Southern Railway| பொதிகை, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2.15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும்.
- ரெயில்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12661) வருகிற 17-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படும். அதே போல, நெல்லையில் இருந்து எழும்பூருக்கு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் (12632) வருகிற 16-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக தாம்பரம் சென்றடையும்.
எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675) வருகிற 16-ந்தேதியில் இருந்து ஏப்ரல் 5-ந்தேதி வரை 2.15 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
தென் மாவட்ட மக்களின் வாழ்வாதார ரெயில்களாக கருதப்படும் இந்த ரெயில்கள் திடீரென மாற்றப்பட்டிருப்பது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நகரின் மையப்பகுதியில் இருந்து தாம்பரத்திற்கு செல்வதற்குள் கடும் போக்குவரத்து நெரிசலையும், கூடுதல் செலவுகளையும் சந்திக்க நேரிடும் என பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.