என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தான் நடித்த குறும்படத்தை பார்த்து தான் லோகேஷ் கனகராஜ் தனக்கு தளபதி 64ல் நடிக்க வாய்ப்பு அளித்ததாக சவுந்தர்யா கூறியுள்ளார்.
    விஜய் நடித்து தீபாவளிக்கு வந்த பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பேராசிரியர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாகவும் நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.

    ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 22 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா, 96 புகழ் கவுரி கிஷான், வீஜே ரம்யா, சாந்தனு, வர்கீஸ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 

    தளபதி 64 படக்குழுவினருடன் சவுந்தர்யா

    தற்போது தளபதி 64ல் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளார். தொலைக்காட்சி நடிகையும், பாடகியுமான சவுந்தர்யா நந்தகுமார் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் நடித்து யூடியூபில் வெளியான யுவர்ஸ் சேம்ஃபுல்லி எனும் குறும்படத்தை பார்த்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தந்ததாக சவுந்தர்யா கூறியுள்ளார். மேலும் விஜய்யுடன் நடிப்பது கனவு போல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  
    கடல் குதிரை படத்தின் கதாநாயகியை போலீசார் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
    சென்னை பெரம்பூரை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:- காற்றுக்கு என்ன வேலி, ரசிகர்மன்றம் உள்பட பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கியுள்ளேன். கடல்குதிரை என்ற திரைப்படத்தை தயாரித்து, இயக்க திட்டமிட்டேன். இந்த திரைப்படம், தமிழ் ஈழத்தின் பெண்ணின் வாழ்க்கை தொடர்பானது என்பதால், ஈழப் பெண்ணை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டேன்.

    1993-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா வந்த சந்திரன் என்பவரது மகள் பிரசாந்தி என்ற 20 வயது இளம் பெண் அறிமுகமானார். இவரது பெற்றோர் இலங்கை அகதி என்று முறையாக தமிழக அரசிடம் பதிவு செய்துள்ளனர். முதலில் ஊரபாக்கத்திலும், பின்னர் வளசரவாக்கத்திலும் வசித்தனர். பிரசாந்தி என்னுடைய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் பிரசாந்தியும், அவரது தாயாரும் எனக்கு போன் செய்து அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழுதனர். 

    நான் அவர்களை மெரினா கடற்கரை, காந்திச்சிலை முன்பு சந்தித்து பேசியபோது, கியூ பிரிவு பெண் போலீஸ் அதிகாரி தனக்கு போன் செய்து, பேசி விட்டு, கடைசியில் மாதவிலக்கு தேதி குறித்து விசாரித்தார் என்று பிரசாந்தி கூறி அழுதார். இனிமேல் அந்த அதிகாரி போன் செய்தால், என்னிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யலாம் என்றும் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன்.

    பிரசாந்தி

    பாலகணேசன் என்பவருக்கு எதிராக பிரசாந்தி கடந்த ஜூன் மாதம் கொடுத்த புகார் குறித்து விசாரணை நடத்த, பிரசாந்தி நேரில் வரவேண்டும் என்று வடபழனி சப்-இன்ஸ்பெக்டர் கடந்த ஆகஸ்டு மாதம் சம்மன் அனுப்பியுள்ளார். அதன்பின்னர் கியூ பிரிவு போலீசார், வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பிரசாந்தியிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்டுள்ளனர். இதுகுறித்து என்னிடம் போனில் பிரசாந்தி கூறினார். அவரை நேரில் வரும்படி கூறினேன்.

    அதன்பின்னர் அவரையும், அவரது பெற்றோரையும் காணவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, பல மாதங்களாக பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் சட்டவிரோதமாக கியூ பிரிவு போலீசார் பிடித்து, மர்மமான இடத்தில் அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக கியூ பிரிவு போலீஸ் பிடியில் உள்ள பிரசாந்தியையும், அவரது பெற்றோரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த தமிழக டி.ஜி.பி., கியூ பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
    விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கன்னா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள சங்கத்தமிழன் படத்தின் விமர்சனம்.
    முருகன் என்ற விஜய் சேதுபதி தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துகொண்டு சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். ஒரு பப்பில் ராசி கன்னாவை பார்க்கிறார் விஜய் சேதுபதி. அங்கு இருவருக்கும் சிறிய மோதல் ஏற்படுகிறது. புகைப்பட கலைஞரான ராசி கன்னாவிடம் விஜய் சேதுபதி வசிக்கும் பகுதியை புகைப்படம் எடுக்க புராஜெக்ட் கொடுக்கின்றனர். 

