என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடல் கார் தாய்லாந்து மோட்டார் எக்ஸ்போ 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடல் கார் தாய்லாந்து சர்வதேச மோட்டார் எக்ஸ்போ 2019 விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய காரின் முன்புறம் சிறிய கிரில், மெஷ் டிசைன் கொண்டிருக்கிறது. இதன் பம்ப்பர் ஏர் டேம்கள், லிப்-ஸ்பாயிலர் மற்றும் ரெட் ஹைலைட் கொண்டிருக்கிறது. ஹெட்லேம்ப்பில் கார் நிறத்துடன் ஒற்றுபோகும் பேனல் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. பொனெட் நடுவே கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது.
பக்கவாட்டில் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட ஃபென்டர் எக்ஸ்டென்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. வீல் ஆர்ச்கள் பிரம்மாண்டமாகவும், மல்டி-ஸ்போக் அலாய் வீல்களும் புதிய காரின் குறிப்பி்டத்தக்க அம்சமாக இருக்கிறது.

காரின் பின்புறம் ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் வழங்கப்பட்டுள்ளது. காரின் உள்புறம் பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. ஸ்விஃப்ட் மாடல் கார் இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு முதல் விற்பனையாகிறது. தற்சமயம் இதன் மூன்றாம் தலைமுறை மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்சமயம் இந்தியாவில் விற்பனையாகும் ஸ்விஃப்ட் மாடல் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றில் ஒன்று பி.எஸ்.6 விதிகளுக்கு பொருந்தும் வகையிலும், மற்றொன்று 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசுகி நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி ஒன்பது மாதங்களுக்கு பின் அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் ஒன்பது மாதங்களுக்குப் பின் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் நவம்பர் மாதத்தில் தனது வாகனங்கள் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறது.
விற்பனை குறையத் தொடங்கிய நிலையில், நிதி ஆண்டின் முதல் மாதமான ஏப்ரலில் மாருதி சுசுகி நிறுவனம், இலகுரக வர்த்தக வாகனமான சூப்பர் கேரி உள்பட தனது வாகனங்கள் உற்பத்தியை 10 சதவீதம் குறைத்து 1,47,669 வாகனங்களை மட்டுமே தயாரித்தது. மே மாதத்தில் உற்பத்தியை சுமார் 18 சதவீதம் குறைத்து 1,51,188 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்தது.
ஜூன் மாதத்தில் அதன் உற்பத்தி 15.6 சதவீதம் சரிந்து 1,11,917-வாகனங்களாக இருந்தது. ஜூலை மாதத்தில் இந்நிறுவனம் மொத்தம் 1.33 லட்சம் வாகனங்களை தயாரித்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் அது 25 சதவீத சரிவாக இருந்தது. ஆகஸ்டு மாதத்தில் அதன் உற்பத்தி 34 சதவீத சரிவுடன் 1,11,370-ஆக இருந்தது.

