என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் போடா போடி படம் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி, பிரபல நடிகரை ஷட்டப் ராஸ்கல் என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. இதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து சண்டகோழி 2, சர்கார் படங்களில் வில்லியாக நடித்திருந்தார்.

    தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    வரலட்சுமி - சந்தீப் கிஷன்

    வரலட்சுமி தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடன் இணைந்து ஹன்சிகா மற்றும் மாநகரம் பட நடிகர் சந்தீப் கி‌ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் சந்தீப் கி‌ஷன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியிடம், நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு டான் மாதிரியே இருக்கிறீங்களே... எப்படி என்று கேட்டுள்ளார். இதற்கு வரலட்சுமி ஹாஹா... ‌ஷட்டப் ராஸ்கல்‘ என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹீரோ படத்திற்கு தடை பற்றிய செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் சென்னை உயர்நீதி மன்ற நடுவர் மையம் இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவு விட்டதாக செய்திகள் வெளியானது.

    இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோசால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேற எந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை.

    சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்‌ஷன்சால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

    சிவகார்த்தியேனின் ஹீரோ

    கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ’ஹீரோ’ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.

    ’ஹீரோ’ தொடர்பாக எந்தத் தவறான தகவல் வந்தாலும், அப்படியான ஏமாற்று வேலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் பிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். 

    தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்களான கமல், மகேஷ்பாபு, சல்மான் கான், மோகன்லால் ஆகியோர் வெளியிட்டனர். 

    டப்பிங் பேசும் ரஜினிகாந்த்

    இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. ரஜினிகாந்த் டப்பிங் பேசும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
    காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் படங்களில் நடித்த அதிதிராவ், அவர்கள் அனைவருமே எனது குருநாதர்கள் என்று கூறியிருக்கிறார்.
    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள படம் சைக்கோ. டபுள் மீனிங் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் இப்படத்தை தயாரித்துள்ளார். டிசம்பர் 27ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் நித்யா மேனனுடன் இணைந்து இன்னொரு நாயகியாக நடித்துள்ளார் அதிதி ராவ்.

    இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘அனைத்து இயக்குனர்களுமே எனது குருநாதர்கள். அதனால் ஒரு கதையில் நடிக்க கையெழுத்திடும்போது அந்த படத்தை இயக்குவது யார் என்பதை தான் நான் முதலில் கவனிப்பேன். அதன் பிறகு அந்த கதையில் என் கதாபாத்திரம் என்ன என்பதை கேட்பேன்.

    சைக்கோ படத்தில் அதிதிராவ்

    ஏற்கனவே பணிபுரிந்த இயக்குனருடன் மீண்டும் பணிபுரிய வாய்ப்பு வரும்போது பெருமகிழ்ச்சி அடைவேன். காரணம், மீண்டும் அவர்கள் அழைக்கிறார்கள் என்றால் அவர்கள் என்னுடைய திறமையை நம்புகிறார்கள் என்று அர்த்தம். அது ஒரு அற்புதமான உணர்வு. அதுபோன்று நிகழும்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக நினைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.
    வடிவேலு தனது படத்தில் நடிப்பதாக கூறி முன்பணம் வாங்கிவிட்டு நடித்து கொடுக்கவில்லை என நடிகர் ஆர்.கே புகார் தெரிவித்துள்ளார்.
    இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் நீங்கி, மீண்டும் திரையுலகிற்குத் திரும்ப உள்ளார் வடிவேலு. தற்போது பல இயக்குநர்களும் அவரிடம் கதை சொல்லி வருகின்றனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணைந்து நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    ‘இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு கமல் இயக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ படம், ‘தேவர் மகன்’ படத்தின் தொடர்ச்சியாகும்.’தேவர் மகன்’ படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததால், அவர் 2ம் பாகமான ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்.கே. நாயகனாக நடித்து, தயாரிக்க இருந்த படம் ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘. இந்தப் படத்தில் ஆர்.கே.வுடன் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரும் ஒப்புக் கொண்டதால், முன்பணமாக 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.

    வடிவேலு, ஆர்.கே

    ஆனால், கதை சரியில்லை, மாற்றங்கள் தேவை என நாட்களை வடிவேலு கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்துள்ளது. எனவே, கொடுத்த முன்பணம் 1 கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார் ஆர்.கே. அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை. இதையே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆர்.கே. புகாராகக் கொடுத்துள்ளார்.

