என் மலர்
சினிமா செய்திகள்
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் சைக்கோ படத்திற்காக இளையராஜா இசையில் சித்ஸ்ரீராம் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ், நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ. டபுள்மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழிமாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தை டிசம்பர் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். படத்தின் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இடம்பெற்ற உன்னை நினைச்சு என்ற பாடல் நேற்று வெளியானது.
இளையராஜா 70 வயதை தாண்டியும் இன்றும் படங்களுக்கு இசையமைத்து வருகின்றார். அதிலும் இன்றைய ட்ரெண்ட் இளைஞர்களின் பேவரட் சித் ஸ்ரீராமையும் தன் இசையில் பாட வைத்து அசத்தியுள்ளார். இளையராஜா இசையில் முதன்முறையாக சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படம் குறித்து ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியானது. கார்த்தி நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடந்து விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கைதி படம் வெற்றிகரமாக 25 நாளை எட்டியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், “கைதி வெற்றிகரமாக 25வது நாள், இதை சாத்தியமாக்கிய மக்களுக்கும், ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. அப்படியே அந்த கொசு மருந்து அடிச்ச மிஷினுக்கும் ஒரு குட்டி நன்றி என பதிவிட்டிருந்தார்.
அப்டியே #Thalapathy64 climax ல என்ன Weapon வர போகுது னு சொன்னீங்க னா நல்லா இருக்கும். 😁🗡️⚔️⛏️🏹🔫🔪🏏🏑🗜️⛓️⚒️ https://t.co/llFybKsYlU
— Rathna kumar (@MrRathna) November 18, 2019
இதற்கு பதிலளித்த ஆடை பட இயக்குனர் ரத்னகுமார், “ அப்படியே தளபதி 64 கிளைமேக்ஸ்ல என்ன ஆயுதம் வரப்போகுதுனு சொன்னீங்கனா நல்லா இருக்கும்” என நகைப்புடன் கேட்டுள்ளார்.
உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 கமல் குறித்த ருசிகர தகவலை கூறினார்.
இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால், பாபி சிம்ஹா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று, கமலின் 60 ஆண்டுகால கலை பயணத்தை கவுரவிக்கும் வகையில் 'உங்கள் நான்' எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் போன்ற நேர்த்தியான நடிகரை நான் பார்த்ததில்லை, இந்த வயதிலும் அவர் ஆல்-ரவுண்டராக திகழ்வது ஆச்சர்யமாக இருக்கிறது என கூறிய இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் குஜராத்தி மொழி பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வரும் ‘எம்.ஜி.ஆர்.மகன்’ படம் மூலம் பிரபல பாடகர் ஒருவர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
நாட்டுப்புற இசை கலைஞரான அந்தோணி தாசன், திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அப்படத்தில் இவர் பாடிய திண்டுகல்லு திண்டுகல்லு பாடல் சூப்பர் ஹிட் ஆனது, இதையடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. முன்னணி நாட்டுப்புற பாடகராக திகழும் அந்தோணி தாசன், ஒருசில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம், அடுத்ததாக சசிகுமாரை வைத்து இயக்கி வரும் எம்.ஜி.ஆர்.மகன் படம் மூலம் அந்தோணி தாசன், இசை அமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவிற்காக தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இதில், 55 நாடுகளைச் சேர்ந்த 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்த விழாவிற்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியை விழாக்குழுவைச் சேர்ந்த நடிகர் மோகன், நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், மனோபாலா உள்ளிட்டோரிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

