என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் 'ஃபர்ஹானா'.
- இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஃபர்ஹானா
மேலும், இதில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

ஃபர்ஹானா
'ஃபர்ஹானா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது பாடலான 'சாரா' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் வரும் 'அசைகின்ற ஆசை வந்து அங்கும் இங்கும் சந்தம் சிந்தும்' என்ற வரி ரசிகர்கள் மீண்டும் மீண்டும் முனுமுனுக்கும் வரியாக அமைந்துள்ளது.
- பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் ‘பதான்’ படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சமீபத்தில் ஜவான் படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

பதான்
இதையடுத்து இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் "பதான்". இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பதான்
நடிகர் ஷாருக்கான் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆனதையொட்டி "பதான்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இந்நிலையில், "பதான்" திரைப்படத்தின் முதல் பாடலான 'அழையா மழை' பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ராஜ் மோகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'பாபா பிளாக் ஷீப்'.
- இப்படத்தை 2023-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரபல பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பாபா பிளாக் ஷீப்'. இப்படத்தில் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாபா பிளாக் ஷீப்
இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க சுதர்ஷன் ஶ்ரீனிவாசன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும் பள்ளி கால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள 'பாபா பிளாக் ஷீப்' படத்தின் படப்படிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

பாபா பிளாக் ஷீப் பட பூஜை
மேலும் இப்படத்தை 2023-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
- நடிகர் ரஜினி தற்போது நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர்
இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக புதிய போஸ்டரை ஜெயிலர் படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

ஜெயிலர்
அதன்படி, இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளதாகத் தெரிவித்து படக்குழு அந்த கதாபாத்திரத்தின் ஒரு முன்னோட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- விஷால் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘லத்தி’.
- இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இதனிடையே இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

லத்தி
அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் விஷால் கலக்கும் இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி - தாணு
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியதாவது, "37 ஆண்டுகளுக்கு முன்பு அன்று... கலைப்புலி தாணு என்ற இந்த சாதாரண மனிதனின் முன்னால் ஒரு மனிதர் வருகிறார். ரோஸ் கலரில் பனியன், கறுப்பு நிற பேண்ட் அணிந்தபடி ஸ்டைலாக நடந்து வருகிறார். யார் அந்த தாணு என்று கேட்டபடி அருகில் வந்தவர் என்னை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியோடு வாழ்த்துக்களை பரிமாறுகிறார். அவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினி. அந்த நிகழ்வு இன்றும் என் மனக் கண்ணில் பசுமையான காட்சியாக தெரிகிறது. அவர் சாதாரண மனிதர் அல்ல. மனிதரில் புனிதர் என்று போற்றுவதுதான் சிறப்பாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் தான் ரஜினியின் பைரவி படத்தின் வினியோக உரிமையை நான் வாங்கி இருந்தேன். அந்த படத்தின் விளம்பரத்திற்காக ஸ்டில்ஸ் ரவி சில போட்டோக்களை எனக்கு போட்டுக் கொடுத்திருந்தார்.
கலைத்துறையில் ஸ்டில்ஸ் ரவியை பொறுத்தவரை ஒரு கலை வித்தகர் இந்த காலக்கட்டத்தை போல நவீன கேமரா வசதிகள் இல்லாத காலத்திலும் சாதாரண கேமிராவிலும் பல மாயங்களை செய்யக் கூடியவர். அப்படி அவர் போட்டுக்கொடுத்த போட்டோக்களை பார்த்த போது பிரமித்து போனேன். துப்பாக்கியை பிடித்தபடி நின்ற ரஜினியின் ஸ்டைல், ஆட்டுக்குட்டியை தோளில் போட்டுக்கொண்டு அவர் நடந்து சென்ற அழகு, படமெடுத்து ஆடும் பாம்பின் தலையை தட்டி விடும் துணிச்சலான காட்சி. இவை ஒவ்வொன்றும் என்னை பிரமிப்பின் உச்சத்திற்கே அழைத்து சென்றது. அவற்றை மனதில் கொண்டு பைரவி படத்தின் விளம்பரத்திற்காக பேனர் ஒன்றை தயாரித்தேன். மவுண்ட் ரோட்டில் உள்ள பிளாசா தியேட்டர் முன்பு 35 அடி உயரத்தில் கட் அவுட் அமைத்தேன்.

