என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சினிமா தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலர் நிதி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ் பெப்சிக்கு ரூ.50 லட்சம் வழங்கினார். 

    இதுதவிர பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு  ரூ.75 லட்சம் என முதலில் ரூ.3 கோடி வழங்கினார். அண்மையில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் பொருட்டு தனது அடுத்த பட சம்பளத்திலிருந்து ரூ.25 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். 

    ராகவா லாரன்ஸ்

    இதுமட்டுமில்லாமல், விநியோகஸ்தர் சங்கத்திற்கு ரூ.15 லட்சம், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம்  என தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வந்த லாரன்ஸ், தற்போது சென்னை கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களிலுள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார். 
    கொரோனா நிவாரண உதவிகளை செய்து வரும் நடிகர் பிரகாஷ்ராஜ், பணமில்லை என்றால் கடன் வாங்கியாவது உதவி செய்வேன் என கூறியுள்ளார்.
    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழலில் உணவின்றி தவிப்பவர்களுக்கு தன்னார்வலர்களும், நடிகர் நடிகைகளும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் நடிகர் பிரகாஷ்ராஜ், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: "என்னிடம் நிதி குறைவாக உள்ளது. இருந்தாலும் நான் கடன் வாங்கியாவது தொடர்ந்து சமூகப் பணிகளைச் செய்வேன். ஏனென்றால் என்னால் மறுபடியும் சம்பாதிக்க முடியும். இந்த கடினமான தருணத்தில் இருந்து மீள ஒன்றிணைந்து போராடுவோம்" என கூறியுள்ளார். 
    கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற தியா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நடிகை சமந்தா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தமிழில் பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் ரீமேக் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமான தியாவை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சமந்தா முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

    தியா படக்குழு

    கே.எஸ். அசோகா இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான தியா படத்தை இதர மொழிகளில் ரீமேக் செய்ய கடும் போட்டி நிலவி வருவதாக அப்படத்தின் கிருஷ்ண சைதன்யா தெரிவித்திருந்தார். குறிப்பாக தெலுங்கில் ரீமேக் செய்ய அதிக அழைப்புகள் வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என கிருஷ்ண சைதன்யா கூறியுள்ளார்.
    பிரபல பாப் பாடகி லேடி காகா, கொரோனா நிவாரணத்துக்காக ஆன்லைனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரூ.980 கோடி நிதி திரட்டியுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலகையே அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளன. இதனால் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்டி உள்ளனர். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். 

    இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர். கொரோனா நிவாரணத்துக்கு உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து லேடி காகா நடத்திய இந்த இசை நிகழ்ச்சி மூலம் ரூ. 980 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத்துறை ஊழியர்களின் நலனுக்காக இந்த நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா ஊரடங்கால் ரத்த வங்கிகளில் ரத்தம் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதை அறிந்த நடிகர் சிரஞ்சீவி ரத்த தானம் செய்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டும் நிவாரண நிதி வழங்கியும் உதவிகள் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் மற்ற நோயாளிகளுக்கு ரத்தம் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஐதராபாத்தில் ரத்ததானம் செய்துள்ளார். 

    இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கால் ரத்த வங்கிகளில் ரத்தம் இருப்பு குறைந்து இருப்பது ஆஸ்பத்திரி வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோயாளிகள், இதய நோயாளிகள், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், விபத்தில் சிக்கியவர்கள் போன்றோர் ரத்தம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். 

    அவர்களை காப்பாற்ற பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் அனைவரும் அருகில் உள்ள ரத்ததான வங்கிக்கு சென்று ரத்ததானம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.
    கொரோனா ஊரடங்கால் குடும்பத்தினர் துபாயில் சிக்கிக்கொண்டதால், பிரபல பாலிவுட் நடிகர் தனிமையில் தவித்து வருகிறார்.
    பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத் ஏற்கனவே குடும்பத்தை பிரிந்து ஜெயிலில் நீண்ட நாட்களை கழித்தார். இப்போது கொரோனா ஊரடங்கிலும் குடும்பத்தை பிரிந்து இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஊரடங்கு அறிவிக்கும் முன்பே எனது மனைவி மான்யதா மற்றும் குழந்தைகள் துபாய்க்கு சென்று விட்டதால், இந்தியா திரும்ப முடியவில்லை. 

