என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
யமஹா நிறுவனத்தின் புதிய ஏரோக்ஸ் 155 மாடல் இந்திய சந்தையில் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
யமஹா நிறுவனத்தின் ஏரோக்ஸ் 155 இந்திய சந்தையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதீத வரவேற்பை தொடர்ந்து ஏரோக்ஸ் 155 மாடலை யமஹா புதிய நிறத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி யமஹா ஏரோக்ஸ் 155 மெட்டாலிக் பிளாக் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது. புதிய நிறத்துடன் சேர்த்து ஏரோக்ஸ் 155 மாடல் ரேசிங் புளூ மற்றும் கிரே வெர்மிலான் நிறங்களில் கிடைக்கிறது.
இத்துடன் யமஹா ஏரோக்ஸ் 155 மோட்டோ ஜி.பி. வெர்ஷன் ரூ. 1.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய நிறம் தவிர ஏரோக்ஸ் 155 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஏரோக்ஸ் 155 மாடலில் 155சிசி, லிக்விட் கூல்டு என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் 24.5 லிட்டர் ஸ்டோரேஜ், ஐடிள் ஸ்டார்ட்-ஸ்டாப், சைடு ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வினியோக தேதியை அறிவித்து இருக்கிறது.
ஓலா எஸ்1 சீரிஸ் ஸ்கூட்டர் மாடல்கள் இந்த மாதமே வினியோகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். புதிய ஸ்கூட்டர் மாடல்கள் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்பட இருக்கின்றன.
'ஸ்கூட்டர்கள் தயாராகி வருகின்றன. உற்பத்தி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் 15 ஆம் தேதி முதல் வினியோகம் துவங்க இருக்கிறது.' என பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக இந்த ஸ்கூட்டர்கள் அக்டோபர் 25 முதல் நவம்பர் 25 ஆம் தேதிகளுக்குள் வினியோகம் செய்யப்படும் என ஓலா எலெக்ட்ரிக் அறிவித்து இருந்தது. பின் வினியோக பணிகள் திட்டமிட்டப்படி துவங்கவில்லை. இதுகுறித்து ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் மின்னஞ்சலும் அனுப்பி இருந்தது.
ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ஹைனெஸ் சி.பி.350 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஹோண்டா இந்திய சந்தையில் புதிய ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் விலை ரூ. 2.03 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்திய விற்பனையில் ஒரு ஆண்டை நிறைவு செய்ததை அடுத்து ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஹோண்டா நிறுவனம் 35 ஆயிரத்திற்கும் அதிக ஹைனெஸ் சி.பி.350 மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது.

புதிய ஹைனெஸ் சி.பி.350 ஆனிவர்சரி எடிஷன் மாடல் பியல் இக்னியஸ் பிளாக் மற்றும் மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இதன் பியூவல் டேன்க் மீது ஆனிவர்சரி எடிஷன் லோகோ இடம்பெற்று இருக்கிறது.
ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 மாடலில் 348.38சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.8 பி.ஹெச்.பி. திறன், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், அசிஸ்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சிறப்பு சலுகை வழங்குகிறது.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.
சிறப்பு சலுகைகள் சாண்ட்ரோ, ஆரா, ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 31, 2021 வரை வழங்கப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கசார், வென்யூ, வெர்னா, எலாண்ட்ரா, டக்சன், ஐ20 என் லைன் மற்றும் கோனா இ.வி. போன்ற மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை.

ஹூண்டாய் சாண்ட்ரோ மாடலுக்கு ரூ. 40 ஆயிரமும், ஆரா மாடலுக்கு ரூ. 50 ஆயிரமும், கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான சலுகையும் வழங்கப்படுகிறது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடல் இந்தியா பைக் வாரம் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 15.51 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடல் ஏற்கனவே சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் வித்தியாசமான ஹெட்லேம்ப் அமைப்பு, ஷார்ட் பெண்டர், ஹை-செட் எக்சாஸ்ட்கள், ஒற்றை சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 1250சிசி, லிக்விட் கூல்டு, வி டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதே என்ஜின் பேன் அமெரிக்கா 1250 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ்டர் எஸ் மாடலில் இந்த என்ஜின் 119.3 பி.ஹெச்.பி. திறன், 127.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அம்சங்களை பொருத்தவரை லீன்-சென்சிடிவ் டிராக்ஷன் கண்ட்ரோல், கார்னெரிங் ஏ.பி.எஸ்., புல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளராக உருவெடுத்து இருக்கிறது. உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதியில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப்-ஐ முந்தியுள்ளது.
2021 நவம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,38,473 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. இது 2020 நவம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,84,993 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.

நீண்ட காலம் இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளராக இருந்த ஹீரோ மோட்டோகார்ப் 2021 நவம்பர் மாதத்தில் 3,29,185 யூனிட்களை விற்பனை செய்தது. 2021 நவம்பரில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 39 சதவீதம் சரிவடைந்துள்ளது.
லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் மாடல் விற்பனையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தியாளரான லம்போர்கினியின் உருஸ் மாடல் அந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் இதுவரை 16 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது.
டிசம்பர் 4, 2017 அன்று அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி உருஸ் மாடல் விற்பனையில் அந்நிறுவனத்தின் கலர்டோ மாடலை முந்தியுள்ளது. 2004 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கலர்டோ மாடல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் 14,022 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. இதுதவிர 2014 முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் லம்போர்கினி ஹரிகேன் மாடலை புதிய உருஸ் மாடல் பின்னுக்குத் தள்ளும் என தெரிகிறது.