தாணு - விஜயகாந்த்- கருணாநிதி- ரஜினி
பிரமாண்ட கட் அவுட் அது. அந்த கட் அவுட்டை பார்த்தவர்களே பிரமித்து போனார்கள். காலையில் கட் அவுட்டை வைத்தேன். மாலையில் அதை அகற்ற வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தால் எப்படி இருக்கும்? சாலையோரத்தில் அந்த கட் அவுட் இருப்பது ஆபத்தை விளைவிக்கும். எனவே அப்புறப்படுத்த வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. அதைக்கேட்டதும் நான் துடித்துப் போனேன். நேரடியாக எங்கள் சேம்பர் தலைவர் ராமானுஜம் அவர்களிடம் சென்று விசயத்தை சொன்னேன். இந்த கட் அவுட்டை அப்புறப்படுத்தினால் விளம்பரமே போய்விடும் என்றேன். உடனே அவர் கமிஷனரிடம் பேசி மேலும் பலமாக கட்டி வைக்கும்படி அனுமதியும் வாங்கி தந்தார். அவரை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
ஏனெனில் பைரவி பட விளம்பரத்திற்காக வைத்த அந்த கட் அவுட்டில் பளிச்சிடும் எழுத்துக்களுடன் என் எண்ணமும் அதில் பளிச்சிட்டது. அதற்கு மீண்டும் உயிர் கிடைத்ததும் எனக்கு நிம்மதி வந்தது. அதற்காகவே பின்னாளில் சேம்பரில் எனது சொந்த செலவில் ராமானுஜம் அவர்களின் சிலையை வைத்தேன். தி.நகரில் ராஜகுமாரி தியேட்டர் அன்று இருந்தது. இப்போது அந்த தியேட்டர்இல்லை. ஷாப்பிங் காம்பளக்சாக மாறி விட்டது. அந்த தியேட்டரில் தான் அன்றைய மாலைப் பொழுதில் பைரவி படத்தை பார்ப்பதற்காக நான் சென்றேன். தியேட்டரில் கூட்டம் என்றால் கூட்டம். அப்படி ஒரு கூட்டம். திருவிழா கூட்டம் போல் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.

இரஞ்சித் - ரஜினி - தாணு
அங்குதான் படம் பார்ப்பதற்காக ரஜினியும் வந்தார். அவர் படத்தை பார்ப்பதற்கு முன்பு மற்றவர்களிடம் கேட்டது எங்கே அந்த வினியோகஸ்தர் என்பது தான். அப்போதுதான் என்னிடம் அழைத்து வந்தார்கள். அந்த நேரத்தில்தான் முதல் முதலாக ரஜினியை சந்தித்தேன். கை குலுக்கி, கட்டிப்பிடித்து மகிழ்ந்த நேரத்தில், அவர் சொன்ன வார்த்தை, "பென்டாஸ்டிக் பப்ளிசிட்டி, பியூட்டிபுள் போஸ்டர்". அந்த போஸ்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு படத்தை ரிலீஸ் செய்தேன். ஒருநாள் சந்திப்பு. அதுவே இவ்வளவு பெரிய நட்பாக காலம் முழுவதும் உருவாகும் என்று அந்த நேரத்தில் நான் நினைக்கவில்லை. இந்த நட்'பூ' மலர்வதற்கு காரணம் ரஜினி என்ற மனிதரின் இதயம் தான். அடுத்ததாக இயக்குனர் சக்தி கண்ணன் இயக்கத்தில் 'யார்' என்ற படம் உருவானது.
அந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்க ரஜினியை அழைத்தோம். அவரும் ஒத்துக்கொண்டார். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் போட்டார். விளம்பர போஸ்டர்களில் எனது படத்தை போடக்கூடாது என்றார். நாங்களும் சரி என்று சொன்னோம். படமும் வெளியிடப்பட்டது. 90-வது நாள் படம் ஓடிக் கொண்டிருந்த போது ரஜினியை சந்தித்தேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் செய்தது விளம்பரம். அவர் என்னை உயர்த்துவதற்காக வியாபாரத்திற்கு உதவும் வகையில் எனக்காக ஒரு படம் நடித்து தருவதாகவும் கூறினார். இந்த மனப்பான்மை எத்தனை மனிதர்களுக்கு வரும். ஆனால் எங்கள் துரதிருஷ்டம் சக்தி கண்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த படம் பண்ண முடியாமல் போனது.

