என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை அனுஷ்கா திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
    தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. பாகுபலி படத்தின் மூலம் தேவசேனாவாய் உலகளாவிய பெருமையைப் பெற்றார்.

    தற்போது அனுஷ்கா பெண் மையக் கதாபாத்திரங்களில் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் கடைசியாக அனுஷ்கா நடிப்பில் வெளியான சைலன்ஸ் படமும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.

    அனுஷ்கா
     
    தற்போது வரை அனுஷ்கா தனது அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அனுஷ்காவிற்கு சமீபத்தில் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று படங்கள் வந்ததாகவும், ஆனால் அந்தப் படங்களில் நடிக்க ஆர்வம் காண்பிக்காத அனுஷ்கா நிராகரித்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.

    அனுஷ்கா வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது நண்பர்கள் படத்திலோ அல்லது தனக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவனங்களுடன் மட்டுமே அனுஷ்கா பணிபுரிய விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகர் சிலம்பரசன், தலையில் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
    சிலம்பரசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப் படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.

    தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் சிலம்பரசன். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். தலையில் புல்லட் பாய்ந்து ரத்த காயங்களுடன் சிம்பு இருக்கும் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    சிலம்பரசன்

    வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா எஸ் ஏ சந்திரசேகர் மனோஜ் பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர் தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில் தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, இழிவுபடுத்தியதாகவும் கூறியிருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார். 

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
    சூர்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் சூரரைப்போற்று படத்தைப்பற்றி கேப்டன் கோபிநாத் நண்பர்களுக்கு ஏமாற்றம் என்று கூறியிருக்கிறார்.
    சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சூப்பரான ஒரு படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

    இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவர் எழுதிய புத்தகத்தை வைத்து இப்படம் உருவாக்கப் பட்டது. கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். ரியல் லைப் நெடுமாறன் கேப்டன் கோபிநாத் சூரரைப்போற்று படத்தை பற்றி நெகிழ்ச்சியாக கடந்த வாரம் எழுதி இருந்தார். 

    கோபிநாத் பதிவு

    இந்நிலையில் அவர் இப்போது மேலும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "சூரரை போற்று படம் எனது வாழ்க்கையில் நடந்தவையாக சிம்பிளி பிளை புத்தகத்தில் கூறிப்பட்ட சம்பவங்களை அப்படியே காட்டவில்லையே என்று சில நண்பர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நான் அவர்களிடம் சொன்னேன் இது சினிமாவுக்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ளது, ஆனால் 'மசாலா'வுக்கு கீழே நல்ல இறைச்சி இருக்கிறது!" என்று கூறியுள்ளார்.
    அமுதவணன் இயக்கத்தில் ஆதில், செல்லா, பவாஸ், நிகாரிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட்டா படத்தின் விமர்சனம்.
    மலை கிராமத்தில் மனைவி சஜி  சுபர்ணா, மகன் பவாஸ், மகள் நிகாரிகா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் செல்லா. வறுமையில் குடும்பத்தை நடத்தி வரும் செல்லா தன் பிள்ளைகள் இந்த சமுதாயத்தில் சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். 

    ஆனால், வறுமையும் கடன் பிரச்சினையும் ஆதிலை வாட்டுகிறது. இந்நிலையில் ஒரு விபத்தில் செல்லா உயிரிழக்கிறார். இதன்பின் செல்லாவை நம்பியிருந்த குடும்பம், கடன் பிரச்சினையை எப்படி தீர்த்தார்கள்? செல்லாவின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    கோட்டா விமர்சனம்

    படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் செல்லா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நேர்மையாகவும், சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற இவரது எண்ணம் ரசிக்க வைக்கிறது. மனைவியாக நடித்திருக்கும் சஜி சுபர்ணா எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

    மகனாக வரும் பவாசின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். தந்தை இறந்தவுடன் கடன் சுமையை அடைக்க போராடுவதும், திறமையை வெளிக்காட்ட போராடுவதுமாக நடித்து கைதட்டல் பெறுகிறார். உண்மையாக திறமை வைத்திருக்கும் பவாஸ், நடிப்பில் நல்ல இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

