என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    டுகாட்டி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிள் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    டுகாட்டி நிறுவனம் தனது புதிய மோட்டார்சைக்கிளின் டீசரை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய டுகாட்டி பேணிகேல் வி2 மோட்டார்சைக்கிள் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டு இருக்கிறது. டீசர் வெளியீட்டை தொடர்ந்து விரைவில் இந்த மோட்டார்டைக்கிள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

    முன்னதாக டுகாட்டி பேணிகேல் வி2 மோட்டார்சைக்கிள் 2019 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இது தற்சமயம் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருக்கிறது. டுகாட்டி பேணிகேல் வி2 மோட்டார்சைக்கிள் சரியான இந்திய வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

    டுகாட்டி பேணிகேல் வி2 டீசர்

    எனினும், வரும் வாரங்களில் கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் புதிய டுகாட்டி பேணிகேல் வி2 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வெளியானதும், டுகாட்டி பேணிகேல் வி2 இந்திய சந்தையில் இத்தாலி நிறுவனத்தின் முதல் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடலாக இருக்கும். 

    புதிய டுகாட்டி பேணிகேல் வி2 மோட்டார்சைக்கிளில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 955சிசி சூப்பர் குவாட்ரோ எல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பிஹெச்பி பவர், 104 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரெக்ஷனல் குவிக் ஷாஃப்டர் வழங்கப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஃபோர்டு நிறுவத்திற்கு 500 கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவனம் கணித்திருக்கிறது.



    ஃபோர்டு மோட்டார் கோ நிறுவனம் இரண்டாவது காலாண்டு இழப்பு 500 கோடி டாலர்களாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் காலாண்டு இழப்பு 200 கோடி டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை இழப்புக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பே காரணமாக கூறப்படுகிறது.

    வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும், நிறுவனத்தின் கையிருப்பு தொகையை கொண்டு இந்த ஆண்டு இறுதி வரை சமாளிக்க போதுமானதாக இருக்கும். எனினும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான வருவாய் கணிப்புகளை வெளியிடுவது சரியானதாக இருக்காது என ஃபோர்டு நிறுவன மூத்த நிதி அலுவலர் டிம் ஸ்டோன் தெரிவித்திருக்கிறார். 

    ஃபோர்டு

    தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு முதன்மை அதிகாரிகளின் ஊதியத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளையும் ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது. இதுதவிர எதிர்கால திட்டங்கள் சார்ந்த பணிகளையும் ஃபோர்டு நிறுவனம் நிறுத்தி இருக்கிறது. 

    இதன் காரணமாக ஃபோர்டு தானியங்கி வாகன சேவைகள் ஓராண்டு தாமதமாக வெளியாக இருக்கிறது. இதுதவிர ரிவியன் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்க இருந்த ஆடம்பர எலெக்ட்ரிக் வாகனத்திற்கான பணிகளையும் ஃபோர்டு நிறுத்தி வைத்திருக்கிறது.
    மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.



    மஹிந்திரா நிறுவனம் சத்தமில்லாமல் புதிய அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் துவக்க விலை ரூ. 28.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மஹிந்திராவின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடலான அல்டுராஸ் ஜி4 - 2WD மற்றும் 4WD என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப் எண்ட் 4WD வேரியண்ட் விலை ரூ. 31.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ்4 மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய பிஎஸ்6 விலை ரூ. 1 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    மஹிந்திரா அல்டுராஸ் ஜி4

    புதிய காருக்கான முன்பதிவுகளையும் மஹிந்திரா நிறுவனம் ஆன்லைனில் துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பிஎஸ்6 அல்டுராஸ் ஜி4 மாடலின் முன்பதிவு கட்டணம் ரூ. 50 ஆயிரம் ஆகும். கொரோனா ஊரடங்கு நிறைவுற்றதும் புதிய எஸ்யுவி மாடலின் விநியோகம் துவங்கும் என தெரிகிறது.

    மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலின் விவரங்களை வெளியிட்டு விட்டது. மேலும் இந்த காருக்கான டீசரையும் வெளியிட்டது. புதிய மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிஎஸ்6 மாடலில் பிஎஸ்6 ரக 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 180 பிஹெச்பி பவர், 420 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    பிஎஸ்6 ரக என்ஜின் தவிர புதிய மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய மேம்பட்ட அல்டுராஸ் மாடலில் முந்தைய மாடலில் உள்ளதை போன்ற ஆடம்பர மற்றும் சவுகரிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
    ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது.
     


