தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் - டி.டி.வி. தினகரன்
- கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
- தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.
சென்னை:
அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இன்று இணைந்தது. இணைப்புக்கு பிறகு மத்திய மந்திரியும், பா.ஜனதா தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் பேட்டி அளித்தனர். அப்போது அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த அ.ம.மு.க. உறுதுணையாக இருக்கும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று 2021-ம் ஆண்டிலேயே அமித்ஷா விரும்பினார்.
2021-ம் ஆண்டு அமைக்க தவறிய ஜெயலலிதா ஆட்சியை இந்த முறை அமைத்தே தீருவோம். நாங்கள் எங்கள் பங்காளி சண்டைகளை ஓரம் வைத்து விட்டு அனைத்தையும் மறந்து சேர்ந்திருக்கிறோம். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை என்ற நோக்கில் இணைந்திருக்கிறோம்.
எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை தூக்கி எறிந்துவிட்டு முழு மனதோடு கூட்டணிக்கு வந்து இருக்கிறோம். கட்சியின் நலன் மற்றும் தமிழ்நாட்டு நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என உங்களுக்கே தெரியும்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இந்த கூட்டணி ஆட்சியில் அ.ம.மு.க. இடம் பெறும். தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்து உள்ளதற்கும் பேரை குறிப்பிடாமல் அவருக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்தார்.