என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் விஜய் சேதுபதி, ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார் என்று கூறியிருக்கிறார்.
    கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்’ என்னும் `கமல் 60’ நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    கமல் - விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி பேசும் போது, ‘மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரே மிகவும் பிடித்துள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே அவரது கட்சியின் சின்னம் சொல்வதாக நான் உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ அதே போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்’ என்றார்.
    ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணுக்கு நடிகை சந்தோஷி மேக்கப் போட்டு செமினார் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்.
    தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

    இவர் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தினார். இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 

    இதில் சந்தோஷி பேசும்போது, “கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்து தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்ததுடன் பல சீரியல்களிலும் நடித்தேன். சினிமா, சீரியல் இவற்றைத் தாண்டி கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மிகச்சிறிய அளவில் பொட்டிக், பெண்களுக்கான சலூன், கல்யாண பெண்களுக்கான மேக்கப், அவர்களுக்கான உடை, வெட்டிங் போட்டோகிராபி என ஒரு சிறிய கடையாக ஆரம்பித்து இன்று ஆழ்வார்திருநகர், வடபழனி, மதுரை கேகே நகர் என மூன்று கிளைகளை உருவாக்கியுள்ளேன். 

    லட்சுமி அகர்வால்

    இந்த ஏழு வருடங்களில் செமினார் பண்ண வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் அப்படி செய்தால் ஏதாவது புதுமையாக செய்யவேண்டும் என்று நினைத்தேன். அது நிறைவேறிய நாள் இன்றுதான். இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக நடத்த எனக்கு கைகொடுத்து உறுதுணையாக இருந்தவர் நடிகை நமீதா தான். இப்படி ஒரு செமினார் நடத்தப்போவதாக கூறியதும் எங்களுடைய உடைகள், ஆபரணங்கள் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை அணிந்து அவற்றை பிரபலப்படுத்த தயாராக முன்வந்தார். 

    இந்த நிகழ்வில் கலந்துகொண்டு எங்களது மேக்கப் செமினாருக்கு ஒத்துழைத்த லட்சுமி அகர்வால், டெல்லியிலிருந்து இதற்காகவே வந்துள்ளார். அவருக்கும் எனக்கும் முன்பின் தொடர்பு கிடையாது. என்னுடைய மேக்கப் கலையின் திறமையை காட்டுவதற்கு லட்சுமி அகர்வால் ஒரு பொருத்தமான நபராக இருப்பார் என அவரை அழைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டு இங்கே வருகை தந்திருக்கிறார். 

    இவரது வாழ்க்கை வரலாறைத்தான் தற்போது தீபிகா படுகோனே நடிப்பில் இந்தியில் படமாக எடுத்து வருகிறார்கள். விரைவில் அந்த படம் வெளியாக இருக்கிறது’ என்றார்.
    சென்னையில் நடைபெற்ற `கமல் 60’ நிகழ்ச்சி கலந்துக் கொண்ட நடிகர் வடிவேலு இனி எனக்கு விடிவு காலம்தான் என்று கூறியிருக்கிறார்.
    கமல்ஹாசனின் 60 ஆண்டுக்கால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் விதமாக `உங்கள் நான்’ என்னும் `கமல் 60’ நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், பிரபு, வடிவேலு, விஜய்சேதுபதி, கார்த்தி, விக்ரம் பிரபு என திரையுலக நட்சத்திரங்கள் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    வடிவேலு - கமல்

    வடிவேலு பேசும் போது, ‘கமலின் அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் நான் நடிப்பது உறுதி, ‘இனி எனக்கு விடிவு காலம்தான்..’ என்று தெரிவித்தார். ‘இந்தியன்-2 படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்தது. சில காரணங்களால் நடிக்க முடியவில்லை’ என்றார்.
    நடிகை சந்தோஷி நடத்திய நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நமீதா, பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள் என்று கூறியிருக்கிறார்.
    தமிழில் பாபா, உன்னை சரணடைந்தேன், வீராப்பு, மிலிட்டரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

    பேஷன் டிசைனிங் வேலைகளில் அதிக ஆர்வம் கொண்ட இவர், ஆறு வருஷத்துக்கு முன்பு, தனது கணவருடன் சேர்ந்து *`PLUSH Boutique & Beauty Lounge'* கடையை சென்னையில் தொடங்கினார். இது மணமகளுக்கான ஆடைகள், மேக்கப், ஆபரணங்கள்னு எல்லாமே கிடைக்கிற பிரத்யேக ஷோரூம். வெட்டிங் போட்டோகிராபியும் இதன் இன்னொரு சிறப்பம்சம். தற்போது சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று என மொத்தம் மூன்று கிளைகள் இருக்கின்றன. வெளிநாடுகளிலிருந்தும் கூட பலரும் சந்தோஷியிடம்  பயிற்சிக்கு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் குறித்த செமினார் நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தியுள்ளார் சந்தோஷி. இந்த நிகழ்வில் பிரபல நடிகை நமீதா, ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான டில்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால், சின்னித்திரை நடிகைகள் ‘சரவணன் மீனாட்சி’ புகழ் ரக்சிதா தினேஷ், ‘ரோஜா’ புகழ் பிரியங்கா, பிரபல மாடல் பிராச்சி சோலங்கி, பிக்பாஸ் (தெலுங்கு) புகழ் ஷியாமளா, நடிகையும் தொகுப்பாளருமான பரினா, உதவி இயக்குனரும் விடிலிகோ மாடலுமான ரம்யா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

