தமிழ்நாடு செய்திகள்

LPG Shortage| அரசு ஆஸ்பத்திரிகளில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு வராது- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Published On 2026-03-14 11:50 IST   |   Update On 2026-03-14 11:50:00 IST
  • எங்கேயும் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை.
  • விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் எந்தவிதமான உணவு தட்டுப்பாடு பிரச்சனையும் ஏற்படவில்லை.

சென்னை:

அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்படுமா என்பது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை. மருத்துவ துறையின் செயலாளர் தலைமையில் அனைத்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு மருத்துவமனைகள் தலைவர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் இப்பிரச்சனைகளை எப்படி எதிர் கொள்வது என்பது தொடர்பாக கலந்தாலோச னைக் கூட்டம் நடைபெற்று, அதற்கு மாற்றாக எலக்ட்ரிக் ஸ்டவ், விறகு அடுப்பு போன்ற அடுப்புகளை பயன்படுத்தி ஆஸ்பத்திரிகளில் உள்ள மருத்துவ பயனாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் உணவு வழங்கப்பட வேண்டும்.

தொடர்ந்து அனைத்துக் கல்லூரி முதல்வர்களுடன் பேசி வருகிறேன். எங்கேயும் எந்தவிதமான பாதிப்புகளும் இல்லை. மருத்துவப் பயனாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகளுடன் புரோட்டின் உணவுகளையும் சேர்த்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் ஆயில் கம்பெனி நிறுவனர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் எரிவாயு தரப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மருத்துவ பயனாளர்களுக்கு உணவுகள் நல்ல முறையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் எந்தவிதமான உணவு தட்டுப்பாடு பிரச்சனையும் ஏற்படவில்லை. எந்த பிரச்சனைகளும் வராமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Tags:    

Similar News