என் மலர்
சினிமா செய்திகள்
ஜிம்னாஸ்டிக் வீரர் கமல் கோவின்ராஜ் தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள புறநகர் படத்தின் விமர்சனம்.
‘சாதிப் பிரச்சனையால் சமுதாயத்தில் வாழமுடியாத நாயகன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி புறநகரில் தஞ்சமடைகிறார். அந்த இடத்திலும் சமூகம் அவரை வாழவிடமால் செய்கிறது. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள நாயகன் எத்தகைய முயற்சிகளை எடுக்கிறார் என்பதை கமர்ஷியலாக சொல்லியுள்ள படம்தான் ‘புறநகர்’.
நாயகன் கமல் கோவின்ராஜ், ஜிம்னாஸ்டிக் வீரரான இவர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சி என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகிகளாக வரும் அஸ்வினி சந்திரசேகர், சுகன்யா ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
வில்லனாக வரும் அனல் அண்ணாமலை கவனிக்க வைக்கிறார். தேனி முருகன், கதிரவகண்ணன், செல்வம், தயாளன், ரகு, கணேஷ், தாம்பரம் சிங்கம் ஆகியோர் நேர்த்தியாக நடித்துள்ளனர்.

இலங்கை தமிழர்களின் துயரத்தை சொல்லும் எல்லாளன் படத்தை இயக்கிய மின்னல் முருகன் இப்படத்தை இயக்கி உள்ளார். சாதிக் கொடுமைகள் பற்றி சொல்ல முயற்சித்திருக்கும் அவர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். பல இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது படத்திற்கு பின்னடைவு.
இந்திரஜித் இசையில் பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை. பின்னணி இசையும் சுமார் தான். விஜய் திருமூலத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘புறநகர்’ சுவாரஸ்யம் குறைவு.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு தங்க காசு மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, பி.எல்.தேனப்பன் ஆகிய 3 பேர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் பி.எல்.தேனப்பன், எந்த அணியையும் சேராமல் தனியாகவே களம் இறங்கியுள்ளார்.
இந்த தேர்தலில் 26 பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். இன்றைய தேர்தலில் 1303 பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 1050 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர். நடிகை குஷ்பு, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர், சமுத்திரக்கனி உள்ளிட்ட திரையுலக முக்கிய பிரமுகர்களும் இன்று ஓட்டுப்போட்டனர்.
இதற்கு முன்பு நடைபெற்றுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த சில மணி நேரங்களிலேயே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் இன்று பதிவான ஓட்டுகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதற்கிடையே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பணம் மற்றும் தங்க காசுகள் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக சினிமா தயாரிப்பாளரும், இயக்குனரும் நடிகருமான பிரவீன் காந்த் அளித்த பேட்டி வருமாறு: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு செய்ய சிலர் திட்டமிட்டுள்ளனர். ஒரு கவரில் ரூ.4 ஆயிரம் பணம் வைத்து ஒருவர் கொடுத்துள்ளார். தங்க காசும் கொடுத்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் தேர்தல் நேர்மையாக நடைபெறுவதில் பாதிப்பு ஏற்படும். எனவே பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.வி.சேகர் கூறுகையில், “தமிழக சட்டமன்ற தேர்தலை விட பரபரப்பாக தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. எல்.இ.டி. டி.வி. ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் தங்க காசுகள் கொடுப்பதாகவும் கூறுகிறார்கள். சட்டமன்ற தேர்தலின் போது ஆரத்தி தட்டில் 10 ரூபாய் கூட போடாமல் வெற்றி பெற்றவன் நான்.
எனக்கு இவை எதுவுமே தேவை இல்லை. யார் ஜெயித்து வந்தாலும் தயாரிப்பாளர் சங்க நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும். சங்கத்தில் ரூ.13 கோடி ஊழல் நடந்துள்ளது. யார் வெற்றி பெற்று வந்தாலும் அதனை வெளிக்கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது.
சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்திருப்பவர் நடிகை சனாகான். இவர் ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’, ‘அயோக்யா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை சனாகானும், மெல்வின் லூயிஸ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதன் பிறகு சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்த சனாகான், பொது சேவையில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். திரை உலகை சேர்ந்தவர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் சனாகான்- தொழில் அதிபர் முப்தி அனாஸ் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர். சூரத் நகரில் வைத்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. ஆனால் தனக்கு நடைபெற்ற திருமணம் பற்றி சனாகான் இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ துல்கர் சல்மான் என தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உயர்ந்துள்ளார்.

