என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    ஜாவா நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை மையங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் தாய் நிறுவனமான கிளாசிக் லெஜண்ட்ஸ் இந்தியாவில் தனது பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் மாநிலங்களில் இவற்றை துரிதப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    கடுமையான நெருக்கடி காலக்கட்டத்திலும் கிளாசிக் லெஜண்ட்ஸ் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வந்தது. சிறப்பான பணியாட்கள் மூலம்தான் இது சாத்தியமானது. ஏற்கனவே வாகனத்தை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியை சரியாக மேற்கொள்ள இது அடித்தளமாக அமைந்துள்ளது என கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்துள்ளது.

    ஊரடங்கில் தளர்வுகள் பெறும் மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார்சைக்கிள் விநியோகம் துரிதப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 2021 வாக்கில் ஜாவா பார்டி டு ஸ்போர்ட்ஸ் ஸ்டிரைப் மாடல் புது கிராபிக்ஸ், சிறு காஸ்மெடிக் மாற்றங்கள், அலாய் வீல், டியூப்லெஸ் டையர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. 

     ஜாவா மோட்டார்சைக்கிள்

    வாகனங்களில் மாற்றம் செய்ததால், வாகன விற்பனை கணிசமாக அதிகரித்து இருக்கிறது. பார்டி டூ மாடலுக்கான முன்பதிவு மற்றும் காத்திருப்பு காலம் அதிகரித்து இருக்கிறது. விரைவில் இந்த மாடலுக்கான விநியோகம் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தற்போது நாடு முழுக்க சுமார் 175 ஜாவா விற்பனை மையங்கள் சுமார் 150-க்கும் அதிக நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 275 ஆகவும், அடுத்த 12 மாதங்களில் இது 500 ஆகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    லெக்சஸ் நிறுவனத்தின் எல்சி கன்வெர்டிபில் மாடல் 12 மணி நேரங்கள் உறைபனியில் நிறுத்தப்பட்டு, பின் இயக்க முயற்சி செய்யப்பட்டது.


    லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடல் நீல நிற வானம் மற்றும் சூரிய வெளிச்சத்தை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் லெக்சஸ் சோதனை ஒன்றை செய்து பார்க்க முடிவு செய்தது. 

    காரின் உறுதித்தன்மையை நிரூபிக்க லெக்சஸ் மிகவும் விசித்திர சோதனையை எல்சி கன்வெர்டிபில் மாடலில் மேற்கொண்டது. அதன்படி லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் 12 மணி நேரம் உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதற்கென தொழில்துறை நிறுவனங்களில் உள்ள கருவிகள் பயன்படுத்தப்பட்டன. 

     லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில்

    லெக்சஸ் எல்சி கன்வெர்டிபில் மாடலில் உள்ள நான்கடுக்கு ரூப் திறக்கப்பட்ட நிலையில், உறைபனியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காரின் உள்புறம் முழுமையாக குளிரூட்டப்பட்டது. குளிர்ந்த நிலையில், காரின் ஹீட்டெட் சீட், ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை இயங்கும் என லெக்சஸ் நிறுவன மூத்த பொறியாளர் தெரிவித்தார்.

    உறைபனியில் இருந்து எடுக்கப்பட்டதும், கார் இயக்கப்பட்டது. இதற்கான சோதனை பகுதி அதிக வளைவுகள், உயரமான பகுதி, தாழ்வான பகுதிகளை கொண்டிருந்தது. உறைபனியில் இருந்து எடுக்கப்பட்ட பின் காரை முதல் முறை ஸ்டார்ட் செய்ததுமே, என்ஜின் ஆன் ஆனது.
    கொரோனா அச்சம் காரணமாக ரெனால்ட் - நிசான் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வர மறுத்துள்ளனர்.


    ரெனால்ட் - நிசான் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு வரமாட்டோம் என தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நிறுவனத்திற்கு ஊழியர்கள் நலசங்க தலைவர் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 

     ரெனால்ட் கார் - கோப்புப்படம்

    கொரோனா அச்சம் காரணமாக மே 31 ஆம் தேதி பணிக்கு வருவது ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்காது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக போர்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படும் ஆலை பணிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதாக கடந்தவாரம் அறிவித்தன. 

    ஊழியர்கள் தரப்பு வாதம் குறித்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையை சுற்றி பணியாற்றி வரும் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்7 ஸ்பெஷல் எடிஷன் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது எக்ஸ்7 எஸ்யுவி மாடலின் ஸ்பெஷல் எடிஷனுக்கான டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கிறது. புது ஸ்பெஷல் எடிஷன் டார்க் ஷேடோ எடிஷன் என அழைக்கப்படுகிறது. இது காரின் வெளிப்புறத்தில் புது நிறம், கிளாஸ் பிளாக் இன்சர்ட்களை கொண்டிருக்கிறது.