    அந்தப் புகாரில், ‘‘தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். இன்னும் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியாகவில்லை. அதற்குள் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 
    தன்னை பற்றி பொய்யான புகாரை போலீசில் அளித்ததாக தங்கை மீது பிரபல பாடகி சுசித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
    பிரபல பாடகி சுசித்ரா, காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா அடையாறு போலீசில் கடந்த 11-ந்தேதி புகார் அளித்தார். அதில் சுசித்ராவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் கூறி இருந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். போலீசில் அளிக்கப்பட்ட புகாரில் சுசித்ராவின் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதைவைத்து போலீசார் துப்பு துலக்கினர். அப்போது சுசித்ரா அடையாறில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுசித்ரா நான் காணாமல் போகவில்லை என்று போலீசாரிடம் கூறினார்.

    இதுபற்றி பாடகி சுசித்ராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நான் மாயமானதாக கூறி பொய்யான புகாரை போலீசில் அளித்துள்ளனர். இப்போதும் என்னை ஆஸ்பத்திரியில் வலுக்கட்டாயமாக அனுமதித்துள்ளனர். நான் மாயமாகவில்லை. ஓட்டலில் சென்று ஓய்வு எடுத்தேன் என்று தெரிவித்தார்.

    பாடகி சுசித்ரா

    இதுபோன்று புகார் அளிப்பதற்கான காரணம் என்ன? என்பது எனக்கு தெரியவில்லை என்றும் சுசித்ரா தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் புகார் அளித்த சுசித்ராவின் தங்கை சுனிதாவிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார்.
    சின்ன படங்களுக்கு திரை அரங்குகள் கிடைத்தாலும் போதிய காட்சிகள் ஒதுக்கப்படுவதில்லை என தியேட்டர் அதிபர்கள் மீது பிரபல தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
    சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கி உள்ள படம் ‘மிக மிக அவசரம்‘. ஸ்ரீ பிரியங்கா, அரீஷ் குமார், சீமான், முத்துராமன், ஈ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படத்துக்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் சர்ச்சை உண்டானது. இதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது 125-க்கும் அதிகமான திரையரங்குகளில் நவம்பர் 9-ம் தேதி ‘மிக மிக அவசரம்‘ வெளியாகி உள்ளது.

    இதற்காக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், திரையரங்க உரிமையாளர்களை மிகவும் பாராட்டியது ‘மிக மிக அவசரம்‘ படக்குழு. மேலும், படத்தை பார்த்த பிரபலங்களும் படக்குழுவினருக்குப் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே திரை அரங்குகள் கிடைத்தாலும் காட்சிகள் அனைத்துமே காலை 11:30 மணி, மதியம் 2:00 மணி காட்சிகளாக இருந்ததால், படக்குழு அதிர்ச்சியடைந்தது. 

    மிக மிக அவசரம் பட போஸ்டர்

    இது தொடர்பாக ‘மிக மிக அவசரம்‘ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பதிவில், “கொடுக்கிற மாதிரி கொடுப்பாங்களே அப்படித் தான் ஆகிப் போச்சு. திரைஅரங்குகள் ‘மிக மிக அவசரம்’ படத்திற்குக் கிடைத்தது. காலை ஷோ, மதிய ஷோவா கொடுத்தா யார் சார் தியேட்டருக்கு வருவாங்க? நான் விஜய் சார், அஜித் சார் படமா பண்ணியிருக்கேன்? சின்ன படங்களை சாவடிக்கிறாங்க..” என்று தெரிவித்துள்ளார்.
    நடிகர் கவுதம் கார்த்திக் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
    மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமான கவுதம் கார்த்திக் இளம் கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். வை ராஜா வை, இவன் தந்திரன், மிஸ்டர் சந்திரமவுலி, இந்திரஜித், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கவுதம் கார்த்திக் சமீபத்தில் தேனி மாவட்டத்துக்கு சென்று ரசிகர்களை சந்தித்தார். 

    திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். ரசிகர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். பின்னர் அங்குள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு சென்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த ஆசிரமத்தில் எடுத்த ஒரு நெகிழ்ச்சியான வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கவுதம் கார்த்திக் தரையில் உட்கார்ந்து இருக்கிறார். 

