இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது: செல்வப்பெருந்தகை
- ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார்.
- மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைந்தது முதற்கொண்டு மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு அதிகாரக்குவியல் படிப்படியாக நடந்து வருகின்றன. ஒற்றை ஆட்சி என்ற குறிக்கோளுடன் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இலக்கை அடைவதன் மூலம் முழுமையாக ஒற்றை ஆட்சியை உறுதி செய்து மாநிலங்களை நகராட்சிகளை போல நடத்த முற்படுகிறார். ஒன்றிய அரசின் நிதி பகிர்வில் அப்பட்டமான பாரபட்சம் காட்டப்பட்டு தென் மாநிலங்கள் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் கடந்த ஒன்பதரை ஆண்டு காலமாக மக்களை ஏமாற்றி, திசை திருப்பி அவதூறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கூறி வருகிறார்.
ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அதிகாரங்களை குவித்துக்கொண்டு ஒரு சர்வாதிகாரி போல செயல்பட்டு வருகிறார். இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதற்கு எதிராக மக்களை அணிதிரட்டவும், கூட்டணி அமைத்து 2024-ல் மோடி ஆட்சியை அகற்ற இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் ராகுல்காந்தி அனுப்பிய வாழ்த்து செய்திக்கு நன்றி தெரிவித்து வெளியிடப்பட்ட செய்தியில் 'கூட்டாட்சி கருத்தியலை உயர்த்தி பிடிக்க ஒன்று சேர்ந்து உழைப்போம்" என்று கூறியதன் மூலம் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெற்று வருகிறது. இதன்மூலம் மோடி ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி ஒளிரப் போகிறது என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.