என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் சைக்கிளிங் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் பங்கேற்க உள்ளார்.
    நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்யா 2005-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'அறிந்தும் அறியாமலும்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நான் கடவுள், ராஜா ராணி, மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தற்போது மகாமுனி, டெடி, காப்பான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    நடிகர் ஆர்யா ஒரு சைக்கிளிங் ஆர்வலர். ஆர்யா பல இடங்களுக்கு சைக்கிளில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரும் நடிகர் சந்தானமும் ஞாயிறு தோறும் சென்னையில் இருந்து மகாபலிபுரம் வரை சைக்கிளிலேயே சென்று திரும்புவது வழக்கம். நடிகர் சங்க தேர்தலின் போது கூட நடிகர் ஆர்யா தனது வாக்கினை பதிவு செய்வதற்காக சைக்கிளில் தான் வந்தார்.

    ஆர்யா, சூர்யா

    தனது ரசிகர்களையும் டுவிட்டர் மூலமாக சைக்கிளிங் செய்ய ஊக்குவித்து வருகிறார். அவர் சைக்கிள் ரைடராக பல தேசிய சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் நாட்டில் ஒரு நீண்ட தூர சைக்கிள் போட்டி நடக்க இருக்கிறது. இப்போட்டியில் பாரிஸ் பிரெஸ்ட் பாரிஸ் எனும் மாபெரும் சைக்கிள் போட்டியில் 1200 கிலோமீட்டர் தூரத்தை ஒரு அணியாக கடக்க வேண்டும். இம்மாதம் நடைபெறும் இப்போட்டியில் ஆர்யாவின் அணி கலந்து கொள்ள இருக்கிறது.

    இப்போட்டியில் கலந்து கொள்ள போகும் ஆர்யாவின் அணிக்கான ஜெர்சியை நடிகர் சூர்யா அறிமுகம் செய்து வைத்தார். ஆர்யா அணி சிறப்பாக சைக்கிள் ரைடு செய்து வெற்றிபெற தனது வாழ்த்தினை தெரிவித்தார். பிரான்ஸ் நாட்டில் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 22-ந்தேதி வரை நடைபெறும் இந்த சைக்கிள் போட்டியில் சுமார் 6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
    ராய் லட்சுமி அடுத்ததாக நடித்து வரும் `ஜான்சி ஐ.பி.எஸ்’ படத்தின் டப்பிங் உரிமையை வாங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நீயா 2 படத்துக்கு பிறகு தமிழில் சிண்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமி நடித்து வருகிறார். இதற்கிடையே ’வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ படத்தில் விஜயசாந்தி நடித்தது போல `ஜான்சி ஐ.பி.எஸ்’ என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். இதில் படுபயங்கரமான அதிரடி சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

    ராய் லட்சுமி

    படத்தின் டிரெய்லர் வெளியான பத்து மணி நேரத்துக்குள்ளேயே, அதன் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமைகளைக் கோரி பல நிறுவனங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இதனால், படத்தின் விலையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. மற்ற மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
    அறிமுக இயக்குநர் குமரன் இயக்கத்தில் கதிர் ஹீரோவாக நடித்துவரும் `ஜடா' படத்தில் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வில்லனாக நடித்துள்ளார்.
    `பரியேறும் பெருமாள்' படத்திற்குப் பின் கதிர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் `ஜடா'. பொயட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார். கதிர் இப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி ரோஷினி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ஆடுகளம்’ கிஷோர், லிஜீஸ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். `விக்ரம் வேதா' இசையமைப்பாளர் சாம் சி.எஸ்தான் இப்படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். 