இந்தநிலையில் சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் தங்களுக்கு மிகவும் பிடித்த மலையாள நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மம்முட்டி, மோகன்லால் படங்களை தவறாமல் பார்ப்பேன் இருந்தாலும், துல்கர் சல்மான் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஒவ்வொரு படத்திலும் துல்கர் சல்மானின் நடிப்பும், அவரது கதைகளை தேர்ந்தெடுக்கும் விதமும் என்னை ஆச்சர்யப்படுத்துகிறது. அவர் நடித்து தோல்வியடைந்த படங்களை கவனித்தால் கூட, அதில் தன்னுடைய நூறு சதவீத பங்களிப்பை சரியாக கொடுத்திருப்பார் துல்கர் என சுதா கொங்கரா கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அவரின் பிஆர்ஓ அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அவர், ரஜினி நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். யாரோ விஷமிகள் இவ்வாறு வதந்தியை கிளப்பி விட்டிருப்பதாக ரியாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். எஞ்சியுள்ள படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையான ராஷ்மிகாவுக்கு கூகுள் மகுடம் சூட்டியுள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான ‘கிரிக்பார்ட்டி’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படங்கள் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றன. இதையடுத்து தமிழ், தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா.
இந்தநிலையில் இந்த 2020-ம் ஆண்டு தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து தேடவைத்தவர் என்கிற மகுடத்தை ராஷ்மிகாவுக்கு கூகுள் வழங்கியுள்ளது. கூகுள் தேடுபொறியில் ‘National Crush of India 2020’ என தேடினால், ராஷ்மிகாவின் பெயரும், அவர் குறித்த விபரங்களையும் காட்டுகிறது கூகுள். இந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட பாலிவுட் நடிகைகளைக் கூட, கூகுள் தேடலில் பின்னுக்குத்தள்ளி ராஷ்மிகா இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

நடிகை ராஷ்மிகா அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. இதுதவிர தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதி உள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தை, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்ற இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியிருந்தார். மேலும், இதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம் அளித்திருந்தார்.
இதனிடையே கடந்த நவம்பர் 5-ந் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.ஏ.சி கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிய வேண்டாம் என எஸ்.ஏ.சி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். தனது பெயரை பயன்படுத்த விஜய் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது தந்தை எஸ்.ஏ.சி கட்சி பணியை தற்காலிகமாக கைவிட்டதாக கூறப்படுகிறது.
சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெறுகிறது.
சென்னை:
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சென்னையில் இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறுகிறது. அடையாறு எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் தேர்தல் நடைபெறுகிறது.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ஆர் அணி மற்றும் தேனாண்டாள் முரளி அணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர தலைவர் பதவிக்கு பி.எல்.தேனப்பன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். துணைத்தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கும் பலர் களத்தில் உள்ளனர். இந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க 1303 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் உள்ளேயும், வெளியேயும் செல்ல இருக்கிறார்கள்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற சுசித்ரா குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பகல் நிலவு தொடரில் நடித்த அசிம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் ஹைரா, மனோ, அஜ்மல் நடிப்பில் வெளியாகி இருக்கும் நுங்கம்பாக்கம் படத்தின் விமர்சனம்.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் அஜ்மல். அந்த சமயத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நாயகி ஹைரா வெட்டி கொலை செய்யப்படுகிறார். இது குறித்த தகவல் முதலில் ரெயில்வே காவல்துறைக்கு தெரிவிக்கப்படுகிறது. கொலை நடந்து 3 மணி நேரம் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், இந்த வழக்கு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு மாற்றப்படுகிறது. அஜ்மல் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்.


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லாததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார் அஜ்மல். ஒருகட்டத்தில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தின் சுற்றியுள்ள பகுதியில் உள்ள
சிசிடிவியை ஆராய்ந்து பார்த்ததில் கொலை நடந்த சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் ஓடுவதை காணும் அஜ்மலுக்கு அவர் மீது சந்தேகம் எழுகிறது.

இதையடுத்து அந்த நபரை தேடிப்பிடித்து விசாரணையை தொடங்குகிறார் அஜ்மல். சந்தேகத்தின் பேரில் ஹீரோ மனோவிடம் விசாரணை மேற்கொள்கிறார் அஜ்மல். இதையடுத்து விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படுகின்றன. இறுதியில் நாயகி ஹைராவை கொலை செய்தது யார் என அஜ்மல் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.
விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண் விஜய் நடித்த ‘ஜனனம்’ உள்பட பல படங்களை இயக்கியவர் டி.ரமேஷ் செல்வன், இவர் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்துள்ள படம் தான் நுங்கம்பாக்கம்.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். நிஜ சம்பவங்களை படமாகியுள்ள இயக்குனர் போலீஸ் விசாரணையை மையப்படுத்தி திரைக்கதையை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் நாயகனாக நடித்துள்ள மனோ எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகி ஹைரா படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், படம் முழுக்க அவரை சுற்றியே நடக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள அஜ்மல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அனைவருக்கும் தெரிந்த கதை என்றாலும், இந்த வழக்கின் விசாரணையின் போது நடந்தது என்ன என்பதை கற்பனை கலந்து விறுவிறுப்பு குறையாமல் காட்டியிருக்கிறார் இயக்குனர். சாம் டி ராஜின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜோன்ஸ் ஆனந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘நுங்கம்பாக்கம்’ வரவேற்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை அர்ச்சனா, சுசித்ரா ஆகிய இரண்டு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றுள்ளனர்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சென்ற சுசித்ரா குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார் சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்திருக்கிறார். கார் ஓட்டிச் சென்ற சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






