என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
    நடிகர் அஜித்தின் 59-வது படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், 2-ஆம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றது. அஜித் வில்லன்களுடன் மோதும் சண்டைக் காட்சியை படமாக்கினர்.

    அஜித் பைக்கில் வேகமாக வந்து வில்லன்களுடன் மோதுவது போன்ற காட்சியை படமாக்கிய போது, எதிர்பாராத விதமாக அஜித்தின் பைக் கவிழ்ந்தது. இதில் அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர், உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து சிறிது நேரம் ஓய்வெடுத்த அஜித், மீண்டும் அந்த காட்சியில் நடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பினார்.
    பீகாரை சேர்ந்த யூ டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
    மும்பை:

    பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் எப்.எப். நியூஸ் என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களைத் தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற தகவல்களைக் கூறி வந்தார்.

    சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி நாடு விட்டு தப்பிக்க பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் உதவியதாகவும், சுஷாந்தின் மரணம் குறித்து முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரி ஆதித்ய தாக்கரே ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எம்.எஸ்.தோனி படத்தில் நடிக்க சுஷாந்த் சிங் தேர்வானதில் அக்‌ஷய் குமாருக்கு ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என்றும் ரஷித் சித்திக் தனது சேனலில் கூறினார்.

    இவ்வாறு பரபரப்பு செய்தியை வெளியிட்டதால் அவரது யூ டியூப் சேனலை அதிகம் பேர் பார்க்கத் தொடங்கினர். இதனால் அவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், தன்னை பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பியதாக ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என ரஷித் சித்திக்கிற்கு பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் சட்டநிறுவனம் மூலமாக அந்த நோட்டீசை அனுப்பி உள்ளார்.

    அந்த நோட்டீசில், ரஷித் சித்திக்கின் போலி மற்றும் அவதூறு வீடியோக்களால் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம், மன அழுத்தம் போன்றவற்றால் ரூ.500 கோடி அளவுக்கு அக்‌ஷய் குமார் இழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    இதேபோல ரஷித் சித்திக் தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 3 நாட்களுக்கு நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிர மந்திரி ஆதித்ய தாக்கரே மற்றும் மும்பை போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ரஷித் சித்திக் மீது ஏற்கனவே மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவின் தந்தை மரணம் குறித்து வெளியாகி வரும் செய்திகளுக்கு அவரது உறவினர் விளக்கம் அளித்துள்ளார்.
    கடந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடிகையாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் லாஸ்லியாவின் தந்தை சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில் அவரது தந்தை மரியநேசன் கனடாவில் பணியாற்றி வந்தார். அவர் இறந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    தந்தையுடன் லாஸ்லியா

    இதனிடையே சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்பி வருகிறதை காணமுடிகிறது. இதனை அறிந்த லாஸ்லியாவின் நெருங்கிய உறவினர் ஒருவர் தற்போது உண்மைகளை உடைத்துள்ளார். அவர் கூறும் பொழுது "லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உடலை இலங்கை கொண்டு வர இரண்டு வாரங்கள் ஆகும். கொரோனா காரணமாக இந்த கால தாமதம் தவிர்க்க முடியாதது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவரது இறப்பு இயற்கையானது. தயவு செய்து  பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
    சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் அகடு திரைப்படம் பாலியல் குற்றங்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளது.
    சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் அகடு. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார்.

    இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறத்தல்கள், உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இருப்பினும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை.

    இயக்குனருடன் ஜான் விஜய்

    பாலியல் குற்றங்களுக்கு எதிராக அகடு திரைப்படம் உருவாகி வருகிறது. கொடைக்கானலுக்கு நான்கு இளைஞர்கள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு சுற்றுலா வந்த 13 வயது சிறுமிக்கு நான்கு இளைஞர்களால் எதிர்பாராத ஒரு கொடூர செயல் நடைபெறுகிறது. அச்சிறுமிக்கு என்ன நடந்திருக்குமோ என்று எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

    சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவராஜ்சிங்காரவேலு இணை தயாரிப்பு செய்திருக்கிறார். ஜோகன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார். அகடு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இம்மாதம் வெளியாக இருக்கிறது.
    உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் என்றாவது ஒரு நாள் படத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்கள்.
    பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் ‘என்றாவது ஒரு நாள்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம்பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி.

    எதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த் இதில் நாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் 'சேதுபதி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகவன் நடித்துள்ளார்.

    வெற்றிமாறனுடன் படக்குழுவினர்

    'தி தியேட்டர் பீப்பிள்' என்ற நிறுவனம் இந்தப் படத்தின் மூலம் படங்கள் தயாரிப்பில் இறங்குகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டராக மு.காசி விஸ்வநாதன் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

    இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் அஞ்சலி, கன்னட சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    'கோலி சோடா' மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார்.

    ‘கடுகு’ ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் சிவராஜ் குமார் ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா', 'கடுகு' போன்ற படங்களைத்  தயாரித்த ரஃப்நோட் நிறுவனம்,  கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

    படக்குழுவினர்

    கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார்.

    இப்படத்தின் பூஜை பெங்களூரில் இன்று நடந்தது. வரும் 23ஆம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்கள் பெங்களூரில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. 
    ரஜினி, விஜய்யுடன் நடித்த மாளவிகா மோகனன், தனுஷுடன் சேர அதுதான் காரணம் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
    பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்த மாளவிகா மோகனன், தற்போது விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

    ஏற்கனவே இரண்டு பாலிவுட் படங்களிலும் ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த மாளவிகா மோகனன், சமீபத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 43வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு காரணம் கொரோனா தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் கொரோனா பாதிப்புக்கு முன்பே படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் அந்த நேரத்தில் தான் மூன்று படங்களில் கமிட் ஆகியிருந்ததால் கைவசம் அவர்கள் கேட்ட தேதி இல்லை என்றும் கூறினார்.

    மாளவிகா மோகனன், தனுஷ்,

    ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தான் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது. இதனை அடுத்து மீண்டும் தனுஷ் படக்குழுவினர் மீண்டும் என்னிடம் அணுகிய போது தன்னிடம் தேதி இருந்ததாகவும், அதன்பின்னரே ஒப்பந்தமானேன் என்றும் கூறியுள்ளார். எனவே தனுஷ் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு கொரோனா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
    புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தவசியை, நடிகர் ரோபோ சங்கர் நேரில் சந்தித்து உதவி செய்து இருக்கிறார்.
    புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசி தன்னுடைய மருத்துவ செலவிற்கு உதவி புரியுமாறு கோரிக்கை வைத்து இருந்த நிலையில், நடிகர் ரோபோ ஷங்கர் இன்று மதுரைக்குச் சென்று நடிகர் தவசியை நேரில் சந்தித்து பேசினார். மேலும் அவரது கவலையைப் போக்கும் வகையில் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் மருத்துவ செலவிற்கு உதவித்தொகையும் செய்திருக்கிறார்.  

    புற்றுநோயின் தாக்கத்தால் உருக்குலைந்து போயிருந்த நடிகர் தவசிக்கு நம்பிக்கையூட்டும் விதத்தில் அந்த மீசையை நாங்க பார்க்கணும்  என்று  ரோபோ சங்கர் பேசியதும் நான் மீண்டு வருவேன் என்று தவசி பேசிய வீடியோவும் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

    ரோபோ சங்கர் - தவசி

    இதற்கு முன்னதாக நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன், சூரி, விஜய் சேதுபதி, சவுந்தரராஜா ஆகியோர் உதவி செய்து இருக்கிறார்கள்.
    ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இயக்கத்தில் நமீதா, சோனியா அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மியா’ படத்தின் முன்னோட்டம்.
    இ ஸ்டூடியோ சார்பில் மின்ஹாஜ் தயாரிக்கும் படம் ‘மியா’. இதை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்குபின் இதில் மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் சோனியா அகர்வால், வீரா, பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெஜி மோன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவி சுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை வினீத் கவனித்துள்ளார்.  

    படத்தை பற்றி இயக்குனர்கள் கூறியதாவது, ‘மியா’ மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது. கணவன் மனைவி பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சினையை மையமாக கொண்டது தான் ‘மியா’ படத்தின் கதை. 

    நமீதா

    கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதற்கிடையில் பேய் வீட்டில் மாட்டிக்கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் எடுத்துள்ளோம்” என்றார்.
    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா, ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    சினிமாவில் நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபுதேவா தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால், இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன் போன்றோர் நடித்த படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்தார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது. 

