என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை மீண்டும் மாற்ற இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜனவரி 2022 முதல் அமலுக்கு வருகிறது. விலை உயர்வு மாருதி சுசுகி நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களுக்கும் பொருந்தும்.
கார் உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தொடர்ந்து கார் மாடல்கள் விலை உயர்த்தப்படுகிறது. கார் மாடல்களின் வேரியண்ட்களுக்கு ஏற்ப விலை உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது.

மாருதி சுசுகி எண்ட்ரி லெவல் மாடலான ஆல்டோ விலை ரூ. 3.15 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் எக்ஸ்.எல்.6 மாடல் துவக்க விலை ரூ. 9.98 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை இந்த ஆண்டில் மட்டும் மூன்று முறை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்களின் விலை எத்தனை சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பவுன்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இன்பினிட்டி இ1 பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இ ஸ்கூட்டர் மாடல் பிரத்யேகமாக 'பேட்டரி-ஏஸ்-எ-சர்வீஸ்' பெயரில் சந்தா முறையில் கிடைக்கிறது.
இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இன்பினிட்டி இ1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பேட்டரி, சார்ஜருடனோ அல்லது பேட்டரி இன்றியோ வங்க முடியும். பேட்டரி இன்றி வாங்குவோர் பேட்டரி-ஏஸ்-எ-சர்வீஸ் சந்தாவை தேர்வு செய்ய வேண்டும்.

இந்த சந்தா முறையில் பயனர்கள் பவுன்ஸ் பேட்டரி ஸ்வாப்பிங் நெட்வொர்க் மூலம் வாகனத்தை இயக்கலாம். இந்தியாவில் பவுன்ஸ் இன்பினிட்டி இ1 பேட்டரியுடன் வாங்கும் போது ரூ. 68,999 என்றும் பேட்டரி இன்றி வாங்கும் போது ரூ. 45,099 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பவுன்ஸ் இன்பினிட்டி இ1 மாடலில் பி.எல்.டி.சி. மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் 83 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 65 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 48 வோல்ட் 39 ஏ.ஹெச். பேட்டரியை வழக்கமான எலெக்ட்ரிக் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் ரிமோட் டிராக்கிங், ஜியோ-ஃபென்சிங், டிராக் மோட், ரிவர்ஸ் மோட், குரூயிஸ் கண்ட்ரோல், ஆண்டி-தெஃப்ட் மெக்கானிசம் மற்றும் டோ அலெர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி நிறுவனத்தின் நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி 2021 நவம்பர் மாத விற்பனையில் 9 சதவீத சரிவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 1,39,184 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 1,53,233 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
கடந்த மாதம் விற்பனையான 1,09,726 பயணிகள் வாகனங்களில் 70 சதவீத யூனிட்கள் மினி மற்றும் காம்பேக்ட் பிரிவை சேர்ந்த ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ, ஸ்விப்ட் போன்ற மாடல்கள் ஆகும்.

காம்பேக்ட் பிரிவு மட்டுமின்றி மிட்-சைஸ் மற்றும் யுடிலிட்டி வாகன பிரிவுகளை சேர்ந்த சியாஸ், எர்டிகா மற்றும் எக்ஸ்.எல்.6 உள்ளிட்டவை 25 சதவீதம் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த மாதம் மட்டும் மாருதி நிறுவனம் 1,089 சியாஸ் யூனிட்களை விற்பனை செய்திருந்தது.
டொயோட்டா நிறுவனத்தின் புதிய ஹிலக்ஸ் பிக்கப் டிரக் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது இந்த மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த மாடல் உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இந்த மாடல் சுமார் 1.8 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் ஐ.எம்.வி.-2 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டொயோட்டாவின் பார்ச்சூனர் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா போன்ற மாடல்கள் இதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் புதிய டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இங்கு அறிமுகமாகும் பட்சத்தில் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் இசுசு வி-கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
நிசான் இந்தியா நிறுவனத்தின் புதுவரவு மாடலான மேக்னைட் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
நிசான் இந்தியா நிறுவனம் விற்பனையில் தொடர்ந்து கணிசமான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. நவம்பர் 2021 மாதத்தில் மட்டும் நிசான் நிறுவனம் 2651 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. இது 2020 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 161 சதவீதம் அதிகம் ஆகும்.
இதே காலக்கட்டத்தில் நிசான் நிறுவனம் 2654 வாகனங்களை இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. அதன்படி வருடாந்திர அடிப்படையில் நிசான் இந்தியா நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி 152 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