    முன்னதாக இதே மாடல் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. தற்போது இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. வெளிப்புறம் மெட்டாலிக் புரோசன் ஆர்க்டிக் கிரே நிறம் கொண்டிருக்கிறது. டார்க் ஷேடோ எடிஷனில் 22 இன்ச் எம் லைட் வி ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளது. இது ஜெட் பிளாக் மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது.

     பிஎம்டபிள்யூ எக்ஸ்7 டார்க் ஷேடோ எடிஷன்

    இந்த கார் 6 அல்லது 7 பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கும். உள்புறம் நைட் புளூ / பிளாக் லெதர் இருக்கைகள் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம்  செய்யப்பட்ட டார்க் ஷேடோ எடிஷன் 500 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இந்தியாவுக்கு எத்தனை யூனி்கள் கொண்டுவரப்படும் என இதுவரை எந்த தகவலும் இல்லை.

    பிஎம்டபிள்யூ எக்ஸ்7 டார்க் ஷேடோ எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் உள்ளது. இது 261 பிஹெச்பி பவர், 620 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன்  பெட்ரோல் என்ஜின் 335 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிப்டர்கள் உள்ளன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் புது மாற்றத்துடன் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் எஸ்யுவி மாடலுக்கு புதிய அலாய் வீல்களை சமீபத்தில் வழங்கியது. இதைத் தொடர்ந்து புது அலாய் வீல்களை கொண்ட நெக்சான் யூனிட்கள் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளன. முந்தைய வி வடிவ ஸ்போக் அலாய் வீல்களுக்கு மாற்றாக இம்முறை 5 ஸ்போக் கொண்ட 16 இன்ச் டூயல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    சமீபத்தில் நெக்சான் டெக்டானிக் புளூ நிற வேரியண்ட் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியது. தற்போது நெக்சான் மாடல் - போலியஜ் கிரீன், கேல்கேரி வைட், பிளேம் ரெட், பியூர் சில்வர் மற்றும் டேடோனா கிரே என ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.

     டாடா நெக்சான்

    புதிய டைமண்ட் கட் அலாய் வீல்கள் - XZ+, XZ+ (S), XZ+ (O), XZA+, XZA+ (O) மற்றும் XZA+ (S) என தேர்வு செய்யப்பட்ட சில வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. புது அலாய் வீல்கள் தவிர நெக்சான் மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்தியாவில் டாடா நெக்சான் விலை ரூ. 7.19 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 12.95 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    யமஹா நிறுவனத்தின் புதிய E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.


    யமஹா நிறுவனம் தனது E01 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரோடக்ஷன் மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த ஸ்கூட்டரின் கான்செப்ட் மாடல் 2019 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

     யமஹா E01

    இந்த ஸ்கூட்டருக்கான E01 பெயரை யமஹா ஏற்கனவே பதிவு செய்துவிட்டது. அந்த வகையில், இதன் ப்ரோடக்ஷன் மாடலும் E01 என்றே அழைக்கப்படலாம். ப்ரோடக்ஷன் மாடல் முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் வடிவம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், ஸ்டைலிங்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.

    ப்ரோடக்ஷன் மாடலின் டெயில் பகுதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் கிராப் ரெயில்கள் இண்டகிரேட் செய்யப்பட்டு, சீட் அளவில் சிறியதாகவும் வித்தியாசமாகவும் உள்ளது. எலெக்ட்ரிக் மோட்டார் சற்றே உயரமாகவும், முன்புற ஸ்பிராகெட்டுக்கு பின் பொருத்தப்படுகிறது.
    ஜீப் நிறுவனத்தின் புதிய கமாண்டர் மாடலின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
     

    ஜீப் நிறுவனம் சர்வதேச சந்தையில் கமாண்டர் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கமாண்டர் மாடலுக்கான டீசர் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஹெச்6 எனும் குறியீட்டு பெயரில் இந்த மாடல் அழைக்கப்பட்டு வந்தது. 

    இதுதவரை உலகின் பல்வேறு பகுதிகளில் ஜீப் கமாண்டர் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி உள்ளன. புதிய கமாண்டர், காம்பஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் மூன்றாம் அடுக்கு இருக்கைகள் பொருத்தப்படுவதால் காம்பஸ் மாடலை விட நீளமாக இருக்கிறது.

     ஜீப் கமாண்டர் டீசர்

    இதன் வெளிப்புறம் 7 பாக்ஸ் முன்புற கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், பின்புறம் ஸ்ப்லிட் ரக எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் உள்புற அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், வயர்லெஸ் சார்ஜிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம் என தெரிகிறது.  

    புதிய ஜீப் கமாண்டர் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. ஜீப் கமாண்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    ஐக்கிய ராஜ்ஜியத்தின் பொது சாலைகளில் தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
     

    ஐக்கிய ராஜ்ஜியத்தில் பயணிகள் வாகனம் மட்டுமின்றி பொது போக்குவரத்து முறைகளிலும் தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. சமீபத்தில் தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் பொது சாலையில் சோதனை செய்யும் திட்டம் இங்கு துவங்கப்பட்டு இருக்கிறது.  