அப்போது, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை 17 வது சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்க வருமாறு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா சென்னையில் நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு வரை அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 75 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை பரினீதி சோப்ரா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்ததால், படக்குழு ஷூட்டிங்கை ரத்து செய்துள்ளது.
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை இந்தியில் படமாகிறது. அமேல் குப்தா இயக்குகிறார். பிரபாசுடன் சாஹோ படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரத்தா கபூரை, சாய்னா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருந்தனர். இதற்காக பேட்மிண்டன் பயிற்சிகள் எடுத்தார்.
படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கால்ஷீட் பிரச்சினையால் படத்தில் இருந்து ஸ்ரத்தா கபூர் விலகினார். அவருக்கு பதில் சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ராவை தேர்வு செய்தனர். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பரினீதி சோப்ரா கழுத்தில் காயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனக்கு படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக கழுத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதற்காக பிசியோதெரபி சிகிச்சை எடுத்தேன். இப்போது தேறி வருகிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார். கழுத்தில் காயம்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி பரினீதி சோப்ராவுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து படப்பிடிப்பு 15 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 64 படத்தில் அனிருத் இசையில் விஜய் ஒரு பாடல் பாட உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். மேலும் சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான பிகில் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் முதன்முறையாக பாடிய வெறித்தனம் பாடல் பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றதால், தளபதி 64-ல் விஜய் பாட உள்ள பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் விஜய் ஏற்கனவே அனிருத் இசையில் கத்தி படத்தில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் சர்ச்சை புகைப்படங்களை வெளியிட்டு எதிர்ப்புகளில் சிக்கும் நடிகைகள் பட்டியலில் வாணி கபூரும் இணைந்துள்ளார்.
தமிழில் நானி ஜோடியாக ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் வாணி கபூர். சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்து திரைக்கு வந்த ‘வார்’ இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ரன்பீர் கபூர், சஞ்சய்தத்துடன் ‘ஷாம்ஷேரா’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி போன்ற கவர்ச்சி மேலாடை அணிந்த புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பதிவேற்றி இருந்தார். அந்த மேலாடையில் ஹரே ராம் ஹரே கிருஷ்ணா என்ற வாசகம் இருந்தது. புகைப்படத்தின் கீழ் வாழ்க்கையை மிகவும் சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டாம். இங்கு யாருமே உயிருடன் இருக்கப் போவதில்லை என்ற வாசகத்தை பதிவிட்டு இருந்தார்.

அதைப் பார்த்த வலைத்தளவாசிகள் வாணிகபூரை கடுமையாக கண்டித்தனர். புகைப்படத்தை வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். வாணி கபூருக்கு மிரட்டல்களும் வந்தன. இதைத்தொடர்ந்து சர்ச்சையான அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கவில்லை.
எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஈஷா ரெபா, சாக்ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிவி.பிரகாஷ் நடிப்பில் 'ஐங்கரன்', 'ஜெயில்', 'அடங்காதே', 'காதலிக்க யாருமில்லை', 'ஆயிரம் ஜென்மங்கள்' ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் எழில் இயக்கி இருக்கும் 'ஆயிரம் ஜென்மங்கள்'. படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக ஈஷா ரெபா, சாக்ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களுடன் சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் ரமேஷ் பி.பிள்ளை தனது அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தை வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சினம் மற்றும் மாஃபியா படங்களின் அப்டேட்களை அவர் வெளியிட்டுள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் தற்போது ‘சினம்’ என்ற படம் உருவாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதுபோல், துருவங்கள் பதினாறு பட இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து ‘மாஃபியா’ படத்தின் டப்பிங் பணிகளை அருண் விஜய் முடித்திருப்பதாக அறிவித்திருக்கிறார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.
ஜிவி பிரகாஷ் இசையில் தற்போது உருவாகி வரும் சூரரைப் போற்று படத்தில் நடிகர் சூர்யா ராப் பாடலை பாடியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கி வரும் இப்படத்தில் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
Mr.Maara raps ... #maaratheme will be rapped by @Suriya_offl sir 🔥🙌🏻 #sooraraipottru#sudha#arivupic.twitter.com/FBKBX57TH8
— G.V.Prakash Kumar (@gvprakash) November 18, 2019
இப்படத்தின் ஸ்பெஷல் தீம் மியூசிக் ஒன்றை உருவாக்கி வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மாறா தீம் மியூசிக்குக்கான ராப் பாடலை நடிகர் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியிருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் கூறியுள்ளார்.
தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் ரஜினியுடன் நடித்துள்ள தர்பார் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் “நெற்றிக்கண்” படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்க உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் இப்படத்தை தயாரிக்க உள்ளார்.

இந்த படத்தில் நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்ற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு பாடலையும், ஒவ்வொரு இசையமைப்பாளர் இசையமைக்க இருக்கிறார்களாம். இசையமைப்பாளர்கள் பற்றி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.