ரஜினி - தாணு
அதன்பிறகு அவரே இந்தியில் வெளியான காவலி என்ற படத்தின் கதையை சொல்லி அதை தமிழில் தயாரிக்கும்படி கோரினார். அந்த படம்தான் 'கூலிக்காரன்'. படத்தில் ஹீரோவாக விஜயகாந்தை போடு. இன்ன இன்ன பாத்திரங்களில் இவர்களை போடு என்று எனக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். ஆலோசனை வழங்கியது மட்டுமல்ல அந்த படத்தின் முதல் பிரதியை அவரே நேரில் வந்து பார்த்தார். படம் நன்றாக வந்திருக்கிறது. நிறைய கூட்டம் வரும் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் வரும் போது ஒன்று பத்தாகி விடும் என்றேன். அதன் பிறகு கலைப்புலி சேகரை அழைத்து சென்று ஒரு படத்திற்கு கதை சொன்னேன். அப்போது ஐதராபாத்தில் இருந்து சர்தூரி பிரதர்ஸ் வருவதாக தெரிவித்தார். அவர்கள் மூலம் அண்ணாமலை படம் தயாரானது.
அதன் பிறகு 'முத்து' படத்திலும் எனது பெயர் அடிப்பட்டது. ஆனால் அந்த படமும் நான் தயாரிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது என்னை அழைத்து ரஜினி நான் சுவிட்சர்லாந்து செல்கிறேன். வந்தவுடன் உங்களிடம் விளக்கமாக பேசுகிறேன் என்று சொல்லி விட்டு சென்றார். 1994-95-ல் ஒரு படம் எடுப்பதற்கு அவரது வீட்டிற்கு என்னை அழைத்தார். பல விசயங்கள் பேசப்பட்டு ஒப்பந்தம் இறுதியாகும் நிலையில் நான் அரசியலுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதாவது ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ என் வீட்டிற்கு நேரில் வந்து என்னை மயிலாப்பூரில் போட்டியிட சொல்லி வற்புறுத்தினார். நான் மறுத்ததும், நீதான் முதல் வேட்பாளர் நீ போட்டி இடாவிட்டால் கவுரவமாக இருக்காது என்று சொல்லி கண் கலங்கினார்.

ரஜினி - தாணு
அவர் கண் கலங்கியதை பார்த்ததும் எங்கள் வீட்டில் உள்ளவர்களும் கண் கலங்கினார்கள். இப்படி ஒரு இக்கட்டான நிலை எனக்கு ஏற்பட்டிருப்பதை சொல்லி நான் தேர்தலில் நிற்க வேண்டி உள்ளது என்றேன். அதை கேட்டதும் அவரால் எதுவும் பேச முடியவில்லை. அதன் பிறகு நான் அவரிடம் விடைபெற்று வெளியே வந்த போது அவரது மேனேஜர் என்னிடம், " என்ன சார் இவ்வளவு விரும்பியும், வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களே" என்று சொல்லி ஆதங்கப்பட்டார். அதன் பிறகும் எங்கள் நட்பு எந்தவிதமான தொய்வும் இல்லாமல் தொடர்ந்தது. அடுத்து 'திரிஷ்யம்' படம் பண்ணலாமா என்று கேட்டார். அதற்கு, இப்போது தெலுங்கில் அந்த படத்தை வெங்கடேஷ் பண்ணுகிறார். எனவே அதை தவிர்க்கலாமே என்றேன். நான் சொன்னதை கேட்டதும் சரிதான் என்று தவிர்த்து விட்டார்.
அவருக்கு கதை திருப்தி இல்லை என்றால் தவிர்த்து விடுவார். அதன் பிறகுதான் இயக்குனர் ரஞ்சித் கதையை நாங்கள் இருவரும் ரஜினி வீட்டில் இருந்து கேட்டோம். கதை அவருக்கு பிடித்தது. எனக்கும் பிடித்தது. ரஞ்சித்தை பாராட்டினோம். அந்த படம்தான் 'கபாலி'. படப்பிடிப்பு தொடங்கியது. சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்ட போதும் அதை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளர் எவ்வளவு செலவு செய்திருப்பார். கண்டிப்பாக நடித்துகொடுக்க வேண்டும் என்று அவருடைய சிரமத்தை தாங்கிக்கொண்டு தயாரிப்பாளரின் செலவை பார்த்து நடித்து முடித்துக் கொடுத்தார். அவரது 2.0 படம் மட்டுமே ஆயிரம் கோடிக்கு மேல் வசூலானது. எவ்வளவு பெரிய உச்சத்தில் இருந்தாலும், எவ்வளவு பெரிய தன்னடக்கத்தோடு இருக்கிறார்.

