என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வைரமுத்துவின் சூப்பர் ஹிட் பாடலின் வரிகளில் உள்ள கருத்தை கொண்டு மிஸ்டர் டபிள்யூ எனும் படத்தின் கதை உருவாகியுள்ளது.
    சத்தி என்பவர் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் “ மிஸ்டர் டபிள்யூ”. எஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

    மிஸ்டர் டபிள்யூ படக்குழு

    இந்த படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, “ ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி.... ஊர்வசி... பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி “ என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை காமெடியுடன் சொல்லும் படம் தான் “ மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.  சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. 
    நடிகை தமன்னா அடுத்ததாக நடிக்கும் படத்தில் ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ஆக்‌ஷன் படம் நவம்பர் 15-ந் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் நடிகை தமன்னா விஷாலுக்கு இணையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். இதேபோல் இந்தியில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘தட் இஸ் மகாலட்சுமி’ படத்திலும் தமன்னா நடித்து முடித்துள்ளார். இப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.

    தமன்னா, நவாசுதீன் சித்திக்

    இந்நிலையில், நடிகை தமன்னா இந்தி படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஷமாஸ் நவாப் சித்திக் இயக்கி வருகிறார். நடிகை தமன்னா ஏற்கனவே சில இந்தி படங்களில் நடித்துள்ளார். அப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64ல், 96 படத்தில் நடித்து பிரபலமான நடிகை நடிக்க உள்ளார்.
    விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. உலகம் முழுவதும் நல்ல வசூலும் பார்த்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 64-வது படம் ஆகும். பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது.

    அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்தவர். மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். தற்போது நடிகை கவுரி கிஷானையும் விஜய் படத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். 

    கவுரி கிஷான்

    விஜய் படத்தில் நடிப்பதை கவுரி கிஷான் சமூக வலைத்தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் கூறும்போது, “விஜய் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருடைய ஆசிர்வாதத்தால் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது” என்றார். விஜய் சேதுபதி, சாந்தனு, வர்கீஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
    ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாக உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக தலைவி படத்திற்காக கங்கனா ரணாவத் தீவிர பயிற்சி எடுத்து வந்தார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி, பரத நாட்டிய பயிற்சியிலும் ஈடுபட்டார். 

    தலைவி படப்பிடிப்பு

    இந்நிலையில், தலைவி படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைத்துள்ளார். இப்படத்தை விப்ரி என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ், அண்மையில் சொகுசு கார் வாங்கி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பிரித்விராஜ். அடிக்கடி புதிய சொகுசு கார்களை வாங்குவது வழக்கம். சமீபத்தில் இவர் 1.64 கோடி மதிப்புள்ள சொகுசு காரை வாங்கினார். அந்த காரை பதிவு செய்வதற்காக வாகன நிறுவனத்தினர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத் துறையிடம் ஆன்-லைனில் பதிவு செய்தனர். அப்போது காரின் விலையை குறைத்து 1.34 கோடி என்று குறிப்பிட்டிருந்தனர்.

    ஆனால் உண்மையான மதிப்பு 1.64 கோடி என்பது மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்து விட்டனர். விலையை குறைத்து காட்டியபோது முதலில் 42 லட்சத்து 42 ஆயிரம் வரி கட்டப்பட்டிருந்தது.

    பிரித்விராஜ்

    இந்த நிலையில் 9.54 லட்சம் கூடுதலாக வரி கட்டினால் மட்டுமே காரை பதிவு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் பிரித்விராஜ் கூடுதலாக 9 லட்சத்து 54 ஆயிரத்து 350 கட்டினார். பின்னர் கொச்சி மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் காரை பதிவு செய்து கொடுத்தனர்.
    ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிகில் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் “நெற்றிக்கண்” படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் கண் பார்வை தெரியாத பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்க உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளார். 

    மூக்குத்தி அம்மன் பட போஸ்டர்

    இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நயன்தாராவும், ஆர்.ஜே.பாலாஜியும் ஏற்கனவே நானும் ரவுடி தான், வேலைகாரன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    அருவி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் பெற்ற அதிதி பாலன், கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.
    அருவி படத்தில் நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தவர் அதிதி பாலன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அருவி படத்திற்கு எல்லா தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த படத்தை தொடர்ந்து, அதிதி பாலனுக்கு பல பட வாய்ப்புகள் வரிசை கட்டின. 

    ஆனால், நடித்தால், சிறப்பான கதையம்சம் இருக்கும் படத்தில் தான் நடிப்பேன் என கூறி, பல பட வாய்ப்புகளை தட்டி விட்ட அதிதி பாலனுக்கு தொடர்ச்சியான சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் போனது. தற்போது, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் அதிதி பாலன் நடித்து வருகிறார். 

    அதிதி பாலன்

    ஆனால், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    நடிகர் சூரி, அம்மன் என்கிற உணவகத்தை மதுரையில் 2017-ல் தொடங்கினார். அந்த உணவகத்துக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் உற்சாகமாகி மதுரையிலேயே பல கிளைகளை தொடங்கியுள்ளார். மதுரை அவனியாபுரம் ஏர்போர்ட் பைபாஸ் சாலையில் அம்மன் - சைவ உணவகம், அய்யன் - அசைவ உணவகம் என இரு கிளைகளை தற்போது மேலும் தொடங்கியுள்ளார். 

    இந்த இரு கிளைகளையும் சூரியின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சிவகார்த்திகேயன் சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த உணவகத்தின் சுவை மக்களின் மனதை கவர்ந்துவிடவே, சூரியின் வியாபாரம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்துக்கு திடீர் என்று விஜய் சேதுபதி வருகை தந்துள்ளார்.  

