என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தனது மகன் குறித்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பின் மாற்றான், துப்பாக்கி, மாரி போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

    தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு அண்மையில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவர் தனது மகன் குறித்து பகிர்ந்துள்ள பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    காஜல் அகர்வால்

    அதில், " இந்த ஆறு மாதங்கள் எப்படி இவ்வளவு வேகமாக போனது என்றே தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த இளம் பெண்ணாக நான் இருந்ததில் இருந்து அம்மாவாக நான் மாறிய பிறகு நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் என்னுடைய வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவாக கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை சரியாக கொடுக்கிறேனா என்பது நிச்சயம் எனக்கு மிகுந்த சவாலான ஒன்றாகதான் இருந்தது.

    ஆனால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான்தான் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இப்போது நீ புரண்டு படுக்கிறார், இடமிருந்து வலம் நகருகிறாய், என் மேல் ஏறுகிறாய் இதெல்லாம் ஏதோ ஒரு இரவில் நடந்ததைப் போல இருக்கிறது. உனக்கு வந்த முதல் ஜலதோஷம், நெற்றியில் வந்த முதல் கட்டி, நீச்சல் குளம், கடலில் நீ குளித்தது, உணவுகளை ருசிக்க ஆரம்பித்தது என எல்லாமே சீக்கிரமாக நடந்துவிட்டது.


    காஜல் அகர்வால்

    இப்படியே போனால் நீ அடுத்த வாரத்தில் கல்லூரிக்குக் கூட போய் விடுவாய் என நானும் உன் அப்பாவும் இதைப் பற்றி பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். நீ எங்களை எந்த அளவிற்கு பொறுப்புள்ளவர்களாக மாற்றி இருக்கிறாய். கடவுள் தான் உன் மூலம் எங்களை ஆசிர்வதித்து இருக்கிறார். உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலான மதிப்புமிக்க வேலையாகக் கருதுகிறேன்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.



    • தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா.
    • இவர் தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.

    தெலுங்கில் வந்த அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் உருவான நோட்டா, டியர் காமரேட் போன்ற படங்கள் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தெலுங்கில் குஷி, ஜனகன மன ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    விஜய் தேவரகொண்டா - சிவகார்த்திகேயன்

    இவர் சமீபத்தில் ஐதராபாத்தில் சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது, ''விஜய்தேவரகொண்டா ப்ரின்ஸ் போல இருக்கிறார். மிகவும் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பிரபல நடிகராக உயர்ந்துள்ளார். இந்தியா முழுவதும் அனைவரும் அறியும் வகையில் பான் இந்தியா நடிகராகிவிட்டார். விஜய்தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது" என்றார் கூறினார்.

    • நாகசைதன்யா தற்போது என்சி22 படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.


    என்சி22 படக்குழு

    மேலும், இதில் சரத்குமார், அரவிந்த் சாமி, வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.


    என்சி22 படக்குழு

    என்சி22 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் மைசூரை சுற்றியுள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


    • சின்மயி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற வதந்தி பரவி வந்தது.
    • அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் சின்மயி பதிவிட்டிருந்தார்.

    தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

     

    ராகுல் ரவீந்திரன் -  சின்மயி

    ராகுல் ரவீந்திரன் -  சின்மயி

    சின்மயி, ராகுல் ரவீந்திரன் தம்பதியினருக்கு திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியுள்ளதை அடுத்து அண்மையில் ஆண் மற்றும் பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. இவர்களுக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.

     

    சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே சின்மயி கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எதையும் பதிவிடவில்லை என்பதால் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றார் என்ற வதந்தி பரவி பலரும் விவாதிக்க தொடங்கினர்.

     

    அதன்பின்னர் இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி தனது இணைய பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தன் இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் பகிர்ந்தார்.

     

    இந்நிலையில் இவரின் இந்த பதிவில் கமெண்ட் செய்த ஒரு நபர் வாழ்த்துக்கள் வைரமுத்து சார் என்று பதிவிட்டார். இதற்க கமெண்ட்டிற்கு பதிலளிக்கும் விதமாக சின்மயி காட்டமாக பதிலளித்துள்ளார். அதில், இந்த புகைப்படத்தை நான் பதிவிட்டேன். இதற்கு தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவர் இதனை பதிவிட்டுள்ளார்.நான் எனது கர்ப்பக்கால புகைப்படத்தை வெளியிடாததற்கு உண்மையான காரணம் இருக்கிறது. எனக்கு ஏற்கனவே கருச்சிதைவு ஏற்பட்டதால்தான் புகைப்படத்தை வெளியிடவில்லை. பலாத்கார ஆதரவாளர், என்னை துஷ்பிரயோகம் செய்தவர் என் குழந்தைகளின் தந்தை என்று என்னிடம் கூறுகிறார்.

    சின்மயி

    சின்மயி

     

    நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்துலயே ஊறுனது, வளர்ப்பும் அப்படி என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு வீண் வன்மத்தை பெண்கள் மேல் திணிக்கும் நபர்களுக்கு சவுக்கு அடியாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மீடூ சர்ச்சையில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிக்பாஸ் தமிழ் சீசன்-6 சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கியது.
    • விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் தினம் தினம் ஒரு பிரச்சனைகள் வெடிக்கின்றது.

    பிக்பாஸ் தமிழ் 6-வது சீனன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, ராபர்ட் மாஸ்டர், ஷாந்தி, ஜிபி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ராம் ராமசாமி, மணிகண்டன், ஷிரினா, ஆயிஷா, சிவன் கணேசன், அசல், தனலட்சுமி, நிவா, குயின்சி, கதிரவன் உள்ளிட்ட 20 நபர்கள் வீட்டின் உள்ளே சென்றனர். கடந்த வாரம் நடிகை மைனா வீட்டினுள் நுழைந்தார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தினம் தோறும் ஒவ்வொரு பிரச்சனையுடன் புரோமோக்கள் வெளியாகிறது.

