கூறியிருக்கிறார்.
    பாரதிராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரேகா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து புகழ்பெற்ற ரேகாவுக்கு புன்னகை மன்னன் மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

    தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ரேகா, சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில், தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும், அதற்கு காரணம் என் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும் அக்கறையும் தான் என்றும் கூறினார்.

    ரேகா

    மேலும் பேசிய அவர், தந்தையின் மறைவுக்குப் பின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் அவருக்கு ஒரு கல்லறை எழுப்பியதாகவும், தான் இறந்த பின், தந்தையை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் ரேகா விருப்பம் தெரிவித்துள்ளார்.
    அங்காடித்தெரு படம் மூலம் மிகவும் பிரபலமான மகேஷ், தற்போது தேனாம்பேட்டை மகேஷ் படத்தில் பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
    ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.

    இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்.

    பெண் வேடத்தில் அங்காடித்தெரு மகேஷ்

    இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’  ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    இப்படத்தில் ஒளிப்பதிவு - முனீஷ், இசை - ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் - பாசில், கலை - கார்த்திக், நடனம் - தீனா, பாடலாசிரியர் - சிவசங்கர், சண்டை பயிற்சி - எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்’ என்றார்.
    சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படமும், சிவகார்த்திகேயனின் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது.
    பெரிய நடிகர்கள் படங்களை பண்டிகையில் திரைக்கு கொண்டுவர வேண்டும் என்றும், மற்ற நாட்களை சிறுபட்ஜெட் படங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதன்படி விஜய் நடிப்பில் தயாராகி வரும் பிகில் தீபாவளிக்கு வருகிறது.

    விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களையும் தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டு இப்போது அவை தள்ளிப்போகின்றன. டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் சூர்யாவின் சூரரைப்போற்று, சிவகார்த்திகேயனின் நம்ம விட்டு பிள்ளை ஆகிய 2 படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    சூர்யா, சிவகார்த்திகேயன்

    கடந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் தனுசின் மாரி-2, ஜெயம் ரவியின் அடங்க மறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், விஜய்சேதுபதியின் சீதக்காதி ஆகிய 5 படங்கள் வெளியானது. இப்போது சூரரைப்போற்று, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய 2 படங்கள் மட்டுமே வருவதால் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சூரரைப்போற்று படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இதில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி வருகிறார். நம்ம வீட்டு பிள்ளை படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் என்று 2 நாயகிகள் உள்ளனர்.
    மது ஜி கமலம் இயக்கத்தில் அஞ்சிதா ஸ்ரீ நடிப்பில் உருவாகி வரும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம் பெண் கல்வியை வலியுறுத்தும் வித்தத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
    ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது என் காதல் புத்தகம்.

    அறிமுக நாயகி அஞ்சிதாஸ்ரீ இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் மது ஜி கமலம். இவர் மலையாளத்தில் நான்கு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘தமிழகத்தின் உட்பிரதேசமான நாட்டுப்புற கிராமம் ஒன்றில் நிகழ்கிற கதைக்களம் இது. பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை ஆழமாக வலியுறுத்துகிற படம் இது.

    இது என் காதல் புத்தகம்

    கல்வியறிவை முழுமையாக எதிர்க்கிற ஊர் தலைவர் விவசாயம் செய்வதற்கும், திருமணம் முடித்து பிள்ளை பெறுவதற்கும் உங்களுக்கு எதற்கடா கல்வி என்று சொல்லுகிறார். ஆனால் அவரது ஒரே மகளான தேவயாணி (நாயகி) க்கு படிப்பின் மீது நாட்டம் ஏற்படுகிறது. அதனால் தந்தையின் சிந்தனைக்கு எதிராக செயல்பட தொடங்குகிறாள் அதனால் அவள் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறாள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

    இசைக்கு முக்கியத்துவம் நிறைந்த இந்த படத்தில் டாக்டர் வைக்கம் விஜயலெட்சுமி பாடிய பாடல் உட்பட நான்கு பாடல்கள் உள்ளன. விரைவில் வெள்ளித்திரையில் “இது என் காதல் புத்தகத்தை“ படிக்கலாம் என்கிறார் இயக்குனர் மது ஜி கமலம்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தில் ராட்சசன் பட நடிகை நடித்துள்ளார்.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

    அம்மு அபிராமி, வெற்றிமாறன்

    தற்போது அம்மு அபிராமி படத்தில் இணைந்து நடிப்பதாக கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ள அவர் இதனை பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராட்சசன் படத்தில் நடித்து கவனம் பெற்றார். அசுரன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது.
    ×