என் மலர்
சினிமா செய்திகள்
7 மாதங்களாக ஓட்டு எண்ணிக்கை முடங்கியுள்ளதால், நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடத்தினர். நாசர், பாக்யராஜ் தலைமையில் 2 அணிகள் மோதின. 2 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் ஓட்டு போட்டனர். ஆனால் 7 மாதங்களாகியும் ஓட்டுகள் எண்ணப்படவில்லை. 66 உறுப்பினர்கள் தங்கள் ஓட்டு உரிமையை பறித்து விட்டதாகவும் சிலர் தங்களுக்கு தபால் ஓட்டு சீட்டுகள் தாமதமாக கிடைத்ததாகவும் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கினால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ஓட்டுப் பெட்டிகளை வங்கியொன்றில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதற்கு மாதம் ரூ.50 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பது தாமதம் ஆவதால் சங்க பணிகள் முடங்கி உள்ளன. சங்கத்தில் நிதி இருப்பு தீர்ந்துபோய் உறுப்பினர்களுக்கு பென்ஷன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்க முடியவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

பணம் இல்லாமல் நடிகர் சங்க கட்டிட பணிகளையும் நிறுத்தி உள்ளனர். நட்சத்திர கலை விழா நடத்தி நிதி திரட்ட திட்டமிட்டு இருந்தனர். அதுவும் நடக்கவில்லை. நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை அரசு நியமித்து விட்டது. இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் வழக்கில் வருகிற 2-ந்தேதிக்கு மேல் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது ஓட்டுகள் எண்ணப்படுமா? அல்லது மறுதேர்தல் நடத்தப்படுமா? என்பது தெரிய வரும் என்று நடிகர் சங்க வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
நடிகர் அஜித்குமார் டுவிட்டரில் இணைய வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பிரபல நடிகர்கள் முதல் இளம் நடிகர் நடிகைகள் வரை டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் நடிக்கும் படங்கள் குறித்த விவரங்களையும் அதில் பதிவிட்டு ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யும், அஜித்குமாரும் டுவிட்டரில் இல்லை.
ஆனாலும் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது ஹேஸ்டேக்குகளை உருவாக்கி டுவிட்டரை தெறிக்க விடுகின்றனர். விஜய், அஜித் நடிக்கும் புதிய படங்கள் பற்றிய தகவல்கள் டிரெய்லர்களை வெளியிட்டு வைரலாக்குகிறார்கள். விஜய்க்கு டுவிட்டரில் நேரடி கணக்கு இல்லாவிட்டாலும் அவரது அலுவலகம் சார்பில் ஒரு கணக்கு இயங்குகிறது.

அதில் விஜய்யின் புதிய படங்களின் தோற்றம் மற்றும் டிரெய்லர்கள் வெளியாகின்றன. அஜித்குமார் ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறார். பட விழாக்களிலும் பங்கேற்பது இல்லை. சமூக வலைத்தளங்களில் இருந்தும் தள்ளியே இருக்கிறார். அவரது படங்களின் முதல் தோற்றம் டிரெய்லரை டுவிட்டரில் ரசிகர்கள் டிரெண்டிங் செய்கின்றனர்.
இந்த நிலையில் அஜித்குமார் டுவிட்டருக்கு வர வேண்டும் என்று டுவிட்டர் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் ரசிகர்கள் எந்த அளவுக்கு அவரது படங்களை விரும்புகிறார்கள் என்பதை அவர் அறிய முடியும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த அழைப்பை ஏற்று அஜித்குமார் டுவிட்டரில் இணைவாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
தன்னைப் போல் வாய் பேசுபவர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் சமூக பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிக்கும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திலும் சித்தார்த் கலந்து கொண்டார். இதனால் அவர் விரைவில் அரசியலில் ஈடுபடப்போகிறார் என பேச்சு எழுந்தது.
இதுகுறித்து சித்தார்த் கூறியதாவது:- அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னைப் போல் வாய் பேசுபவர்கள் அரசியலுக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். அரசியலில் ஈடுபடுவதற்கு ஒரு சாணக்கியத்தனம் வேண்டும். எதை, எப்போது, எப்படி பேச வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். எனக்கு உண்மையை பேச தெரியும். அதை தான் நான் பேசுகிறேன்.