ரஜினி - இரஞ்சித்- தாணு
இப்படியும் ஒரு மனிதர் இருக்கிறாரே என்று பிரமிக்கத்தான் வைக்கிறது. பாபா படம் ரிலீசான போது அரசியல் ரீதியாக இடையூறு ஏற்பட்டது. அதை நினைத்து ரஜினி மிகவும் சங்கடப்பட்டார். அந்த நேரத்தில் நான் நேரடியாக சென்று பா.ம.க. தலைவர் அன்புமணியை சந்தித்து பேசினேன். அவரிடம் ரஜினியின் இயல்புகளை சொல்லி எடுத்துக்கூறினேன். அதை கேட்டதும் அன்புமணியும் புரிந்து கொண்டார். ஏதோ ஒரு சூழலில் இப்படி ஆகி விட்டது என்பதை சொல்லி வருந்தினார். அன்புமணியை அழைத்து சென்று இருவரையும் பேச வைத்தேன். அதேபோலத்தான் ஒரு முறை நான் கலைஞர் கருணாநிதியை சந்திக்க சென்ற போது ரஜினியை பற்றி ஒரு விசயத்தை என்னிடம் பேசினார். "என்னப்பா தாணு. நான் ரஜினியை பார்த்தேன். வெள்ளை தாடி வைத்திருக்கிறார்.
சூப்பர் ஸ்டாராக இருக்க கூடிய ஒரு நடிகர் இப்படி இருக்கலாமா? எம்.ஜி.ஆர். தன்னுடைய கண் சுருக்கங்கள்கூட வெளியே தெரியக்கூடாது என்பதற்காக கருப்பு கண்ணாடி போட்டு மறைத்துக்கொள்வார். இவர் ஏன் இப்படி இருக்கிறார். தாடியை எடுக்க சொல்" என்றார். நான் மறுநாளே ரஜினியை நேரில் சந்தித்து, "நீங்கள் தாடி வைத்திருப்பதை பார்த்து கலைஞர் சங்கடப்படுகிறார்" என்று அவர் பேசியதை அப்படியே ஒப்புவித்தேன். அதை கேட்டதும் அப்படியா சொன்னார் என்று மட்டும் கேட்டார். வேறு எதுவும் கேட்கவில்லை. அடுத்த சில நாட்களில் குட்லக் தியேட்டரில் ரஜினி ஒரு படம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் கீழே காத்து நின்ற போது மேல் இருந்து அந்த படத்தை பார்த்துக்கொண்டு கலைஞர் கீழே வந்துள்ளார்.

