தமிழ்நாடு செய்திகள்

Rajinikanth | அரசியல் தனக்கு சரிவராது என உணர்ந்தவர் ரஜினிகாந்த் - திருமாவளவன்

Published On 2026-03-14 08:11 IST   |   Update On 2026-03-14 08:18:00 IST
  • ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் கட்சி தொடங்க நினைத்தது உண்மை.
  • தமிழகத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகுந்த வலிமையோடு உள்ளது.

மதுரைக்கு விமானத்தில் வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என தி.மு.க. மிரட்டியதாக, த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது கற்பனை என நினைக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல், அதிகாரம், ஆட்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டக்கூடியவரோ, மயங்கக்கூடியவரோ அல்ல. அவர் அந்த நிலையில் இருந்தெல்லாம், வெளியேறிவிட்டார், விலகி நிற்கிறார். அவரை யாரும் ஆசைக்காட்டி மயக்கி அரசியலுக்குள் இழுக்க முடியாது. அச்சுறுத்தி அவரை வெளியேற்றவும் முடியாது என்ற நிலையை அவர் எட்டிவிட்டார்.

ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் கட்சி தொடங்க நினைத்தது உண்மை. ஆனால், இந்த அரசியலில் வலதுசாரிகள், சங்பரிவார்களின் தலையீடு, ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் அது தனக்கு உகந்த தல்ல என கருதினார். அரசியல் விஷயத்தில் தீர்க்கதரிசியாக முன்பே உணர்ந்து அதனை அவர் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை.

அவரை நேரில் சந்தித்து உரையாடியதன் அடிப்படையில், அவரை புரிந்து நான் கூறும் கருத்து இது. அவரை தி.மு.க. அச்சுறுத்தியது என கூறுவது கற்பனை. அதற்காக அவர் அச்சப்பட்டு பின்வாங்கினார் என்பதும் கற்பனை. இது ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தும் விமர்சனமாக பார்க்கிறேன்.

தமிழகத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி மிகுந்த வலிமையோடு உள்ளது. தி.மு.க. கூட்டணியை எதிர்க்கக்கூடிய, வலிமையுள்ள கூட்டணியை இன்னும் உருவாக்கவில்லை. எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறோம் என்பதை, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடித்த பிறகு முறைப்படி அறிவிப்பு செய்யப்படும்.

சசிகலா கட்சியின் பெயரை அறிவித்துள்ள நிலையில், அரசியல் ரீதியாக என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் படுகொலையில் தொடர்புடைய போலீசார் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகாஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அரசு சார்பில் மாணவியின் குடும்பத்தினருக்கு இழப் பீடு தொகை வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News