என் மலர்
சினிமா செய்திகள்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத், தமிழ் எளிமையான மொழி அல்ல என கூறியுள்ளார்.
விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் உருவாகும் படம் ‘தலைவி’. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, மதுபாலா ஆகியோர் நடிப்பதை மட்டுமே படக்குழு இதுவரை உறுதிப்படுத்தியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

‘தலைவி’ படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “எனக்கு தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. இதன் காரணமாக நான் வசனங்களை மனப் பாடம் செய்கிறேன். தமிழ் நிச்சயம் எளிமையான மொழி அல்ல. நான் ஆங்கிலம் கற்றது போல தமிழை முழுமையாக கற்றுக் கொள்ள நினைத்தேன். ஆனால் தற்போது படத்தின் தேவைக்காக மட்டும் கற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் முன்னோட்டம்.
விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ளது. ஆதித்ய வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், அடுத்ததாக பிரபல நடிகரின் படத்தில் நடிக்க உள்ளார்.
விஜய் சேதுபதியின் 33வது படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக முதலில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக மேகா ஆகாஷ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதியுடன் விவேக் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் விவேக் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இசை கலைஞராக நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பாலிவுட் பிரபலங்களுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் லாபம், க/பெ ரணசிங்கம், மாமனிதன், தளபதி 64, கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாது பிற மொழி படங்களிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியிலும் ஆமிர்கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவுகின்றன.

இந்நிலையில், பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாய் மற்றும் தென்னிந்திய திரையுலக பிரபலங்களான விஜய் தேவரகொண்டா, பார்வதி ஆகியோருடன் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், இதில் அவர்கள் சினிமா குறித்து விவாதித்தகாவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகரும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம், பணப்பிரச்சனை காரணமாக இன்று திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
’சங்கத்தமிழன்’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பண பிரச்சனை காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டால் இன்று மாலை அல்லது நாளை இப்படம் ரிலீசாக கூடும் என சொல்லப்படுகிறது.

நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் ’சங்கத்தமிழன்’ படத்தை வெளியிட தடை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ம் ஆண்டு ரூ.15 லட்சம் வழங்க வேண்டியது தொடர்பாக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்த வழக்கில் நெல்லை நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய பிரபல நடிகரின் காரில் இருந்து போலீசார் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராஜசேகர். இவர் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் லேசான காயமடைந்த ராஜசேகர், சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்கு முன்னால் வேறொரு காரில் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து விபத்தில் சிக்கிய காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் இரண்டு வெளிநாட்டு வோட்கா பாட்டில்களும் ஒரு டம்ளரும் இருந்ததாக கூறப்படுகிறது. வேகமாக காரை ஓட்டி வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஷம்சாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.வெங்கடேஷ் கூறும்போது, “அதிவேகமாக காரை ஓட்டி வந்ததால் கட்டுபாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது. காரின் ஏர்பேக் ராஜசேகர் உயிரை காப்பாற்றி உள்ளது. நாங்கள் வருவதற்கு முன்பே அவர் புறப்பட்டு சென்று விட்டதால் மதுபோதையில் இருந்தாரா? என்பதை ஆய்வு செய்ய முடியவில்லை. காருக்குள் மதுபாட்டில் இருந்தது” என்றார். ஜீவிதா கூறும்போது விபத்தில் ராஜசேகருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். தற்போது நலமாக இருக்கிறார்” என்றார்.
எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் சக்ரா படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் படத்தை தொடர்ந்து எம்.எஸ்.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஷால் நடித்து வந்தார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர். பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
விஷாலே இந்த படத்தை தயாரிக்கிறார். படத்துக்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்து வந்தது. சென்னை, கோவையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தற்போது படத்துக்கு ‘சக்ரா’ என்று பெயர் வைத்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். படத்தில் விஷாலின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இது தொழில்நுட்ப திகில் படமாக சக்ரா தயாராகி உள்ளது. தேசப்பற்று, குடும்ப சென்டிமென்ட், அதிரடி ஆகியவையும் படத்தில் உள்ளன. இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக வருகிறார். சக்ரா படம் அடுத்த வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாகி இருக்கும் ஆக்ஷன் படத்திலும் விஷால் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. இப்படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 20-ந் தேதி 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அறிமுக இசையமைப்பாளர் டென்மா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க உள்ள அரவிந்த்சாமி, அதற்காக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இயக்குனர் ஏ.எல். விஜய் டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்க அரவிந்த்சாமி தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். மீசையில்லாமல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கும் அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஏராளமான வெற்றி படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவரும் எம்.ஜி.ஆர்.தான்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை பொறுப்பு ஏற்று வழிநடத்தி ஆட்சியையும் பிடித்தார். படத்துக்கான திரைக்கதையை விஜயேந்திரபிரசாத் எழுதுகிறார். பாகுபலி படத்துக்கும் இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். விஷ்ணு இந்தூரி, சைலேஷ் சிங் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கிய ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருக்கும் ‘விக்ரம் 58’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் நடித்து வருகிறார்.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கேஜிஎப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் இப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இப்படக்குழுவினருடன் இணைந்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. அங்கு உருவாகி வரும் பாடல் காட்சியை நடன இயக்குனர் சதீஷ் இயக்கி வருகிறார்.
தமிழில் போடா போடி படம் மூலம் அறிமுகமான நடிகை வரலட்சுமி, பிரபல நடிகரை ஷட்டப் ராஸ்கல் என்று ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை வரலட்சுமி. இதனை தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். அதனை தொடர்ந்து சண்டகோழி 2, சர்கார் படங்களில் வில்லியாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

வரலட்சுமி தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ.பி.எல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடன் இணைந்து ஹன்சிகா மற்றும் மாநகரம் பட நடிகர் சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தீப் கிஷன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வரலட்சுமியிடம், நீங்கள் எப்போதும் பார்ப்பதற்கு டான் மாதிரியே இருக்கிறீங்களே... எப்படி என்று கேட்டுள்ளார். இதற்கு வரலட்சுமி ஹாஹா... ஷட்டப் ராஸ்கல்‘ என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ஹீரோ படத்திற்கு தடை பற்றிய செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஹீரோ’. ரூ.10 கோடி கடனை திருப்பி தராததால் சென்னை உயர்நீதி மன்ற நடுவர் மையம் இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவு விட்டதாக செய்திகள் வெளியானது.
இதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோசால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேற எந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை.
சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்ஷன்சால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ’ஹீரோ’ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.
’ஹீரோ’ தொடர்பாக எந்தத் தவறான தகவல் வந்தாலும், அப்படியான ஏமாற்று வேலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கத் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள். அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் பிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