    கோட்டா விமர்சனம்

    மகளாக நடித்திருக்கும் நிகாரிகா, அலட்டல் இல்லாமல் அழகாக நடித்திருக்கிறார். தந்தையிடம் ஷூ கேட்கும்போதும், பள்ளியில் ஆசிரியையிடம் பயப்படும் போதும் பரிதவிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

    சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். இப்படம் வெளியாகும் முன்பே சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. திறமை இருந்தால் எங்கும் ஜெயிக்கலாம் என்று கதைக்கு ஏற்றாற்போல் இயக்குனரும் ஜெயிப்பார் என்று நம்பலாம். ஒரு சில இடங்களில் நடிகர்களிடம் செயற்கையான நடிப்பு தெரிந்தது. அதை சரி செய்திருக்கலாம். குழந்தைகளிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார்.

    கோட்டா விமர்சனம்

    ஆலன் செபஸ்டியன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு ஒன்றி பயணித்திருக்கிறது. அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.

    மொத்தத்தில் 'கோட்டா' தனித்திறமை.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் தனது பிறந்தநாளை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.
    நடிகர் அருண் விஜய் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். திரையுலகப் பிரபலங்களும் அவரது ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்.

    பெரிய வெற்றிக்காக காத்திருந்த அருண் விஜய்க்கு ‘என்னை அறிந்தால்’ ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. அதிலிருந்து மீண்டும் அவரது சினிமா வாழ்க்கை சூடுபிடிக்க ஆரம்பித்தது. பின்னர் குற்றம் 23, தடம், மாஃபியா உள்ளிட்ட படங்கள் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்தினார் அருண் விஜய்.

    தற்போது தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடிக்க அயராது உழைத்து வருகிறார். பொதுவாக அருண் விஜய் தினமும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். உடற்பயிற்சி செய்வது, தனது செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது உள்ளிட்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வார்.

    குழந்தைகளுடன் அருண்விஜய்

    தற்போது தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய புகைப்படங்களை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.

    “இவர்களின் புன்னகையைப் பார்ப்பது மற்றும் இவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதே எனது பிறந்தநாளுக்கு நான் விரும்பும் சிறந்த தொடக்கமாகும். இது என் இதயத்தை முழுமையாக்குகிறது. உங்கள் அருமையான வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு அனைவருக்கும் நன்றி … எப்போதும் போல் தாழ்மையுடன்” என்று தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் பாரதிராஜா, மன்றாடிகேட்கிறோம் மனதுவைங்கள் என்று பேரறிவாளன் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ராப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் வைரலானதை அடுத்து 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    சினிமா பிரபலங்கள் பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என நடிகர்கள் விஜய் சேதுபதி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விஜய் ஆண்டனி, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்க விரும்பவில்லை.. ஆளுனர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும், தமிழக அரசு, அனைத்துக்கட்சித் தலைவர்கள், தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. 

    பாரதிராஜா அறிக்கை

    தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக, ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி ஒரு விடியற்காலை பொழுதுக்காக கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது.. மதிப்புக்குரிய ஆளுனர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடிகேட்கிறோம் மனதுவைங்கள்.. உடனே விடுதலை தாருங்கள். 

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என் பெயர் ஆனந்தன்’ படத்தின் முன்னோட்டம்.
    கனகா வெங்கடேசன், சவீதா வெங்கடேசனின் சவீதா சினி ஆர்ட்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணப்பாவின் காவ்யா புரொடக்சன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘என் பெயர் ஆனந்தன்'.  இந்தப்படத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ‘6 அத்தியாயம்’ படத்தில் இடம்பெற்ற ஆறு அத்தியாயங்களில் ஒன்றான ‘சித்திரம் கொல்லுதடி’ படத்தை இயக்கியவர். இவரது இரண்டாம் படம் தான் ‘என் பெயர் ஆனந்தன்’.

    சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்க, அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் அடுத்த சாட்டை, நாடோடிகள்-2 ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர். மேலும் தீபக் பரமேஷ், அரவிந்த் ராஜகோபால் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

    அதுல்யா

    படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன் கூறியதாவது: இதுவரை யாருமே பேசியிராத ஒரு சமூக பிரச்சனையை கையிலெடுத்து துணிச்சலாக இந்தப்படம் பேசியுள்ளது. படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம், இப்படியெல்லாம் கூட மக்கள் இருக்கிறார்களா, இவர்களுக்கு இப்படியெல்லாம் கூட பிரச்சனைகள் இருக்கிறதா என இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தும்

    செம்பல் சர்வதேச திரைப்பட விழா, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச திரைப்பட விழா மற்றும் தென் கொரியாவில் நடைபெற்ற SEE சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு மூன்றுமுறை சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் நியூயார்க்கில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான ஸ்பெஷல் ஜூரி விருதையும் பெற்றது.

    திரைப்பட விழாக்களில் இந்தப்படத்தை பார்த்த பலரும் இதுவரை பார்த்திராத, ஒரு வித்தியாசமான அதேசமயம் ஜனரஞ்சகமாக ரசிக்க கூடிய விஷயங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறினார்கள்.
    2007ம் ஆண்டு சாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் மிருகம், தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.
    சாமி இயக்கத்தில் ஆதி, பத்மபிரியா ஜோடியாக நடித்து 2007-ல் திரைக்கு வந்த படம் மிருகம். போதை, பெண்களுடன் தகாத உறவு, ரவுடித்தனம் என்று மிருகத்தனமாக திரியும் இளைஞன் எய்ட்ஸ் நோயில் சிக்கி எப்படி சீரழிகிறான் என்பது கதை. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் பார்த்தது. தற்போது மிருகம் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். 

    மிருகம் 2 பட பூஜையில் ஆர்.கே.சுரேஷ், சாமி

    இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறும்போது, “மிருகம் படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிப்பது பெருமையாக உள்ளது. திரைக்கதை முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்கும். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும்” என்றார். இவர் ஏற்கனவே தாரை தப்பட்டை, மருது, பில்லா பாண்டி, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என சினிமா பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ராப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் வைரலானதை அடுத்து 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

    சினிமா பிரபலங்கள் பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு:

    விஜய் சேதுபதி 

    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழக ஆளுநர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். அற்புதம்மாள் அவர்களின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி’ என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

    கார்த்திக் சுப்புராஜ்

    ஒரு குற்றமும் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்... பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    பார்த்திபன்

    அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

    விஜய் ஆண்டனி

    நிரபராதியான சகோதிரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

    பிரகாஷ்ராஜ்

    தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக  நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்ப வேண்டியிருக்கிறது என பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.
    இதய நோயால் போராடிய குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு சினேகா - பிரசன்னா தம்பதி உதவி உள்ளனர்.
    நடிகர் பிரசன்னா சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்துக் கொண்டு இருந்தபோது ஒரு தம்பதியர் அவரை சந்தித்தனர். அவர்களை பார்த்ததும் தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்துள்ளனர் என்று பிரசன்னா கருதினார். அருகே நிற்க வைத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். திடீரென்று அந்த தம்பதியினர் அழுதனர். 

    தங்கள் குழந்தைக்கு இதய நோய் உள்ளது என்றும் இருதய அறுவை சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கூறினர். உடனே குழந்தையின் இருதய அறுவை சிகிச்சை தொடர்பான விவரங்களை பிரசன்னா பெற்றுக்கொண்டு அவர்கள் சொன்னது உண்மைதானா என்று தனக்கு தெரிந்த மருத்துவர்கள் மூலம் விசாரித்தார். 

    சினேகா, பிரசன்னா

    அனைத்தும் உண்மைதான் என்று தெரிய வந்ததும் அந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு பிரசன்னாவும் அவரது மனைவியும் நடிகையுமான சினேகாவும் இணைந்து ரூ.1.5 லட்சம் நிதி உதவி வழங்கினர். இருவருக்கும் குழந்தையின் பெற்றோர் நெகிழ்ச்சியோடு நன்றி கூறினர்.
    ரஜினிகாந்த் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
    ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாரானார்கள். ஆனால் தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கொரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் படப்பிடிப்பை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

    அண்ணாத்த பட போஸ்டர்


    ரஜினிக்கு அதிகமாக கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு அளிக்க உள்ளனர். ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
    ×