    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது வாகனங்களின் ஆன்லைன் விற்பனை மற்றும் சேவையை துவங்கி இருக்கிறது. ஆன்லைன் கார் விற்பனை மூலம் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் காலக்கட்டத்தில் பாதுகாப்பு மற்றும் சவுகரியத்தை வழங்க முடியும். 

    கார் வாங்குவதற்கான அனைத்து வழிமுறைகளையும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மேற்கொள்ள முடியும் என ஃபோக்ஸ்வேகன் இந்தியா தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் மாடலை தேர்வு செய்வது, வாகனத்தை முன்பதிவு செய்வது மற்றும் அதற்கான தொகையை ஆன்லைனில் செலுத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

    ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி

    வாடிக்கையாளர்கள் வாங்கும் கார்களை வீட்டிற்கே விநியோகம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளருக்கு கார் விநியோகம் செய்யும் முன் விற்பனையாளரின் பணியாளர்கள் காரை முழுமையாக சுத்தம் செய்து வழங்குவர்.

    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 137 விற்பனை மற்றும் 116 சரீவாஸ் டச் பாயிண்ட்களும் ஆன்லைனில் ஒருங்கிணைக்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் அனைத்து சேவைகளையும் இயக்க முடியும். 

    இந்தியாவில் மே 3 ஆம் தேதிக்கு பின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்ததும், பணிகளை துவங்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டிகுவான் ஆல்ஸ்பேஸ் மற்றும் டி ராக் எஸ்யுவி மாடல்களின் விநியோகத்தை துவங்க இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 250 மோட்டார்சைக்கிள் மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் 861 டாமினர் 250 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் டாமினர் 250 மாடல் மார்ச் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் மார்ச் 25 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

    புதிய டாமினர் 250 மாடல் அறிமுகம் செய்யப்படும் முன் இதற்கான முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. உண்மையில் இத்தனை யூனிட்களும் இந்தியா முழுக்க இயங்கி வரும் விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. வாகனத்தை வாங்குவதாக வாடிக்கையாளர்கள் உறுதியளிக்கும் பட்சத்தில் தான் விற்பனையாளர்கள் வாகனங்களை வாங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

    பஜாஜ் டாமினர் 250

    இதே காலக்கட்டத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 280 யூனிட்கள் டாமினர் 400 மாடல்களை விற்பனை செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய டாமினர் 250 விலை ரூ. 1.60 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டாமினர் 400 மாடலை விட ரூ. 30 ஆயிரம் குறைவு ஆகும். 

    புதிய டாமினர் 250 மாடலில் டூயல் டோன் பேனல்கள், ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் AHO லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் கேடிஎம் டியூக் 250 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 248சிசி சிங்கிள் சிலிண்டர், லிவ்கிட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் இந்த என்ஜின் 25 பி.ஹெச்.பி. பவர், 23.5 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்கள் இந்திய சந்தையில் மீண்டும் பணிகளை துவங்க ஆயத்தமாகி வருகின்றன.



    ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா மற்றும் யமஹா மோட்டார் நிறுவனங்கள் இந்திய சந்தையில் தங்களின் வாகன உற்பத்தி பணிகளை துவங்க ஆயத்தமாகி வருகின்றன. இருநிறுவன ஆலைகள் அமைந்துள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டதும் மீண்டும் பணிகளை துவங்க இருக்கின்றன.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க மார்ச் 24 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. ஊரடங்கு காரணமாக இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. 

    தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஆலையில் பணிகளை துவங்க அனுமதி பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் யமஹா நிறுவனம் அரசு விதிக்கும் புதிய விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உற்பத்தி பணிகளை மீண்டும் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வாகனங்கள்

    எனினும், உதிரிபாகங்களை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக முடங்கி இருப்பதால் ஹோண்டா மற்றும் யமஹா நிறுவனங்கள் தங்களது பணிகளை துவங்க சில காலம் ஆகும் என கூறப்படுகிறது. இதுதவிர வெளியூர்களில் வசிக்கும் ஊழியர்கள் திரும்ப சில காலம் ஆகும் என்பதால், பணிகளை உடனடியாக துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், நாடு தழுவிய ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் உற்பத்தி சார்ந்த சில பணிகள் கடும் கட்டுப்பாடுகளுடன் துவங்க அனுமதி வழங்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    முன்னணி சூப்பர்கார் உற்பத்தியாளரான ஃபெராரி நிறுவனம் சர்வதேச சந்தையில் இரண்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இத்தாலியை சேர்ந்த சூப்பர்கார் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஃபெராரி சர்வதேச சந்தையில் இரண்டு புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் என கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வரும் முன் புதிய கார் வெளியீட்டு விவரங்களை ஃபெராரி வெளிப்படுத்தி இருந்ததாக தெரிகிறது.  