    ஏ.பி.ஸ்ரீதர்

    குறிப்பாக இப்படத்தில் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் நடித்துள்ளார். ஓவியம் வரைவதில் கைதேர்ந்த இவர் தற்போது ஜடா படத்தில் வில்லனாக மிரட்ட காத்திருக்கிறார் என்பது டீசர் மூலம் தெரியவருகிறது. இவர் ஏற்கனவே ஆந்திராமெஸ் படத்தில் நடித்துள்ளார். மேலும் மய்யம் என்ற படத்தை தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜடா படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
    மூன்று தேசிய விருதுகளை வென்ற இந்தி படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றிய பிரசாந்த், அதில் நடிக்க உள்ளார்.
    ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதுன்'. 2018, அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் இந்தியாவில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் வசூல் சாதனை புரிந்தது. குறிப்பாக சீனாவில் ஹாலிவுட் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தில் யதார்த்தமாக நடித்த ஆயுஷ்மான் குரானாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய தேசிய விருதுகளையும் வென்றுள்ளது. பிரம்மாண்ட வெற்றியால், இந்தப் படத்தின் இதர மொழிகள் ரீமேக் குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் தனுஷ், சித்தார்த் ஆகியோர் ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல் வெளியானது. அதிலும், குறிப்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் 'அந்தாதுன்' படத்தின் ரீமேக்கில் நான் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

    பிரசாந்த்

    இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் தியாகராஜன் 'அந்தாதுன்' தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக தியாகராஜன், " 'அந்தாதுன்’ கதை ஒரு பியானோ மாஸ்டரை மையமாகக் கொண்டது. பிரசாந்த் லண்டன் டிரினிடி இசைக்கல்லூரி மாணவர் என்பதாலும், நல்ல கைதேர்ந்த பியானோ கலைஞர் என்பதாலும் இதில் சரியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

    தற்போது படத்தின் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்தும் முடிவானவுடன் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும். ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் வெளியான 'ஜானி கத்தார்' படத்தின் ரீமேக்கையும் கைப்பற்றி, தமிழில் 'ஜானி' என்ற பெயரில் தியாகராஜன் தான் தயாரித்தார். அதிலும் பிரசாந்த் நாயகனாக நடித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‌ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தில் கமல்ஹாசன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இருவருக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது ‌ஷங்கர் கமல் கூட்டணியில் உருவாகும் இந்தியன்- 2 திரைப்படத்தில் அதிக அளவிலான நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 

    கமல்

    காஜல் அகர்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், ஆர்ஜே.பாலாஜி, நெடுமுடிவேணு, டெல்லி கணேஷ் என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. தற்போது சமுத்திரக்கனியும் படக்குழுவில் இணையவுள்ளார். ஆகஸ்ட் 12-ந்தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் சமுத்திரகனிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
    பிக்பாஸ் போட்டியாளர் மதுமிதா கையில் கட்டுடன் வெளியேறியதால், அவர் பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் அபிராமி, கவின், லாஸ்லியா, முகின், மதுமிதா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் யார் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நடிகை மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். 

    பிக்பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதை நிரூபிக்கும் வகையில் நடிகை மதுமிதா கையில் கட்டுடன் கமல்ஹாசனை சந்திக்கும் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

    தற்போது கேப்டனாக இருக்கும் நிலையில் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகை ஓவியா நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விக்கு மனம் திறந்து பேட்டியளித்திருக்கிறார்.
    பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட படம் சாஹோ. அருண் விஜய், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாஸ் அளித்த பேட்டி:

    பாகுபலி படத்துக்கு பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடித்தது ஏன்?

    பாகுபலிக்கு பிறகு எளிமையான காதல் கதையில் தான் நடிக்க திட்டமிட்டேன். இந்த கதையை கேட்டதும் ஆச்சர்யம் ஆனேன். எல்லோருக்கும் பிடித்ததால் அது படமாகவும் மாறியது.

    பாகுபலிக்காக 4 ஆண்டுகள், சாஹோவுக்காக 3 ஆண்டுகள். ரசிகர்களை இப்படி காக்க வைப்பது ஏன்?

    படத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட காட்சிகளுக்காக இத்தனை காலம் தேவைப்பட்டது.

    பாகுபலி வெற்றி உங்களுக்கு அழுத்தம் கொடுக்குமே?

    அப்படி எதுவும் இல்லை. ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தால் போதும். அந்த படம் ஒரு வரலாறு.

    பிரபாஸ்

    உங்கள் சம்பளம் 100 கோடி என்று செய்தி வந்ததே?

    இது என் நண்பர்கள் தயாரிக்கும் படம். 12 நிமிட காட்சிக்காக 80 கோடி செலவு செய்துள்ளோம். படத்தின் பட்ஜெட் மிக பெரியது. அந்த பட்ஜெட்டில் குறிப்பிட்ட சதவீதம் தான் என் சம்பளமாக இருக்கும்.