நிசான் மேக்னைட் மாடல் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகிறது. நவம்பர் 2021 மாதத்தில் மட்டும் நிசான் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 5605 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
"அறிமுகம் செய்தது முதல் நிசான் மேக்னைட் மாடல் சுமார் 73 ஆயிரத்திற்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருக்கிறது. இந்த மாடலை முன்பதிவு செய்தவர்களில் 31 சதவீதம் பேர் டிஜிட்டல் தளங்களில் முன்பதிவை மேற்கொண்டுள்ளனர். வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்த கட்டணத்தில் வழங்குவதோடு புதிதாக 18 சர்வீஸ் மையங்களை துவங்கி இருக்கிறோம்," என நிசான் மோட்டார் இந்தியா நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் 2022 ஆர்.சி.390 மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். இந்தியா நிறுவன வலைதளங்களில் 2022 ஆர்.சி.390 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சரியான வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் இதன் அறிமுக நிகழ்வு நடைபெறும் என தெரிகிறது.
ஏற்கனவே 2022 கே.டி.எம். ஆர்.சி.390 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் இந்திய மாடல் சர்வதேச வேரியண்டுடன் ஒப்பிடும் போது சற்றே வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. 2022 கே.டி.எம். ஆர்.சி.390 மாடலின் முன்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முன்புறம் சிங்கில்-பாட் ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ரியர்-வியூ மிரர் மற்றும் இண்டிகேட்டர் செட்டப் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை புதிய கே.டி.எம். ஆர்.சி.390 மாடலில் புல்-எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட டி.எப்.சி. டிஸ்ப்ளே, ஸ்விட்ச் செய்யக்கூடிய ஏ.பி.எஸ்., கார்னெரிங் ஏ.பி.எஸ்., கார்னெரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் குயிக்ஷிப்டர் பிளஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
புதிய ஆர்.சி.390 மாடலில் 373சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2022 கே.டி.எம். ஆர்.சி.390 மாடலின் விலை ரூ. 2.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 நவம்பர் மாத இருசக்கர வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் முன்னணி இருசக்கர உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 நவம்பர் மாதத்தில் மட்டும் 1,44,953 மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் உள்நாட்டு வாகன விற்பனை கடந்த மாதம் 23 சதவீதம் சரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1,88,196 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி இருசக்கர வாகன ஏற்றுமதியும் இரண்டு சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 1,93,520 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 1,96,797 யூனிட்களை பஜாஜ் ஆட்டோ ஏற்றுமதி செய்திருந்தது.

ஒட்டுமொத்தமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இருசக்கர வாகன விற்பனை கடந்த மாதம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளது. கடந்த மாதம் மட்டும் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 3,38,473 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. நவம்பர் 2020 மாதத்தில் பஜாஜ் ஆட்டோ 3,84,993 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இது உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்களும் அடங்கும்.
நிசான் நிறுவனம் நான்கு எலெக்ட்ரிக் வாகன கான்செப்ட் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜப்பானை சேர்ந்த கார் உற்பத்தியாளரான நிசான் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கவனம் செலுத்த துவங்கி இருக்கிறது. 2030 ஆண்டிற்குள் 23 எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய நிசான் திட்டமிட்டுள்ளது. இதில் 15 மாடல்கள் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.
இது தவிர நிசான் நிறுவனம் நான்கு கான்செப்ட் இ.வி. மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கான்செப்ட் மாடல்கள் சில்-அவுட், மேக்ஸ்-அவுட், சர்ஃப்-அவுட் மற்றும் ஹேங்-அவுட் என அழைக்கப்படுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி நிசான் நிறுவனம் கோபால்ட்-ஃபிரீ பேட்டரிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