    ஃபெராரி நிறுவனம் விரைவில் மரநெல்லோ ஆலையின் பணிகளை துவங்க இருப்பதாக கூறப்படும் நிலையில், இரு புதிய மாடல்களை வெளியிடுவது பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இரு மாடல்களும் ஃபெராரி நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களின் ஒருபகுதியாக பார்க்கப்படுகிறது.

    ஃபெராரி சூப்பர் கார்

    2022 ஆம் ஆண்டிற்குள் ஃபெராரி நிறுவனம் மொத்தம் 15 புதிய மாடல்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டத்தை ஃபெராரி நிறுவனம் கடந்த ஆண்டு வாக்கில் உருவாக்கியதாக தெரிகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக ஃபெராரி எஃப்8 டிரிபுடோ, எஸ்எஃப்90 ஸ்டிரான்டேல் மற்றும் ரோமா என மூன்று புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    புதிய கார் மாடல்கள் பற்றிய விவரங்களை ஃபெராரி மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. இரு புதிய மாடல்களை ஃபெராரி நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு வரும் மாதங்களில் எந்தளவு சீராகிறது என்பதை பொருத்தே புதிய மாடல்கள் அறிமுகமாவது பற்றிய முடிவு எட்டப்படும்.
    மஹிந்திரா நிறுவனத்தின் 2020 ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
     


    மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சத்தமில்லாமல் பிஎஸ்6 மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கான முன்பதிவுகள் ரூ. 5 ஆயிரம் தொகையில் மேற்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் புதிய காரை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

    புதிய ஸ்கார்பியோ மாடல் எஸ்5, எஸ்7, எஸ்9 மற்றும் எஸ்11 என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. காரின் வெளிப்புறம் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் புதிய கிரில், க்ரோம் இன்சர்ட்கள், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. 

    மஹிந்திரா ஸ்கார்பியோ

    பின்புறம் மேம்பட்ட டெயில்கேட், க்ரோம் அப்லிக், மெல்லிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் பியல் வைட், நபோளி பிளாக், மோல்டன் ரெட் மற்றும் சாட் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. 

    2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 மாடலில் 2.2 லிட்டர் எம்ஹாக், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 40 பிஹெச்பி பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ பிஎஸ்6 பேஸ் மாடலின் விலை ரூ. 11.98 லட்சம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.52 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மார்ச் மாத விற்பனை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்தது. எனினும், இதன் விநியோகம் மார்ச் மாதத்தில் தான் துவங்கப்பட்டது. மேலும் இதன் விற்பனை முதற்கட்டமாக பூனே மற்றும் பெங்களூரு பகுதிகளில் மட்டுமே நடைபெற்றது. 

    இந்நிலையில், விற்பனை துவங்கிய முதல் மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 91 செட்டாக் மாடல்களை விற்பனை செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அர்பனைட் பிராண்டிங்கில் வெளியிடப்பட்ட பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக பஜாஜ் செட்டாக் வெளியிடப்பட்டது. 

    இந்தியாவில் பஜாஜ் செட்டாக் அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 1 லட்சம் மற்றும் ரூ. 1.15 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பஜாஜ் செட்டாக்

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. புதிய செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

    இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
    ஆட்டோமொபைல் துறையின் வாகனங்கள் விற்பனை வரலாற்றில் முதல் முறையாக இந்த சுவாரஸ்யம் அரங்கேறி இருக்கிறது.



    இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் முதல் முறையாக ஒரு வாகனமும் விற்பனையாகாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மூலம் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மார்ச் மாத மூன்றாவது வாரம் முதல் அனைத்து வித வியாபாரங்கள் மற்றும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டன.

    நாடு தழுவிய ஊரடங்கு ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டு பின் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊரடங்கு முடியும் வரை நிறுத்தி இருக்கின்றன.

