என் மலர்
சினிமா செய்திகள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சூரரைப்போற்று’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. நடிகர் சூர்யா பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே, புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் ரஜினிகாந்துடன் ‘கபாலி’, அதற்கு முன்பு கார்த்தியுடன் ‘அழகுராஜா’ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவர் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. அவருக்கு ஹாலிவுட்டிலிருந்து ‘ஜேம்ஸ்பாண்ட் 25’வது படத்திலும் ‘தி ஸ்டார் வார்ஸ்’ படத்திலும் நடிப்பதற்காக அழைப்பு வந்துள்ளது. அதற்கான வீடியோவை அவர் தயார் செய்து அப்படங்களின் நடிகர்கள் தேர்வு செய்யும் இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதை பார்த்து அவர்கள் தேர்வு செய்தால் அந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுவார். இது பற்றிய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் 25வது படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டதாம். ‘ஸ்டார் வார்ஸ்’ படப்பிடிப்பு கூடிய விரைவில் ஆரம்பமாக உள்ளது.
பாலசந்தரின் சிலை திறப்பு விழாவுக்கு வைரமுத்துவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் பிரபலமான மீ டூ இயக்கத்தின் மூலம் பெண்கள், தங்களுக்கு ஆண்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து வெளிப்படையாக சொல்ல தொடங்கினர். பாடல் ஆசிரியர் வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்தார் பாடகி சின்மயி. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது. சிலர் அவரை அவதூறாக பேசினர். பலரும் ஆதரித்தனர்.
தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது அலுவலகத்தில் பாலசந்தரின் சிலையை திறந்துள்ளார். இந்த விழாவில் ரஜினிகாந்த், மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களுடன் வைரமுத்துவும் பங்கேற்றார். பாலியல் ரீதியாக குற்றம் சாட்டப்பட்ட வரை எதற்காக இந்த விழாவிற்கு அழைத்தார்கள் என சின்மயி கமலை மறைமுகமாக சாடி உள்ளார்.

இதுப்பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறியிருப்பதாவது:- நான் இங்கே குறிப்பிடுவது வைரமுத்துவை. ஒரு மனிதன் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு ஆளானால் அவனது வாழ்க்கையே அழிந்துவிடும். முகத்தை வெளியே கூட தலைக்காட்ட முடியாது. அப்படிப்பட்ட குற்றவாளியான வைரமுத்து தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதும் பல திமுக நிகழ்வுகள், ஐ.ஏ.எஸ் அதிகாரி பயிற்சி அகாடமி நிகழ்வுகள், தமிழ் மொழி நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள் மற்றும் தொழில் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு எதுவும் நடக்கவில்லை.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணான நான் தடை செய்யப்பட்டேன். இது தான் தமிழ் சினிமாவில் உள்ள பெரியவர்களால் எனக்கு வழங்கப்பட்ட நீதி’ இவ்வாறு பதிவிட்டுள்ளார். மேலும் டுவிட்டரில், ‘’பாலியல் குற்றவாளிகள் பொதுமேடையில் தங்கள் இமேஜை எப்படி தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இவர்களில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். இவர்களை நினைத்தால் பயமாக உள்ளது’’ என டுவிட்டரில் கூறியுள்ளார்.
வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க உள்ள வலிமை படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவலை தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவர், அஜித். மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடம் `விஸ்வாசம்,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்தன. 2 படங்களுமே ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன. இதில், `நேர்கொண்ட பார்வை' படத்தை வினோத் டைரக்டு செய்திருந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்தார்.