ரஜினி - தாணு
கலைஞரை பார்த்ததும் ரஜினி அருகில் சென்று அய்யா நீங்கள் சொன்னபடி தாடியை எடுத்து விட்டேன்.... இதோ பாருங்கள்.... இதோ பாருங்கள்... என்ற படி தன்னுடைய இரண்டு கண்ணங்களையும் தடவி காட்டி இருக்கிறார். கலைஞரும் சிரித்தபடி அவரை தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார். மறுநாள் கலைஞர் என்னை அழைத்தார். நானும் கோபாலபுரத்திற்கு சென்றேன். வீட்டிற்கு சென்றதும், "என்னப்பா தாணு இவர் இப்படி குழந்தை மாதிரி இருக்கிறார். நான் சொன்னதை நீ அவரிடம் சொன்னாயோ, என்றதும் நான் ஆமாம் என்றேன். அதை கேட்டதும் குட்லக் தியேட்டரில் பார்த்ததையும், தாடி எடுத்துவிட்டு குழந்தை மாதிரி கன்னத்தை தடவி தடவி காட்டுனாறய்யா. ரொம்ப ரொம்ப இளகிய மனசு அவருக்கு என்று சொல்லி கலைஞரும் நெகிழ்ந்தார்.
வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று உதவி செய்வதை பற்றி புராணங்களில் கேள்விப் பட்டிருப்போம். நிகழ் காலத்திலும் அப்படியே வாழ்ந்து கொண்டிருப்பவர்தான் ரஜினி. எத்தனையோ பேருக்கு எவ்வளவோ உதவியை செய்துகொண்டிருக்கிறார். ஆனால் எதையும் அவர் வெளிக்காட்டுவதுமில்லை. வெளியே சொல்லுவதுமில்லை என்பதுதான் உண்மை. பாம்குரோ ஓட்டல் அருகே ரஜினிக்கு ஒரு அலுவலகம் இருந்தது. அந்த அலுவலகத்தின் கீழ் தளத்தில் அவர் ஆபீசில் இருந்த போது நானும் அவரை சந்திக்க சென்றேன். அப்போது எதேச்சையாக ஒரு கருத்தை சொன்னேன். சார் நீங்கள் எத்தனையோ பேருக்கு எவ்வளவோ படங்கள் நடித்து கொடுத்திருப்பீர்கள். அந்த காலத்தில் வருமானங்களும் குறைவு. இந்த காலத்தில் எவ்வளவோ வருமானம் வருகிறது.

தாணு - ரஜினி
உங்கள் படங்களை தயாரித்தவர்களுக்கு இன்னும் படம் பண்ணி கொடுக்கலாமே என்றேன். அதையும் மனதில் கேட்டுக்கொண்டவர், வெகு சீக்கிரத்தில் நிறைவேற்றியும் காட்டினார். அதற்காகவே அருணாச்சலம் படத்தை எடுத்து உதவினார். அந்த ஒரே படத்தின் மூலம் 8 தயாரிப்பாளர்களை உருவாக்கினார். இப்படிப்பட்ட மாமனிதரை போற்றுவதற்காகத்தான் பாபா படத்தை அவரது பிறந்தநாளில் மறுவெளியீடு செய்கிறோம். ரஜினியை மனிதரில் புனிதர் என்பேனா? வாழும் மனிதருக்கெல்லாம் வழிகாட்டி என்பேனா? அவரை என்ன சொன்னாலும் தகும். 'மனிதன்... மனிதன்... மனிதன்... பிறருக்காக கண்ணீரும், பிறருக்காக செந்நீரும் சிந்தும் மனிதன் எவனோ அவனே மனிதன்.. மனிதன்' என்பது அவர் படத்தின் பாடல். நிஜத்தில் அப்படியே வாழ்பவர்தான் ரஜினி. அவருக்கு நண்பராக இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது இறைவன் செயலே. இந்த வையம் தழைக்க அவர் வாழ்வாங்கு வாழ.. தேக பலமும், ஆயுள் பலமும் அருள வேண்டும் என்று இறைவனை வணங்குகிறேன்" என்று கூறினார்.
- இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'.
- இப்படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் சமீபத்தில் வெளியானது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இப்படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

துணிவு
இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியானது.

