என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த நித்யாமேனன், நிச்சயம் தேசிய விருது வாங்குவேன் என தெரிவித்துள்ளார்.
    தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் தயாராகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ‘மிஷன் மங்கள்’ மூலம் இந்தியிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். 

    ஆனால் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை. ஒரு நடிகையாக தேசிய அளவில் அடையாளம் காணப்படுவது சந்தோஷமான விஷயம். ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு படத்தில் நடித்து அதில் எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு தேசிய விருது வாங்கி கொடுக்கும் படம் வழக்கமான கதையாக இருக்க கூடாது. வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்படியென்றால்தான் அதில் நடிக்கவே செய்வேன்.

    நித்யாமேனன்

    சினிமாவில் எனது பயணம் முடிந்து விடவில்லை. இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஏதாவது ஒரு படத்தில் நிச்சயம் தேசிய விருது வாங்குவேன். எப்போதும் என்னை புதிதாக நடிக்க வந்த நடிகை மாதிரியே பார்க்கிறேன். 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று நினைப்பதே இல்லை. இப்போது சினிமாவுக்கு வந்த மாதிரிதான் தினமும் நினைத்து பார்க்கிறேன்.” இவ்வாறு நித்யா மேனன் கூறினார்.
    கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அந்த இடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
    உச்ச நடிகையும், மூன்றெழுத்து நடிகையும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். இப்போதைக்கு இருவரும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற மாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது.

    எப்போது இரண்டு பேரும் ஓய்வு பெறுவார்கள்? என்று சில முன்னணி நாயகிகள் காத்திருக்கிறார்களாம். அவர்களில் ‘கீ’ நடிகையும் ஒருவராம். முதல் இரண்டு இடத்தில் ஏதாவது ஒன்றை கைப்பற்றி விடவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறாராம்.
    வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா நடிப்பில் உருவாகி இருக்கும் ’தொட்டு விடும் தூரம்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘தொட்டு விடும் தூரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் விவேக்ராஜ் கதாநாயகனாகவும், மோனிகா சின்னகோட்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். லிவிங்ஸ்டன், சீதா, சிங்கம்புலி, பாலசரவணன், ஜீவாரவி, ராஜசிம்மன், கிரேன் மனோகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.பி.நாகேஸ்வரன் டைரக்டு செய்துள்ளார். பி.ராமநாதன், ஆர்.சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். 

    படத்தை பற்றி இயக்குனர் வி.பி.நாகேஸ்வரன் கூறியதாவது:- “எனது நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, ‘தொட்டு விடும் தூரம்’ படம் தயாராகி உள்ளது. சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் இருந்து மாணவர்கள் என்.எஸ்.எஸ். முகாமுக்காக ஒரு கிராமத்துக்கு செல்கிறார்கள். அங்கு சமூக சேவை செய்யும் அழகு சுரேஷ் என்ற இளைஞனை, பிரியா என்ற மாணவி சந்திக்கிறாள். இருவருக்கும் காதல் மலர்கிறது. 

    விவேக்ராஜ், மோனிகா

    ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேர்கிறது. பின்னர் காதலியை தேடி அழகு சுரேஷ் சென்னை செல்கிறான். அங்கு அவர் சந்திக்கும் பிரச்சினைகளும், காதலியை சந்தித்தாரா என்ற கேள்விக்கு விடையும் மீதி கதை. வித்தியாசமான காதல் படமாக தயாராகி உள்ளது. படத்தை பார்த்துவிட்டு வரும்போது அதன் பாதிப்பு நிச்சயம் இருக்கும். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வருகிறது.
    இயக்குனர்கள், பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது பிரபல நடிகர் மீது மீடூ புகார் தெரிவித்துள்ளார்.
    தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லியும் அரை நிர்வாண போராட்டம் நடத்தியும் இந்திய திரையுலகையே அதிர வைத்தார். நடிகர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் இதில் சிக்கினர்.

    தற்போது ஸ்ரீரெட்டி சென்னையில் வசித்து வருகிறார். சில நாட்களாக அமைதியாக இருந்த அவர் இப்போது மீண்டும் பிரபல தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் தம்பியுமான பவன் கல்யாணை ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக ஸ்ரீரெட்டி கூறியிருப்பதாவது:- “பெண்களை மதிக்க தெரியாதவர் பவன் கல்யாண். பல இளம் பெண்களை மோசம் செய்து கர்ப்பமாக்கி உள்ளார். வாழ்க்கையில் அவரால் ஒருபோதும் உயர முடியாது. அவரது ரசிகர்களுக்கு பயந்து நான் சென்னைக்கு ஓடி விட்டதாக புரளி கிளம்பி உள்ளது. எனக்கு எந்த பயமும் இல்லை.

    பவன் கல்யாண்

    ஐதராபாத்தில் ஏற்கனவே வசித்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்கிறேன். அவரால் பாதிப்புக்கு உள்ளான 5 பெண்கள் புகார் அளிக்க தயாராகி வருகிறார்கள். இதுபோல் மேலும் சிலரும் வருவார்கள். ஆந்திர முதல் அமைச்சராகி விட வேண்டும் என்று அவருக்கு கனவு உள்ளது. அது ஒருபோதும் நடக்காது. பஞ்சாயத்து தலைவராக கூட அவரால் வர முடியாது.”

    இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். இந்த புகார் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒத்த செருப்பு படம் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு சென்ற பார்த்திபன், அடுத்த படத்திலும் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை எடுப்பதில் முதன்மையானவர் பார்த்திபன். அவர் நடித்து இயக்கி பெரிய வெற்றி பெற்ற புதிய பாதை படமும் புதுமையான கதையசம்சத்திலேயே வந்தது. பொண்டாட்டி தேவை, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், வெற்றிக்கொடி கட்டு, இவன், அழகி, கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பார்த்திபனின் அனைத்து படங்களுக்கும் வரவேற்பு கிடைத்தன.

    சமீபத்தில் இவர் மட்டும் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார். இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும். பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டினர். 

    இரவின் நிழல் பட போஸ்டர்

    இந்நிலையில், பார்த்திபன் அடுத்ததாக இயக்கி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'இரவின் நிழல்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளார். ஆசியாவில் இது போன்ற முயற்சியை எடுக்கு முதல் இயக்குனர் பார்த்திபன் தான். இப்படத்தின் தலைப்பை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.

    சூரரைப்போற்று பட போஸ்டர்

    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார்.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தி படமும் கைவசம் உள்ளது. 

    அவர் அளித்த பேட்டி வருமாறு:- “காதலில் விழும் சந்தர்ப்பங்களை யாரும் கணிக்க முடியாது. எப்போது யாருக்கு காதல் வரும் என்பதையும் சொல்ல முடியாது. என்னை காதலிக்கும் ஒரு நல்ல மனிதர் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த நல்ல மனிதருக்காக நான் காத்து இருக்கிறேன். கண்டிப்பாக அப்படி ஒரு நல்லவர் கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    சுருதிஹாசன்

    நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இடையில் மாறிவிட மாட்டார்கள். அது மாதிரி, கெட்டவர்கள் நல்லவர்கள் மாதிரி நடித்தாலும் கடைசியில் கெட்டவர்களாகவே மாறி விடுவார்கள். ஆனாலும் கெட்ட மனிதர்களின் அறிமுகம் ஒரு அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக்கொடுக்கும்.

    இதையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுயநலமில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதரை இப்போது நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த மாதிரி நல்லவர் எனக்கு கிடைக்காமல் போகமாட்டார்.” இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை ரெஜிஷா விஜயன். சின்னத்திரை தொகுப்பாளினியாக இருந்து நடிகை ஆனவர். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார். கடந்த ஆண்டு மட்டும் 3 படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

    இதில் இவர்களுடன் நட்டி, லால் ஆகியோர் நடிக்கிறார்கள். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். திருநெல்வேலி பகுதியில் படமாகிறது.

    ரெஜிஷா விஜயன்

    இதேபோல் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான அசுரன் திரைப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தனுஷ்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் டி40 படத்திலும் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? என வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    கவிஞர் வைரமுத்துவிற்கு ஒரு தனியார் பல்கலைகழகம் சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்கு பாடகி சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியை ரத்து செய்ததாக செய்திகள் வெளியாகின. அதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரியும் டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ரத்து செய்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    வைரமுத்து

    இந்நிலையில் பட்டமளிப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவிட்டுள்ளதாவது:- எனக்காகக் குரல்கொடுத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் சீமான், முற்போக்கு எழுத்தாளர் அருணன் மற்றுமுள்ள தமிழ் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி. இத்தனைபேர் துணையிருக்க எனக்கென்ன மனக்கவலை...? என தெரிவித்துள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ படத்திற்கு தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.
    பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா ஆகியோரும் நடித்து வருகிறார்கள். 

    விஜய் இதில் கல்லூரி பேராசிரியராகவும், மாணவராகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.


    இந்நிலையில், படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைத்து அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. 
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பற்றிய முக்கிய அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருக்கிறார்.
    சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. 

    சுரேஷ் காமாட்சி ட்விட்

    பின்னர் சமரசமாகி மாநாடு படத்தை மீண்டும் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பை பொங்கல் தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

    லைஃப் அகைன் என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கௌதமி துப்புரவு தொழிலாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடி இருக்கிறார்.
    கடந்த 1980களின் இறுதியில் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கௌதமி. இவர் தற்போது 'லைஃப் அகைன்' என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கி புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக்கி வருகிறார். இந்நிறுவனம் சிகிச்சை, வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்நம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை என பல சிறப்பு குணங்களை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து அவர்களுடன் பேசி மகிழ்ந்து அன்பளிப்பு கொடுத்து புத்தாண்டை தொடங்கி இருக்கிறார் கௌதமி. எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கிறது. அந்த கஷ்டங்களை மறந்து அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும் என்று கூறி அன்பை பரிமாறிக் கொண்டார் கௌதமி.

    கௌதமி

    மேலும் இந்த புத்தாண்டை துப்புரவு தொழிலாளர்களுடன் கொண்டாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
    ×