    ஆரிகோ ஆட்டோ ஷட்டில் என அழைக்கப்படும் இந்த விசேஷ பேருந்துகள் கேம்ப்ரிட்ஜ் நகரில் சிறப்பு சோதனை செய்யப்படுகிறது. இந்த தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்து 3.2 கிலோமீட்டர் வழிதடத்தில் சென்றுவரும். சோதனையின் போது தேர்வு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பேருந்தினுள் அனுமதிக்கப்படுவர். 

     ஆரிகோ எலெக்ட்ரிக் பேருந்து

    இதற்காக பயணிகள் ஆரிகோ செயலியை பயன்படுத்தி எங்கு ஏற வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என்ற விவரங்களை பதிவிட வேண்டும். ஆரிகோ தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் மணிக்கு அதிகபட்சம் 32 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஒவ்வொரு பேருந்திலும் ஒரே சமயத்தில் பத்து பயணிகள் பயணம் செய்ய முடியும்.
    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடலின் புது வேரியண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.


    மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 5 கதவுகள் கொண்ட தார் எஸ்யுவி மாடல் விற்பனைக்கு வரும் என அறிவித்து இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் 2023-2026 வரையிலான காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    2021 நிதியாண்டின் நான்காவது காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வெளியிடும் போது மஹிந்திரா இந்த தகவலை வெளியிட்டது. தார் மாடலின் புது வேரியண்ட் மட்டுமின்றி 2026 ஆம் ஆண்டு பல்வேறு புது மாடல்களை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. 

     மஹிந்திரா கார்

    புது மாடல்களில் புத்தம் புதிய பொலிரோவும் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இரு மாடல்களின் சரியான வெளியீட்டு விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இவற்றுடன் சில எலெக்ட்ரிக் மாடல்களும் அறிமுகம் செய்யப்படும் என மஹிந்திரா தெரிவித்தது.
    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டைகுன் மாடல் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தைக்கான எஸ்யுவி மாடல்களின் வெளியீட்டு விவரத்தை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி 2021 டி ராக் எஸ்யுவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    இத்துடன் வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் டைகுன் எஸ்யுவி கார் முதல் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்படும் என வோக்ஸ்வேகன் பிராண்டு இயக்குனர் ஆசிஷ் குப்தா தெரிவித்தார்.

     வோக்ஸ்வேகன் டைகுன்

    வெளியீடு நெருங்கி வரும் நிலையில், நாட்டின் சில வோக்ஸ்வேகன் விற்பனையாளர்கள் புதிய டைகுன் மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கின்றன. புதிய டைகுன் மாடல் பல்வேறு வேரியண்ட்கள், வெவ்வேறு என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் துவக்க விலை ரூ. 10 லட்சம் வரை இருக்கலாம்.
    ஹோண்டா நிறுவனத்தின் CB300R பிஎஸ்6 மாடல் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் CB சீரிசில் பல்வேறு மாடல்கள் பிஎஸ்6 அப்டேட் செய்யப்பட்டன. முன்னதாக ஹைனெஸ் CB300 மற்றும் CB300RS மாடல்களை ஹோண்டா இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களும் ஹோண்டா CB300R மாடலுக்கு மாற்றாக என்ட்ரி லெவல் பிரீமியம் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டன.

    ஹோண்டாவின் CB300R பிஎஸ்6 மாடல் வெளியீடு பற்றி எந்த தகவலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹோண்டா விரைவில் CB300R பிஎஸ்6 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    ஹோண்டா CB300R

    புதிய CB300R மாடல் ஹோண்டாவின் பிரீமியம் பிங்விங் விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. புது மாடலில் CB300R பிஎஸ்4 வேரியண்டில் வழங்கப்பட்ட என்ஜினின் பிஎஸ்6 வெர்ஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    பிஎஸ்4 மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் 286சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 31.4 பிஹெச்பி பவர், 27 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 
    ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியது.


    ஹூண்டாய் நிறுவனம் தமிழக அரசுக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. தமிழகத்தை கொரோனா தொற்றில் இருந்து மீட்க ஹூண்டாய் தொடர்ந்து உதவிகளை செய்து ஆதரவளித்து வருகிறது. மருத்துவ உபகரணம் ஸ்ரீபெரும்புதூர் ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாரிடம் வழங்கப்பட்டது.

     ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கும் ஹூண்டாய்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இந்த முயற்சி ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனை ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் துவங்கியது.

    ஹூண்டாய் கேர்ஸ் 3.0 முயற்சியின் கீழ் பேக் டு லைப் எனும் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான மருத்துவ உபகரணங்களை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது இந்தியா முழுக்க பாதிப்பு நிறைந்த மாநிலங்களை மீட்க உதவியாக இருக்கும்.
    ×