    அவருக்கு குழந்தைகள் மாறி மாறி வாயில் உணவு ஊட்டி விடுகிறார்கள். வாய் நிறைய உணவுகளை வாங்கி திக்கி திணறி சாப்பிடுகிறார். இந்த வீடியோவில் கவுதம் கார்த்திக், “தங்களுக்காக வாழ்வதற்கு முன்பாக மற்றவர்களுக்கு சேவை செய்ய அந்த குழந்தைகள் கற்றுக்கொடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களை வளர்த்துள்ள விதத்தை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

    நவரசன் இயக்கத்தில் குட்டி ராதிகா, பஜராங்கி லோகி, ஷரன் உல்தி நடிப்பில் உருவாகி உள்ள தமயந்தி படத்தின் முன்னோட்டம்.
    'இயற்கை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கவனம் பெற்றவர் குட்டி ராதிகா. 2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால இடைவெளிக்கு பின் 'தமயந்தி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இயக்குநர் நவரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குட்டி ராதிகா அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    குட்டி ராதிகா

    மேலும் பஜராங்கி லோகி, ஷரன் உல்தி, சாது கோகிலா, மித்ரா, பவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு முன்னதாக அனுஷ்காவின் நடிப்பில் வந்த அருந்ததி படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் காட்சிகளும், வசனங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. 
    மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக நடிகை புகார் தெரிவித்ததையடுத்து, அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பிரபல இந்தி நடிகையான ஸ்வேதா திவாரி, நாகினி உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இவர் நடிகர் ராஜா சவுத்ரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலக் என்ற பெண் குழந்தை உள்ளது. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

    அதன்பிறகு நடிகர் அபினவ் கோலியை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது. தற்போது 2-வது கணவருடனும் மோதல் ஏற்பட்டுள்ளது. அபினவ் கோலி மது போதையில் தினமும் தன்னை அடித்து சித்ரவதை செய்வதாக ஸ்வேதா திவாரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபினவ்வை கைது செய்தனர். தற்போது அபினவ்வை பிரிந்து தனியாக வசிக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்கிறார். 

    கணவருடன் ஸ்வேதா திவாரி

    குடும்ப வாழ்க்கை குறித்து ஸ்வேதா திவாரி அளித்துள்ள பேட்டி வருமாறு:- “கணவரை பிரிந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது வாழ்க்கை ஒரு விஷக்கிருமியிடம் சிக்கி இருந்தது. அந்த கிருமி என்னை கொடுமைப்படுத்தி சித்ரவதை செய்தது. இப்போது கிருமியை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எறிந்து விட்டேன். பல பெண்கள் தங்கள் பிரச்சினையை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தொல்லைகளை பொறுத்துக்கொள்கிறார்கள். எனக்கு தைரியம் உள்ளது.”

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தின் கதை சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். இந்த படம் என்ன மாதிரி கதை என்று அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே படத்தில் விஜய் நடிக்கும் தோற்றம் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லேசான தாடியுடன் இருந்த அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானது.

    இந்த நிலையில் படத்தின் கதையும் கசிந்ததாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்கு பலியான அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று டாக்டராகும் கனவில் இருந்தார். நீட் தேர்வால் அது நிராசையாகி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இது நாட்டையே உலுக்கியது.

    தளபதி 64 படக்குழு

    இந்த சம்பவத்தை மையமாக வைத்தே தற்கால கல்வி முறையை சாடும் படமாக இது தயாராவதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கல்லூரியில் படமாக்கப்பட்டு வருகிறது. 

    இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, பாக்யராஜ் மகன் சாந்தனு, மலையாள நடிகர் அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான், தொகுப்பாளினி ரம்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறையின் போது ரிலீசாக உள்ளது.
    வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள வலிமை படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நேர்கொண்ட பார்வை வெற்றிக்கு பிறகு அஜித்குமார், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் மீண்டும் புதிய படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் உள்ள போனிகபூர் அலுவலகத்தில் ‘வலிமை’ பட பூஜை எளிமையாக நடந்தது.

    இந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. ‘வலிமை’ படத்தில் நஸ்ரியா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இதனை நஸ்ரியா மறுத்துள்ளார்.

    அஜித், வடிவேலு

    இந்நிலையில், வலிமை படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே அஜித் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ராஜா படத்தில் நடித்திருந்தார். நடிகர் வடிவேலு கமலின் தலைவன் இருக்கின்றான் படத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    ×