    சூரியுடன் விஜய் சேதுபதி

    உணவகத்துக்கு சாப்பிட வந்த ரசிகர்கள் விஜய் சேதுபதியை சூழந்து செல்பி எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவர்களின் போனை வாங்கி அவர்களுடன் செல்பி எடுத்து தந்தார். ஒரு ரசிகர் தன் உறவினருடன் வீடியோ காலில் பேசுங்கள் என்று ஆசையாக கேட்கவே, அவரின் ஆசையையும் நிறைவேற்றினார். சூரிக்கு தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, இரவு உணவையும் அங்கேயே சாப்பிட்டார்.
    தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ரேயா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர். கமல்ஹாசனும் மஞ்சுவாரியரை அழைத்து வாழ்த்தியதுடன் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு அறிவுரை வழங்கினார். பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோரும் நடித்து இருந்தனர். 

    இந்த நிலையில் அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். தற்போது ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மஞ்சு வாரியர், தனுஷ்

    ஸ்ரேயா ‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்துள்ளார். தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்தார். மேலும் முன்னணி கதாநாயகர்கள் ஜோடியாக வந்தார். தற்போது தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியிலும் அசுரன் படம் ரீமேக் ஆகிறது. தனுஷ் வேடத்தில் நடிக்க ஷாருக்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
    விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தின் முன்னோட்டம்.
    விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    விஜய் சேதுபதி

    விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தில் ரஜினியின் படங்களைப் போல் வசனங்கள் அனைத்தும் மாஸாக இருக்கும் என இயக்குனர் விஜய்சந்தர் தெரிவித்திருக்கிறார். 
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூரரை போற்று படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை பார்த்து பாலிவுட் பிரபலம் ஒருவர் வியந்து போனாராம்.
    சூர்யா தற்போது சுதா கொங்கரா டைரக்‌ஷனில் சூரரை போற்று என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா.. அதற்காகவே சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பறிவ் மாஸ்டர்களை இந்த படத்தில் களம் இறக்கியுள்ளார் சுதா கொங்கரா. 

    சூர்யா, ஜான் ஆபிரகாம்

    ஆக்சன் காட்சிகளில் சூர்யாவின் பங்களிப்பு குறித்து ரொம்பவே வியந்து போனார்களாம் அன்பறிவ் மாஸ்டர்கள். இந்த படத்தின் சில காட்சிகளை இவர்கள் பணிபுரியும் பாலிவுட் படத்தின் ஹீரோ ஜான் ஆபிரகாமிடம் காட்டியபோது அன்பறிவை பாராட்டியதோடு, சூர்யாவின் அர்ப்பணிப்பை பார்த்து வியந்து போயிருக்கிறார். 
    நடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என நடிகர் விஷால் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் சமீபமாக நடைபெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து,  தமிழக பதிவுத்துறை சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது. இதனால், முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக நாசர், கார்த்தி உள்ளிட்ட முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, ‘சிறப்பு அதிகாரிக்கு ஒத்துழைப்பு அளிப்போம். ஆனால், நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ என்று குறிப்பிட்டனர்.

    ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்ததால், நடிகர் சங்க விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் இருந்தார் விஷால். ‘ஆக்‌ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்காக சென்னை வந்திருந்தார் விஷால். அந்தச் சந்திப்பு முடிவடைந்தவுடன், விஷாலிடம் நடிகர் சங்க விவகாரம் தொடர்பாகப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 

    அதற்கு பதிலளித்த விஷால், நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு இடையே அரசாங்கத்தில் இருந்து சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வரும்வரை சிறப்பு அதிகாரி கவனிப்பார் எனச் சொல்லியிருக்கின்றனர். நாங்கள் எந்த வகையிலும் தப்பு பண்ணவில்லை, யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை. இந்த வழக்குக்காக வீண் செலவு செய்யவில்லை. 

    எங்களிடம் அவ்வளவு பணமுமில்லை. நாங்கள் செய்தது கட்டிடம் கட்டியது மட்டுமே. அதை, யார் வேண்டுமானாலும் போய்ப் பார்க்கலாம். நடிகர் சங்கத்தில் யார் வேண்டுமானாலும் கட்டிடம், கணக்கு வழக்குகளைப் பார்க்கலாம். ஏனென்றால், இணையத்தில் வங்கிக் கணக்குகளை வெளியிட்ட ஒரே சங்கம், நடிகர் சங்கம்தான். ஒரு நீதிபதியை தீர்ப்புக்காக நிர்பந்தித்து 10 லட்ச ரூபாய் அபராதம் கட்டினார் ஒரு நபர். அவருக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியாது. 

    கடந்த 3 ஆண்டுகள் எப்படி உறுப்பினர்களைப் பார்த்துக் கொண்டோமோ, அப்படித்தான் இனியும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலை நடத்தினோம். விதிமுறைகளின்படியே தேர்தல் நடந்தது. எந்தவித விதிமுறையும் மீறப்படவில்லை. எப்போது வாக்குகளை எண்ணலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பு வந்து, வாக்குகள் எண்ணப்படும். அப்போது உறுப்பினர்கள் என்ன நினைத்துள்ளனர் என்பது தெரிந்துவிடும். சிறப்பு அதிகாரி நியமனம், ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று. அவர்களுக்கென்று விதிமுறைகள் இருக்கலாம். கடவுள் மாதிரி நீதிமன்றத்தை நம்புகிறேன். உண்மை வெல்லும்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
    ×