    டிவிஎஸ் மோட்டார், மாருதி சுசுகி, மஹிந்திரா என முன்னணி ஆட்டோமொபைல் நிறுவன தலைமை அதிகாரிகள், ஊரடங்கு காரணமாக வாகனங்கள் விற்பனை மிக மோசமான நிலையை சந்திக்கும் என தெரிவித்து இருந்தனர். மேலும் இதே நிலை மே மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

    வாகனங்கள் உற்பத்திெ

    மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பு, மக்களின் புதிய வாகனங்கள் வாங்கும் திட்டத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. சில மாநிலங்களில் உற்பத்தி ஆலை பணிகளை படிப்படியாக துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

    எனினும், வாகனங்களை விற்பனை செய்வோர், விநியோகம் மற்றும் இதர பணிகளை மேற்கொள்வோர் பகுதிகளில் ஊரடங்கு அமலில் இருப்பதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அவசரமின்றி பணிகளை செய்யலாம் என்ற நிலையிலேயே இருக்கின்றன. மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், உற்பத்தி பணிகள் மே மாத மத்தியில் தான் துவங்கும் என வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தெரிவித்து இருக்கின்றன. 
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் எம்பிவி கார் விரைவில் புதிய இருக்கை அமைப்புடன் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    முற்றிலும் புதிய கியா கார்னிவல் கார் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய கார்னிவல் மாடலில் தற்போதைய வேரியண்ட்களில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு நான்கு பேர் பயணிக்கக்கூடிய வகையில் இருக்கைகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    அந்த வகையில் புதிய கார் தற்போதைய மாடல்களை விட அதிக இடவசதி கொண்டிருக்கும் என எதிர்பார்க்க முடியும். மேலும் இதன் இருக்கைகளும் முன்பை விட சவுகரியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் இவற்றில் அதிக அம்சங்கள் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற அமைப்பு மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மாடல்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கியா கார்னிவல்

    பிரீமியம் ஆடம்பர செடான் அல்லது எஸ்யுவி மாடல்களில் அதிக பணத்தை செலவிடும் வாடிக்கையாளர்கள் அதிகளவு சவுகரிய வசதியை எதிர்பார்க்கின்றனர். சிலர் வாகனத்தை வாங்கியதும் அவற்றை அவரவர் விருப்பப்படி அதிக சவுகரியம் அளிக்கும் நான்கு பேர் பயணிக்கக்கூடிய வாகனமாக மாற்றிக் கொள்கின்றனர்.

    அந்த வகையில் கார்னிவல் மாடலின் நான்கு பேர் பயணிக்கக்கூடிய மாடல் மூலம் கியா நிறுவனம் பெருமளவு செலவிடாமல், வாகனத்தை வாங்கி அதில் மாற்றங்களை செய்ய விரும்பாமல் அதிக சவுகரியத்தை பெற நினைக்கும் வாடிக்கையாளர்களை ஈர்க்க திட்டமிடுவதாக கூறப்படுகிறது. 

    தற்போதைய கியா கார்னிவல் மாடல்கள் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது பேர் பயணிக்கக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 24.95 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 33.95 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யுவி500 பிஎஸ்6 கார் முன்பதிவு ஆன்லைனில் துவங்கப்பட்டு இருக்கிறது.



    மஹிந்திரா நிறுவனம் தனது பிஎஸ்6 எக்ஸ்யுவி500 மாடல் காருக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடல் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ள போதும், இவற்றின் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய பிஎஸ்6 ரக எஸ்யுவி மாடலின் முழு விவரங்களும் மஹிந்திரா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், இதன் விற்பனை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின் துவங்கும் என தெரிகிறது. 
     
    மஹிந்திரா எக்ஸ்யுவி500

    மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலில் மேம்பட்ட ஆறாம் தலைமுறையை சேர்ந்த 2.2. லிட்டர் இவிஜிடி எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜன் 153 பிஹெச்பி பவரை 3750 ஆர்பிஎம்-இலும், 360 என்எம் டார்க் இழுவிசையை 1,750 முதல் 2800 விரையிலான ஆர்பிஎம் செயல்திறன் வழங்குகிறது. 

    இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. மேம்பட்ட என்ஜின் தவிர மஹிந்திரா எக்ஸ்யுவி500 பிஎஸ்6 மாடலின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதன் வெளிப்புறம் மற்றும் உள்புற அம்சங்கள், உபகரணங்கள் போன்றவற்றிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
    ×