செப்டம்பர் மாதத்தில் 1,32,199 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,60,219-ஆக இருந்தது. அந்த வகையில் உற்பத்தி 17 சதவீதம் சரிவடைந்து இருந்தது. அக்டோபர் மாதத்தில் உற்பத்தி சுமார் 21 சதவீதம் குறைந்து 1,19,337 வாகனங்களாக இருந்தது.
மாருதி சுசுகியின் வாகனங்கள் உற்பத்தி 9 மாதங்கள் தொடர் சரிவுக்குப் பின் நவம்பர் மாதத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த மாதத்தில் இந்நிறுவனம் 1,41,834 வாகனங்களை தயாரித்து இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 1,35,946-ஆக இருந்தது. ஆக, உற்பத்தி 4.33 சதவீதம் உயர்ந்துள்ளது.
யமஹா நிறுவனத்தின் ஆர்15 வி3 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
யமஹா நிறுவனத்தின் ஆர்15 வி3 பி.எஸ். 6 மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆர்15 மாடலின் விலை ரூ. 1.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது பி.எஸ். 4 மாடலின் விலையை விட ரூ. 3000 அதிகம் ஆகும்.
புதிய பி.எஸ்.6 ஆர்15 மாடலின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், இதன் விநியோகம் டிசம்பர் மாத மூன்றாவது வாரத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் யமஹா ஆர்15 மோட்டார்சைக்கிள் 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகமான காலக்கட்டத்தில் இந்தியாவின் சக்திவாய்ந்த 150சிசி மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருந்தது. அறிமுகமானது முதல் பலமுறை அப்டேட் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த மாடலுக்கு பி.எஸ். 6 ரக என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆர்15 வி3 பி.எஸ்.6 மாடலில் 155சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 18.3 பி.ஹெச்.பி. பவர், 14.1 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய மோட்டார்சைக்கிளின் முன்புறம் ட்வின் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபாக்ஸ் ரேம் ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் கூர்மையான மற்றும் ஸ்போர்ட் ஃபேரிங் கொண்டிருக்கிறது. பின்புறம் எல்.இ.டி. டெயில் லேம்ப் மற்றும் பிரத்யேக கவுல் வழங்கப்பட்டுள்ளது.
2019 நவம்பர் மாதத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 42 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
பன்முக பயன்பாட்டு வாகனங்கள், டிராக்டர், பேருந்து மற்றும் வேன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், 2019 நவம்பர் மாதத்தில் மொத்தம் 2,112 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் ஃபோர்ஸ் மோட்டார்ஸ் மொத்தம் 1,489 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.
அந்த வகையில் 2019 நவம்பர் மாதத்தில் ஃபோர்ஸ் நிறுவன விற்பனை 42 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. மேலும் ஏற்றுமதி (12-ல் இருந்து) 176-ஆக உயர்ந்துள்ளது. உள்நாட்டு விற்பனை (1,477-ல் இருந்து) 1,936-ஆக உயர்ந்து இருக்கிறது.

விற்பனை உயர்வு காரணமாக ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு 9.82 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,052.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,015-க்கும் சென்றது. இறுதியில் ரூ.1,018.70-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.78 சதவீத இறக்கமாகும்.
இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ஆக்சா எனர்ஜீஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்திய பைக் வாரம் 2019 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. மாண்டிஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நேக்கெட் எலெக்ட்ரிக் ஸ்போர்ட் மாடல் ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
மேலும் இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிளில் 9 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்களே போதும்.

முழுமையான டிஜிட்டல் டேஷ்போர்டு கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிள் விவரங்களை பிரத்யேக மொபைல் செயலி மூலம் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் மோட்டார்சைக்கிள் செல்லும் வேகம், பேட்டரி நிலவரம் போன்ற விவரங்களை பார்க்க முடியும்.
ஃபோர்டு நிறுவனத்தி்ன் மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5 கோடி வரையிலான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
ஃபோர்டு கார் நிறுவனம் சார்பில் மிட்நைட் சர்ப்ரைஸ் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விற்பனையின் அங்கமாக கார்களை முன்பதிவு செய்வோருக்கு ரூ.5 கோடி வரை பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. மிட்நைட் சர்ப்ரைஸ் திட்டத்தின் படி ரூ.5 கோடி மதிப்புள்ள மேம்பட்ட வசதி, தவிர்க்கமுடியாத ஒப்பந்தங்கள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பரிசுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இந்த சலுகை அறிவிப்பையொட்டி ஃபோர்டு கார் விற்பனை மையங்கள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை திறந்திருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் கார்களை இயக்கி பார்த்தல், முன்பதிவு செய்தல் உள்ளிட்டவற்றுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