    சந்தோஷி நடத்திய நிகழ்ச்சியில் பிரபலங்கள்

    நடிகை நமீதா பேசும்போது, ‘ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்லாந்திரி என்கிற ஒரு சாதாரண கிராமத்தில் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது அதை கொண்டாடும் விதமாக 111 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்கிறார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தது இதுபோன்று முயற்சி. இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் ஒரு விஷயமும் கூட. அந்தவகையில் ஒவ்வொரு பெண்ணும் பிறக்கும்போது உங்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் விதமாக பிறக்கிறாள்.

    பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. பெண்கள் வாழப் பிறந்தவர்கள். வீராங்கனைகள். இதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னைப் பொருத்தவரை இந்த நிகழ்ச்சியில் நான் நிகழ்ச்சியின் பிரதான நபர் கிடையாது, நான் அழகு ராணி கிடையாது. லட்சுமி அகர்வாலும் ரம்யாவும் தான் இதற்கு தகுதியானவர்கள். வரலாற்றில் இவர்கள்தான் ஜாம்பவான்கள் என போற்றப்படுவார்கள். அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

    நான் இதற்கு முன்பு மிகப்பெரிய ஜாம்பவான்கள் வீற்றிருக்கும் மேடையில் இருந்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இல்லாத அளவுக்கு இன்று தான் உண்மையிலேயே நான் பெருமையாக உணர்கிறேன்” என்று கூறினார்.
    அறிமுக இயக்குனர் குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜடா’ படத்தில் பிரபல கால்பந்து ஜாம்பவான் பெயரில் யோகிபாபு நடித்துள்ளார்.
    'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு கதிர் ஹீரோவாக நடித்துள்ள படம் ’ஜடா’. தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசுகிற படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை குமரன் இயக்கியுள்ளார். 

    இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடிக்க, யோகி பாபு, சமுத்திரகனி, ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 6-ந் தேதி ரிலீசாக உள்ளது. 

    போஸ்டர்

    இந்நிலையில், ஜடா படத்தில் யோகிபாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவானாக திகழும் மெஸ்சி எனும் பெயரில் யோகிபாபு நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சமீபத்தில் வெளியான பப்பி மற்றும் பிகில் படங்களில் கால்பந்து வீரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    பின்னணி பாடகி லதா மங்கேஸ்கரின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பிரபல இந்தி பின்னணி பாடகி லதா மங்கேஸ்கருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த 11-ந்தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

    இந்த நிலையில் அவர் கவலைக்கிடமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:- இசைத்துறையில் சாதனை படைத்த லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்த வதந்திகள் முழுவதும் தவறு. அந்த செய்திகள் அனைத்தும் கொடுமையாக உள்ளன. சரியான விவரம் அறியாதவர்கள். தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

    லதா மங்கேஸ்கர்

    நான் தனிப்பட்ட முறையில் அவரது உடல்நலம் குறித்து அறிந்து கொண்டேன். அவர் உடல்நிலை தேறி வருகிறார். விரைவில் நலம் அடைவார். அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். யாரோ, தங்களது வலைதள பக்கங்களில் பதிவு செய்கிறார்கள் என்பதற்காக அதை பரப்ப வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சாலமன் கண்ணன் இயக்கத்தில் ராம்சந்த், அன்ஷிதா நடிப்பில் உருவாகி வரும் ’திருமாயி’ படத்தின் முன்னோட்டம்.
    சாக்‌ஷினி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சாலமன் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் திருமாயி. கதையின் நாயகனாக ராம்சந்த் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அன்ஷிதா நடித்துள்ளார். கொடூர வில்லனாக கே.எஸ். மாசாணமுத்து அறிமுகமாகிறார் மேலும் இதில் ராணி, பரவை சுந்தராம்பாள் , நம்பியார் ராஜா, மொட்டைவிஜி, குதிரை முருகன், முரளி கோவிந்த்ராக், முத்துக்காளை, நெல்லை சிவா, கார்த்தி, வீரமணி, பெங்களூர் அலிஷா ஆகியோரும் நடித்துள்ளனர். 

