இபிஎஸ் குறித்த கேள்வி... டிடிவி தினகரனை பேசவிடாமல் தடுத்த பியூஷ் கோயல்!
- பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
- கூட்டணி அறிவிப்புக்கு பிறகு இபிஎஸை டிடிவி தினகரன் சந்திக்கவில்லை.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். ஆனால் இக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரான இபிஎஸ் இல்லை. தொடர்ந்து பியூஸ் கோயல், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது உங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எடப்பாடியை ஏற்றுக்கொள்வீர்களா? என்பதுபோன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது டிடிவி தினகரன் பதிலளித்துக்கொண்டிருந்தபோதே, பியூஷ் கோயல் நயினார் நாகேந்திரனிடம் கிளம்பலாம் எனக்கூறி பேச்சை நிறுத்தினார். இது தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.