இவை உற்பத்தி செலவை மேலும் குறைக்கும். 2026 ஆண்டு வாக்கில் பேட்டரி உற்பத்தியை 52 GWh ஆகவும், 2030-க்குள் 130 GWh ஆகவும் அதிகரிக்க நிசான் திட்டமிட்டுள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல் விற்பனையை திடீரென நிறுத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் டிகுவான் ஆல்ஸ்பேஸ் மாடல் விற்பனையை நிறுத்தியுள்ளது. இந்த மாடல் வோக்ஸ்வேகன் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டது. வோக்ஸ்வேகன் நிறுவனம் விரைவில் டிகுவான் பேஸ்லிப்ட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ் ஒற்றை வேரியண்டில் கிடைத்தது. இந்த மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 188 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

வோக்ஸ்வேகன் டிகுவான் ஆல்ஸேப்ஸ் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், விரைவில் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 அபாச்சி ஆர்.டி.ஆர்.200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி இந்திய சந்தையில் 2022 அபாச்சி ஆர்.டி.ர்.200 4வி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் துவக்க விலை ரூ. 1,33,840 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வேரியண்ட் விலை ரூ. 1,38,890 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2022 மாடலில் புதிய ஹெட்லேம்ப் டிசைன், இண்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல். வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லேம்ப் செட்டப் தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

2022 டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர்.200 4வி மாடலில் ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என மூன்று ரைடு மோட்களை கொண்டிருக்கின்றன. இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா முன்புற சஸ்பென்ஷன், ஷோவா மோனோ ஷாக் யூனிட், டி.வி.எஸ். ஸ்மார்ட் எக்சோனெக்ட் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பிரேக், கிளட்ச் லீவர்கள் உள்ளன.
இந்த மாடலில் 197.75சிசி, சிங்கில் சிலிண்டர், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 20.2 பி.ஹெச்.பி. திறன், 16.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஓசூரில் தனது இரண்டாவது உற்பத்தி ஆலையை கட்டமைக்கிறது. ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் ஏத்தர் 450 பிளஸ் மாடல்களுக்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்பு காரணமாக புதிய ஆலை கட்டமைக்கப்படுகிறது.
இந்த ஆலை முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும் போது ஏத்தர் நிறுவனத்தால் ஆண்டுக்கு நான்கு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஆண்டுக்கு 1,20,000 யூனிட்களை உற்பத்தி செய்து வருகிறது. இதே ஆலையில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் கவனம் செலுத்தப்பட இருக்கிறது.

நவம்பர் 2020 முதல் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மாதாந்திர விற்பனையில் 20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது. நிர்வாகம் மற்றும் உற்பத்தி திறன் பிரிவுகளில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ரூ. 650 கோடிகளை முதலீடு செய்ய திட்டமிட்டு இருக்கிறது. மேலும் புது சந்தைகளில் களமிறங்கவும் ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் கான்செப்ட் எக்ஸ்.எம். மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிய கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த கார் கான்செப்ட் எக்ஸ்.எம். என அழைக்கப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் கான்செப்ட் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனமாக விற்பனைக்கு வர இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. கான்செப்ட் எக்ஸ்.எம். மாடலில் வி8 என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இவை இணைந்து 750 பி.ஹெச்.பி. திறன், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இதன் ஆல்-எலெக்ட்ரிக் ரேன்ஜ் அதிகபட்சம் 80 கிலோமீட்டர்கள் ஆகும். பி.எம்.டபிள்யூ. எம் வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த மாடல் இது ஆகும்.

பி.எம்.டபிள்யூ. கான்செப்ட் எக்ஸ்.எம். மாடலில் பெரிய கிட்னி கிரில்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள், இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், எல்.இ.டி. ஹெட்லைட்கள், 23 இன்ச் வீல்கள் உள்ளன. இதன் பின்புறம் நான்-மடங்கு எக்சாஸ்ட் டிப்கள் உள்ளன.