சலுகை அறிவிக்கப்பட்ட நாட்களில் ஃபோர்டு காரை முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பரிசு வவுச்சர் கிடைக்கும். இந்த மாதத்துக்குள் கார்களை டெலிவரி செய்யும்போது உறுதியான பரிசுகளையும் அவர்கள் பெறுவார்கள். மிட்நைட் சர்ப்ரைஸ் சலுகை திட்டத்தின்போது செய்யப்பட்ட கார் முன்பதிவுகளுக்கான பரிசுகளில் பிரீமியம் வீட்டு உபகரணங்கள், இசை அமைப்பு, சர்வதேச அல்லது உள்நாட்டு விடுமுறை வவுச்சர்கள் மற்றும் தங்க நாணயம் ஆகியவை அடங்கும்.
ஃபோர்டு பிகோ, ஃபோர்டு ஆஸ்பையர், ஃபோர்டு ஃபிரீஸ்டைல், ஃபோர்டு இகோஸ்போர்ட் மற்றும் ஃபோர்டு எண்டேவர் ஆகியவற்றை உள்ளடக்கிய போர்டின் அனைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும்.
மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் பிரான்ஸ் அதிபர் மாளிகையில் பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் தயாராகும் கார், மோட்டார்சைக்கிள் மற்றும் கனரக வாகனங்கள், பேருந்து உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் முதல் முறையாக இந்தியாவிலிருந்து எலெக்ட்ரி ஸ்கூட்டர்கள் பிரான்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் பிரான்ஸ் அதிபர் மாளிகையில் பயன்படுத்துவதற்காக வாங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரி ஸ்கூட்டர்களை உருவாக்கிய பெருமை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தையே சாரும். இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான பியூஜியாட் இ-லுடிக்ஸ் என்ற பெயரில் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்களைத் தயாரித்து உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பீதம்பூர் எனுமிடத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த எலெக்ட்ரி ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. பிரெஞ்சு அதிபரின் அதிகாரபூர்வ மாளிகையில் இது பயன்படுத்தப்பட உள்ளது. அதிபர் மாளிகையில் இயங்கும் பல்வேறு துறைகளின் ஆவணங்களை எடுத்துச்செல்வதற்கு இது பயன்படுத்தப்படும்.

அதிபர் மாளிகையில் முதல் முறையாக பயன்படுத்தப்படும் எலெக்ட்ரி ஸ்கூட்டர் இந்திய தயாரிப்பு என்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். இது சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மேலும் பல ஸ்கூட்டர்களை வாங்கவும் அதிபர் மாளிகை முடிவு செய்துள்ளது.
இது 3 கிலோவாட் திறன் கொண்டதாகும். அதாவது பெட்ரோலில் இயங்கும் 50 சி.சி. மொபெட்டுக்கு இணையான திறன் கொண்டது. இது மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இதன் எடை 85 கிலோவாகும்.
இதில் 9 கிலோ எடை கொண்ட போஷ் லித்தியம் அயன் பேட்டரியும் அடங்கும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கி.மீ. தூரம் ஓடும். இத்தகைய பேட்டரி ஸ்கூட்டரை இந்திய சந்தையிலும் அறிமுகப்படுத்த பியூஜியாட் திட்டமிட்டு உள்ளது.
டிரையம்ப் நிறுவனத்தின் ராக்கெட் 3 ஆர் பிரீமியம் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் நிறுவனம் தனது புதிய மாடலான ராக்கெட் 3 ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த மாடல் சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ராக்கெட் 3 ஆர் மோட்டார்சைக்கிள் ராக்கெட் 3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜி.டி. என இரு மாடல்களில் அறிமுகமாகி உள்ளது. இன் விலை ரூ. 18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாடல் 2,500 சி.சி. திறன் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 167 ஹெச்.பி. திறனை 6 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும், 221 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 4 ஆயிரம் ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. புதிய என்ஜின் 18 கிலோ எடை குறைவானது.
மேலும் கிராங்க் கேஸ் அசெம்பிளி, லூப்ரிகேஷன் சிஸ்டம், பேலன்ஸ் ஷாஃப்ட் உள்ளிட்டவைகளின் எடையும் குறைந்ததால் ஒட்டுமொத்தமாக ராக்கெட் 3 மாடல் முந்தைய மாடலைக் காட்டிலும் 40 கிலோ வரை எடை குறைவாகும். இது முழுக்க முழுக்க மின்னணு கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மோட்டார்சைக்கிளின் செயல்பாடு சரிவர உள்ளதா என்பதை இதில் உள்ள கருவிகளே சரிபார்த்து வெளிப்படுத்தும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பிரேக்குகளும் தனித்துவமிக்கவை. முன்சக்கரத்தில் 320 மி.மீ. டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 300 மி.மீ. டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை விரைவில் மாற்றம் செய்ய இருக்கிறது. முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது கார் மாடல்களின் விலையை ஜனவரி 1, 2020 முதல் உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் செலவீனங்கள் உயர்ந்து இருப்பதால் கார் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மாருதி சுசுகி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை மாருதி நிறுவன கார்களின் மாடல்களுக்கு ஏற்ப வேறுபடும். விலை உயர்வு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் மாருதி சுசுகி நிறுவன வாகனங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு விலை உயர்வுக்கு பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கூறப்பட்டது. ஒவ்வொரு ஆண்டு துவக்கத்திலும் வாகன விலை உயர்வு ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையான ஒன்றாக மாறிவருகிறது.
தற்சமயம் மாருதி சுசுகி இந்தியாவின் வாகனங்கள் விலை ஆல்டோ மாடல் ரூ. 2.88 லட்சத்தில் துவங்குகிறது. இந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலான எக்ஸ்.எல்.6 விலை ரூ. 9.79 லட்சத்தில் துவங்கி 11.46 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாகன விற்பனை 8 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 2019 நவம்பர் மாதத்தில் ஏற்றுமதி உள்பட மொத்தம் 60,411 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மொத்தம் 65,744 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 8 சதவீதம் சரிந்துள்ளது.
உள்நாட்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 10 சதவீதம் சரிவடைந்து (65,026-ல் இருந்து) 58,292-ஆக குறைந்துள்ளது. எனினும் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி 195 சதவீதம் அதிகரித்து 2,119-ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 718 வாகனங்கள் என்ற அளவில் இருந்தது.

இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட், கிளாசிக், தண்டர்பேர்டு, ஹிமாலயன், இன்டர்செப்டார், கான்டினென்ட்டல் ஜி.டி. போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் ஹிமாலயன் ஃபிளாட் டிராக்கர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் எய்ஷர் மோட்டார்ஸின் துணை நிறுவனம் ஆகும். மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது எய்ஷர் மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ரூ.21,460-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.21,626.60-க்கும், குறைந்தபட்சமாக ரூ.21,337.80-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.21,424.45-ல் நிலைகொண்டது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது இது 0.11 சதவீத முன்னேற்றமாகும்.
எம்.ஜி. மோட்டார் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்.எஸ். இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இசட்.எஸ். இ.வி. கார் இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காருடன் விற்பனை செய்யப்படுகிறது.
புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் ஜனவரி 2020 வாக்கில் விற்பனைக்கு வருகிறது. வெளியீட்டுக்கு முன் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் புதிய காரின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்திய சந்தயில் புதிய கார் இசட்.எஸ். இ.வி. என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது.
எம்.ஜி. இசட்.எஸ். இ.வி. கார் 44.5 கிலோவாட் பேட்டரி பேக் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது அதிகபட்சமாக 141 பி.ஹெச்.பி. பவர் செயல்திறன் வழங்குகிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 340 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் இந்த காரை ஃபாஸ்ட் சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் போது 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும்.

காரின் உள்புறம் முழுக்க கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் டேஷ்போர்டு பிரீமியம் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. டேஷ்போர்டில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன், ரிவர்ஸ் / பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் புதிய காரில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஹீட்டெட் முன்புற இருக்கைகள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் ஃபோர்டம் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதல் 50 கிலோவாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மையத்தில் குர்கிராமில் துவங்கியது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 2019 நவம்பர் விற்பனையில் 22 சதவீதம் சரிவை சந்தித்து இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் 2019 நவம்பர் மாதத்திற்கான வாகனங்கள் விற்பனை விவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி டொயோட்டா நிறுவனம் நவம்பர் 2019-ல் மொத்தம் 9,241 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆண்டு நவம்பர் மாதத்தில் டொய்ட்டா நிறுவனம் 11,390 கார்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில் இந்த ஆண்டு விற்பனை 19 சதவீதம் குறைந்துள்ளது.

அதாவது 10,721 கார்களில் இருந்து 8,312 கார்களை இந்த ஆண்டு நவம்பரில் விற்பனை செய்து இருப்பதால் உள்நாட்டில் இதன் விற்பனை 22 சதவீதம் குறைந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் டொயோட்டா நிறுவனம் 929 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 669 யூனிட்களை ஏற்றுமதி செய்து இருந்தது.
அந்த வகையில் டொயோட்டாவின் ஏற்றுமதி 39 சதவீதம் உயர்ந்துள்ளது. தற்சமயம் வாகன விற்பனை சரிவை சந்தித்து இருந்தாலும், வரும் மாதங்களில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படலாம் என டொயோட்டா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






