என் மலர்
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன் படத்தில் ராட்சசன் பட நடிகை நடித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் அசுரன். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்தில் மஞ்சு வாரியர், பசுபதி, கருணாஸ் மகன் கென், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது அம்மு அபிராமி படத்தில் இணைந்து நடிப்பதாக கூறியுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவேற்றியுள்ள அவர் இதனை பதிவிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராட்சசன் படத்தில் நடித்து கவனம் பெற்றார். அசுரன் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில், கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 4ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சாஹோ படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது மிகவும் சவாலாக இருந்ததாக ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஷ்ரத்தா கபூர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- இதுதான் எனது முதல் மும்மொழி திரைப்படம். நான் இதற்கு முன் ‘ஓகே கண்மணி’ இந்தி ரீமேக்கில் நடித்திருக்கிறேன். சமீபத்தில் தமிழில் ‘அருவி’ படம் பார்த்தேன்.
எப்போதும் படப்பிடிப்பிலேயே இருப்பதால் நிறைய படங்களை பார்ப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இந்த படத்துக்காக இயக்குனர் என்னைத் தேர்வு செய்தது என்னுடைய அதிர்ஷ்டம். கதையை கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அதிலும் பிரபாஸ் நடிக்கிறார். இது ஒரு மும்மொழித் திரைப்படம் என்று கூறியதும் உடனடியாக ஒப்புக்கொண்டேன்.

இந்த படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் என்பதால் நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. முதன்முதலாக துப்பாக்கி பிடித்து நடித்தது கடினமாக இருந்தது. என் கைகள் சிறியதாக இருப்பதால் துப்பாக்கியை பிடிக்கும்போது கைகள் நடுங்கின. படத்தில்தான் நம்மால் கெட்டவர்களை அடிக்க முடியும். அதை நான் சிறப்பாக செய்துள்ளேன்” என்று கூறினார்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ஓ பேபி படத்தின் விமர்சனம்.
இளம் வயதிலேயே கணவனை இழந்து விதவையாகும் லட்சுமி, மகன் மட்டுமே உலகம் என வாழ்ந்து வருகிறார். கஷ்டப்பட்டு மகனை வளர்த்து, படிக்க வைத்து, கல்யாணம் செய்து கொடுக்கிறார். அவரது மகனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. மகன் மீதான அதீத பாசத்தால் தனது மருமகளை பகைத்து கொள்கிறார் லட்சுமி. இதனால் மனமுடையும் லட்சுமியின் மருமகள், லட்சுமியை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவரிடம் சொல்கிறார்.
இதை அறியும் லட்சுமி, வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த சமயத்தில் ஒரு மாயசக்தியினால் இளம் பெண்ணாக (சமந்தா) மாற்றமடைகிறார். அதன்பின்னர், தான் இளம் வயதில் தவறவிட்ட விஷயங்களை எல்லாம் அனுபவித்து ஜாலியாக வாழ தொடங்குகிறார். இதையடுத்து காணாமல் போன லட்சுமியை குடும்பத்தினர் தேடி அலைகின்றனர்.

இறுதியில் லட்சுமி இளம்பெண் சமந்தாவாக மாறியதையடுத்து என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? லட்சுமி இளம்பெண் சமந்தாவாக மாறியதை குடும்பத்தினர் கண்டுபிடித்தார்களா? லட்சுமி கடைசி வரை இளம் பெண் சமந்தாவாக இருந்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்துக்கு மிகப் பெரிய பலம் சமந்தா. 70 வயது மனநிலையுடன் கூடிய 24 வயது பெண்ணாக பேச்சு, நடை, உடை, பாவணை என அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். படத்தில் 70 வயது பேபி கேரக்டரில் நடித்துள்ள லட்சுமி, மகன் மீது பாசம் காட்டுவது, நண்பன் ராஜேந்திர பிரசாத்தை கலாய்ப்பது என நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

புதுமையான கதைக்களம், சுவாரசியமான திரைக்கதை என கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி. மனித வாழ்க்கையில் ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதை அந்தந்த மனநிலைக்கு ஏற்றவாறு அணுக வேண்டும் என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
வீட்டின் முதியோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சேர்க்கும் இந்த காலத்தில், ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எவ்வாறு பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து, ஜனரஞ்சகமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் நந்தினி ரெட்டி.