    தமிழில் எந்த இயக்குனருடன் பணிபுரிய விருப்பம்?

    மணிரத்னம், சங்கர், கவுதம் மேனன் என்று பெரிய பட்டியல் இருக்கிறது.

    திருமணம் எப்போது?

    எப்போது நடக்குமோ அப்போது நடக்கும். காதல் திருமணமாகவும் இருக்கலாம்.
    தாதா 87 என்ற பட இயக்குனரின் அடுத்த படம் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற தலைப்பில் உருவாகிறது.
    தாதா 87 என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி. இவர் அடுத்ததாக ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) என்ற படத்தை இயக்கியுள்ளார்.

    பொல்லாத உலகில் பயங்கர கேம் காமெடி திரில்லரான படம். இதில் தமிழ் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த  படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார்.

    ஐஸ்வர்யா தத்தா

    படத்தோட கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், “பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுகிறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அது (happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தான் படம். திரையில நடிக்காம  ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது’ என்றார்.

    இவர் ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீட்ரு என்ற படம் இயக்கி வருகிறார்.
    சமூக வலைதளத்தில் மத ரீதியிலான எழுப்பப்பட்ட ரசிகரின் கேள்விக்கு நடிகர் மாதவன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
    நடிகர் மாதவன் சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மத ரீதியிலாக கேள்வியை எழுப்பியுள்ளார். அவருடைய பூஜை அறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அந்த கேள்வி இடம் பெற்றது.

    புகைப்படத்தை உன்னிப்பாக பார்த்து கண்டுபிடித்து, “பின்னணியில் சிலுவை இருப்பது ஏன்? அதுயென்ன கோவிலா? நீங்கள் என்னுடைய மதிப்பை இழந்து விட்டீர்கள். நீங்கள் எப்போதாவது தேவாலயங்களில் இந்து கடவுள்களைப் பார்த்துள்ளீர்களா? நீங்கள் இன்று செய்தது எல்லாம் கபட நாடகம்தான்” எனப் பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு காட்டமாக பதிலடியை கொடுத்துள்ள மாதவன், ''உங்களுக்கு பிடித்துள்ள நோயிலிருந்து விரைவில் குணம் அடைவீர்களாக'' எனக் குறிபிட்டுள்ளார்.

    இதுதொடர்பான நீண்ட பதிலில், உங்களைப் போன்றோரிடமிருந்து மரியாதை கிடைக்க வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. விரைவில் நீங்கள் உங்களுக்கு பிடித்துள்ள நோயிலிருந்து குணம் அடைவீர்கள். உங்களது நோய்க்கு இடையே நீங்கள் அங்கிருந்த பொற்கோயில் படத்தைப் பார்க்கவில்லை, இல்லையெனில் சீக்கிய மதத்துக்கு மாறினேனா? என கேள்வியை கேட்பீர்கள். எனக்கு தர்காவிலிருந்தும் ஆசிர்வாதம் உள்ளது. 

    மாதவன்

    உலகில் உள்ள பல்வேறு வழிபாட்டு தலங்களில் இருந்தும் எனக்கு ஆசிர்வாதம் உள்ளது. அங்கிருந்து சில படங்கள், அடையாளங்கள் பரிசுப் பொருட்களாக வந்துள்ளது; சிலவற்றை நானே வாங்கி உள்ளேன். என்னுடைய வீட்டில் எல்லா மத நம்பிக்கையை சேர்ந்தவர்களும் பணி செய்கிறார்கள். நாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் வழிபாடு செய்கிறோம். அனைத்து படைவீரர்களும் இதைத்தான் சொல்கின்றனர். எனது சிறு வயதியிலிருந்தே இது எனக்கு கற்பிக்கப்பட்டது. ஆம், எனது அடையாளத்தை பெருமிதத்துடன் சுமக்கும் வேளையில், எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும் என கற்று கொடுக்கப்பட்டுள்ளது. 