    எனது வாழ்க்கையில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களால் குடும்பத்தை விட்டு ஏற்கனவே விலகி இருந்தேன். இப்போது ஊரடங்கு சமயத்திலும் மீண்டும் அவர்களை பிரிந்து இருக்கிறேன். அவர்களோடு சேர்ந்து இருக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது. வீடியோ அழைப்புகள் மூலம் அவர்களை என்னால் பார்க்கவும், பேசவும் முடிகிறது.

    சஞ்சய்தத்

    ஆனால் கம்ப்யூட்டரில் பார்ப்பதற்கும், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து நேரத்தை கழிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஒரு தந்தையாக, கணவனாக அவர்கள் எப்படி இருக்கிறார்களோ? என்ற கவலை எனக்கு இருக்கிறது. ஊரடங்கு முடியும் நாட்களை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை ஏற்கனவே அனுபவித்து விட்டேன்.

    இப்போது இயற்கை இன்னொரு முறை பிரிவை கற்றுக்கொடுக்கிறது. நாம் நேசித்தவர்களுடன் சேர்ந்து வாழும்போது கழித்த நாட்கள் எவ்வளவு மதிப்பு மிக்கவை என்பதை இந்த மாதிரி நாட்களில்தான் உணர முடிகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, தமிழ் சினிமா தொழிலாளர்களை புறக்கணித்ததால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதி திரட்டி வருகிறது. சினிமா தொழிலாளர்கள் சங்கத்தில் 25 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர் என்றும், அவர்களுக்கு உதவ ரூ.3.75 கோடி தேவைப்படுகிறது என்றும், எனவே நடிகர்-நடிகைகள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இதனை ஏற்று நடிகர்கள் பலர் நிதி வழங்கி உள்ளனர். இதுவரை ரூ.2 கோடியே 45 லட்சம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடிகை நயன்தாராவும் நிதி கொடுத்துள்ளார். மும்பை நடிகையான காஜல் அகர்வால் தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும், தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கி உள்ளார். ஆனால் நடிகை தமன்னா தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் ரூ.3 லட்சம் நன்கொடை அளித்துள்ளார். 

    தமன்னா

    தமிழ் சினிமா தொழிலாளர்கள் சங்கத்துக்கு நிதி அளிக்கவில்லை. இது ‘பெப்சி’ தொழிற்சங்கத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிக தமிழ் படங்களில் நடித்துள்ள தமன்னா, தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு மட்டும் நிதி கொடுத்து விட்டு தமிழ் திரைப்பட தொழிலாளர்களை புறக்கணித்து இருப்பது சரியல்ல என்று தெரிவித்தனர்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் வித்யாபாலன் முன்னணி நடிகர்களால் ஓரங்கட்டப்பட்டேன் என்று பேட்டியளித்துள்ளார்.
    பிரபல இந்தி நடிகை வித்யா பாலன். சஞ்சய் தத், சைஃப் அலிகான் நடித்த பரினீதா என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர். சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையான டர்ட்டி பிக்சர், கஹானி, துமாரி சுலு, பா, மிஷன் மங்கள் உட்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார்.

    ஆரம்பத்தில் தமிழில் நடிக்க வந்த அவர், ஒரு சில காரணங்களால் நிராகரிக்கப்பட்டார். இதனால், கோபத்தில் தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த வித்யாபாலன், மலையாள என்.டி.ஆர். பயோபிக்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்திருந்தார். 

    பின்னர் பல வருடங்களுக்குப் பிறகு தமிழில் அஜித் ஜோடியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். சல்மான் கான் , அக்ஷய் குமார் படங்களில் வித்யா நடித்திருந்தாலும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. 

    இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் கேட்டபோது முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க வைக்க, என்னை யாரும் யோசிக்கவில்லை என்பதை ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். அவர்களால் ஓரங்கட்டப்படுவதாக, நிராகரிக்கப்படுவதாக நினைத்தேன். ஆனால், அதற்காக வருத்தப்படவில்லை. நான் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க முடிவு செய்தேன். சினிமாவுக்கு அதுதான் ஆத்மா. அதுபோன்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினேன். அந்தப் படங்கள் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன என்று கூறியுள்ளார்.
    இசையமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
    தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களையும் சைந்தவி பாடியிருக்கிறார்.

    இந்நிலையில் ஜி பிரகாஷ் சைந்தவி தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    பாகுபலி படம் மூலம் மிகவும் பிரபலமான இயக்குனர் ராஜமௌலி நடிகர்கள் ராம்சரண் மட்டும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் சவால் விடுத்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த  நேரத்தில் சமைப்பது, வீட்டு வேலை செய்வது என நேரத்தை செலவிடும் பிரபலங்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கி உள்ளார். பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த சவாலை ஏற்குமாறு பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலிக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த சவாலை ஏற்று இயக்குனர் ராஜமவுலி வீட்டு வேலை செய்வது போல வீடியோ எடுத்து அதை பகிர்ந்துள்ளார்.

    மேலும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணுக்கு இந்த சவாலை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ராஜமவுலி. 
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பாணியை மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் பின்பற்றி அசத்தி வருகிறார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிப்பதையும் தாண்டி பைக் ரேஸ் கார் ரேஸ் என கலந்துகொண்டு தனித் திறமையை நிரூபித்து வருகிறார்.

    பைக்ரேஸ் ஓட்டுவதற்கான முயற்சியில் மாளவிகா மோகனன்

    தற்போது இவரது பாணியில் மாஸ்டர் படத்தின் கதாநாயகி நடிகை மாளவிகா மோகனன் பின்பற்றி வருகிறார்.

    ஏற்கனவே புகைப்படம் பிடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர் தற்போது அஜித் பாணியில் பைக்ரேஸ் ஓட்டுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார். பைக் ஓட்டும் வீடியோவையும் புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் மாளவிகா பதிவு செய்திருக்கிறார்.
    தன்னுடைய தம்பி செய்த காரியத்தால் தற்போது வருத்தத்தில் இருப்பதாக நடிகை ரகுல் பிரீத் சிங் கூறியுள்ளார்
    தன்னுடைய தம்பியால்தான் இப்போதும் நான் சிங்கிளாக இருக்கிறேன் என்றார், ரகுல் பிரீத் சிங். இதுகுறித்து அவர் கூறும்போது, நான்பள்ளியில் படிக்கும் போது, எனது தம்பி அமனும் அதே பள்ளியில்தான் படித்தான். அப்போது யாரோ ஒரு பையனிடம் பேசினேன் என்றால், உடனே வீட்டில் சென்று அப்பா, அம்மாவிடம் சொல்லிவிடுவான்.

    நட்புக்கு கூட எந்த பையனுடனும் பேச விட மாட்டான். ஒருமுறை பள்ளியில் நானும், இரண்டு மாணவிகளும் நின்று ஒரு பையனுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது என் கையில் ஸ்நாக்ஸ் இருந்தது. அதை பார்த்துவிட்ட தம்பி, பெற்றோரிடம், " ரகுல் ஒரு பையனுக்கு ஸ்நாக்ஸ் ஊட்டி விட்டு கொண்டிருந்தாள் ' என்று சொல்லிவிட்டான். என் தம்பியின் இதுபோன்ற செயல்களால்தான் நான் யார் காதல் வலையிலும் விழவில்லை. காதல் என்றால் ஒதுங்கிவிடுகிறேன் ' என்றார்.
    ×