சிறப்பான பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயர். ரிச்சர்டு பிரசாத்தின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘ஓ பேபி’ முதுமையின் இளமை.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படம் தீபாவளிக்கு முன்பே ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’. நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். இதில் விஜய் தன் படப்பிடிப்பு பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த மாதத்துக்குள் அந்தப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
இந்த படம் தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதுவரை பர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடலை மட்டும் ‘பிகில்’ படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் ‘வெறித்தனம்‘ என்ற பாடலை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளது. செப்டம்பரில் டீசரை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் படம் அக்டோபர் 24ந் தேதியே திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 24ந்தேதி வியாழக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக வரும் 3 நாட்கள் விடுமுறையை கருத்தில் கொண்டு இந்த முடிவை படக்குழு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறந்த நடிகர்-நடிகைக்கான சைமா விருதை தனுஷ், திரிஷாவுக்கு பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வழங்கினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் ‘பான்டலுன்ஸ் சைமா’ விருதுகள் வழங்கும் விழா கத்தாரில் நடந்தது. இதில் 4 மொழி திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.
சிறந்த நடிகருக்கான விருது ‘வடசென்னை’ படத்தில் நடித்த தனுசுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘96’ படத்தில் நடித்த திரிஷாவுக்கும் வழங்கப்பட்டன. ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதை பெற்றனர். தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை விருதை பெற்றார்.

சிறந்த படத்துக்கான விருதை ‘பரியேறும் பெருமாள்’ பெற்றது. சிறந்த இயக்குனர் விருது பாண்டிராஜுக்கும், சிறந்த அறிமுக இயக்குனர் விருது நெல்சனுக்கும், சிறந்த அறிமுக நடிகர் விருது தினேசுக்கும், அறிமுக நடிகை விருது ரெய்சாவுக்கும் கிடைத்தன. சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை ஆர்.டி.ராஜசேகர் பெற்றார். விருதுகளை நடிகர் மோகன்லால் வழங்கினார்.
சிறந்த பாடலாசிரியர் விருது விக்னேஷ் சிவனுக்கும், பாடகர் விருது அந்தோணி தாசனுக்கும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது யோகிபாபுவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும் வழங்கப்பட்டன. விழாவில் தனுஷ் பேசும்போது, “வடசென்னை படத்துக்காக 2 வருடம் கடுமையாக உழைத்தோம். அதற்கு விருது கிடைத்து இருப்பது மகிழ்ச்சி” என்றார்.
பான்டலுன் ஸ்டைல் ஐகான் விருதை யஷ், சமந்தா ஆகியோர் பெற்றனர். இதன் வர்த்தக தலைவர் ரியான் பெர்ணான்டஸ் பேசும்போது, மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் மட்டுமின்றி திரையுலக பேஷன்களுக்கும் பான்டலுன் முக்கிய பங்களிப்பை செய்கிறது என்று தெரிவித்தார். பேஷன் ஐகான் போட்டியில் வென்ற 8 ரசிகர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் நடிகர்கள் பிருதிவிராஜ், டோவினா தாமஸ், சிவா, நடிகைகள் ராதிகா சரத்குமார், ராய்லட்சுமி, ஸ்ரேயா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா லட்சுமி, நிகிலா விமல், சுவாதிஷ்தா, ஜனனி அய்யர், டைரக்டர் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் விஷ்ணு இந்தூரி, ராஜ்குமார் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
எம்.சித்திக் இயக்கத்தில் மகேஷ், அனிஷா நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ் படத்தின் முன்னோட்டம்.
ஜி.எஸ்.எம் பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார்.
இப்படம் குறித்து இயக்குனர் எம்.சித்திக் கூறும்போது, ‘எதற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கிறார் மகேஷ். இவரை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கிறார் இவரது தந்தை. ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்பது அவரது தந்தைக்கு தெரிய வருகிறது. அதன்பின் மகேஷின் வாழ்க்கை எப்படி செல்கிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்.