    அப்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ராசி கன்னாவின் தந்தை ரவி கிஷன் பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் முதலாளி. அவர் ராசி கன்னா விஜய் சேதுபதியை காதலிப்பதை அறிந்து ஷாக் ஆகிறார். அவன் பெயர் முருகன் இல்லை சங்கத்தமிழன் என்று சொல்லி டுவிஸ்ட் கொடுக்கிறார். சங்கத்தமிழன் யார்? அவனின் பின்னணி என்ன? அவனை பார்த்து ராசி கன்னாவின் தந்தை அஞ்சுவது ஏன்? என்பதே மீதிக்கதை.

    சங்கத்தமிழன்

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய் சேதுபதி, இதில் இறங்கி அடித்து மாஸ் ஹீரோக்கள் வரிசையில் சேர்கிறார். கோபமும் ஆவேசமுமான சங்கத்தமிழனாக தன்னை முன்னிறுத்தும் விஜய் சேதுபதி, ஜாலியான, புத்திசாலித்தனமான முருகனாகவும் கலக்கி இருக்கிறார். டயலாக் பேசுவதில் தொடங்கி உடல்மொழி வரை வித்தியாசம் காட்டி இருக்கிறார். படம் முழுக்க அவருக்கு அறிமுக காட்சிகள் தான். 

    ராசி கன்னா வழக்கமான கதாநாயகியாக வந்து காதலிக்கும் பணியை செய்கிறார். இன்னொரு கதாநாயகி நிவேதா பெத்துராஜ் காதலிப்பதோடு மட்டும் அல்லாமல் விஜய்சேதுபதிக்கு பக்கபலமாகவும் இருக்கிறார். சூரியின் காமெடி படத்தை கலகலப்பாக நகர்த்துகிறது. இரண்டாம் பாதியில் வரும் அந்த தொட்டி ஜெயா காமெடி வயிறை பதம் பார்க்கிறது.

    சங்கத்தமிழன்

    நாசர், ஸ்ரீரஞ்சனி, மாரிமுத்து, கல்லூரி வினோத், லல்லு, ஸ்ரீமன், மைம் கோபி, ஜான் விஜய் ஆகியோர் பொருத்தமான கதாபாத்திரங்களாக கமர்சியல் படத்துக்கான வலுவை சேர்க்கிறார்கள். அசுதோஷ் ராணா, ரவி கிஷன் இருவரும் வில்லன்களாக மிரட்டி இருக்கிறார்கள். 

    விஜய் சேதுபதியை மாஸாக காட்ட வேண்டும் என்பதில் கவனம் செலுத்திய இயக்குனர் விஜய் சந்தர், திரைக்கதையிலும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கிறது. விவேக்- மெர்வின் இசையில் கமர்சியல் தூக்கல். பிரவீன் கே.எல். இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டு நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். அனல் அரசுவின் சண்டை காட்சிகளில் அனல் பறக்கிறது.

    சங்கத்தமிழன்

    மாஸ் கமர்சியல் படமாக இருந்தாலும் சமகால பிரச்சினையை புத்திசாலித்தனமாக நுழைத்ததால் சங்கத்தமிழன் கைதட்டி ரசிக்க வைக்கிறான்.

    மொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து.
    சுந்தர் சி இயக்கிய ஆக்‌ஷன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகிய நிலையில், அவரின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி இருக்கும் திகில் திரைப்படம் `இருட்டு'. திகில் கலந்த காமெடி படமான `அரண்மனை' படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

    இருட்டு படக்குழு

    இப்படம் கடந்த மாதம் ரிலீசாக இருந்தது. சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளிவைத்திருந்தது. இந்நிலையில் இப்படம் டிசம்பர் 6-ந் தேதி ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதேபோல் கதிர், யோகிபாபு நடித்துள்ள ஜடா படமும் அதேநாளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியா ஆனந்திடம், ரசிகர் ஒருவர் கேட்ட சர்ச்சை கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்,
    ஹீரோயின்களிடம் அவ்வப்போது சில கேள்விகள் வைக்கப்படுகிறது. உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்படும். பலரும் இந்த கேள்விக்கு பதில் சொல்ல தயங்குவார்கள். ஒரு சில நடிகைகள் வெளிப்படையாக அஜீத் அல்லது விஜய் என்று சொல்வதுண்டு. இன்னும் சில நடிகைகள் ஒருவர் பெயரை சொன்னால் இன்னொரு ஹீரோவின் ரசிகர்களுக்கு தன்னை பிடிக்காமல்போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவி விடுவார்கள்.

    பிரியா ஆனந்த்

    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ப்ரியா ஆனந்த் பங்கேற்றார். அவரிடம், ‘உங்களுக்கு அதிகம் பிடித்தவர் அஜித்தா? விஜய்யா?’ என்று கேட்டபோது அஜித் என்று பதில் அளித்தார். அந்த வீடியோவை கண்ட ரசிகர் ஒருவர் அஜித் என்று கூறிய நடிகை பிரியாமணிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரியாமணி, ‘அது நானில்லை’ என்று பதில் அளித்தார். அந்த பதிவுக்கு கீழ் நடிகை பிரியா ஆனந்த், ‘அது நான்தான்’ என ஒப்புக்கொண்டார்.
    பேனர் வைப்பதற்கு பதிலாக தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 2 விவசாயிகளின் கடனை விஜய் ரசிகர்கள் அடைத்தனர்.
    நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்பட வெளியீட்டின் போது ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டுமென விஜய் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிகில் திரைப்பட வெளியீட்டுக்கு பேனர் வைப்பது தவிர்க்கப்பட்டு சமூக சேவை பணியில் இறங்கினர். இதில் பேனர் வைப்பதற்கான நிதியினை கொண்டு மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் விவசாயிகளின் வங்கி கடனை அடைக்க தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் முடிவு செய்தனர். 

    இவற்றில் தேனி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த முனியாண்டி என்ற விவசாயி கொடுவிலார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற வங்கி கடன் ரூ.49,960 மற்றும் பெரியகுளம் தாலுகா, ஜெயமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்ற விவசாயி ஜெயமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்ற வங்கி கடன் ரூ.46 ஆயிரம் ஆகிய 2 விவசாயிகளின் வங்கி கடன் அடைக்க நிதி உதவி வழங்கப்பட்டது.

    விவசாயிகளுடன் விஜய் ரசிகர்கள்

    இந்த விவசாயிகளுக்கு கடன் அடைக்க நிதிஉதவி அளிக்கும் நிகழ்ச்சி தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் லெப்டு பாண்டி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு வங்கி கடனை அடைப்பதற்கான நிதியினை வழங்கினார்.
    தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
    தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

    ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. 

    போஸ்டர்

    அந்த வகையில், தற்போது 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் ரவுடி பேபி பாடல் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய அளவில் குறுகிய காலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ பாடல் என்ற சாதனையையும் ரவுடி பேபி பாடல் பெற்றுள்ளது. இப்பாடல் 318 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை அனுஷ்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்-மஞ்சு வாரியர் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த அசுரன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தெலுங்கு, இந்தி நடிகர்கள் பார்த்து பாராட்டினர். கமல்ஹாசனும் மஞ்சுவாரியரை அழைத்து வாழ்த்தியதுடன் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு அறிவுரை வழங்கினார். பிரகாஷ்ராஜ், பசுபதி ஆகியோரும் நடித்து இருந்தனர். 

    அனுஷ்கா, மஞ்சுவாரியர்

    அசுரன் படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளன. இதில் தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு நடந்தது. முன்னணி நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். ஸ்ரேயா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை இயக்கப்போவது யார் என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள பொன்னியின் செல்வனில் அசுரன் படத்தில் நடித்து பிரபலமான நடிகர் நடிக்க உள்ளார்.
    கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி உள்ளனர். 

    வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர். பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 

    டீஜே

    டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்துள்ளார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு தொடங்கப்படும் நாள் அன்று தான் படக்குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. 

    இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் படத்தில் நடித்து பிரபலமான ’டீஜே’ பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்காக இரண்டு மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். 
    வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் தண்டுபாளையம் படத்தின் முன்னோட்டம்.
    வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் தண்டுபாளையம். சுமன்ரங்கநாத், முமைத்கான், பேனர்ஜி, D.S.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    ஒளிப்பதிவு - R.கிரி, வசனம் - கிருஷ்ணமூர்த்தி, இசை - ஆனந்த் ராஜா விக்ரம், பாடல்கள் - மோகன்ராஜ், கலை - ஆனந்த் குமார், ஸ்டண்ட் - சந்துரு, நடனம் - பாபா பாஸ்கர், எடிட்டிங் - பாபு ஸ்ரீவஸ்தா, பிரீத்தி மோகன், தயாரிப்பு - வெங்கட், இயக்கம் - K.T. நாயக் 

    படத்தை ஸ்ரீ லட்சுமிஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி உலகமெங்கு டிசம்பர் மாதம் வெளியிடுகிறார்.

    படம் பற்றி இயக்குனர் K.T.நாயக் கூறியதாவது, 'இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். 1990களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்து உருவான ஒரு கொள்ளை கும்பல் நாளடைவில் ஆசியாவிலேயே அதிக திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்திய கொடூர கும்பலாக மாறியது. அந்த கேங்கின் உண்மைச் சம்பவங்களை திரட்டி இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளோம்.

    இந்த தண்டுபாளையம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடா ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, மராட்டி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நியூயார்க்கில் அஜித்தை வைத்து படம் தயாரித்து வருபவரை சந்தித்திருக்கிறார்.
    விஜய்யுடன் நயன்தாரா நடித்த பிகில் திரைப்படம் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினியுடன் நயன்தாரா ‘தர்பார்’ படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நயன்தாரா வரும் நவம்பர் 18ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். அங்கு அஜித்தை வைத்து ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்தவரும், தற்போது ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்திருக்கிறார்கள்.

    போனிகபூருடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

    நியூயார்க்கில் போனி கபூரின் இளையமகள் குஷி கபூர் படித்து வருவதால், அவருடன் கடந்த சில நாட்களாக போனி கபூர் தங்கி வருகிறார். இதனிடையே, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் போனி கபூர் மற்றும் குஷி கபூரை நேரில் சந்தித்து டின்னர் சாப்பிட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
    தமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்த நம்பியாரின் நூற்றாண்டு விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கலந்துக் கொள்ள இருக்கிறார்கள்.
    தமிழ் பட உலகில் புகழ் பெற்ற வில்லன் நடிகராக இருந்தவர் நம்பியார். குணசித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார். எம்.ஜி.ஆர். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார். 60 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

    தீவிர அய்யப்ப பக்தரான நம்பியார் ஆண்டு தோறும் சபரி மலைக்கு சென்று குருசாமியாகவும் திகழ்ந்தார். 2008-ல் தனது 89-வது வயதில் மரணம் அடைந்தார். நம்பியார் வாழ்க்கை 30 நிமிட ஆவண படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை கவுதம் மேனன் உதவியாளர் சூர்யா இயக்கி உள்ளார்.

    கமல் - ரஜினி

    நம்பியாரின் வாழ்க்கை, அவர் நடித்த திரைப்படங்கள், ஆன்மிக ஈடுபாடு ஆகிய விஷயங்கள் படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தை வெளியிடும் நிகழ்ச்சியும் நம்பியாரின் நூற்றாண்டு விழாவும் வருகிற 19-ந்தேதி சென்னை மியூசிக் அகடமியில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சிவகுமார் ஆகியோர் அழைக்கப்பட்டு உள்ளனர்.

    விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, நம்பியார் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் நம்பியார் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
    ×