இந்த படக்குழுவினர் அனைவரும் அஜித்தின் அடுத்த படத்திலும் தொடர்கிறார்கள். அடுத்த படத்துக்கு, `வலிமை' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அஜித் கதாநாயகனாக நடிக்க, வினோத் டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். தனது புதிய படத்தை பற்றி போனிகபூர் கூறும்போது, ``அஜித், `வலிமை' படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். அவர் தயாரானதும், `வலிமை' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்'' என்றார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பிரபல தமிழ் நடிகரின் மகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார்.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் விஷால், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்த நடிகர் மீது போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
தமிழில் விஷாலின் ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் விநாயகன். சிம்புவின் சிலம்பாட்டம், தனுசின் மரியான் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கிறார். பா.ஜனதாவுக்கு எதிரான கருத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைத்தளத்தில் நிறம் மற்றும் சாதி தொடர்பான தாக்குதலுக்கும் உள்ளானார்.
இந்த நிலையில் பாலியல் புகாரிலும் சிக்கினார். கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலரும் மாடல் அழகியுமான மிருதுளா தேவி, விநாயகன் மீது மீடூ-வில் பாலியல் புகார் தெரிவித்தார். அவர் கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வருமாறு நடிகர் விநாயகனை அழைத்தேன். அப்போது போனில் தன்னிடம் ஆபாசமாக பேசினார். நான் மட்டுமன்றி எனது தாயும் அவர் விருப்பத்துக்கு இணங்க வேண்டுமென்றார் என்று கூறினார்.

இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விநாயகன் மீது கல்பட்டா போலீசில் மிருதுளா தேவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் விநாயகன் மீது கல்பட்டா நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் குற்றத்தை விநாயகன் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் அடுத்த மாதம் நடக்கிறது.
நாகஷேகர் மூவிஸ் - ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ படத்தின் முன்னோட்டம்.
கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, 'மைனா' ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் - சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்.
முற்றிலும் புதிய பரிமாணத்தில், ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், மென்மையானதொரு காதல் கதையான ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ திரைப்படத்துடன் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார் நாகஷேகர்.
சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, பிரீத்தம் திரைகதை எழுத, இயக்குனர் விஜி வசனம் எழுத, ரூபன் படத்தொகுப்பை கவனிக்க, லால்குடி N.இளையராஜா கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.
இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு திலீப் சுப்புராயன் பொறுப்பேற்க, நிர்வாக தயாரிப்பு வேணு வேல்முருகன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வசூலில் சாதனை படைத்த இயக்குனர் நாகஷேகரின் கன்னடப் படம் ‘மைனா’, மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘முதல் மழை’ என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்புதிய திரைப்படம் குறித்து இப்படக் குழுவினர் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி நடிகர்கள் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் விமர்சனம்.
சென்னையில் வசித்து வருகிறார் யோகிபாபு. உதவி இயக்குனர் ஆக வேண்டும் என்பதற்காக வாய்ப்பு தேடி, கிடைக்காத சூழ்நிலையில் இமான் அண்ணாச்சி நடத்தும் கேட்டரிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் வேலை தேடி சென்னைக்கு வருகின்றனர். அவர்களுக்கு வேலை வேண்டும் என்று இமான் அண்ணாச்சியிடம் கேட்கிறார் யோகிபாபு.
இந்த சூழலில் நாயகிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கேட்டரிங் பணி இமான் அண்ணாச்சிக்கு கிடைக்கிறது. பெரிய ஆர்டர் கிடைத்துள்ளதால் யோகி பாபுவின் நண்பர்களையும் வேலைக்கு சேர்த்துக்கொண்டு நாயகி வீட்டுக்கு போய் சேருகிறார்கள். அங்கு டெக்கரேஷன் வேலைக்கு வரும் மயில்சாமியும், தாடி பாலாஜியும் வருகின்றனர்.