துணிவு பட போஸ்டர்
துள்ளலான இசையுடன் ரசிகர்களை கவர்ந்த 'சில்லா சில்லா' பாடல் யூ-டியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Drop a 🔥if #ChillaChilla is already your dance anthem! Celebrating over 15 Million views on #YouTube!https://t.co/PSBYHYsDpt#Thunivu #ChillaChilla #NoGutsNoGlory pic.twitter.com/xhJLru6hFI
— Boney Kapoor (@BoneyKapoor) December 12, 2022
- இயக்குனர் ஸ்ரீ வித்தகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் 'ரகட் பாய் காதல்'.
- இதில் ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நாடோடிகள் ,நிமிர்ந்து நில், போராளி, போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஸ்ரீ வித்தகன். இவர் இயக்கத்தில் மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ள இசை ஆல்பம் 'ரக்கர்ட் பாய் காதல்'. இதில் கதாநாயகனாக நடித்துத் தயாரித்துள்ளவர் அஜய் கிருஷ்ணா. இவர் நாடோடிகள், நிமிர்ந்து நில்,போராளி, தரணி, அனுக்கிரகன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ரக்கர்ட் பாய் காதல்
இதில் கதாநாயகியாக மூக்குத்தி அம்மன், வானம், தீர்ப்புகள் விற்கப்படும், மாறன் போன்ற படங்களில் நடித்த ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார். டி.எம் உதயகுமார் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தை பிரியங்கா படியுள்ளார். மேலும், இதில் பின்னணி பாடி இருக்கும் பாடகர் ஜித்தின் ராஜ் பொன்னியின் செல்வன் மலையாள வடிவத்தில் பாடி இருப்பவர்.

ரக்கர்ட் பாய் காதல்
ராஜா குருசாமி வரிகளில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்திற்கு அருண்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரக்கர்ட் பாய் காதல்' இசை ஆல்பத்தை நடிகரும் இயக்குனருமான சசிகுமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த ஆல்பம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.
- நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘காந்தாரா’.
- இந்த திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து, இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் 'காந்தாரா' திரைப்படம் வெளியிடப்பட்டது.

காந்தாரா
இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலில் சாதனை படைத்தது. 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர்.

காந்தாரா
இந்நிலையில் 'காந்தாரா' படத்தை பார்த்த நடிகர் ஹிரித்திக் ரோஷன், இப்படம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'காந்தாரா' படத்தை பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன். ரிஷப் ஷெட்டி படத்தை உருவாக்கிய விதம் அசாதாரணமானது. சிறந்த கதைசொல்லல், இயக்கம் & நடிப்பு. படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு வியப்பை அளித்தது. படக்குழுவுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’.
- இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
பாரதி கண்ணம்மா, தேசிய கீதம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர் சேரன். படங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல் சில இயக்குனர்களின் படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார்.

எளிய மக்கள் வெளியிட்ட தமிழ்க்குடிமகன் போஸ்டர்
நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்துள்ள திரைப்படம் 'தமிழ்க்குடிமகன்'. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை வித்தியாசமான முறையில் ஆட்டோ ஓட்டுனர்கள், தூய்மை பணியாளர்கள், துணை நடிகர் நடிகைகள் வெளியிட்டுள்ளனர்.

எளிய மக்கள் வெளியிட்ட தமிழ்க்குடிமகன் போஸ்டர்
இது தொடர்பான புகைப்படங்களை இயக்குனர் சேரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
#தமிழ்க்குடிமகன் மக்கள் போஸ்டர் வெளியிடுகிறார்கள் .. pic.twitter.com/8je006Ej75
— Cheran (@directorcheran) December 12, 2022
- விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி' பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

வாரிசு
வாரிசு திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில் படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுப்பட்டு வருகிறது. இதற்காக வாரிசு பட போஸ்டர்களை மெட்ரோ ரயில்களில் ஒட்டும் பணியை படக்குழு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சுந்தர். சி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘தலைநகரம் -2’.
- இந்த திரைப்படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.
'உள்ளத்தை அள்ளித்தா', அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான 'தலைநகரம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தலைநகரம் -2
அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் 'முகவரி', சிம்புவின் 'தொட்டி ஜெயா', பரத்தின் 'நேபாளி', ஷாமின் '6 கேண்டில்ஸ்', சுந்தர்.சி நடித்த 'இருட்டு' ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை இயக்கி வருகிறார்.

தலைநகரம் -2 போஸ்டர்
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 'தலைநகரம் -2' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
The teaser of #SundarC's #ThalaiNagaram2 will be released on 14th December at 5 PM!
— Ghibran (@GhibranOfficial) December 11, 2022
A @vdhorai film!#RightIsBack@righteye2021 #SMPrabakaran @krishnasamy_e @vichuviswanath @APVMaran #RSvenkat @maddyraja1 @teamaimpr @saregamaglobal pic.twitter.com/8hxT1RslXA