    நயன்தாராவை திருமணம் செய்ய முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும் திருமணம் நடக்கவில்லை. காதல் முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். தற்போது பிரபுதேவாவுக்கு 47 வயது ஆகிறது. 

    பிரபுதேவா

    குடும்பத்தினர் பிரபுதேவாவிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் அவர் உறவுக்கார பெண்ணை பிரபுதேவா 2-வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.

    இந்நிலையில், பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணப்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்தபோது அந்த பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரபுதேவா இதனை உறுதிப்படுத்தவில்லை.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
    நடிகர் சிம்புவின் புதிய படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதன் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு பிடித்திருப்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றது. இதனால் பிரச்சினை எழுந்தது. அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட பாம்பாக இருந்தாலும் திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்த, சித்தரிக்க விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் 'ஈஸ்வரன்' படக்குழுவினர் இதற்கான அனுமதியைப் பெறாததால், வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.

    விலங்குகள் நல வாரியம் அனுப்பிய நோட்டீஸ்

    இது தொடர்பாக விலங்குகள் நல வாரியம், தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், " 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லரில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பினை, இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (என்.ஓ.சி) பெறாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.

    இது விதிமீறலாகும். எனவே, உடனடியாக இந்த டிரெய்லர் மற்றும் போஸ்டரை பகிர்வதை நிறுத்த வேண்டும். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள், ஏன் உரிய அனுமதி பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை படக்குழு அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் ஈஸ்வரன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    சூர்யாவை அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் வஸந்த், சூரரைப் போற்று படத்தை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
    இயக்குனர் வஸந்த், 1999ஆம் ஆண்டு தனது ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தின் மூலம் சூர்யாவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் திரையுலகில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்த சூர்யா, தனது கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 

    சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சூர்யாவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்த இயக்குனர் வஸந்த், சூரரைப் போற்று படத்தை பாராட்டி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

    சூர்யாவுக்கு வஸந்த் எழுதிய கடிதம்

    அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

    ''அன்புள்ள சூர்யாவுக்கு,

    இந்தப் பாராட்டு கடிதம் உனக்கு இல்லை. நெடுமாறன் ராஜாங்கத்திற்க்கு. முதல் ஃபிரேமிலிருந்து கடைசி ஃபிரேம் வரை உன் ஆட்சிதான். ஃபிரேமுக்கு ஃபிரேம், காட்சிக்கு காட்சிக்கு உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறாய். தமிழ்த் திரையுலகில் என் மூலம் நிகழ்ந்த உன் அறிமுகத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நீயாகவே முயன்று கற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக உன் நடிப்பை இதுவரை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது, இதுதான் உன் உச்சம்! இப்போதைக்கு!! நெடுமாறன் ராஜாங்கமாக நீ நடிக்கவே இல்லை, ரத்தமும் சதையுமாக உணர்ந்து வாழ்ந்திருக்கிறாய்.

    முதல் காட்சியின் ஆரம்பம் கூட பரவாயில்லை. இறுதியில் நீ வென்ற பிறகு கூட உன் முகத்தில் சிரிப்பு இல்லை. அந்தத் தீவிரத்தன்மை, அந்த சாதிக்க வேண்டும் என்ற வெறி உன் கண்களில் இறுதிவரை தெரிகிறது. கணல் மணக்கும் பூக்களாக... ஒவ்வொரு காட்சியிலும் நெடுமாறன் தோற்க்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஜெயிக்கிறது உன் நடிப்பு. எவ்வளவு இயல்பாக அதுவும் இவ்வளவு இயல்பாக, எதார்த்தமாக துளி மிகையில்லாமல் ஒரு கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக உயிரூட்டியிருக்கிறாய்.

    உன் வெற்றியின் பெருமிதத்தில் நான் ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டு சொல்கிறேன் “HATS OFF TO YOU MY DEAR SURIYA" என்னை விட யாருக்கு மகிழ்ச்சி இருந்துவிட முடியும். ஏனென்றால் என் விதை நீ, என் விருட்சம் நீ, எனக்கு எத்தனை பெருமிதம் என்று எழுதி முடியாது என் உச்சி முகந்து மகிழ்கிறேன்''. இவ்வாறு இயக்குனர் வஸந்த் குறிப்பிட்டுள்ளார்.
    ×