     

    பிக்பாஸ் சீசன்-6

    பிக்பாஸ் சீசன்-6

    இந்நிலையில் 12-வது நாளான இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது புரோமோவில் விக்ரமனும் அசீமும் ஒருவருக்கொருவர் மாறிமாறி சண்டையிட்டுக் கொள்கின்றனர். தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்றவாறு வரிசைபடுத்தி கொள்ளுமபடி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று போட்டியாளர்கள் அந்த இடத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நபரும் தேர்வு செய்ய வேண்டும்.

    பிக்பாஸ் சீசன்-6

    பிக்பாஸ் சீசன்-6

     

    அதன்படி விக்ரமனை அசீம் தேர்வு செய்து, அவர் வந்ததிலிருந்து தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று காரணம் சொல்கிறார். ஒருவருக்கொருவர் மாறி மாறி வாதமிட்டுக்கொள்ள இந்த மோதல் முற்றி விக்ரமனை ஒருமையில் வாடா போடா என்று அசீம் பேச பிக்பாஸ் வீட்டினுள் பூகம்பம் வெடிக்கிறது. இதோடு இந்த புரோமோ நிறைவடைந்து விடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலுக்கு பலரும் அவர்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    • ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆதிபுருஷ்.
    • இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்றது.

    ஆதிபுருஷ் படத்திற்கு பிறகு தன்னுடைய சினிமா வாழ்க்கையை வர்த்தக ரீதியாக உயர்த்த முடியும் என்று பிரபாஸ் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த படத்தை அனிமேஷன் படமாக எடுக்காமல் லைவ் ஆக்‌ஷனாக எடுத்திருக்கலாம் என்ற எண்ணத்தை பலர் பதிவு செய்தனர். இந்த படத்தின் அனிமேஷன் தரம் ஈர்க்கும் வகையில் இல்லை என கூறியுள்ளனர். மேலும் ராமர் கோவில் தலைமை குருக்களும் கடுமையான விமர்சனத்தை வைத்தது படக்குழுவுக்கு ஒருவிதமான குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது.

    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

     

    இது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இயக்குனர் ஓம் ராவத்திற்கு தயாரிப்பாளர் பூஷன் விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இதன் மூலம் தங்களுக்கு எந்தவிதமான கருத்து மோதலும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.
    • இவர் தற்போது சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மைக்கேல் படத்தை இயக்கியுள்ளார்.

    புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். மேலும் திவ்யன்ஷா கௌசிக், வரலட்சுமி சரத்குமார், வருண் சந்தேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    மைக்கேல் 

    மைக்கேல் 

     

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ் எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழ் டீசரை நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில், பசியில இருக்குற மிருகத்துக்கு வேட்டை தெரியணும்ங்குற அவசியமில்ல என்ற வசனங்கள் இடம்பெற்றிருக்கிறது. தற்போது இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி.
    • தற்போது இயக்குனர் ராம் இயக்கி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

    தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அஞ்சலி, சில வருடங்களுக்கு முன்பு உடல் எடை அதிகமானதால் அவருக்கு படங்கள் குறைந்தன. தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க கடும் உடற்பயிற்சிகள் செய்து எடையை குறைத்து இருக்கிறார். தற்போது இயக்குனர் ராம் இயக்கி வரும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

     

    இந்நிலையில் அஞ்சலி கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். சேலை அணிந்துக் கொண்டு கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    • வாலி, குஷி, நியூ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா.
    • தற்போது இவர் மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.

     

    வாலி - குஷி

    வாலி - குஷி


    இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எஸ்.ஜே.சூர்யா படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 'கில்லர்' என்ற பெயரில் உருவாகவுள்ள இப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி அதில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

     

    எஸ்.ஜே. சூர்யா

    எஸ்.ஜே. சூர்யா

    இவர் இயக்கத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு இசை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    அதர்வா - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    இந்நிலையில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக அதர்வா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் இந்த படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட்.
    • இவர் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கங்கு பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். விரைவில் 'ஹார்ட் ஆஃப் ஸ்டோன்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதிக்க உள்ளார்.


    ஆலியாபட்

    தற்போது ஆலியாபட் பாலிவுட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் சிறப்பாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


    ரன்வீர் சிங் கமெண்ட்

    அந்தப் பதிவிற்கு கமெண்ட் செய்துள்ள ரன்வீர் சிங், ''உன்னுடன் இந்த பயணத்தில் ஒரு சிறிய பகுதியாக இருந்தது என்னுடைய அதிர்ஷ்டம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவரது கமெண்ட்டுக்கு ரசிகர்கள் பலர் லைக் செய்து வருகின்றனர்.


    • அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் "துணிவு" படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் "துணிவு". இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.


    அஜித் - சமுத்திரகனி

    இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். "துணிவு" திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விபரீத முறையில் "துணிவு" படத்தின் அப்டேட் கேட்ட ரசிகரின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    பிளேடால் எழுதி அப்டேட் கேட்ட ரசிகர்

    அதாவது, புதுச்சேரியைச் சேர்ந்த அஜித் ரசிகர் ஒருவர் "துணிவு" படத்தின் அப்டேட் கேட்டு தனது கையில் பிளேடால் எழுதி அதனை வீடியோ எடுத்து புதுச்சேரி அஜித் ரசிகர்கள் மட்டும் உள்ள வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×