    எம்மதமும் சம்மதமே. எனது மகனும் இதனை பின்பற்றுவார் என நம்புகிறேன். நான் தர்காவுக்கு செல்வேன், குருத்வாராவுக்கு செல்வேன். தேவாலயத்துக்கு செல்வேன். அருகில் கோவில் இல்லாதபோது இப்படி மற்ற வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. நான் இந்து என்று தெரிந்தும்கூட அங்கெல்லாம் எனக்குப் பூரண மரியாதை கிடைத்தது. அதை நான் எப்படி திருப்பிச் செலுத்தாமல் இருக்க இயலும். எனது பரந்துப்பட்ட பயண அனுபவங்கள் அன்பு, மரியாதை செய்யவே கற்று கொடுக்கிறது. அதுவே உண்மையான மார்க்கம் என்றும் சொல்லி கொடுத்திருக்கிறது. உங்களுக்கும் அன்பும், அமைதியும் கிட்டட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 
    அத்திவரதரை சந்திக்க கடைசி நாளான இன்று மனைவி பிரியாவுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் இயக்குனர் அட்லீ.
    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். கடைசி நாளான இன்று அத்திவரதரை காண்பதற்காக அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும் பலரும் சென்று வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் சென்று வழிபட்டார். நேற்று நள்ளிரவில் நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று அத்திவரதரை வழிப்பட்டார். இந்நிலையில், இன்று காலை இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்.

    அட்லீ இயக்கத்தில் தற்போது ‘பிகில்’ திரைப்படம் உருவாகியுள்ளது. விஜய் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தீபாவளி தினத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.
    சமீபத்தில் வெளியான ஆடை படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிரபல நடிகருக்கு மீண்டும் ஜோடியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
    அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவர் அடுத்ததாக மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

    தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாக இருக்கிறது. நானி நடித்த வேடத்தில் விஷ்ணுவிஷால் நடிக்கிறர். ஷ்ரத்தா ஸ்ரீநாத் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார். கிரிக்கெட் வீரரை பற்றிய உணர்வுபூர்வமான கதையாக இந்த படம் அமைந்திருந்தது. 

    விஷ்ணு விஷால், அமலாபால்

    ராட்சசன் படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால், அமலாபால் இணைந்து நடிக்கிறார்கள். ராட்சசன் படத்தின் போதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசு பரவியது. இருவருமே அதை மறுத்தனர். இந்நிலையில், மீண்டும் இணைந்துள்ளனர்.
    ஆதி நடிப்பில் உருவாகி வரும் க்ளாப் படத்திற்காக ஏராளமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக ஒரு தடகள ஸ்டேடியம் செட் உருவாக்க இருக்கிறார்கள்.
    ஆதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘க்ளாப்’.  பிக் பிரிண்ட் பிட்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்க, பிருதிவி ஆதித்யா இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு குறிப்பிட்ட நேரத்தில் முடிந்ததை பற்றி தயாரிப்பாளர் கார்த்திகேயன் பெருமிதத்தோடு கூறுகிறார்.

    ‘எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. இதன் மூலம் இந்த படத்தின் ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. திட்டமிட்ட படியே, துரித வேகத்தில் இதை செய்து முடித்ததற்கு இயக்குனர் பிருதிவி ஆதித்யா, மற்றும் அவரது குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். அவருக்கு சிறப்பாக ஒத்துழைத்த கதாநாயகன் ஆதி, கதாநாயகி அகன்ஷா சிங், கிருஷ்ணா குரூப், நாசர் சார், பிரகாஷ் ராஜ் சார், முனீஸ்காந்த், மைம்கோபி, மற்றும் எல்லோரும் இந்த பாராட்டுக்கு உரியவர்கள்.

    க்ளாப் படக்குழுவினர்

    அறிமுக இயக்குனர்கள் எல்லோருமே கதை சொல்லும் விதத்திலும், அதை நேர்த்தியாக படமாக்குவதிலும் திறமையானவர்களாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அதை திட்டமிட்டு, தரம் கெடாமல் துரித நேரத்தில் முடிப்பது மட்டுமே அந்த இயக்குனரின் முழுமையான திறமை ஆகும். அந்த வகையில் இயக்குனர் பிருதிவியை அறிமுகம் செய்யும் தயாரிப்பாளர் என்கிற முறையில் எனக்கு பெருமையே. 

    செப்டம்பர் மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக, ஏராளமான பொருட்செலவில் ஒரு தடகள ஸ்டேடியம் உருவாக, அங்கே தொடங்குகிறது. இளையராஜா இந்த படத்துக்கு இசை அமைப்பதே மிக மிக பெருமை" என்றுக் கூறினார்.
    ×