எனது நாட்டை பற்றி இழிவாக பேசி, அதில் இருந்து ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படக்கூடாது என்பதற்காகவே சில முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுகிறேன். இந்த தருணத்தில் நமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டியது கட்டாயம். சமூக வலைதளங்களில் நான் போடும் பதிவுகள் எனது கருத்துகள் மட்டுமே. அதைத்தாண்டி வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தர்பார் படத்தை தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடித்துள்ள படம் தர்பார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் மும்பையை பின்னணியாகக் கொண்ட போலீஸ் தாதா கதையில் உருவாகியிருக்கிறது.
ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் படத்தை தான் இயக்க இருப்பதாக பரவி வரும் செய்தி உண்மையல்ல. நான் அவரை சந்தித்து கதை கூறவும் இல்லை என தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் ஏற்கனவே தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ், அர்ஷிதா ஸ்ரீதர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’வன்முறை’ படத்தின் முன்னோட்டம்.
ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் 'வன்முறை’. இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அர்ஷிதா ஸ்ரீதர் நடித்துள்ளார். மேலும் வினோத், நேகா சக்சேனா, சார்மிளா, அபுபக்கர், ரத்னவேலு, மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் மஞ்சித் திவாகர் இயக்கியுள்ளார். சிவ சுகுமாரன் இசையமைக்கும் இப்படத்திற்கு அய்யப்பன், ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

படம் பற்றி இயக்குநர் மஞ்சித் திவாகர் கூறும்போது, "தமிழகத்தில் அறிமுகமாவதில் நான் பெருமைப்படுகிறேன். புதிய முயற்சிகள் அனைத்திற்கும் கைகொடுக்கும் ரசிகர்கள் தமிழ் ரசிகர்கள். இங்கே தமிழர்கள் ஆள் யார் என்று பார்ப்பதில்லை திறமையை மட்டுமே பார்க்கிறார்கள். எனவேதான் நம்பிக்கையுடன் இங்கே தமிழ்ப்படம் இயக்க வந்திருக்கிறேன். இது பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இருக்கும்." என்கிறார். படத்தை பார்த்த தணிக்கைத் துறையினர் "இது எல்லாருக்குமான படம். முக்கியமாக பெண்களுக்கு எச்சரிக்கை தரும் வகையில் உருவாகியுள்ள படம்" என்று பாராட்டி உள்ளனர். மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.
தேவதாசி முறை குறித்த தனது தாயாரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், பாடகி சின்மயி அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மீடூ எனும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் ரீதியான குற்றங்களை வெளிக்கொணர பிரச்சாரங்களை முன்னெடுத்தவர் பாடகி சின்மயி. அடுத்தடுத்து சில சர்ச்சையான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்கினார். தற்போது சின்மயியின் தாய் பண்டையகால தேவதாசி முறை குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சின்மயியின் தாயார் பத்மஹாசினி, ‘தேவதாசி முறை என்பது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, நம் பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது எப்பேர்பட்ட உயர்வான முறை. அதை சிதைத்ததனால் நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன்’ என்று கூறி உள்ளார். இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் பேசிய வீடியோ பலராலும் பகிரப்பட்டது.
இது தொடர்பாக பாடகி சின்மயியிடமும் கேள்விகள் எழுப்பி வந்தனர். ‘ஆணாதிக்கம், பெண்களின் பாதுகாப்பு என்று தொடர்ந்து பேசி வருகிறீர்கள். உங்கள் அம்மா இப்படி பேசியிருப்பது சரியானதா? முதலில் மாற்றத்தை உங்கள் தாயிடம் இருந்து ஆரம்பியுங்கள்’ என்பது போன்ற கேள்விகளை அவரிடம் கேட்டனர்.

அதுமட்டுமின்றி மிக கடுமையான சொற்களாலும் சின்மயியையும், அவரது தாயாரையும் தாக்கி வந்தனர். அந்தப் பதிவுகளில் பலரும் சின்மயியை டேக் செய்திருந்தனர்.
இதுகுறித்து தற்போது சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’. அம்மாவின் கருத்துக்கு அவர்தான் பொறுப்பு. ஆனாலும் நான் மன்னிப்பு கேட்கிறேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர்கள் மற்றும் பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது நடிகை தமன்னாவை டார்கெட் செய்துள்ளார்.
நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பட உலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் விஷால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து பரபரப்பாக்கினார்.