தற்போது லம்போர்கினி நிறுவனம் உருஸ் மாடலின் பேஸ்லிப்ட் வேரியண்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடலில் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. லம்போர்கினி உருஸ் மாடலில் ட்வின் டர்போ 4 லிட்டர் வி8 என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 650 பி.எஸ். திறன், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டிரையம்ப் நிறுவனம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா நிறுவனம் புதிய டைகர் ஸ்போர்ட் 660 அட்வென்ச்சர்-ஸ்டைல் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய டைகர் ஸ்போர்ட் 660 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது முன்பதிவு மட்டும் துவங்கி இருக்கும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்தியாவில் புதிய டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிள் இம்மாத இறுதியிலோ அல்லது ஜனவரி 2022 துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே புதிய டைகர் ஸ்போர்ட் 660 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய டைகர் ஸ்போர்ட் 660 மாடல் டிரையம்ப் இந்தியா வலைதளத்தில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாடலில் 660சிசி, இன்-லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரீடெயில் ஆப் தி பியூச்சர் வியாபார பிரிவில் ஆயிரம் கார்களை விற்பனை செய்தது. இதனை கொண்டாடும் வகையில் ஆயிரமாவது யூனிட் சாவியை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்டின் ஸ்கிவென்க் வாடிக்கையாளரிடம் வழங்கினார்.
மெர்சிடிஸ் பெனஸ் இந்தியா தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்துகிறது. இம்முறை கார்களின் விலை இரண்டு சதவீதம் வரை உயர்த்தப்பட இருக்கிறது. கார் உற்பத்தி செலவீனங்கள் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பென்ஸ் கார்களை முன்பதிவு செய்தவர்கள், டிசம்பர் 31, 2021 வரை புதிய கார்களை முன்பதிவு செய்வோருக்கு தற்போதைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர பென்ஸ் ஜி.எல்.இ.400 மற்றும் ஜி.எல்.இ.400டி எஸ்.யு.வி.க்களை முன்பதிவு செய்தவர்களுக்கும் பழைய விலையிலேயே விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
கோமகி நிறுவனம் இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான கோமகி இந்திய சந்தையில் முதல் எலெக்ட்ரிக் குரூயிசர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. கோமகி ரேன்ஜர் எனும் பெயரில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக இருக்கிறது.
புதிய கோமகி ரேன்ஜர் மாடலுக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. டீசரில் மோட்டார்சைக்கிளின் ஹெட்லேம்ப் காணப்படுகிறது. மேலும் இந்த மாடல் கிளாசிக் தோற்றம் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. முழு சார்ஜ் செய்தால் கோமகி ரேன்ஜர் மாடல் 250 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் புதிய கோமகி ரேன்ஜர் மாடல் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலில் நான்கு கிலோவாட் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. இதுவரை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திலும் இத்தகைய பேட்டரி வழங்கப்படவில்லை.
கோமகி ரேன்ஜர் மாடலில் 5000 வாட் மோட்டார் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் இந்த எலெக்ட்ரிக் குரூயிசர் மாடலில் குரூயிஸ் கண்ட்ரோல், ரிப்பேர் ஸ்விட்ச், ரிவர்ஸ் ஸ்விட்ச், ப்ளூடூத் மற்றும் அட்வான்ஸ்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஆடி நிறுவனத்தின் 2022 கியூ7 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
2022 ஆண்டு ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் வாகனம் 2022 கியூ7 மாடல் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு பல்வேறு எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்த ஆடி, சமீபத்தில் மேம்பட்ட கியூ5 மாடலை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஆடி நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 45 சதவீதம் எஸ்.யு.வி. மாடல்கள் ஆகும். ஆடி கியூ7 பல்வேறு ஆடம்பர வசதிகள் நிறைந்த பிரீமியம் மாடல் ஆகும். அம்சங்களை பொருத்தவரை புதிய கியூ7 மாடலில் ரியர்-சைடு ஏர்பேக், ஹீடெட் ஓ.ஆர்.வி.எம்.-கள், மேம்பட்ட டையர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளன.

2022 ஆடி கியூ 7 மாடலில் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லைட், டெயில்-லைட்கள், பெரிய ஏர் இன்டேக், வட்ட வடிவ வீல் ஆர்ச்கள் உள்ளன. சர்வதேச சந்தையில் புதிய ஆடி கியூ7 மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மாடல் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
மசிராட்டி நிறுவனம் டிரோஃபியோ மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
மசிராட்டி நிறுவனம் டிரோஃபியோ சீரிஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டிரோஃபியோ சீரிஸ் துவக்க விலை ரூ. 1.99 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் புதிய டிரோஃபியோ சீரிஸ்- எண்ட்ரி லெவல் ஜிப்ளி, குவாட்ரோபோர்ட் மற்றும் லெவாண்ட் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் ஃபெராரியின் சக்திவாய்ந்த வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 3.8 லிட்டர் வி8 என்ஜின் 573 பி.ஹெச்.பி. திறன், 730 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

லெவாண்ட் மாடல் மணிக்கு அதிகபட்சம் 302 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. குவாட்ரோபோர்ட் மற்றும் ஜிப்ளி மாடல்கள் மணிக்கு அதிகபட்சம் 326 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.






