என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
டொயோட்டா நிறுவனத்தின் புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் மாடலை இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதில் ஒன்று பேஸ்லிப்ட் வெர்ஷன் மற்றொன்று ஸ்போர்ட் அம்சங்கள் நிறைந்த லெஜண்டர் வேரியண்ட் ஆகும். இரு மாடல்களும் ஜனவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
வெளியீட்டிற்கு முன் டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் மற்றும் லெஜண்டர் வெர்ஷன்களுக்கான டீசர்களை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இரு கார்களின் ஹெட்லைட்கள் காட்சியளிக்கிறது. பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலில் ஒற்றை ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல்களும், லெஜண்டர் மாடலில் ஸ்போர்ட் கிளஸ்டர் காணப்படுகிறது.

டொயோட்டா பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடலின் முன்புறம் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. லெஜண்டர் வெர்ஷனில் பிரம்மாண்ட முன்புறம், மெல்லிய கிரில், பெரிய ஏர் டேம், எல்இடி பாக் லேம்ப்கள் வழங்கப்படுகிறது.
புதிய டொயோட்டா பார்ச்சூனர் இரு வேரியண்ட்களிலும் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. எனினும், இவற்றின் என்ஜின் அம்சங்களில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் கிராஷ் டெஸ்டில் அசத்தி இருக்கிறது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் இசட்எஸ் எஸ்யுவி மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் எஸ்யுவி இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
எம்ஜி இசட்எஸ் எஸ்யுவி ASEAN NCAP கிராஷ் டெஸ்டிங்கை எதிர்கொண்டிருக்கிறது. புதிய இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட் கிராஷ் டெஸ்டிங்கில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது. இது பெரியவர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு புள்ளிகளை சேர்த்தது ஆகும்.

பெரியவர்கள் பாதுகாப்புக்கு எம்ஜி இசட்எஸ் எஸ்யுவி மாடல் 44.82 புள்ளிகளையும், குழந்தை பாதுகாப்பிற்கு 20.92 புள்ளிகளை பெற்று இருக்கிறது. தற்சமயம் சோதனை செய்யப்பட்ட இசட்எஸ் மாடல் தாய்லாந்து மற்றும் வியட்நாமில் விற்பனை செய்யப்படுகிறது.
எம்ஜி இசட்எஸ் மாடல் இந்திய சந்தையில் விற்பைக்கு வரவிருக்கும் நிலையில், இது தாய்லாந்து மற்றும் வியட்நாமில் விற்பனை செய்யப்படும் மாடலை விட வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. புதிய எம்ஜி இசட்எஸ் எஸ்யுவி குஜராத் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் டிசம்பர் 2020 விற்பனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் டிசம்பர் 2020 மாதத்தில் மட்டும் 1,60,226 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மாருதி சுசுகி 20.2 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து உள்ளது.

மொத்த விற்பனையில் உள்நாட்டில் மட்டும் 1,46,480 யூனிட்களும், வெளிநாடுகளுக்கு 9,938 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. இதுதவிர 3808 யூனிட்களை மற்ற நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து வழங்கி இருக்கிறது.
2020-2021 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 4,95,897 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 13.4 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் ஜிம்னி மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவங்கியது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வருடாந்திர விற்பனையில் வளர்ச்சி பெற்று இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டிசம்பர் 2020 விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. மேலும் வருடாந்திர விற்பனை விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதன்படி டிசம்பர் 2020 வாக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4,47,335 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது.
2019 டிசம்பரில் ஹீரோ மோட்டோகார்ப் 4,24,845 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. கடந்த மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 4,15,099 மோட்டார்சைக்கிள்களையும் 32,236 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

அக்டோபர் முதல் டிசம்பர் 2020 வரையிலான காலாண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 18.45 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனம் 15.41 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் ஹீரோ நிறுவனம் 19.7 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களை புதிய புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்து வெளியிட்டது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எம்5 சிஎஸ் மாடல் சக்திவாய்ந்த அம்சங்களுடன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செடான் மாடல்களில் பலரக்கும் விருப்பமான ஒன்றாக எம்5 சீரிஸ் இருக்கிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ எம்5 சந்தையில் வெளியாகி சில ஆண்டுகள் கழிந்துவிட்டது. தற்சமயம் புதிய எம்5 காம்படீஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய எம்5 மாடல் சக்திவாய்ந்த அம்சங்களுடன் உருவாகி வருகிறது. இந்நிலையில், புதிய எம்5 மாடலின் வெளியீட்டை உணர்த்தும் வகையில் டீசர் வீடியோவை பிஎம்டபிள்யூ வெளியிட்டு உள்ளது.
டீசரின் படி பிஎம்டபிள்யூ எம்5 சிஎஸ் மாடல் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என்றும் இது 635 ஹெச்பி பவர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த கார் எடை முந்தைய மாடலை விட 70 கிலோ வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜினுடன் 8 ஸ்பீடு எம் ஸ்டெப்-டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் எக்ஸ்-டிரைவ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் என இருவித ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 4WD, 4WD ஸ்போர்ட் மற்றும் 2WD டிரைவ் மோட்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
இத்துடன் புதிய பிஎம்டபிள்யூ எம்5 சிஎஸ் மாடல் தங்க நிறத்தால் ஆன அலுமினியம் வீல்கள், கார்பன் செராமிக் பிரேக் மற்றும் சிவப்பு நிற கேலிப்பர்களை கொண்டிருக்கிறது. இதன் கிரில் பகுதியை சுற்றி தங்கம் மற்றும் வெங்கல நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் இதில் மஞ்சள் நிற முகப்பு விளக்குகள் வழங்கப்படுகின்றன.
தற்போதைய பிஎம்டபிள்யூ எம்5 மாடலில் 4.4 லிட்டர் ட்வின் டர்போ வி8 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 625 ஹெச்பி பவர், 750 என்எம் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்க 305 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் பாதுகாப்பு சோதனையில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மேக்னைட் சப்-காம்பேக்ட் எஸ்யுவி மாடல் ASEAN NCAP பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் முன்பதிவில் 15 ஆயிரம் யூனிட்களை கடந்தது.