நாயகியை ஒருதலையாக காதலித்த வில்லன், திருமணத்துக்கு முன் நாயகியை கடத்த திட்டமிட்டுகிறார். கடத்துவதற்காக ரோபோ சங்கர் உள்ளிட்ட இரண்டு அடியாட்களை அனுப்பி வைக்கிறார். இவர்களுக்கு முன் யோகி பாபுவின் நண்பர்களான நாயகன், நாயகியை கடத்திச் செல்கிறான். இதனால் நாயகியின் தந்தை போலீசில் புகார் கொடுத்து தேடுகிறார்கள். இறுதியில் நாயகியை யோகி பாபுவின் நண்பர்கள் கடத்தியது ஏன்? நாயகியை தேடி கண்டுபிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகன், நாயகிகள் இருந்தாலும் முதல் பாதியில், யோகிபாபு, இமான் அண்ணாச்சி, மயில்சாமி, தாடி பாலாஜி ஆகிய காமெடி பட்டாளங்கள் படத்தை நகைச்சுவையாக கொண்டு செல்கிறார்கள். இரண்டாம் பாதியில் நாயகன், நாயகிகளின் காதல் காட்சிகள் சோர்வை ஏற்படுத்தினாலும் இறுதியில் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

காமெடி நட்சத்திரங்களை தவிர மற்ற அனைவருமே புதுமுகங்கள். இவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நகைச்சுவையை மட்டுமே மையமாக அதில் காதல், சுவாரஸ்யம் ஆகியவைகளை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சுதிர்.எம்.எல்.
கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். ஒளிப்பதிவில் பால் லிவிங்க்ஸ்டன் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘பட்லர் பாலு’ காமெடி கலாட்டா.
70வது படத்தை ‘கேப்மாரி’ என்ற தலைப்பில் இயக்கி இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு என்று பேட்டியளித்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 70வது படமாக கேப்மாரி படத்தை இயக்கி இருக்கிறார். ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி:-
புரட்சி இயக்குனர்கள் என்று பெயர் பெற்ற நீங்கள் ஏன் இளைஞர்களுக்கான படம் என்று மாறினீர்கள்?
இப்போது தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதுபற்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் தியேட்டர்களுக்கு வருபவர்களில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள் தான். எனவே இளைஞர்களுக்கான படம் எடுக்க விரும்பினேன். அந்த இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அப்டேட் செய்துகொண்டேன். புதிய இளைஞர்களின் படங்களையும் பார்த்து இந்த கதையை எழுதினேன். இளைஞர்களுக்கு இந்த படம் சில புரிதல்களை ஏற்படுத்தும். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள். எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு. எல்லை மீறும்போது ஏற்படும் பிரச்சினைகளும் சிக்கல்களுமே கதை. அறிவுரையாக இல்லாமல் சுவாரசியமாக சொல்லி இருக்கிறேன்.

கேப்மாரி என்ற தலைப்பு ஏன்?
ஆங்கிலேயர் காலத்தில் தொப்பியை மாற்றி மாற்றி போட்டு ஏமாற்றுபவர்களை கேப் மாறி விளையாடுபவர்கள் என்று அழைக்க தொடங்கி பின்னர் கேப்மாரி என்ற வார்த்தை கெட்ட வார்த்தை போல மாறிவிட்டது. ஒரு இளைஞன் 4 பெண்களுடன் விளையாடுகிறான் என்னும்போது இந்த தலைப்பு பொருத்தமாக இருந்தது. வாழ்க்கையை கொண்டாட்டமாக எடுத்துக்கொண்டு எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழும் ஜாலியான பையன் கதாபாத்திரத்துக்கு ஜெய் பொருந்தினார். அவர் படத்துக்குள் வந்த பிறகு படமே எளிதாகி விட்டது. அதுல்யாவும் வைபவியும் கூட நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மூவரையும் வேலை வாங்கியது எனக்கு எளிதாக இருந்தது. காமெடி வேடத்தில் சித்தார்த் விபின் கலக்கி இருக்கிறார். படம் பார்ப்பவர்கள் 2 மணி நேரம் ஜாலியாக படத்தோடு ஒன்றி பார்க்கலாம்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் இணையத்தில் லீக்காகி இருக்கிறது.
கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. 23 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிசங்கர், வித்யுத் ஜம்வால், டெல்லி கணேஷ் என ஏராளமான நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கடந்த 6-ந் தேதி ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் பாபி சிம்ஹா தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதன்மூலம், பாபி சிம்ஹாவும் இந்தப் படத்தில் நடிப்பது உறுதியானது.

அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியாத நிலையில், போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தில் நெடுமுடி வேணு போலீசாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் பிரபலமாகி தற்போது தமிழில் நடித்து வரும் ராஷ்மிகா, ஒரு நடிகையாக இருப்பது எளிதல்ல என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழில் கார்த்தி நடித்து வரும் 'சுல்தான்' படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமாகிறார். தனது சிறுவயது புகைப்படங்களை வைத்து மீம் தயார் செய்தவர்களை கடுமையாகச் சாடியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பதாவது, ’இதை செய்வதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. எங்களை தான் எளிதில் இலக்காக்க முடியும் என்பதாலா? பிரபலம் என்பதாலேயே இரக்கமின்றி எங்களை இலக்காக்க முடியாது. பலரும் மோசமான கருத்துகளை, கிண்டல்களை நிராகரித்துவிடுங்கள் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். நானும் செய்கிறேன்.

எங்கள் வேலையை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் எங்கள் குடும்பம், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேச யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. எந்த நடிகரும் இந்த மோசமான விஷயத்துக்கு உரியவர் அல்ல. நடிகராக இருப்பது எளிதல்ல.
ஒவ்வொரு தொழிலுக்கும் நாம் அதிக மரியாதை தர வேண்டும். முதலில் சக மனிதரை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும் என நினைக்கிறேன். யார் இதைச் செய்திருந்தாலும் அவருக்கு வாழ்த்துகள். நீங்கள் என்னை காயப்படுத்தி விட்டீர்கள். உங்களுக்கு அந்த திறன் இருக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து நடக்கப்போகும் விஷயங்களுக்கு நீங்கள் தான் பொறுப்பு’ என்று தெரிவித்துள்ளார். இதுவரை ராஷ்மிகா மந்தனா இந்த அளவுக்கு கடுமையாக பேசியதில்லை என்பதால், இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆக்ஷன்’ படத்தில், மரணத்தை கண்முன்னால் பார்த்தேன் என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, அகன்ஷாபூரி, ஷாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்ஷன். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் கூறியதாவது:- 'சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்தியம் தான் முதலில் முக்கியம் என்று எனக்கு புரிய வைத்தது இயக்குநர் சுந்தர்.சி தான். அதற்காக நன்றி.
‘சங்க மித்ரா’ தான் சுந்தர்.சி-யின் கனவு திரைப்படம். ஆனால், அப்படம் தாமதமாவதால் இப்படத்தை எடுத்து விட்டோம். என் கேரியரிலேயே அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட திரைப்படமும், அதிகமாக அடிப்பட்ட திரைப்படமும் ‘ஆக்ஷன்’ தான். ஏனென்றால், ஒரு கணத்தில் என் மரணத்தை என் கண் முன்னால் பார்த்தேன்.
ஒரு காட்சியில் என் கைகளை தடுக்க கொண்டு வரும்போது கையிலும், காலிலும் அடிப்பட்டு 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்க விடாமல் செய்தது. எனக்காக காத்திருந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்தினார்கள். வருடம் ஒருமுறை சுந்தர்.சியுடன் பணியாற்றினால் உடல்நிலை நன்றாக இருக்கும்.

சினிமாவில் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் ஈகோ பார்க்காமல் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம். உதவி இயக்குநராக நான் அவரிடம் நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் எனக்கு அமைந்தது. அவரிடம் கற்றுக் கொண்டதை இனி வரும் என் படங்களில் பயன்படுத்துவேன்.
சண்டை காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இந்த படத்தில் வரும் காட்சிக்காக அகன்ஷாவை பல தடவை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ இவ்வாறு அவர் பேசினார்.