    அன்ஷிதா

    படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு பாட்டுப் பாடியபடி கொண்டு போய் கொடுத்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்தப் படத்தின் நாயகன் நாயகி. தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறு பட்டு சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படமிது. இதன் படப்பிடிப்பு தேனி, அல்லிநகரம், கும்பக்கரை, பூதிபுரம், காமக் காபட்டி, சின்னமனூர் வருசநாடு' வடுகபட்டி, கொடைக்கானல், சீலையம்பட்டி, இடங்களில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் நிறைவு செய்துள்ளார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. இதனிடையே தர்பார் படத்தின் டப்பிங் பணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.

    டப்பிங் பேசிய ரஜினி

    இந்நிலையில், ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ’எனது வாழ்நாளில் நான் பார்த்த சிறந்த டப்பிங் செஷன் இது’ என குறிப்பிட்டு ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 
    சந்தானம்-ஹர்பஜன் சிங் கூட்டணியில் உருவாகும் டிக்கிலோனா படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

    சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் தயாரிக்கின்றனர்.

    டிக்கிலோனா படக்குழு

    இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பூஜையில் படத்தின் நாயகன் சந்தானம், நாயகிகள் அனகா, ஷிரின்,  தயாரிப்பாளர்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ், சோல்ஜர் பேக்டரி சினிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது. 
    "கருத்துக்களை பதிவு செய்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விசிக தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் வெளியிட்டார்.
    சமூக வலைத்தளங்களால் பெண்கள் பாதிக்கப்படும் பிரச்சினைகளை மைய்யாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் "கருத்துக்களை பதிவு செய்". இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் வெளியிட்டார். இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களின் பேரன் ஆரியன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக வங்காளத்தைச் சேர்ந்த உபாசனா அறிமுகம் ஆகிறார்.

    கருத்துக்களை பதிவு செய் படக்குழுவினருடன் திருமாவளவன்

    படத்தின் இயக்குனர் ராகுல் மற்றும் படக்குழுனருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தொல் திருமாவளவன், இது போன்ற திரைப்படங்கள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்வில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், வண்ணியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
    ரஜினி பட வில்லன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில், உலக அழகி ஒருவர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
    உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண்களான ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா, லாராதத்தா, சுஷ்மிதா சென், யுக்தா முகி ஆகியோர் நடிகைகளாக மாறினர். ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய படங்களிலும், பிரியங்கா சோப்ரா தமிழன் படத்திலும் நடித்துள்ளனர். யுக்தாமுகி பூவெல்லாம் உன்வாசம் படத்தில் நடித்துள்ளார். 

    சுஷ்மிதாசென் ரட்சகன் படத்தில் நடித்து இருக்கிறார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். லாராதத்தா அரசாட்சி, டேவிட் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளனர். இந்த வரிசையில் 2017-ல் இந்தியா சார்பில் பங்கேற்று உலக அழகியாக தேர்வான மனுஷி சில்லாரும் நடிகையாகி உள்ளார். அரியானாவை சேர்ந்த இவர் இந்தியில் தயாராகும் பிருத்விராஜ் என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் அக்‌ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார்.

    மனுஷி சில்லர், அக்‌ஷய் குமார்

    12-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வடமேற்கு பகுதியை ஆண்ட மன்னர் பிருத்விராஜ் சவுகான் வாழ்க்கை வரலாறு படமாக இது தயாராகிறது. பிருத்விராஜ் சவுகான் வேடத்தில் அக்‌ஷய் குமாரும், சன்யோகிதா வேடத்தில் மனுஷி சில்லாரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அடுத்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அக்‌ஷய் குமார், ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயன்தாரா வலிமை பட தயாரிப்பாளர் போனிகபூரை சந்தித்து பேசியுள்ளார்.
    நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். ‘வலிமை’  அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாராகிறது. அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இப்படத்தில் இடம்பெறுகின்றன. 

    அருண் விஜய்யை வில்லனாக நடிக்க வைக்க பரிசீலிக்கின்றனர். கதாநாயகியாக நயன்தாரா, திரிஷா, தமன்னா, நஸ்ரியா ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் போனிகபூரை சந்தித்து பேசி உள்ளனர்.

    போனிகபூர் அவர்களுக்கு விருந்து அளித்துள்ளார். அப்போது போனிகபூரின் மகள் குஷி கபூரும் உடன் இருந்தார். இவர்களுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. சந்திப்பின்போது அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாராவுடன் போனிகபூர் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என்று தகவல் பரவி வருகிறது.

    நயன்தாரா

    ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா தற்போது ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து கொரிய மொழி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகும் ‘நெற்றிக்கண்’ படத்திலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கவுள்ள மூக்குத்தி அம்மன் படத்திலும் நடிக்க உள்ளார்.
    ×