நிசான் மேக்னைட் ASEAN NCAP சோதனையில் பெற்ற புள்ளிகளின் முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. அந்த வகையில் இது பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பயணிக்கும் போது எந்த அளவு பாதுகாப்பானது என்ற விவரங்கள் இதுவரை மர்மமாகவே இருக்கிறது.
தற்சமயம் நிசான் மேக்னைட் மாடல் ஒரகடத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. புதிய எஸ்யுவி மாடல் டிசம்பர் 2020 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ எலெக்ட்ரிக் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து இருப்பதாக 2017 ஆம் ஆண்டு அறிவித்தன. இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் வாகனத்தை உற்பத்தி செய்து, விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தன.
இந்த கூட்டணி மூலம் நானோ ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் உருவாக்க இரு நிறுவனங்கள் திட்டமிட்டு இருந்தன. அன்று முதல் இந்த ஹேட்ச்பேக் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி வந்தன.

அந்த வரிசையில் இந்த காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த கார் ஜெயம் நியோ பிராண்டிங்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்சமயம் ஸ்பை படங்கள் வெளியாகி இருப்பதால், இந்த கார் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நியோ மாடலில் 17.7kW பேட்டரி பேக் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 23 பிஹெச்பி செயல்திறன் வழங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 203 கிலோமீட்டர் செல்லும் என தெரிகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் புதிதாக எம்பிவி கார் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் எம்பிவி மாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கியா செல்டோஸ் மாடல் உருவான பிளாட்பார்மை பயன்படுத்தும் என கூறப்படுகிறது.
முன்னதாக புதிய கியா எம்பிவி கார் இந்த மாதம் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், தற்போதைய தகவல்களில் புதிய எம்பிவி மாடல் வெளியீடு தாமதமாகி இருப்பதாக கூறப்படுகிறது. கியா எம்பிவி மாடல் ஜனவரி 2022 ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய ஏழு பேர் பயணிக்கக்கூடிய எம்பிவி மாடல் மாரது எர்டிகா மற்றும் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடல்களின் மேல் நிலை நிறுத்தப்படலாம் என தெரிகிறது. புதிய எம்பிவி மாடல் கேவை எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
முதற்கட்டமாக இந்த எம்பிவி மாடல் உள்நாட்டில் மட்டும் 50 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு, 26 ஆயிரம் யூனிட்கள் ஏற்றுமதி செய்ய கியா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. இந்த கார் உற்பத்தி பணிகள் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆலையில் நடைபெற இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
மஹிந்திரா நிறுவனம் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய தலைமுறை ஸ்கார்பியோ மாடல் ஏப்ரல் முதல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய தலைமுறை எக்ஸ்யுவி500 மாடல் வெளியீட்டை தொடர்ந்து ஸ்கார்பியோ வெளியீடு நடைபெறும் என தெரிகிறது.
புதிய எக்ஸ்யுவி500 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படுகின்றன. மேலும் இதில் பல்வேறு புது அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
ஹோண்டா நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடலுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது யுனிகான் 150சிசி மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த மாதம் அறிவித்த ஆண்டு இறுதி சலுகைகளின் அங்கமாக அமைந்து உள்ளது.
புதிய அறிவிப்பின் படி ஹோண்டா யுனிகான் மாடலுக்கு ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது. இது கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்த மாத தவணை திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாத தவணை சலுகையை பெற கூடுதல் ஆவணங்கள் மற்றும் வங்கி சார்ந்த நடைமுறைகளை பின்பற்றி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இந்த திட்டத்தில் முன்பணம் எதுவும் செலுத்த தேவையில்லை. கார்டு சார்ந்த மாத தவணை முறை வசதி பைன் லேப்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.
ஹோண்டா யுனிகான் தவிர சிடி110 டீலக்ஸ், ஹார்னெட் 2.0, எஸ்பி125, ஷைன் மற்றும் எக்ஸ்-பிளேடு போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் இதேபோன்ற சலுகை முன்னதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஆக்டிவா மற்றும் கிரேசியா போன்ற ஸ்கூட்டர்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் புது வேரியண்ட் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய கிராவிடாஸ் மாடல் காரை ஜனவரி 26 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே கார் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த மாடல் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யுவி500 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
புதிய டாடா கிராவிடாஸ் மாடலில் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
டாடா கிராவிடாஸ் புதிய வேரியண்ட்டில் எலெக்டிரானிக் பார்க்கிங் பிரேக், புது வடிவமைப்பு, எல்இடி டெயில் லைட்கள், ஸ்டெப்டு ரூப், ரேக்டு ரியர் விண்ட்ஷீல்டு, புதிய அலாய் வீல், சன்ரூப் என பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் விர்டுஸ் மாடல் இந்திய சந்தையில் சோதனை செய்யப்படுகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய விர்டுஸ் செடால் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த கார், முற்றிலும் மறைக்கப்படாத நிலையில் மும்பை அருகில் சோதனை செய்யப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக 2017 ஆண்டு இதே மாடல் தென் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. போக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல் MQB-AO பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் வென்டோ மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.
இந்த கார் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறரப்படுகிறது. இவற்றுடன் 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் மற்றும் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி யூனிட் வழங்கப்படலாம்.