இந்நிலையில், இவர் தற்போது நடிகை தமன்னாவை டார்கெட் செய்துள்ளார். அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு நடக்கிறது. அவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. கடந்த பத்து நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க முடியாது. அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட போகிறேன்” என தெரிவித்துள்ளார்.
வயதான நடிகருக்கு ஜோடியாக நடிக்க நடிகை கேத்ரின் தெரசா ரூ.1 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. கதகளி, கணிதன், கடம்பன், கலகலப்பு-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அருவம் பேய் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு கதாநாயகி தேடி வந்தனர். பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவை அணுகினர். ஆனால் பாலகிருஷ்ணா வயதான நடிகர் என்பதை சுட்டிகாட்டி அவருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். சோனாக்சி சின்ஹா, லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு வேறு சில முன்னணி நடிகைகளை படக்குழுவினர் தொடர்பு கொண்டு பேசினர். அவர்களும் வயதான பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தால் இளம் கதாநாயகர்கள் புறக்கணித்து விடுவார்கள் என்று சொல்லி மறுத்து விட்டனர். இறுதியாக கேத்ரின் தெரசாவை அணுகினர். அவரோ தனக்கு ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தால் நடிக்க தயார் என்று நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
அதை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை நடித்த படங்களில் ரூ.50 மற்றும் ரூ.60 லட்சமே கேத்ரின் வாங்கியதாகவும் இப்போது ரூ.1 கோடி சம்பளத்தை எட்டி உள்ளார் என்றும் பட உலகில் பேசப்படுகிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.
நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வந்த சிபிஐ, 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் நடிகர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரித்து வந்தது.

இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை, சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், கலாபவன் மணியின் மரணம் கொலையல்ல எனவும், அளவுக்கு அதிகமான மதுபானம் அருந்தியதால் ஏற்பட்ட கல்லீரல் நோயால் தான் அவர் மரணத்தை தழுவியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திரமுகி 2ம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாகவும், பெரிய பட நிறுவனம் ஒன்று அதை தயாரிக்க உள்ளதாகவும் இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து, பி.வாசு இயக்கத்தில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. இந்த படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருந்தது. சென்னை சாந்தி தியேட்டரில் 800 நாட்களை தாண்டி ஓடி, சந்திரமுகி படம் சாதனை புரிந்தது. “இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது” என்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து ‘சந்திரமுகி’ படத்தை இயக்கிய இயக்குனர் பி.வாசு, சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:- “சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை நான் ஏற்கனவே கன்னடத்தில், ‘ஆப்த ரட்சகா’ என்ற பெயரில் இயக்கி விட்டேன். அந்த படம், கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

இந்த படத்தின் கதையை மேலும் மெருகேற்றி, ஒரு தமிழ் கதாநாயகனிடம் சொல்லி இருக்கிறேன். ஒரு பெரிய பட நிறுவனத்திடமும் சொல்லி விட்டேன். ‘சந்திரமுகி-2’ படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நடைபெறுகின்றன.”
இவ்வாறு இயக்குனர் பி.வாசு கூறினார்.
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது தமிழக காவல்துறைக்கு உதவி செய்திருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது நடிப்பில் தற்போது சூரரைப் போற்று திரைப்படம் உருவாகியுள்ளது. இதையடுத்து தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். நடிப்பதையும் தாண்டி சூர்யா தனது அகரம் பவுண்டேசன் மூலம் கல்வி உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக காவல் துறைக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள 50 சிசிடிவி கேமராக்களை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் வழங்கியுள்ளார். இந்த கேமராக்கள் தமிழகத்தின் 3 முக்கிய பகுதிகளை கண்காணிக்க பொருத்தப்பட உள்ளது.
அன்பு இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் வால்டர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
சிபிராஜ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வால்டர்’. அன்பு இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரின் கான்ஞ்வாலா நடிக்கிறார். மேலும் ரித்விகா, சனம் ஷெட்டி, சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். வித்தியாசமான திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் டீசரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.
இந்த டீசர் தற்போது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த டீசரில் ‘ஆடி பார்க்கணும்னு முடிவு பண்ணிட்ட, இனிமேல் ஆட்டத்தை பாரு’ என்ற வசனம் ரசிர்களை கவர்ந்துள்ளது.