இப்படத்தில் மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும் பெண் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். இவருடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் ஓனர் சி.டி.கணேசன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் ஒளிப்பதிவு - முனீஷ், இசை - ஸ்ரீ சாய் தேவ், எடிட்டர் - பாசில், கலை - கார்த்திக், நடனம் - தீனா, பாடலாசிரியர் - சிவசங்கர், சண்டை பயிற்சி - எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.
சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய தமிழக அரசே ஒரு குழுவை அமைத்து தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தமிழில் பாரம் படத்திற்கு மட்டுமே விருது கிடைத்தது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்கள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த வருடம், பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்த படங்கள். மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படங்கள் கலந்துக் கொண்டு விருதுகள் பெற்றுள்ளது. ஆனால், இந்தப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையினரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில், சிறந்த தமிழ் படங்களை தேர்வு செய்ய தமிழக அரசே ஒரு குழுவை அமைத்து தேசிய விருதுக்கு பரிந்துரை செய்ய வழி வகுக்க வேண்டும் என கவிஞர் சிநேகன் கூறியுள்ளார்.
தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் அப்பலோ மருத்துவமனை சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து, தமிழ் படங்களுக்கு தேசிய விருது வழங்கப்படாததில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை.
தேசிய விருது கிடைக்கவில்லை என்பதற்காக தமிழ் திரைப்பட கலைஞர்கள் வருத்தப்பட வேண்டாம். தேசிய விருது கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் பேசும் விருது கிடைத்துள்ளது. ஒரு படத்திற்கு தேசிய விருதை விட மக்கள் பேசிய விருது தான் பெரியது என்று கூறினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படத்தின் இசை நவம்பர் மாதம் வெளியாகும் என அனிருத் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னை பாண்டி பஜாரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய இசையமைப்பாளர் அனிருத், முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து தனக்கும் மிகவும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் நவம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் இசை வெளியாகும் என்று அவர் கூறினார்.
எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், நிக்கி சுந்தரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ’மெய்’ படத்தின் முன்னோட்டம்.
கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் ’மெய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சார்லி, கிஷோர் சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படம் குறித்து இயக்குனர் கூறுகையில், ‘‘மனிதர்களின் உயிர் காக்கும் மருத்துவ துறையில் மலிந்து போய் கிடக்கும் ஊழல்களை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். சமுதாய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும்’’ என்று கூறுகிறார், டைரக்டர் எஸ்.ஏ.பாஸ்கரன்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான ரெஜினா கசண்ட்ரா, ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகை ரெஜினா கசண்ட்ரா. இவரது நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள தெலுங்கு படம் ‘எவரு’. இது ஒரு திரில்லர் படம். விமர்சகர்களிடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து எவரு படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் ரெஜினா ஒரு டுவீட் செய்துள்ளார். அதாவது தனது கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள், தன்னுடன் காபி குடிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

“எவரு படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன?” என அவர் கேட்டுள்ளார். இந்த கேள்விக்கு சரியாக பதில் அளிப்பவர்கள் தன்னை நேரில் சந்திக்கலாம் என ரெஜினா கூறியுள்ளார்.
Helloo... Thank you so much for the love and amazing response for #Evaru 🤗
— ReginaCassandra (@ReginaCassandra) August 16, 2019
You askpd to meet and how could I resist.
Here's a small contest question.
What's Sameera's husband's name in the movie #Evaru?
Give the correct answer and join me for coffee on the 18th.♥️ pic.twitter.com/tYbC1F2TQ2
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் பல நடிகைகள் தவிர்த்து வரும் போது, தன்னுடைய படத்திற்காக தானே போட்டி அறிவித்துள்ள ரெஜினாவை தெலுங்கு திரையுலகம் வியப்புடன் பார்க்கிறது.
டிவி சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜனுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
டிவி சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன் தற்போது வைபவ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அறிமுக இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். நிதின் சத்யா இந்தப் படத்தை தயாரிக்க, பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வாணி போஜன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். விஜயதேவரகொண்டா இந்தப் படத்தை தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குநர் தருண் பாஸ்கர் நடிக்கிறார். சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சமீர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இவ்விரு படங்களின் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வாணி மற்றொரு படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளார். நிரோஜன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஓவியா நடித்த 90 எம்.எல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொம்மு லட்சுமி மற்றொரு கதாநாயகியாக இணைந்துள்ளார். இப்படத்தை அருண் பாண்டியனின் ஏ-பி குரூப்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாக உள்ளன.






